nav-left cat-right
cat-right

ஈழத்தமிழருக்கான அமைதி நடை பயணம் – சில குறிப்புகள்

ஈழப்பிரச்சனைக்கெதிராக மற்றும் ஒரு வடிவத்தில் தார்மீக எதிர்ப்பு அமைதி நடைபயணமாக வெளிப்பட்டு சிறப்பாய் சற்றே திருப்தியளிக்கும் வகையில் நடந்து முடிந்திருக்கிறது. எந்த வித அரசியல் தலைமையின் குறுக்கீடுகளும் ஏற்பட்டு இது வெறும் கட்சிகளின் பிரச்சாரக் கூட்டமாய் முடிந்து விடக்கூடாது என பார்த்து பார்த்து உழைத்த பலருக்கு சற்றே மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது இந்த கூட்டம்.

மதியம் 2.30 மணிக்கு போர் நினைவகம் அருகே ஈ காக்கா கூட இல்லாமல் இருந்தத்தைப் பார்த்த உடன் பகீர் என்றுதான் இருந்தது. ஆனால் கொத்து கொத்தாய் ப்ல இடங்களில் இருந்தும் மக்களும், மாணவர்களும், பல அமைப்பினைச் சேர்ந்தவர்களும் 4 மணிக்கு சரியாய் வந்து சேர்ந்திருந்தார்கள். நானும், எனது உடன் பிறப்பும் சக தோழர்கள் சார்லஸ், இலக்குவண், நிலவன், வில்லன் உள்ளிட்ட பலருடன் சேர்ந்து சிறிது நேரம் அண்ணா சதுக்கத்தில் பேசி இருந்து விட்டு 3.45 மணிக்கு அடைந்த போது இருந்த கூட்டத்தைப் பார்த்த உடன் அதற்குள் இத்தனை பேர் எங்கிருந்து வந்தார்கள் என்ற வியப்பு ஏற்பட்டது.

முந்தின நாள் வரை பீச் ரோட்டில்தான் என்று சொல்லிக் கொண்டிருந்து விட்டு திடீரென்று போர் நினைவகம் தொடங்கி மன்றோ சாலை வழியே பெரியார் சிலையின் அருகே முடிவதாய் இடத்தை மாற்றி இருந்தார்கள். பல நண்பர்களுக்கு பீச் ரோட்டில்தான் வருது, லேட்டாய்ட்டா கூட அண்ணா சதுக்கம் அல்லது கண்ணகி சிலை அருகே எங்கேயாவது கலந்து கொண்டு விடுங்கள் என்று சொல்லி இருந்தோம். நானே இது மாதிரி ஒரு 20 பேருக்கு சொல்லி இருந்தேன். இப்போது இதைக் கேட்ட போது பெரும் ஏமாற்றமாய் இருந்தது.

அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து விட்டு நண்பர்கள் தயாரித்திருந்த தட்டிகளை ஆளுக்கொருவராய் எடுத்துக் கொண்டு மீதி இருந்ததை அங்கே இருந்த வாழும் கலை உள்ளிட்ட பல அமைப்பினருக்கு விநியோகித்தோம். செல்லும் வழியில் பொது மக்களுக்கு கொடுக்க வேண்டுமென்று நோட்டீசுகளயும் மொத்தமாய் பைகளில் அள்ளிக் கொண்டோம்.



அதற்குள் சன்னிலோ, கே டீவியிலோ ஹாலிவுட் டைம்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஆண்டனி, சார் இதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி நாங்கள் மற்றவர்களுக்கு உபயோகித்த தட்டிகளைப் பிடுங்கிக் கொண்டிருந்தார். அவரிடம் சண்டையிட்டு ஏன் இதை பிடிக்கக் கூடாது என்று வாதாடி திரும்ப சிலவற்றை வாங்கிக் கொடுத்தோம். அப்படியும் சில எங்கே போயின என்று தெரிய வில்லை. “துரோகம் பண்ணாதீங்கடான்னு காங்கிரஸ்காரனுங்களை கேட்காம வேற எவனுங்களைக் கேட்கறது”ன்னு சத்தம் போட்டதுக்கப்புறம்தான் நகர்ந்தார்.

ஜெகத் கஸ்பார் பேசி முடித்த உடன் அவர் முன்னெடுத்துச் செல்ல சரியாய் 4.45 மணியளவில் கூட்டம் தொடங்கியது. வழி நெடுக ஆக்ரோஷமாய் கத்திக் கொண்டே சென்றது. பெரியார் திராவிட கழகத்தினைச் சார்ந்தவர்களை அதிகம் காண முடிந்தது. வெறும் தி.க ஆட்கள் இருந்தார்களா என்பதைப் பார்க்க முடிய வில்லை. கவிஞர் அறிவுமதி, விடுதலை ராசேந்திரன் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.

காந்தி தேசம் கொடுக்குது.
புத்த தேசம் கொல்லுது.
தமிழ் இனமே அங்கே மடியுது.

ராஜீவ் காந்தி படுகொலையில்
செத்ததெல்லாம் போலிஸ்காரர்.
எங்கே போனான் காங்கிரஸ்காரன்
தங்கபாலு சாகலை
இளங்கோவன் சாகலை
எங்கே போனான் காங்கிரஸ்காரன்

ஈழத் தமிழர் பலியானால்,
என்கள் தமிழர் புலியாவார்கள்

தடையை நீக்கு தடையை நீக்கு
விடுதலைபுலிகள் மீதான
தடையை நீக்கு தடையை நீக்கு

பழிவாங்கும் சோனியாவே
நேரு கதி வேண்டுமா?
ராஜீவ் கதி வேண்டுமா?

ஈழத் தமிழர்களுக்காக
பாடுபட்டவர் இந்திரா காந்தி
ஈழத் தமிழர்களை
படுகொலை செய்பவர் சோனியா காந்தி

பிரபாகரன் வாழ்க
சீமான் வாழ்க
சோனியா ஒழிக
மன்மோகன் சிங் ஒழிக.
இந்து ராம் ஒழிக
சோ ஒழிக

மறக்க மாட்டோம் மறக்க மாட்டோம்
இந்திய அரசின் திரோகத்தை
சாகும் வரை மறக்க மாட்டோம் மறக்க மாட்டோம்

போட மாட்டோம் போட மாட்டோம்
சாகும் வரை காங்கிரசுக்கு
வோட்டு போட மாட்டோம் வோட்டு போட மாட்டோம்

என்பது போன்ற பல்வேறு கோஷங்களை வழி நெடுக ஆக்ரோஷமாய் எழுப்பியவாறு கூட்டம் சென்றது. காவல் துறையினர் என்ன காரணத்தாலோ ஒரு வார்த்தை கூட மறுப்பெதுவும் சொல்ல வில்லை. ஆங்காக்கு கூட்டம் பரவலாய் ரோட்டை அடைத்து செல்ல முயன்ற போது கூட்டத்தில் ஒருவரே வழி விட்டுப் போங்கள் ரோட்டை மறிக்க வேண்டாம். போகுவரத்து பாதிக்கப் படக் கூடாது. நாம் அரசியல் கட்சிகள் இல்லை என்று ஒழுங்கு படுத்தியது சந்தோசமாய் இருந்தது.

இறுதியில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தின் அருகே, ஜெகத் கஸ்பார் அவர்கள் வழி மொழிய மாணவர் மற்றும் இளைஞர்கள் சார்பாக செந்தில் இந்தக் கூட்டத்தின் 7 தீர்மானங்களை படிக்க கூட்டம் நிறைவு பெற்றது.

இன அழித்தலுக்கெதிரான இந்தியர்கள் அமைதிப் பேரணி தீர்மானங்கள் (நன்றி: உண்மைத் தமிழன்)

1. ஸ்ரீலங்கா ராஜபக்சே அரசு தமிழ் மக்கள் மீது நடத்தும் இன அழித்தல் யுத்தத்தை தடுத்து நிறுத்தும் உடனடி முயற்சிகள் எடுத்திட இந்திய அரசை வேண்டுகிறோம்.

2. இந்திய அரசே, தமிழ் மக்களின் தியாகங்கள் நிறைந்த நீண்ட போராட்ட வரலாற்றினை கருத்திற்கொண்டு, அவர்தம் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் நிரந்தர அரசியற் தீர்வு பேச்சுவார்த்தைகள் தொடங்க ஸ்ரீலங்கா அரசை வலியுறுத்து.

3. முல்லைத்தீவு பகுதியில் 2,20,000 தமிழர்கள் உணவு, மருந்துப் பொருட்களின்றியும், விமான, எறிகணை குண்டு வீச்சுக்களாலும், புழுப்பூச்சிகள்போல் செத்து மடிகின்றனர். சமீப நாட்களாக அங்கு வெறும் 70,000 மக்கள் மட்டுமே இருப்பதால் ஸ்ரீலங்கா அரசு கூறத் தொடங்கியுள்ளது. இது வரும் வாரங்களில் லட்சத்திற்கும் மேலான தமிழர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்யும் சதியோ என அஞ்சுகிறோம். இந்த நூற்றாண்டின் மிகக் கொடூரமான படுகொலையாக முடியப் போகும் இப்பேரழிவினை உடனடியாகத் தடுத்து நிறுத்த இந்திய அரசையும், உலக நாடுகளையும் வேண்டுகிறோம்.

4. ஸ்ரீலங்கா அரசு 30 ஆண்டுகளாய் தமிழ் மக்களுக்கெதிராகப் புரிந்து மனித உரிமை மீறல்கள் அனைத்தையும் பதிவு செய்து, விசாரித்து நீதி வழங்க அனைத்துலக போர்க்குற்ற நீதியமையகம்(International War Crimes Tribunal) அமைக்க ஐ.நா. பாதுகாப்பு அவை தீர்மானம் கொணர இந்தியா முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும். கடந்த பல ஆண்டுகளாய் இந்தியாவின் வெளியுறவு வளங்கள் ஸ்ரீலங்காவின் தமிழர் அழிப்பு போரை நியாயப்படுத்தவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த அணுகுமுறையில் உறுதியான மாற்றத்தை இந்திய அரசிடம் வேண்டுகிறோம்.

5. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், சீனா நாடுகளின் சுய நல அபிலாஷைகள் ஈழத் தமிழ் மக்களின் துன்பங்களுக்கு முக்கியமானதோர் காரணம். இந்நாடுகள் ஆறரை கோடி இந்தியத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து போர் நிறுத்தம் கொணரவும், ஸ்ரீலங்கா மீது போர்க் குற்ற நீதி மையம் அமைக்கவும் ஐ.நா. பாதுகாப்பு அவை தீர்மானம் கொணர்ந்திட வேண்டுகிறோம்.

6. ஈழத் தமிழ் மக்கள் பேரழிவின் விளிம்பில் நிற்கும் இக்காலத்தில் தமிழக அரசியற் கட்சிகள் தேர்தல் அரசியலின் சிக்கல்களினின்று மேலேழுந்து ஒரே குரலாய் ஒலிக்க வேண்டுமெனவும் மன்றாடுகிறோம்.

7. இன அழித்தலுக்கெதிரான இந்தியர்கள் அமைப்புடன் இணைந்து செயற்பட மனிதநேயம் கொண்ட அனைவரையும் அழைக்கின்றோம்.

**********************************

மிக முக்கியமாய் இங்கே சொல்லிக் கொள்ளக் கூடியவை சில இருக்கின்றன..

கூட்டத்தில் எந்த ஒரு அரசியல் கட்சி தலைவர்களையும் முன்னிறுத்தி துதி பாட வில்லை.

கூட்டத்தை முன்னெடுத்துச் சென்றதில் பெரும் பங்கு வகித்தவர்கள் மாணவர்கள், பல்வேறு துறைகளில் இயங்கும் இளைஞர்கள் போன்றோரே. இனி வரும் காலங்களில் ஆட்டு மந்தையாய் நாங்கள் இயங்க மாட்டோம் என்று சொல்லாமல் சொல்லியது இந்த கூட்டம்.

ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பைச் சேர்ந்த பலர் இந்தக் கூட்டத்தில் வந்து கலந்து கொண்டிருந்தனர். இந்திய அரசு செய்து கொண்டிருப்பது ஒரு மாபெரும் துரோகம் என்று ரவி சங்கர் அவர்கள் கூறிய பேட்டியைப் படித்ததிலிருந்து அவர் மீதான மரியாதை கூடி இருக்கிறது.

திருநங்கைகள் பலர் இந்த போராட்டத்தில் முனைப்புடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர். அடி பட்டவர்களின் வலி மற்றொரு அடி பட்டவருக்கே புரியும் என்பதை இவர்கள் உணர் வைத்தனர்.

கத்தோலிக்க திருச்சபை அமைப்பு மற்றும் வேறு சில கிறிஸ்துவ அமைப்புகள் இதற்கு ஆதரவு தெரிவித்து வந்திருந்தனர்.

முஸ்லீம் அமைப்பைச் சார்ந்து பல தோழர்கள் வந்திருந்தான்ர்.

வள்ளலார் பேரவை இந்த கூட்டத்தைத் திரட்டியதில் பெரும் பங்கு வகித்திருவகித்திருக்கிறது.

முதன் முறையாக மனிதம் சார்ந்து ஒரு பொதுப் பிரச்சினையில் மத அமைப்பினர்களும், கடவுள் மறுப்பு நாத்திக இயக்கத்தினரும் கை கோர்த்து இந்த கூட்டத்தை நடத்தி வந்தனர். இது சற்றே பெருமையாய் இருந்தது.

வேறு எந்தப் பிரச்சினைகளுக்கும் இல்லாதவாறு பெண்களின் எண்ணிக்கை அதிகமாய் இருந்தது மனதிற்கு உவகையைத் தந்தது.

**********************************
கூட்டத்தில் சோவையும், ஜெவையும், சோனியாவையும், மன்மோகனையும், பிரணாப்பையும் திட்டிய வாய்கள் கருணாநிதி ஒழிக  என்று கூப்பாடு போட வில்லை. ஒரு வேளை ஜெகத் கஸ்பார் முன்னெடுத்துச் செல்வதால் கூட இருக்கலாம். இருப்பினும் எந்த அமைப்பினரும் கலைஞர் குறித்து பேச வில்லை. என்ன இருந்தாலும் எல்லாருக்கும் கலைஞர் மீது கொஞ்சமேனும் அபிமானம் இருக்கத்தான் செய்கின்றது.

நான் ஓட்டு போட ஆரம்பித்ததிலிருந்து இது வரை கலைஞருக்கு மட்டுமே போட்டு வந்திருக்கிறேன். சரியாய் 2 வருடங்களுக்கு முன்பெல்லாம் கலைஞருக்காக நண்பர்கள் பலருடன் வாதாடி இருக்கின்றேன். சண்டையிட்டிருந்திருக்கின்றேன். ஆனால் இப்போது??? கலைஞரே இப்படியே போனால் பரம்பரை தி.மு.க காரன் கூட உங்களை மன்னிக்க மாட்டான்.

பதிவு குறித்து எழுதிக் கொண்டிருந்த போது ஃப்ளாஷ் நியூஸ் ஓடியது. காங்கிரசில் நான் கொஞ்சமேனும் மதிக்கும் தமிழருவி மணியன் அவர்கள் “இலங்கையில் தமிழினம் முற்றிலும் அழிக்கப்பட்டு வரும் நிலையில், சிங்கள அரசிற்கு பக்கபலமாக நிற்கும் மத்திய அரசின் அணுகுமுறையை மானமுள்ள தமிழனால் அங்கீகரிக்க முடியாது. ஈழத் தமிழர் நிலை பற்றி சோனியா இதுவரை வாய்திறக்கவில்லை. இவரின் தலைமையில் இயங்கும் காங்கிரசில் இன,மொழி அடையாளங்களை அடகுவைக்க என் இதயம் இடம் தரவில்லை. நான் இன்று ( நேற்று) முதல் அ.இ.காங்.,கமிட்டி உறுப்பினர், மாநில பொதுச் செயலர், அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து விலகுகிறேன். சமூக நலன் சார்ந்து என் இனம், மொழிக்கு தொண்டாற்ற முடிவு செய்துள்ளேன்” என்று கூறி ஒட்டு மொத்தமாய் காங்கிரசிலிருந்து வெளியேறியுள்ளார். தமிழருவி மணியன் அவர்களுக்கு நான் தலை வணங்குகின்றேன்.

இன்னும் நூறு நாட்களில் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசு எனும் ஓட்டுப் பொறுக்கி கட்சி தமிழ் நாட்டில் ஒரு இடங்களைக் கைப்பற்ற கூடாது என்பதில் நாம் உறுதி கொள்வோம்.

3 Responses to “ஈழத்தமிழருக்கான அமைதி நடை பயணம் – சில குறிப்புகள்”

  1. annu.kutty@gmail.com says:


    கூட்டத்தில் எந்த ஒரு அரசியல் கட்சி தலைவர்களையும் முன்னிறுத்தி துதி பாட வில்லை.

    கூட்டத்தை முன்னெடுத்துச் சென்றதில் பெரும் பங்கு வகித்தவர்கள் மாணவர்கள், பல்வேறு துறைகளில் இயங்கும் இளைஞர்கள் போன்றோரே. இனி வரும் காலங்களில் ஆட்டு மந்தையாய் நாங்கள் இயங்க மாட்டோம் என்று சொல்லாமல் சொல்லியது இந்த கூட்டம்.”

    Hi Dont cheat public and bloggers, The forumn’s convener is Father Gegath Gasper Raj,Who is supportive of any ruling party(am not saying he supporting DMK) Forum organized the peace walk,Gegath Kasper is a person wanted to use any of the talkable issues towards for his self-advertisement.


    எந்த அமைப்பினரும் கலைஞர் குறித்து பேச வில்லை. என்ன இருந்தாலும் எல்லாருக்கும் கலைஞர் மீது கொஞ்சமேனும் அபிமானம் இருக்கத்தான் செய்கின்றது.

    From the above words, what you trying to say, do you think karunanithi is doing good for Eelam.

    PEACE WALK TRYING TO REDUCE ANGRY WITH KARUNANITHI.

    That is the objective of this peace walk and father using all organizations for this only.


    கூட்டத்தை முன்னெடுத்துச் சென்றதில் பெரும் பங்கு வகித்தவர்கள் மாணவர்கள், பல்வேறு துறைகளில் இயங்கும் இளைஞர்கள் போன்றோரே. ”

    Do you think this students and youths is enough to get Eelam for tamils ? Me too attended this event.
    Only hundreds on students and youths participated.

    People like gegath kasper will not able to motivate youths and youngesters.

    Pls understand first.Ask father to show the clear “Account” details of Thiruvasagam to Mastreo Ilayaraja.

    Dont believe all and dont fall in wall.

    Regards
    Annu Kutty

  2. நந்தா,

    நேற்று உங்களிடம் நான் அளித்த அந்த நோட்டிஸை (ஒரு பழைய தி.மு.க தொண்டர், கலைஞருக்கு எழுதிய திறந்த மடல்) மீள்பதிவு செய்யுங்களேன். தெளிவான மடல் அது..

    அன்புடன்
    அதியமான்

  3. //Hi Dont cheat public and bloggers, The forumn’s convener is Father Gegath Gasper Raj,Who is supportive of any ruling party(am not saying he supporting DMK)//

    அன்னு குட்டி இதில் நான் எங்கே ஏமாற்றினேன். ஜெகத் கஸ்பார்தான் முன்னெடுத்துச் சென்றார் என்பதௌ சொல்லிதானே இருக்கிறேன். இருப்பினும் எந்த அரசியல் தலைமையாளார்களை துதி பாடியும் அங்கே கோஷங்கள் எழுப்பப் பெற வில்லை. இதுல உங்களுக்கு என்ன பிரச்சினை.

    //Gegath Kasper is a person wanted to use any of the talkable issues towards for his self-advertisement.//

    ஜெகத் கஸ்பார் தான் புகழடைய, சுயலாபம் பெறத்தான் இந்த கூட்டத்தை நடத்துகின்றார் என்பது உங்களுடைய தனிப்பட்ட கருத்து. அதுக்கு நான் என்ன செய்ய? IT மாணவர்கள் கோயம்பேடு அருகே உண்ணாவிரதமமிருந்தார்களே அப்போதிருந்தே மாணவர்களையும், பொதுமக்களையும் மட்டும் வைத்து நாம் கூட்டம் நடத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தோம். இதை ஆரம்பித்து வைத்தவரே அவர்தான். அவரது அரசியல் நிலைப்பாடு என்பது வேறு விஷயம். நேற்றைய கூட்டத்தைப் பொறுத்த வரை It’s very clean.

    //From the above words, what you trying to say, do you think karunanithi is doing good for Eelam.

    PEACE WALK TRYING TO REDUCE ANGRY WITH KARUNANITHI.

    That is the objective of this peace walk and father using all organizations for this only.//

    தெளிவா புரியற மாதிரிதான எழுதி இருக்கேன். “நான் ஓட்டு போட ஆரம்பித்ததிலிருந்து இது வரை கலைஞருக்கு மட்டுமே போட்டு வந்திருக்கிறேன். சரியாய் 2 வருடங்களுக்கு முன்பெல்லாம் கலைஞருக்காக நண்பர்கள் பலருடன் வாதாடி இருக்கின்றேன். சண்டையிட்டிருந்திருக்கின்றேன். ஆனால் இப்போது??? கலைஞரே இப்படியே போனால் பரம்பரை தி.மு.க காரன் கூட உங்களை மன்னிக்க மாட்டான்.” இதுல என்ன கலைஞருக்கு ஆதரவு குரலா தெரியுது.

    கூட்டம் முடிஞ்சதுக்கப்புறம் நண்பர்களுடன் பேசிய போது அனைவரும் சொல்லிக் கொண்டது இதுதான். ஈழ வியத்தில் துரோகமிழைத்த காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளுக்கு செத்தாலும் ஓட்டு போட கூடாது. இது உங்களுக்கு தெளிவா புரிய வெச்சிருக்கும்னு நினைக்கிறேன்.

    //Do you think this students and youths is enough to get Eelam for tamils ? Me too attended this event.
    Only hundreds on students and youths participated.//

    ஜெகத் கஸ்பாருடைய அரசியல் நிலைப்பாடுகள், அவர் செய்த தவறுகள், இளையராஜா விவகாரம் எல்லாமே எனக்கும் ஓரளவு தெரியும்.

    அப்புறம் இன்னொன்று. ஜெகத் கஸ்பாரை ஏதோ எங்களை கரையேற்ற வந்த காவலனாகவோ, அடுத்த தலைவராகவோ எல்லாம் நாங்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. ஈழத் தமிழர் விவகாரத்தில் எல்லாரும் தனித் தனியாய் குரல் கொடுத்துக் கொண்டிருக்க கூடாது. அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டுமமென்பதாலேயே வேறு எதுவும் பேசாமல் ஒன்றாய் அணி திரண்டோம்.

    மற்ற படி அவர் என்ன சொன்னாலும் கை தட்டி உணர்ச்சி வசப்பட நாங்கள அரசியல் தொண்டர்கள் இல்லை. ஈழத் தமிழர் விவகாரத்தில் நாடகம் போடும் எவரையும் சட்டையை பிடித்து கேள்வி கேட்க தயங்காத கூட்டம் இது. அதை நீங்கள் முத்துகுமரன் அவர்களின் இறுதி நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கலாம்.

    //Dont believe all and dont fall in wall.//

    மன்னிக்கவும். இன்னொருவர் வந்து அறிவுரை சொல்லுமளவுக்கு நாங்கள் இன்னும் தாழ்ந்து போக வில்லை.அதனால் இது எங்களுக்கு தேவையில்லை. கலந்து கொண்ட மாணவர்கள், இளைஞர்களது நோக்கம் எல்லாமே எந்த வித ஆதாயமுமற்ற, ஈழத் தமிழர்களின் நலன் ஒன்றை மட்டுமே கருதிய ஓர் அர்ப்பணிப்ப உணர்வு மட்டும்தான்.

    அதற்காக நாங்கள் ஆட்டு மந்தையாய் மாறி விட மாட்டோம்.

    குறிப்பாய் நான் சொல்ல விரும்புவது இதுதான். எவரையும் ஏமாற்றவோ அல்லது எவருக்கும் வக்காலத்து வாங்கவோஈதை எழுத வில்லை. நடந்ததோர் நிகழ்வு குறித்தான செய்தித் தொகுப்பு அவ்வளவே. அவ்வளவு சீக்கிரத்தில் ஈழத் தமிழர் விவகாரத்தில் நாங்கள் எவரையும் நம்பி விடத் தயாராயில்லை என்பதை சொல்லிக் கொள்கிறேன்.

Leave a Reply