nav-left cat-right
cat-right

நண்பர்களைப் பிரிந்த கதை

மச்சான் ரொம்ப போரடிக்குதுடா. எங்கயாவது பீச்சுக்கு போய்ட்டு வரலாமா? ரூம் மேட் கேட்டான்.

அப்படியா எந்த பீச்சுக்குடா போகறது? வெகு சீரியசாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டேன்.

திருவான்மியூர் பீச்சுக்கு போலாம்டா. கூட்டம் கம்மியா தான் இருக்கும். இல்லைன்னா பெசண்ட் நகர் போலாம். பக்கத்துலயேதான் இருக்கு.

சரி வேற யார் வர்றாங்க?

வேற யாருடா வருவா. நீயும் நானும்தான்.

சுரீர்னு கோபம் வந்தது எனக்கு. போடா போய் வேலையைப் பாருடா. பையனும் பையனும் பீச்சுக்குப் போறதாமாம். எந்த ஊர்லடா இந்த அநியாயம் நடக்கும். நீயும் நானும் போய் பீச்சுக்கு போய் என்ன பேச. இந்த நிலா வெளிச்சத்துல உன்னை பார்க்க மன்மதன் மாதிரியே இருக்கடான்னா சொல்றதா. இல்லை இந்த க்டலை பாரேன் எவ்வளாவு சந்தோசமா ஆர்ப்பரிச்சுட்டிருக்குதுன்னு நானும் கவிதை நடையா பேசறேன்னு மொக்கையை போட சொல்றியா? இதை எல்லாம் ஒரு பையனும் பையனும் பேசிக்கிட்டா நல்லா இருக்குமாடா? இதுக்கு நீ பேசாமா போய் தண்ணியடிச்சுட்டு கமுந்து படுத்து தூங்கலாம். இனிமே ஏண்டா குடிச்சு கெட்டுப் போறன்னு நான் உனக்கு அட்வைஸ் பண்ண மாட்டேன். இனிமே போரடிக்குதுன்னு தோணுச்சுன்னா போய் அதை பண்ணு. ஆனா என்கிட்ட வந்து பீச்சுக்கு போலாமான்னு மட்டும் கேக்காத. சொல்லிட்டேன் ஆமா.

அன்றையிலிருந்து அவன் என்னிடம் சாப்பிட போலாமான்னு கூட கேட்பதில்லை.

************************************************************

அப்போதுதான் காலேஜ் வாழ்க்கையை முடித்து விட்டு வேலை தேடி சென்னை வந்த காலம் அது. உடம்பின் ஒவ்வொரு அணுக்களிலும் திமிர்த்தனம் தெறித்து ஓடிக் கொண்டிருந்த பருவம். கோ எட் கல்லூரியில் படித்ததால் எங்கு பார்த்தாலும் கூட்டமாய் அழகுப் பிசாசுகளை  ஒன்றாய் தரிசிக்க முடிவதால், அவர்களுடன் வலிந்து போய்க் கடலை போட்டுக் கொண்டே, சினிமாவில் மட்டும் “பொம்பளைங்க மோசம்னோ, அம்மாங்கற ஸ்தானம் இல்லைன்னா உங்களுக்கு எல்லாம் மரியாதையே இல்லை, பொண்ணுங்கன்னா ஒருத்தனை லவ் பண்ணுவாங்க, இன்னொருத்தனைக் கல்யாணம் பண்ணிக்குவாங்க” என்பது மாதிரியான வசனங்களுக்கு கை தட்டி ஆர்ப்பரித்து வந்த வயது.

நினைத்தால் பேச (கடலை போட) நாலு அஞ்சு பொண்ணுங்களை தெரியும் என்பதால், மத்த புள்ளைங்களை எல்லாம் இளக்காரமாய் பார்த்துக்கிட்டிருந்தேன். அந்த தோழிகள்ல ரெண்டு மூணு பேரும், பசங்க சில பேரும் டெய்லி காலையில் ஒரு ரோஜாப்பூவோட போட்டோவை போட்டு அதுக்கு கீழ “இந்த ரோஜா பூவை போல உங்கள் வாழ்க்கையும் மலர்ந்து இருக்கட்டும். Good Morning” னு சில டெம்ப்ளேட் மொக்கை வசனங்களை எழுதி ஊர்ல இருக்கிற எல்லாத்துக்கும் டெய்லி அனுப்பிட்டிருப்பாங்க. டெய்லி காலையில வந்து மெயில் பாக்சை திறந்தா இப்படியே ஒரு 10 மெயிலாவது இருக்கும்.

எனக்கு பிடிக்கலைன்னா ஒழுங்கா அதை டெலீட் பண்ணிட்டு வேலையை பார்த்துட்டு இருந்திருக்கலாம். அங்கதான் சூழ்ந்தது வினை. பெரிய இவனாட்டம் ஒரு நாள் “”உங்களுக்கெல்லாம் ஒரு வேலையே இல்லையா. எங்கடா கத்துக்கிட்டீங்க இந்த பழக்கத்தை. காலேஜுல 3 வருஷம் ஒண்ணாதான படிச்சோம். நேர்ல பார்க்கிறப்போ ஒரு நாளைக்காவது “ஹாய்டா குட்மார்னிங்னு சொல்லி இருக்கீங்களா? அது என்னமோ தெரியலை கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்துட்டா மட்டும்தான் உங்களுக்கு பாசம் பொத்துக்கிட்டு வருது.

டெய்லி குட்மார்னிங்கறீங்க. சாட் பண்ணா “டேக் கேர்” ங்கறீங்க. “ஹாவ் எ நைஸ் டே” ங்கறீங்க. இதாவது பரவாயில்லை. ஹேப்பி மதர்ஸ் டேன்னு எனக்கு ஏண்டா SMS அனுப்பறீங்க. உங்களுக்கு அம்மா மேல பாசமா இருந்தா உங்க அம்மாக்கு சொல்லுங்கடா அதை ஹேப்பி மதர்ஸ் டேன்னு. எனக்கு ஏண்டா அனுப்பறீங்கன்னு ஒரு நாள் கிழி கிழின்னு கிழிச்சேன்.

அதை பெருமையா என் தோழிங்ககிட்ட கூட சவடாலா சொன்னேன். ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டு மெதுவா “வாழ்க்கையில ஒரு சில விஷயங்களுக்கு அர்த்தமில்லாம இருக்கும்டா. ஆனா அதெல்லாம் சின்ன சின்ன சந்தோசங்கள். நீ தேவை இல்லாம ரொம்ப ஆடறே”ன்னு சொன்னாங்க. விட்டுக் கொடுக்காம வெட்டி ஞாயம் பேசிட்டு வந்தேன்.

மெதுவா எல்லா புள்ளைங்களுக்கும் கண்ணாலம் ஆயி, புருஷன், குடும்பம், இட்லி உப்புமான்னு பிஸியாய்ட்டாங்க. எனக்கு மெயில் அனுப்பவும் ஆளில்லை. வாரத்துக்கு இப்போ எல்லாம் 3 மெயில் கூட வர மாட்டேங்குது. வர்ற ஒண்ணு ரெண்டும் எங்க பேங்க் கார்டுல நீங்க இருபதாயிரம் ரூபாய்க்கு துணி வாங்கினீங்கன்னா, 500 ரூபாய் தள்ளுபடி என்பது மாதிரியான மெயில்கள்தான். போனுக்கு ஏர்டெல்லை தவற வேறு எங்கிருந்தும் SMS வருவதே இல்லை.

மச்சான் ஏதாவது ஃபார்வார்டு மெசேஜ் அனுப்புங்கடான்னு திரும்ப கேக்கவும் வெக்கமா இருக்கு. நாக்குல சனியன் பூந்த மாதிரி கொஞ்சமான பேச்சா பேசினோம்னு ஈகோ வேற. பழகின தோசத்துக்காக என் பதிவுகளை எல்லாம் என் நண்பர்கள் படிக்கிறாங்கன்னு கேள்விப் பட்டிருக்கேன். இதையும் படிப்பாங்கன்னு நினைக்கிறேன்.

********************************************************************
மேல உள்ள க்ரூப்பாவது பரவாயில்லை. இன்னொரு மகா வெட்டி கும்பல் ஒண்ணு இருக்கு. சாயிபாபா, வெங்கடாசலபதி, இஸ்கான் கோயில் கிருஷ்ணர், ஜெயின் சாமின்னு ஏதாவது ஒரு சாமி படத்தை போட்டு அதுக்குக் கீழ இந்த படத்தை பத்து பேருக்கு ஃபார்வார்டு செய்தால் அடுத்த 30 நாட்களில் உங்கள் வாழ்வில் பெரும் அதிசயம் நிகழும். போன மாதம் ஆந்திராவில் இப்படத்தை 20 பேருக்கு ஃபார்வார்டு செய்த ஒரு பிச்சைக்காரருக்கு தடை செய்யப்பட்ட சுரண்டல் லாட்டரியில் ஒரு கோடி பரிசு விழுந்தது. இன்னொருத்தருக்கு புதையல் கிடைத்தது. ஆனால் இதை ஃபார்வார்டு பண்ணாமல் டெலீட் செய்த ஒருவர் ரத்தம் கக்கி செத்துப்போனார். இன்னொருத்தர் வீட்டு நாய்க்கு கிட்னி ஃபெயிலியரா போய்டுச்சு. அதனால மரியாதையா இதை 10 பேருக்கு ஃபார்வார்டு பண்ணுங்க”ன்னு மிக அன்பான மெயில்களா அனுப்பிக்கிட்டிருந்தானுங்க.

செமை கடுப்பாயி இதே மாதிரி வந்த ஒரு மெயிலுக்கு “Reply to all” போட்டு இங்க பாருங்கடா இதை நான் டெலீட் பண்றேன் எனக்கு என்ன நடக்குதுன்னு பார்த்துக்கலாம். ஒருத்தனுக்கு குல தெய்வம் வீரபத்ர அய்யனாரு, இன்னொருத்தனுக்கு பாடிகாட் முனீஸ்வரன். சனியனுங்க அனுப்பறதும்தான் அனுப்பறீங்க உங்க சாமிக்கு அனுப்பினாலும் பரவாயில்லை. இவனுங்க கும்பிடறது கூட காஸ்ட்லி சாமியாவேதான் கும்பிடுவானுங்களாம். போங்கடா போய் குழந்தை குட்டிகளை படிக்க வைங்கடா. உங்களை எல்லாம் இன்னும் நூறு பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடான்னு சொல்லி காய்ச்சி எடுத்துட்டேன்.

அதுக்கப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு அவங்களுக்கு கல்யாணம் ஆய்டுச்சு. என்ன நினைச்சானுங்களோ தெரியலை. பத்திரிக்கையை கூட வெக்கவே இல்லை. :(

***********************************************************************
நான் டெய்லி நைட் 11 மணிக்கு மேல விஜய் டீவியில போடற காமெடி நிகழ்ச்சிகளை ரொம்ப விரும்பி பார்ப்பேன். சாப்ட்வேர் சித்த ஜோதிடம்னு ஒருத்தரு  லேப்டாப் வெச்சுக்கிட்டு, ஜோசியம் சொல்ற காமெடியெல்லாம் இந்த டைம்லதான் நடக்கும். ஊர்ல ஏமாத்தறதுக்கு எத்தனை எத்தனை டெக்னாலஜி இருக்குதுங்கறது இதுல பார்த்தா தெரிஞ்சிக்கலாம். காஸ்மிக் எனர்ஜிங்குவானுங்க, நேமியாலஜிங்குவானுங்க, எண்கணிதம்னுவானுங்க, ராசிக்கல்லுங்குவானுங்க…பேசுவானுங்க. பேசுவானுங்க பேசிக்கிட்டே இருப்பானுங்க. அதிலயும் உலகத்துலயே எல்லாம் தனக்குத்தான் தெரியும், நாமதான் கடவுள்னு ஒரு நினைப்பு வேற. தன்னோட க்ளையண்டுகிட்ட இவனுங்க போடற பந்தாவும், மிரட்டல் தொனியும்… என்னைக் கேட்டா உலகத்துலயே கேவலமான தொழில்னா இதுதான்.

அன்னிக்கும் அதே மாதிரி பெயரியல் பேராசான் ராஜராஜன், யாருக்கோ அறிவுரை சொல்லிக்கிட்டிருந்தார்.

“அதாவது பார்த்தீங்கன்னா, கூட்டுத் தொகை 2, 3,7, 8 ன்னு வர்ற அன்னிக்கு கல்யாணம் பண்ணீங்கன்னா உங்க வாழ்க்கை விளங்கவே விளங்காது. இதை நான் சொல்லலை. என் ஆராய்ச்சி சொல்லுது. சார்லஸ், டயானாவோட கல்யாண நாளை எடுத்துக்கிட்டீங்கன்னா கூட்டுத் தொகை 8 வருது. அதனாலதான் டயானா சின்ன வயசுலயே செத்துப்போய்ட்டாங்க. அவங்க கல்யாணம் வெற்றி பெறாம போயிடுச்சு”ன்னு அள்ளி விட்டுக்கிட்டிருந்தாரு.

அட சனியனுங்களா. வருஷத்துக்கு இருக்கிற முகூர்த்த நாட்களே சராசரியா 25 தான் இருக்கும். அதுலயும் ஆடி மாசம், ஆவனி மாசம், பங்குனி மாசம், தேய்பிறை முகூர்த்தம் கிடையாதுன்னு 1008 லொள்ளு பேசுவானுங்க. இதுல இந்த கருமமும் சேர்ந்துக்கிச்சுன்னா அட ஊர்ல எல்லாம் எப்பதாண்டா கல்யாணம் பண்றதுன்னு நினைச்சுக்கிட்டேன்.

சரி மேட்டருக்கு வர்றேன். இந்த மாதிரி எல்லாம் சொல்லி அந்த அம்மாக்கு ஒரு நாள் சொல்லி அன்னிக்கு என்கிட்ட வாங்க. உங்க ப்ழைய தாலியை கழட்டி போட்டுட்டு, புதுசா தாலி கட்டிக்கோங்கன்னு தீர்ப்பு எல்லாம் கொடுத்து அனுப்பி வெச்சாரு. (அந்த தாலி எத்தனை பவுனோ???).

அதுக்கப்புறம் ஒரு அம்மா வந்தாங்க. அய்யா என் பேரு உமாங்க. எனக்கு வாழ்க்கையில நிம்மதியே இல்லை. எல்லாத்துலயும் தோல்விதான். எனக்கு நீங்கதான் ஒரு வழி சொல்லணும்னு அப்படியே கை எடுத்து கும்பிட்டு கேட்டுக்கிட்டாங்க. அவரும்  அள்ளி விட ஆரம்பிச்சாரு.

அதாவது பார்த்தீங்கன்னா “உமான்னு” பேரு வெச்சவங்க வாழ்க்கையில நல்லா வாழ்ந்திருக்கவே மாட்டாங்க. இங்கன்னு இல்லை பொதுவா உலக அளவில் எடுத்துக்கிட்டீங்கன்னா கூட உமான்னு பேரு வெச்சவங்க சந்தோசமா வாழ்ந்தாங்கன்னு சரித்திரமே கிடையாது. நீங்க கடின உழைப்பாளியா இருப்பீங்க. நல்ல சிந்தனையாளரா இருப்பீங்க. உங்க குடும்பத்துக்காக ரொம்ப கஷ்டப் படுவீங்க. ஆனா வெற்றி மட்டும் கிடைக்காது. எல்லாமே கிடைக்கிற மாதிரி இருக்கும். ஆனா கடைசி நிமிஷத்துல கை நழுவிப் போயிடும். காரணம் என்னன்னு கேட்டீங்கன்னா உங்க பேருதான். அதனால பேரை மாத்திடுங்கன்னு தீர்ப்பை சொல்லிட்டாரு.

ஆஃபிஸ்ல என் டீம்ல உமான்னு ஒரு பொண்ணு இருந்துச்சு. நான் அடுத்த நாளு போய் இந்த டயலாக்கை அப்படியே ஒப்பிச்சு, சரிம்மா கடின உழைப்பாளி இப்பதான் தெரியுது நீ அடிக்கிற Code எல்லாம் ஏன் error ஆகவே இருக்குதுன்னு. அதனால பேரை எப்போ மாத்தப் போறன்னு கேட்டு அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டிருந்தேன். அன்னியில இருந்து என் பக்கத்து சீட்டுல உக்காந்த்திட்டு இருக்கிற இன்னொரு கொலீக் என்கிட்ட பேசறதே இல்லை. என்னடான்னு விசாரிச்சுப் பார்த்ததுலதான் சொன்னாங்க அவரு வீட்டுக்காரம்மா பேரு உமாவாம்.

நீங்களே சொல்லுங்க மக்களே இதுக்கெல்லாம் நான் என்ன செய்ய.

19 Responses to “நண்பர்களைப் பிரிந்த கதை”

  1. mvalarpirai says:

    Free ya விடுங்க சகா..இதெல்லாம் சகஜம் தானே ! நாமெல்லாம் ..அஹா

  2. vaduvurkumar says:

    என்னது,இதெல்லாம் மொக்கை பிரிவிலா?நல்லாதானே இருக்கு!!

  3. Rajalingam says:

    So Sad. :(

    சரி விடுங்க சார். உலகம் ரொம்ப பெரிசு. உங்க நல்ல மனசு அவங்களுக்கு புரியலை.

  4. உன் ரூம்மேட் says:

    நான் எப்படா உன்கிட்ட பீச்சுக்கு போலாமான்னு கேட்டேன்? ஏண்டா இப்படி அள்ளி விடற???

  5. பெயரியல் பேராசான் says:

    தம்பி நந்தாங்கிற பேரு கூட சரியில்லை. அதனாலதான் நீ பல விஷயங்கள்ல தோத்துப்போயிடற. என்கிட்ட வா. உன் பேரை மாத்தி அருக்கானின்னு வெக்கிறேன். அதுக்கப்புறம் பாரு. உனக்கு வெற்றி மேல வெற்றிதான்.

  6. உமா says:

    ஏன்? என் பேருக்கென்ன குறைச்சல்.அந்த ஆளு மட்டும் என் கையில கிடைக்கட்டும். மூஞ்சியிலயே மெதிக்கறேன்.

  7. மைதிலி says:

    //காலேஜுல 3 வருஷம் ஒண்ணாதான படிச்சோம். நேர்ல பார்க்கிறப்போ ஒரு நாளைக்காவது “ஹாய்டா குட்மார்னிங்னு சொல்லி இருக்கீங்களா? அது என்னமோ தெரியலை கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்துட்டா மட்டும்தான் உங்களுக்கு பாசம் பொத்துக்கிட்டு வருது.

    டெய்லி குட்மார்னிங்கறீங்க. சாட் பண்ணா “டேக் கேர்” ங்கறீங்க. “ஹாவ் எ நைஸ் டே” ங்கறீங்க. இதாவது பரவாயில்லை. ஹேப்பி மதர்ஸ் டேன்னு எனக்கு ஏண்டா SMS அனுப்பறீங்க. உங்களுக்கு அம்மா மேல பாசமா இருந்தா உங்க அம்மாக்கு சொல்லுங்கடா அதை ஹேப்பி மதர்ஸ் டேன்னு.//

    எனக்கு என்னமோ நீங்க கரெக்டாதான் சொல்லி இருக்கீங்கன்னு தோணுது நாந்தா. இவனுங்க ஆட்டம் தாங்காம நானும் பல முறை அப்படி நினைத்திருக்கிறேன். ஆனா எதுக்கு வம்புன்னு பேசாமல் இருந்திருக்கிறேன்.

  8. ராம் says:

    //மேல உள்ள க்ரூப்பாவது பரவாயில்லை. இன்னொரு மகா வெட்டி கும்பல் ஒண்ணு இருக்கு. சாயிபாபா, வெங்கடாசலபதி, இஸ்கான் கோயில் கிருஷ்ணர், ஜெயின் சாமின்னு ஏதாவது ஒரு சாமி படத்தை போட்டு அதுக்குக் கீழ இந்த படத்தை பத்து பேருக்கு ஃபார்வார்டு செய்தால் அடுத்த 30 நாட்களில் உங்கள் வாழ்வில் பெரும் அதிசயம் நிகழும். போன மாதம் ஆந்திராவில் இப்படத்தை 20 பேருக்கு ஃபார்வார்டு செய்த ஒரு பிச்சைக்காரருக்கு தடை செய்யப்பட்ட சுரண்டல் லாட்டரியில் ஒரு கோடி பரிசு விழுந்தது. இன்னொருத்தருக்கு புதையல் கிடைத்தது. ஆனால் இதை ஃபார்வார்டு பண்ணாமல் டெலீட் செய்த ஒருவர் ரத்தம் கக்கி செத்துப்போனார். இன்னொருத்தர் வீட்டு நாய்க்கு கிட்னி ஃபெயிலியரா போய்டுச்சு. அதனால மரியாதையா இதை 10 பேருக்கு ஃபார்வார்டு பண்ணுங்க”ன்னு மிக அன்பான மெயில்களா அனுப்பிக்கிட்டிருந்தானுங்க.//

    ஆமாம் நந்தா. நல்லா படிச்சிருப்பானுங்க. பெரிய்ய பெரிய்ய வேலையில இருப்பானுங்க. ஆனா பைத்தியக்காரத்தனமா இந்த மாதிரி எல்லாம் செஞ்சுக்கிட்டிருப்பானுங்க. இவனுங்க்களை எல்லாம் யாரு வந்து திருத்த.

    நீங்க மொக்கைன்னு ஒரு பேச்சுக்கு போட்டீங்களோ என்னமோ. உள்குத்தோடதான் போட்டிருக்கீங்கன்னுதான் தோணுது.

  9. // ஏர்டெல்லை தவற வேறு எங்கிருந்தும் SMS வருவதே இல்லை//

    அட என்னங்க நந்தா இதுக்குபோயி சின்னபுள்ளையாட்ட அழுதுகிட்டு
    நம்பர சொல்லுங்க போட்டுத்தாக்கிருவோம்.
    நம்ம பக்கத்து மாவட்டதுக்காரருக்காக இதக்கூட செய்யமாட்டமா !

  10. நந்தா!

    ரொம்ப ரசிச்சு படிச்சேன்.

    மிக இயல்பான, சுவராஸ்யமான நடை.

    பெப்ஸி உமா, அந்த விஜய் டிவியை பாத்திருப்பாங்களா?

  11. என் மனைவிக்கு ஏற்கனவே ராஜராஜன் ஷோவைக்கண்டால் ஆகாது. இதுல அந்தாளு இப்படியெல்லாம் வேற உளறீருக்கான்னு தெரிஞ்சா தீர்ந்தது! (அவங்க பேரு உமா-ங்க!)

  12. தலைவா பின்னீட்டீங்க. ரொம்ப நாளுக்கு அப்புறமா இப்பதான் களத்தில இறங்கியிருக்கீங்க. விடாம அடிச்சு ஆடுங்க

  13. //என்னது,இதெல்லாம் மொக்கை பிரிவிலா?நல்லாதானே இருக்கு!!//

    பின்னே வேற எப்படி நான் தன்னடக்கமா இருக்கிறேன்னு காமிக்கிறதாம். :)

    என் மனசை புரிஞ்சுகிட்ட வளார்பிறைக்கும், ராஜலிங்கத்துக்கும் நன்றி.

    நடுவில “உன் ரூம்மேட், பெயரியல் பேராசான், உமா” ன்னு யாரோ ரவுண்டு கட்ட முயற்சி செஞ்சிருக்கீங்க. மூணும் ஒரு ஆளுதான். யாருன்னுதான் தெரியலை.

  14. நன்றி மைதிலி மற்றும் ராம்.

    கார்த்திக் பக்கத்து மாவட்டத்துக்காரங்கறதுக்கே இவ்ளோவ் பாசமா?? ஆனா என் கொலீக் என்கூட பேசாம போறதுக்கு காரணமான ராசராசன் டைப் ஆட்கள் பெரும்பாலும் நம்ம ஏரியா பக்கம் இருந்துதான் கிளம்பறாங்க.

    கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு ஆளு கையில ஒரு குச்சியை வெச்சுக்கிட்டு விண்வெளியில இருந்து வர்ற காஸ்மிக் கதிர்கள்தான் எல்லாத்துக்கும் காரணம். அது உங்க மண்டைக்குள்ள சரியா போச்சுன்னா நீங்க சூப்பர்ஸ்டார். இல்லைன்னா தோத்தாங்கோலின்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சார். இதுல கொடுமை என்னன்னா அநதாளோட வீட்டுக்காரம்மா இதே மாதிரி இன்னொரு டெக்னாலஜி புதுசா ஏதோ ஒண்ணு சொல்லிக்கிட்டு ஏதோ டீவி ஷோ எல்லாம் பண்ணுச்சு. ரெண்டும் சேலத்துல ஏற்காடு அடிவாரத்துல இருந்து கிளம்பி வந்ததுதான்.

    அதே மாதிரி குருஜீ ராஜகுமார்னு ஒருத்தரு உங்களுக்கு வேலை இல்லையா, குழந்தை இல்லையா, புருஷன் பொண்டாட்டி சண்டையா, வெளிநாட்டுக்கு போகணுமா, வெளிநாட்டுல இருந்து வரணுமா, நல்லா இருக்கணுமா, நாசமா போகணுமா எல்லாத்துக்கும் என்கிட்ட வாங்கன்னு கூவிக்கிட்டிருந்தாரு. அவரு சேலம் நாலு ரோட்டுல இருக்காராமாம்.

    நேத்து இந்த குருஜீ சொன்னாரு. இந்த மாதிரி ஒருத்தருக்கு வெளி நாட்டுல வேலை வேணும்னு மந்திர்ச்சு விட்டாராம். ஆனா அவருக்கு 2 மாசம் ஷார்ட் டெர்ம்லதான் வெளிநாட்டு வேலை கிடைச்சுதாமாம். ஆனா கிளம்பறதுக்கு 2 நாள்ல இருக்கிறப்ப பக்கத்துல இருக்கிற ஒரு கட்டிடத்துக்கு சும்மா போய் இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணி 5 வருஷம் எக்ஸ்டெண்ட் ஆயிடுச்சாமாம்.

    நான் நம்பிட்டேன்.

  15. ரசிக்கக்கூடிய பதிவு.
    இதுக்குதான் திருவாய வச்சுக்கிட்டு சும்மா இருக்கணும்னு சொல்றது :) ))

  16. My Mall time favourite “சிவராஜ் சித்த வைத்திய சாலை” உங்களை போன்ற சிறந்த கலா ரசிகரை ஏன் கவரவில்லை??
    அவர் பேராண்டிகளுக்கு சொல்லும் அறிவுரைகளும், அவரே இயற்றிய பழங்கால சித்தர் பாடல்களும் மிகுந்த அறிவியல் பூர்வமாகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    இந்த நிகழச்சியை நான் பயங்கரமாக சிபாரிசு செய்கிறேன்.

  17. நன்றி மாதவராஜ். ராஜராஜன் அதுக்கும் ஒரு காரணத்தை சொல்லுவாரு. வெறும் உமான்னு இருந்த அவரை பெப்ப்ஸி உமான்னு பேரை மாத்தி பிபிசிக்கு எல்லாம் பேட்டி குடுக்கிற அளவுக்கு வளார்த்து வ்இட்டதே நாண்தான்னு.

    பரிசல்காரன் தப்பித் தவறி வீட்டுக்காரம்மாக்கிட்ட சொல்லிடாதீங்க.

    முரளி கண்ணன் ஒவ்வொரு முறையும் இப்படித்தானனொரு வேகத்தோட கிளம்பி வர்றேன். அப்புறம் அப்படியே அடங்கிடறேன். :)

  18. சூப்பர் ரொம்ப நல்ல போஸ்ட்… ரசித்தேன்… :) ) ஏமாறுகிறவர்கள் இருக்கறவரைக்கும் ஏமாற்றுகிறவர்கள் இருப்பாங்க :) ))

  19. நந்தா?வுக்கு,

    யாருப்பா இது. என் பேரோட. ஆனா , உண்மையில கலக்குறிங்க தம்பி.[அல்லது அண்ணனா?]

    உங்கள் “ஏர்டெல்” பற்றிய ப்லம்பல் பார்த்தேன்.

    இங்க [ நைஜீரியா] நிலைமையோட ஒப்பிட்டால், ஏர்டெல்லுக்கெல்லாம் கோவிலே கட்டலாம்.

    இங்க unlimited time just 60 டாலர்தான் [மாதத்திற்கு]

    வெறும் 3gb மட்டுமே உச்சபச்ச உபயோகத்திற்கு. நான் எங்கு போய் அழ.

    உங்கள் ‘மொக்க” பதிப்பு அருமை. தொடர்க.

Leave a Reply