மிகச் சாதாரணமாய் அந்த வார்த்தைகளைச் சொல்லி விட்டுச் சென்றிருந்தான், ஊருக்குப் போய் விட்டு அன்றுதான் திரும்பியிருந்த என் நண்பன்.
“மச்சான் அஞ்சுரோட்டுல இருந்துச்சுல்ல துவாரகா ஹோட்டல் அதை 64 கோடிக்கோ என்னமோ ரிலையன்ஸ் வாங்கிட்டாங்களாண்டா. மொத்தம் 7 தியேட்டர், ரிலையன்சு ஃபிரஷ் எல்லாமே அங்கயே வந்துடுமாம்.கூடிய சீக்கிரம் கன்ஸ்ட்ரக்ஷன் வொர்க்கை ஆரம்பிக்கப் போறாங்கடா”
கல்லூரி வாழ்க்கையை கழித்திருக்கின்ற காரணத்தால், சேலம் என்பது எனக்கு சொந்த ஊரினைப் போன்றதோர் உணர்வைதான் ஏற்படுத்தும். ஒரு காலத்தில் 72 தியேட்டர்கள் சேலம் டவுனிற்குள்ளேயே இருந்தது. போரடிக்குதே என்ன செய்வது என்ற கவலை வரவிடாமல் அந்த தியேட்டர்கள் சேலம் மக்களை பார்த்துக் கொண்டது. இதை விட இரவு ஆட்டத்தை பார்த்து விட்டு வீட்டிற்கு பேருந்திலேயே திரும்பலாம் என்ற அளவிற்கு பேருந்து வசதிகள் ஓரளவு இருந்தது சேலத்தில் மட்டும்தான். இதே போன்ற சிறு நகரங்களான ஈரோடு, திருப்பூர் போன்ற ஊர்களில் கூட இத்தகைய வசதி இருந்து நான் பார்த்ததில்லை.
எல்லாரையும் போலவே, எங்கள் கல்லூரி காலத்தில் நாங்களும் வெளியே ஒரு வீடு எடுத்து 5 பேராய் தங்கியிருந்து, அந்த வயதிற்குரிய பொதுப்புத்தி இலக்கணங்கள் மாறாமல், அனுபவித்து வாழ்ந்துக் கொண்டிருந்தோம். எங்களுடைய பெரும்பான்மையான வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு இரவுகள் தியேட்டர்களால் நிரப்பப் பட்டிருக்கும். 10 மணி ஆட்டத்திற்கு 9.30 மணி வரை அதைப் பற்றிய பிரக்ஞையே கூட இல்லாமல் இருந்து விட்டு, திடீர்னு ஒருத்தன் “மச்சான் போஸ்டர்ல பார்த்தேண்டா. இது வரை தமிழ் சினிமாவில் வந்திராத க்ளைமாக்ஸாண்டா” என்று எவனாவது ஒருத்தன் ஆரம்பிப்பான். அதை ஆமோதிக்கிறோமோ இல்லையோ, 9.55 க்கு நாங்கள் தியேட்டரில் இருப்போம்.படம் முடிந்து பகல் பொழுதுகளில் அதீத சந்தடிகளுடன் விளங்கிய மார்க்கெட் மெயின் ரோட்டில் நள்ளிரவு ஒரு மணிக்கு ஆளரவமில்லாத மயான அமைதியை எங்களுடைய சில்லறைப் பேச்சுக்களால் கெடுத்து விட்டு வருவோம்.
எந்த தியேட்டராய் இருந்தாலும் இருபது ரூபாயிலிருந்து நாற்பது ரூபாய்க்குள் எளிதாக டிக்கெட்டுகளை பெற்று விட எங்களால் சாத்தியமாயிருந்தது. வேறு எதையும் விட இந்த அம்சமே தொடர்ச்சியாய் எங்களை தியேட்டர்களிடம் நாட்டம் கொள்ள வைத்திருந்தது. கல்லூரி முடிந்த பின்பு மெதுவாய் சென்னை வாசியாய் மாறிப் போய் விட்ட பின்பு, தியேட்டர்களுக்கான இலக்கணங்கள் மாறிப் போயிற்று.
ஏற்கனவே A.R.R.S மல்டிப்ளக்ஸ் தியேட்டர்கள் கட்டப்பட்டு பின்பு அவை மெதுவாய் பிரமீட் சாய்மீராவிற்கு மாறிவிட்டது உறுத்திக்கொண்டிருந்தது . அப்படியிருக்கையில் திடீரென்று சொல்லப்பட்ட இந்த செய்தி ஏனோ என்னை ரொம்பவே அலைக்கழித்தது. எனக்கு நினைவு தெரிந்து 1998 முதல் 2005 வரை சினிமா தியேட்டர்களில் விற்கப்படும் டிக்கெட் விலைகளில் பெருமளவு மாற்றம் வந்ததில்லை. 1998ல் ஈரோட்டில் அபிராமியில் 30 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிய நான் 2005 ல் 40 ரூபாய்க்கு சில தியேட்டர்களிலும், மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களில் மட்டும் 50 ரூபாய் அல்லது அதிக பட்சம் 60 ரூபாய்க்கு வாங்க வேண்டி இருந்தது.
எட்டு வருடங்களாய் ஒன்றும் பெரிதாய் மாற்றமில்லாமலிருந்த இந்த டிக்கெட் விலை சிறு நகரங்களில் கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் தயவு தாட்சண்யம் பாராது பெட்ரோல் விலையைப் போல உயர்ந்திருக்கின்றது.
ஆரம்பிக்க இருக்கும் ரிலையன்சு தியேட்டர்களிலும், மற்ற மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களிலும் 120 மற்றும் 100 ரூபாய் என டிக்கட்டுகள் வகைப்படுத்தப் பட்டிருக்கின்றன. சேலம் போன்ற சிறு நகரங்களில் தனி நபர் வருமானம் என்பது குறைவான ஒன்று. ஒரு குடும்பம் இரண்டு முதல் மூன்று மணி நேரத்தைச் செலவிட குறைந்தது 500 ரூபாய் செலவு செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. சிறு நகரங்களிலும், கிராமப் பஞ்சாயத்துகளிலும் மக்கள் இப்போதெல்லாம் விசிடி பார்ப்பதை தவறு என்று எவரேனும் அறிவுரை சொல்ல முயன்றால் அடிக்க வருகின்றார்கள்.
சாந்தி தியேட்டர், கௌரி தியேட்டர், ரத்னா தியேட்டர், ஒரு காலத்தில் சேலம் மாவட்டத்திலேயே பெரிய அரங்கு என்று பெருமைப்படுத்தப் பட்ட கீதாலயா, சக்தி, ஒரியண்டல் சக்தி, பிரபாத் உள்ளிட்ட நகரின் மையத்திலிருக்கும் பல தியேட்டர்கள் கார்ப்பரேட் மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களிடம் போட்டி போட முடியாமல் கல்யாண மண்டபங்களாகவோ அல்லது பரங்கிமலை ஜோதி போன்ற தியேட்டர்களைப் போலவோ கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டு வருகின்றன.
***********************************************
24 ஆம் தேதி மங்களூரில் ராம் சேனா இயக்கத்தினரால் “பப்” ஒன்றில் கலாச்சாரத்தின் பெயரால் நடத்தப்பட்ட பெண்களின் மீதான தாக்குதல் மீண்டும் ஒரு முறை விகாரமாய் இந்த சமூகம் எப்படி ஒழுக்க விதிகளை பெண்களுக்கு மட்டும் என்று எழுதி வைத்திருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறது. தாக்குதலை நடத்தியவர்களில் பலர் 30 வயதுக்கும் குறைவான வயதுக்காரர்களே. படிச்சவனுங்க என்பது ஆளைப் பார்க்கையிலும், அணிந்திருந்த உடைகளிலும் தெரிந்தது. ஆனால் சிந்தனையளவில் மூன்று தலை முறைகள் பின் தங்கிக் கிடக்கிறார்கள்.
ஏய் புள்ளை இப்போ உனக்கு படிப்பெதுக்கு, கம்முன்னு வீட்டோட கிட என்று கேட்டு அடக்கி வைக்கும் கிராமத்து மனிதர்களுக்கும், இவனுங்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. இவர்கள் வீட்டில் இவனுங்க மனைவியருக்கோ, மகள்களுக்கோ இவனுங்க எந்தளவுக்கு மரியாதையாய் நடத்துவார்கள் என்பது இவர்களது செயல்களிலிருந்தே தெரிந்துக் கொள்ள முடிகின்றது.
சம்பவம் நடந்து 10 மணி நேரத்திற்கும் மேலாகியும் முதல்வர் வாய் திறக்க வில்லை. ஒரு வழியாய் மௌன விரதத்தை கலைத்து “சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்ற ரேஞ்சுக்கு மொக்கையாய் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். நான்கு நாட்கள் கழித்து நேற்று ராம் சேனாவின் தலைவர் முத்தாலிக் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதுவும் மங்களூர் தாக்குதலுக்காக அல்ல. தேவகிரி மாவட்டத்தில் நடந்த மத கலவரங்களுக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் உண்மையில் கைது செய்யப்பட்டாரா அல்லது மக்களிடமிருந்தும் பத்திரிக்கையாளர்களிடமிருந்தும் பாதுகாக்கப் பட்டாரா என்பது கேள்வியாய் இருக்கிறது.
தாக்குதலை நடத்திய கும்பல் ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கீ ஜே, பஜ்ரங் தள் ஜே என்பது போன்ற கோஷங்களை எழுப்பி விட்டுச் சென்றிருக்கிறது. பாரதீய ஜனதா கட்சியோ சம்பவத்தை கர்நாடக அரசு கையாண்ட விதம் சந்தோசத்தைத் தருகின்றது. மீடியாக்கள் தேவையில்லாமல் இதை பெரிசு பண்ணுகின்றன என்று சொல்லி விட்டுப் போகிறது. மீடியாக்கள் இந்தளவுக்கு இதை பெரிசு பண்ணியிருக்கா விட்டால் வழக்கம் போலவே இந்த விவகாரம் இருட்டடிக்கப் பட்டிருக்கும். இதில் இன்னும் வக்கிரமானது சம்பவம் நடந்த பிறகு முத்தாலிக் சொன்ன ” இது ஒரு சின்ன விஷயம். நாங்கள் மக்களுக்கு சரியானதைத்தான் செய்கிறோம். நமது கலாச்சாரத்தைக் காக்கிறோம்” என்ற அற உணர்ச்சி சிறிதும் இல்லாத வார்த்தைகள்.
இதே போன்றதோர் தாக்குதலை எந்த ஒரு முஸ்லீம் அமைப்போ நடத்தி இருந்தால் அந்த அமைப்பு இந்நேரம் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கப் பட்டிருக்கும். அதன் தலைவர் உடனடியாய் கைது செய்யப் பட்டிருப்பார். அமைப்பின் மீது நிரந்தரத் தடை விதிக்கப் பட்டிருக்கும். குறைந்தது மூன்று வருடங்களுக்கேனும் இதன் தலைவர் ஜெயில், கேஸ் என்று அலைந்துக் கொண்டிருப்பார்.
ஆனால் இவை எதுவும் முத்தாலிக் – ராம் சேனா விஷயத்தில் நடைபெறாது. இவர்களது காவித் துண்டு இவர்களது தவறுகளிலிருந்து இவர்களை எப்படியேனும் காப்பாற்றி விடும். இதே அமைப்புதான் ஏற்கனவே காவிரி பிரச்சினையில் முதல்வரின் மகள் செல்வி அவர்களது வீட்டைத் தாக்கிய கும்பல் என்று குற்றம் சாட்டப் பட்டிருக்கிறது. முத்தாலிக்கிற்கு ஏற்கனவே நடைபெற்ற தேவாலயங்களின் மீதான தாக்குதல்களில் பங்கு இருக்கிறது என்றும், ஹூப்ளியில் கடந்த வ்ருடத்தில் தோல்வியில் முடிந்த குண்டு வெடிப்புகளிலும் சம்பந்தம் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.
எது எப்படியாயிருப்பினும் இந்து மதம் தீவிரவாதத்திற்கு துணை போகாது என்று சொல்லி அத்வானி நாளை இவர்களுக்கு ஆதரவாய் ஓர் அறிக்கை கூட விடலாம். யாருக்குத் தெரியும்??? இவனுங்களை எல்லாம் ஆட்சியில உக்கார வெச்சா, சாத்திரங்கள் பிணம் தின்னத்தான் செய்யும்.
**************************************************
ஒவ்வொரு முறை ரஜினி படம் ஆரம்பிக்கப்படும் போதும் இந்தப் படத்தில் என்ன பஞ்ச் டயலாக் வெக்கலாம் என்று குமுதம் போன்ற பத்திரிக்கைகள் சிறந்த பன்ச் டயலாக்குகளுக்கு என்று ஒரு போட்டி நடத்தும்.
அது போன்றதொரு போட்டியை கலைஞருக்கும், இன்னும் ஒரு சில கள்ள மௌனிகளுக்கும் நடத்தினால் பரவாயில்லை என்று தோன்றுகிறது. ஒவ்வொரு நாளும் செய்தித் தாள்களில் “ஈழத் தமிழர்களுக்காக உயிரைக் கொடுக்கவும் தயார்”, “ஆட்சியை இழக்கவும் தயார்” என்பது போன்ற வார்த்தைகளைப் படித்து படித்து எங்களுக்கு போரடிக்க ஆரம்பித்து விட்டது.
வார்த்தைகளை விடுவிப்பதை தவிர வேறு ஒன்றையும் செய்ய திராணி இல்லாத இந்த அரசும் இதன் தலைவரும்தான் தமிழினக் காவலர்கள் என்று சொன்னால் கண் மண் தெரியாமல் கோபம் வருகின்றது. இதுக்கு பேசாமல் ஜெ அம்மா மாதிரி இஸ்ரேல் பாலஸ்தீனம் சண்டையைப் பத்தி மட்டும் கவலைப்பட்டுட்டு போலாம். இவர்கள் ஒரு புறமிருக்க தங்கபாலு, ஞானசேகரன் உள்ளிட்ட பல கோமாளிகள் தங்களது தொடர் பேட்டிகளின் மூலம் ஒன்றை நன்றாக என் நெஞ்சுக்குள் உரமேற்றி விட்டார்கள்.
போய்த் தொலையுதுன்னு பாஜகவுக்கோ, அல்லது வேறு எவருக்குமோ கூட எனது மற்றும் என்னைச் சார்ந்தவர்களது ஓட்டுக்கள் விழலாம். ஆனால் செத்தாலும் காங்கிரஸ் கோமாளிகளுக்கு விழாது.
//சாந்தி தியேட்டர், கௌரி தியேட்டர், ரத்னா தியேட்டர், ஒரு காலத்தில் சேலம் மாவட்டத்திலேயே பெரிய அரங்கு என்று பெருமைப்படுத்தப் பட்ட கீதாலயா, சக்தி, ஒரியண்டல் சக்தி, பிரபாத்//
அட.. நமக்கு சொந்த ஊரு நாமக்கல். சேலத்துல இருக்கற எல்லா தியேட்டர்-லயும் படம் பார்த்து இருக்கேன். ஆனா அமெரிக்கா வந்து செட்டில் ஆகி 5 வருசம் ஆய்டுச்சி. சேலத்துல படம் பார்த்து எப்படியும் 8-9 வருசம் இருக்கும்னு நினைக்கிறேன்.
பைபாஸ் போடுறதுக்கு முன்னாடி.. எல்லா பஸ்ஸும் பழைய பஸ்டாண்ட் போகும் போது… ரெண்டு பக்கமும் இருக்கற எல்லா தியேட்டர் போஸ்டர் பார்க்கறதே.. ஒரு ஜாலிதான் போங்க..!!
அடுத்த முறை ஊருக்கு போகும்போது என்னென்ன அதிர்ச்சி இருக்கோ தெரியல..!!
நல்லா எழுதி இருக்கீங்க..!!!
pathivu nanraaga irundhadhu. neengal chnennai alladhu thamizhagathin pira paguthigalil irundhaalum ungal tholipesi yen thara mudiyuma? I need your contribution for website.. http://www.thamizhstudio.com...
thanks,
arun m.
“//இவர் உண்மையில் கைது செய்யப்பட்டாரா அல்லது மக்களிடமிருந்தும் பத்திரிக்கையாளர்களிடமிருந்தும் பாதுகாக்கப் பட்டாரா என்பது கேள்வியாய் இருக்கிறது.//”…..இதுதானே இன்றைய அரசியல்……
“// போய்த் தொலையுதுன்னு பாஜகவுக்கோ, அல்லது வேறு எவருக்குமோ கூட எனது மற்றும் என்னைச் சார்ந்தவர்களது ஓட்டுக்கள் விழலாம். ஆனால் செத்தாலும் காங்கிரஸ் கோமாளிகளுக்கு விழாது.//”………வேண்டாமுங்கோ தம்பி …….அவசர முடிவுக்கெல்லாம் போய்டாதீங்க…….அப்புறம் சென்னையில எந்த இடத்துக்கு போகணம் என்றாலும் “அம்மா வருவதற்கு இருபது நான்கு மணி நேரத்துக்கு” முன்னாடியே எல்லா திசைகளிலும் வண்டிகள நிறுத்த சொல்லி கட்டளை போட்டுடுவாங்கோ அப்புறம் எல்லாரும் அவசர சிகிச்சைக்கு கூட போக முடியாம செத்து போய்டுவாங்க….
சென்னைவாசிங்க படற கஷ்டங்கள பத்தி சொல்லி மாளாதுங்க….தம்பி ….கொஞ்சம் யோசிச்சு செயல் படுங்க…..
// 1998ல் ஈரோட்டில் அபிராமியில் 30 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிய நான் 2005 ல் 40 ரூபாய்க்கு சில தியேட்டர்களிலும், மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களில் மட்டும் 50 ரூபாய் அல்லது அதிக பட்சம் 60 ரூபாய்க்கு வாங்க வேண்டி இருந்தது.//
இன்னைக்கும் அவ்வளவுதான் இருக்கு அதிகபட்ச விலையே நம்மூருல 40 தான்.அதனாலையோ என்னவோ வேற எங்கயும் படம் பாக்க பிடிப்பதில்லை ஒருமுறை பிவிஆர்ல பாத்தேன் 250 ரூபாய் டிகட்விலை.அதுவே கடைசி.