நந்தாவின் கிறுக்கல்கள்

January 15, 2009

32 வது புத்தகத் திருவிழா சில நினைவுக் குறிப்புகள்

நம்மில் பல பேருக்கு இந்த உணர்வுகள் உள்ளுக்குள் எழுந்திருக்கும். ஓவ்வொரு வருடம் ஜனவரி தொடங்கும் போதும், நம் மனதுக்குள் கவுண்ட் டவுன் தொடங்கி விடும். உலகக் கோப்பை போட்டிகளுக்கு போடுவது போல ஒவ்வொரு நாள் காலண்டரில் தேதி கிழிக்கும் போதும் ஒரு நாள் குறைந்து விட்டது எனும் எண்ணம் மனதினுள் குதியாட்டம் போடும்.

ஒட்டு மொத்தமாய் அத்தனை புத்தகங்களை ஒன்றாய் பார்க்கையில் ஏற்படும் பரவசம் வார்த்தைகளின் எல்லகளுக்கப்பாற் எங்கேயோ தொலைந்து போய்க் கிடக்கின்றது. சின்ன வயதில் ஒரு சில கடைக்காரர்களைப் பார்க்கையில் ஒரு வித பொறாமை உணர்வு ஏற்படுவதுண்டு. ஆரம்பப் பள்ளி வயதுகளில், இனிப்பு தின்னா பல்லு சொத்தையா போயிடும் என்று மிரட்டி வைத்திருக்கும் காலங்களில் சாக்லேட் கடைக்காரரையும், கூல்டிரிங்ஸ் கடைக்காரரையும் பார்த்தால் ச்சே இந்த கடைக்காரர் மாதிரி இருந்தா எவ்ளோ வேணாலும் எடுத்துக்கலாம் இல்லை எனும் ஏக்கம் தோன்றியதுண்டு. பதின்ம வயதுகளில் அது மெல்ல உருமாற்றம் அடைந்து ஆடியோ கேசட் கடைக்காரர் மீதும், அழகான பெண்கள் வந்து செல்லும் துணிக்கடைக்காரர் மீதும் நிலை பெற்றிருந்தது.

ஆசைகளுக்கு வயது ஒரு பொருட்டே இல்லையோ? காலம் உருண்டோடியும், இதோ இந்த 27 வயதிலும் அதே பொறாமை எண்ணங்கள் புத்தகக் கடைக்காரர்கள் மீது தொக்கிக் கொண்டிருக்கின்றது. நல்ல வேளையாய் இந்த உணர்வுகளை நீர்த்துப் போகச் செய்து கொண்டிருக்கின்றது ஒவ்வொரு வருடமும் நடைபெறும் புத்தகத் திருவிழாக்கள்.

********************************************
ஏற்கனவே மிகத் தெளிவாய் திட்டமிட்டிருந்த படியால் உடன் பிறப்புடன் 11.30 க்கு தொடங்கும் கண்காட்சிக்கு 11.15 க்கே போய் நிற்க முடிந்தது. அந்த நேரத்திலும் அங்கே அணி வகுத்து நின்ற இரு சக்கர வாகனங்கள் எனக்குள் பெரும் வியப்பையும், சந்தோசத்தையும் தந்தது. எப்போதும் கேட்டிலிருந்து வழி நெடுக வரவேற்கும் வண்ண வண்ண பேனர்களும் கட் அவுட்டுகளும் இந்த வருடம் சற்றே குறைவோ எனும் எண்ணத்தை ஏற்படுத்தியது. ஏதோ குறையுதே எனும் எண்ணம் ஏற்பட்டது உண்மை. அதை என்னவெண்டு சொல்லத் தெரிய வில்லை.

மொத்தம் இரண்டு முறை முழுதாய் அரங்கைச் சுற்றி வர வேண்டும். முதல் முறை வெறுமனே புத்தகங்களின் பெயர், விலை, பதிப்பகம், கடை எண் ஆகியவற்றை மற்றும் குறித்துக் கொள்வது எனவும் இரண்டாம் முறை குறித்து வைத்த பதிப்பகங்களை மட்டும் வேட்டையாடுவது எனவும் திட்டமிட்டிருந்தேன். தேவையில்லாமல் வெயிட் தூக்க வேண்டாம் என்பதால் இந்த திட்டம். இல்லையெனில் சீக்கிரம் களைத்து விடும் வாய்ப்பு அதிகம்.

கீழைக்காற்றும் தமிழினி பதிப்பகமும் எடுத்த உடனே முதல் ஆளாய் வரவேற்றது. இரண்டையும் முடித்து விட்டு பார்க்கும் போது சரியாய் 50 நிமிடங்கள் காணாமல் போயிருந்தது. இந்த வேகத்தில் போனால் விளங்கினாற் போலதான் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

ஏற்கனவே எடுக்கப்பட்ட சில முன் முடிவுகளின் அடிப்படையில் எப்படி?  என்று கேள்வியில் முடியும் புத்தகங்கள் (எ.கா: சீக்கிரம் பணம் சம்பாதிப்பது எப்படி?) மற்றும் உன்னை விட அறிவாளி உலகத்தில் இல்லை என்ற தன்னம்பிக்கையூட்டும் புத்தகங்கள் நிரம்பிய பதிப்பகங்கள் உள்ளயே நுழையக் கூடாது என்று சங்கல்பம் எடுத்திருந்த படியால் வெகு எளிதாய் பல பதிப்பகங்களைத் தாண்டிச் செல்ல முடிந்தது.

புக் ஸ்டால்களிற்கு எந்த அடிப்படையில் நம்பர்கள் வழங்கி இருக்கிறார்கள் என்று ஆராய எடுத்துக் கொள்ளும் நேரத்தில் 4 சுடோகு பஸ்ஸில்களைத் முடித்து விடலாம் போல. அந்தளவுக்கு குழப்பியது. ஒரு வேளை எனக்குதான் புரிய வில்லயோ என்னமோ.

ஒரு வழியாய் முதல் சுற்றை முடித்து விட்டு கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என்று வெளியில் வந்த போது நேரம் 5 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. கேண்டீனில் என்னடா சரவணபவன் ரேஞ்சுக்கு ஒரு தோசை 25 ரூபாய் சொல்றான் என்று கூட வந்தவன் புலம்பிக் கொண்டிருந்தான். அரை மணி நேரம் அப்படியே கேண்டீனிலும், பந்தலிலும் பொழுதை ஓட்டினோம்.

முதல் சுற்றிலேயே பல வித்தியாச அனுபவங்கள். விஜய பாரதம்(பெயர் டவுட்டுதான்) ஸ்டாலில் அத்வானியின் பெரிய புத்தகம் ஒன்று (என் தேசம்) வரவேற்றது. பாபர் மசூதி இடிப்பை ஒரு பெரும் புரட்சியாய் அதில் எழுதி இருப்பாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. குறைந்த பட்ச விருப்பு கூட அந்த புத்தகத்தின் மீது ஏனோ எழவே இல்லை.  தமிழ் புத்தாண்டு தை மாதம் என்று அறிவித்திருப்பதை நையாண்டி செய்து சோவின் கார்ட்டூனுடன் பிரச்சார வகை 5 பக்க பிரசுரம் ஒன்றை விற்றுக் கொண்டிருந்தார்கள். குண்டு குண்டான எழுத்துக்களில் சில படங்கள் வேறு பக்கத்தை நிரப்பி இருந்தது. நின்றுக்கொண்டே படித்தால் முழுதாய் இரண்டே நிமிடங்களில் அதைப் படித்து முடித்து விடலாம். அப்புறம் கருணாநிதி, வீரமணி, அ.மார்க்ஸ் போன்றோர்களை திட்டி சில புத்தகங்கள் நிரம்பி இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாய் என்னை திடுக்கிடச் செய்தது “குஜரத்தில் முஸ்லீம்களின் அட்டூழியம்” என்பது போன்ற தலைப்புகளில் சில புத்தகங்கள் அந்த ஸ்டாலில் காணக்கிடைத்ததுதான். ஒரு பக்கம் விவேகானந்தர், ராமகிருஷ்ணர் உள்ளிட்ட சில துறவிகளின் அமைதி ததும்பும் உபதேசங்கள், இன்னொரு பக்கம் மாற்று மதத்தினர்களை கொலைகாரர்களாய் சித்தரிக்கும் சில புத்தகங்கள். இந்த “தன்னையறிதல்” “தன்னையறிதல்”னு சொல்லுவாங்களே அது இவங்க அடுத்தவங்களுக்கு உபதேசம் கொடுக்கத்தான் போல.

புலவர் குணா என்று ஒருவர் ஒரு கவிதை புத்தகம் போட்டிருந்தார். அதன் முன்னுரையைப் படித்துப் பார்த்த போது  முனைவர்.கவிஞர்.திரு.ஏ.சுவாமிநாதன் என்று யாரோ ஒருத்தர் இந்த இளைஞர் புதுக்கவிதையுலகில் புதிய சாதனைகளைப் படைப்பார் என்று பயங்கரமாய் எழுதி இருந்தார். அவருடைய முதல் புத்தகமே இதுதானாம். அப்புறம் யார் கொடுத்தா இந்த புலவர் பட்டம் என்று நினைத்துக் கொண்டேன். ஜோசியக்காரர்களுக்கு பெயரின் முன்னே அடைமொழியாய் ஏழெட்டு வார்த்தைகள் இருக்குமே அந்த நோய் இப்போது எழுத்தாளர்களுக்கும் தொற்றிக் கொண்டதோ. பெயரின் முன்பு கவிஞர், புலவர், முனைவர் ஆகிய பட்டங்கள் இருக்கும் புத்தகங்கள் என்னை எப்போதுமே கவர்வதில்லை.

காவ்யா பதிப்பகத்தில் நிறைமதி என்பவரது புத்தகம் ஒன்று இருந்தது. ஆண் – பெண் நட்பைக் குறித்து எழுதப்பெற்ற கவித்தைத் தொகுப்பு அது. ஏறக்குறைய நட்புக்காலம் வகையறா. சில கவிதைகள் நன்றாக இருந்தது. ஆனால் பல கவிதைகளின் முடிவில் நட்பு நட்பு என்று ஏதோ நாடகத்தன்மையுடன் முடிக்கப்பட்டு இருந்தது போல் தோன்றியதால் நகர்த்தி வைத்து விட்டேன். இதே இரண்டு வருடங்களுக்கு முன்பென்றால் கண்டிப்பாய் அதை வாங்கியிருப்பேன். ஒரு வேளை நான் வளர்ந்துக் கொண்டிருக்கிறேனோ?

என்னதான் ஆண் – பெண் நட்பை கொண்டாடி கொஞ்சம் மெலோடிராமாடிக்காய் எழுதப்படும் கவிதைகள் இப்போதெல்லாம் அந்தளவு கவர்வதில்லை என்றாலும் (இப்போ எல்லாம் சும்மாவாச்சுக்கும் ஃபேசனுக்காகவே எழுதற மாதிரி இருக்கு), இன்றைய சமுதாயச் சூழலில் ஒரு குறைந்த பட்ச புரிந்துணர்வை ஏற்படுத்த இது போன்ற கவிதைகள் கண்டிப்பாய் தேவை (குறிப்பாய் பதின்ம வயதினருக்கு) என்ற எண்ணம் தோன்றியது.

நக்கீரன் பதிப்பகம் இல்லாது வேறு ஒருவர் எழுதிய சந்தனக்கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்று கண்ணில் பட்டது. அட நம்ம ஊரு ஆளாச்சே. என்ன எழுதி இருக்காங்கன்னு பார்ப்போம்னு புத்தகத்தைத் திறந்தால் முதல் பக்கத்திலே சரத்குமார் ஸ்டைலாக போஸ் கொடுத்த படம் ஒன்றுடன் அந்த எழுத்தாளாருக்கு வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார். (அந்த புத்தகம் எழுதினதுக்காம்). தொடர்ச்சியாக சேரன், அஜீத் என்று வரிசையாய் பல நடிகர்களின் வாழ்த்துச் செய்திகள் முதல் 10 பக்கங்களில் நிரம்பி இருந்தது. புத்தகத்தினுள்ளே ஒரு வரி படிக்க வில்லை. அப்படியே மூடி வைத்து விட்டு நகர்ந்து விட்டேன்.

போன வருடத்தை விட இந்த வருடம் குழந்தைகளுக்கான மேப், புத்தகங்கள், CD நிரம்பிய கடைகள் அதிகரித்து விட்டாற் போலத் தோன்றியது. அந்தக் கடைகளிலும் குடும்பத்துடன் வந்திருந்தவர்களது கூட்டம் நிரம்பியது.

ஒரு பெரிய ஸ்டாலில் இரண்டு கவிதைப்புத்தகங்களும் அதன் ஒலி வடிவ குறுந்தகடும் சேர்த்து விற்றுக் கொண்டிருந்தார்கள். அந்தப்புத்தகத்தை மட்டும் தனியாய் விற்றால் 30 ரூபாய்க்குதான் போகும். கவிதைகள் கூட சுமார் ரகம்தான். அதை ஒலி வடிவில் பிண்ணனியில் மெல்லிய இசையோடு  கொஞ்சம் நன்றாய் செய்திருந்தார்கள்.

விகடன், குமுதம், நக்கீரன், கிழக்கு பதிப்பகங்களில் எப்போதும் கூட்டம் முண்டியடித்தது. குறிப்பாய் முதல் மூன்றில் இது ரொம்பவே அதிகம். குமுதம் இந்த வருடம் போட்ட புத்தகங்களே 4 தான். அதில் ஒன்று ஞாநியின் 2007 வருட ஓ பக்கக் கட்டுரைத் தொகுப்புகள். நக்கீரன் வழக்கம் போல “ஜெகஜ்ஜால ஜெயா” வகையறா புத்தகங்களா நிரம்பி இருந்தது. அடுத்தவர் வீட்டு படுக்கையறையை எட்டிப் பார்ப்பதில் நக்கீரன் மிகச் சிறந்த ஒன்றாய் விளங்குகின்றது. என்னுடைய 12 ஆம் வகுப்புக் காலம் என்று நினைக்கிறேன்.  “சேலஞ்ச்” எனும் நக்கீரன் சந்தித்த பிரச்சினைகள் குறித்தான புத்தகத்தை படித்து விட்டு இந்த பத்திரிக்கையை ரொம்ப உயர்வாய் நினைத்திருந்திருக்கிறேன் அப்போது.

குமுதம், ஆ.வி முதலான புத்தகங்களை படிப்பதை நிறுத்தி பல மாதங்களாகிறது. எப்போதாவது சில முக்கிய கட்டுரைகளை படிக்க விரும்பினால் மட்டும் இணையத்தில் தேடிப்பார்ப்பது வழக்கம். நக்கீரனை இலவசமாக கொடுத்தால் கூட படிக்க மனம் விரும்புவதில்லை. இதற்கு காரணம் என்னவென்று சாவகாசமாய் ஆராய வேண்டும்.

எப்போதும் அரங்கில் முதல் வரிசையிலேயே இருக்கும் தீம்தரிகிடவும், அன்பென்று கொட்டு முரசே பாரதியார் படமும் இந்த வருடம் காண வில்லை.

ஒரு கம்யூனிசத் துரோகியின் கதை, உலகைக் குலுக்கிய அந்த பத்து நாட்கள் ஆகிய சில புத்தகங்களின் தலைப்புகள் எனக்கு ஏனோ வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தியது. .

போன வருடம் குமரன் பதிப்பகத்தில் நான் வாங்கி தவற விட்டு விட்ட பாலியல் தொழிலாளியைப் பற்றிய ஆண்டாள் ப்ரியதர்ஷினியின் “மன்மத இயந்திரம்” எனும் குறுங்கவிதைத் தொகுப்பை அதே பதிப்பகத்தில் இந்த வருடம் வாங்கிய போது ரொம்ப சந்தோசமாய் இருந்தது.

விஜய் மில்டனின் கொலுசுகள் பேசக் கூடும் கவிதைத் தொகுப்பு இந்த முறை அதிகம் காணப்படவே இல்லை. மனுஷன் ரொமான்சில் கலக்கி இருப்பர் இந்த புத்தகத்தில். அடுத்த தொகுப்பை இதைப் போல வெளியிடுவார் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். தபூசங்கரும் அதிகம் காணப்பட வில்லை.

பா.விஜய்யின் தொந்தரவு இந்த முறையும் அதிகமாய் இருந்தது. அழகழகாய் பெண்கள் அவரது கவிதைப் புத்தகங்களை நிரப்பி இருந்தார்கள். தபூசங்கரின் கடைசி சில புத்தகங்களும் இதே மாதிரியே. போதாக்குறைக்கு நெல்லை கண்ணனும் இதைப் போன்று ஒரு புத்தகத்தை வெளியிட்டிருந்தார். அழகான பெண்கள் மட்டும்தான் காதலிக்கப் படத் தகுதியானவர்கள் என்ற எண்ணத்தை இவர்களை அறியாமலேயே இவர்கள் விதைத்துக் கொடிருக்கிறார்களோ? எனும் எண்ணம் தோன்றியது. பா.விஜய்யின் புத்தகங்களுக்கு மட்டும் விலை 120 ஐத் தாண்டியே இருந்தது. தேவ தேவன், கல்யாணி, பிரமிளின் போன்றவர்களின் ஒட்டு மொத்த கவிதைத் தொகுப்பையும் 200 லிருந்து 350க்குள் வாங்கி விடலாம். ஆண்டாள் பாடல்களும் அதன் எளிய மதிப்புரை அடங்கிய புத்தகம் 25 ரூபாய்க்கு விற்கப்பட்டுக் கொண்டிருந்தது பா.விஜய் பாடல்களைப் பார்க்கையில் நினைவிற்கு வந்தது.

செல்லமுத்து குப்புசாமியின் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு புத்தகம் கிழக்கில் மட்டும்தான் விற்கப்பட வில்லை. அல்லது வெளியே பார்வைக்கு விற்கப்பட வில்லை. நாதம் கீதம் பதிப்பகத்தில் முன்னாடியே வைத்திருந்தார்கள்.

தமிழக அரசின் சார்பில் பாரதிதாசன் விருது பெற்ற (:)) தமிழச்சி தங்கபாண்டியனின் பேச்சரவம் கேட்டிலையோ புத்தகம் உயிர்மையில் ரத்தச் சிகப்பாய் காணக் கிடைத்தது. என்னவோ இவரை ரொம்பவே கொண்டாடுகிறார்கள் என்ற எண்ணம் பலமாய் எழும்பியது. இவர் இந்த மாயபோதையில் விழுந்து விடுவாரா, தாண்டி வருவார என்பதைப் பொறுத்திருந்துப் பார்க்க வேண்டும்.

திருமகள் நிலையத்திலோ, கவிதா பதிப்பகத்திலோ சரியாய் நினைவில்லை 550 ரூபாய்க்கு பல கவிதைத் தொகுப்புகள் வாங்கியதை 500 ரூபாய்க்கு குறைத்தது மட்டுமல்லாமல் இன்னும் ஒரு கவிதைப் புத்தகத்தையும், குறும்பட CD ஒன்றையும் சேர்த்துத் தந்தார்கள். பலத்த ஆச்சர்யமாய் இருந்தது.

கிழக்கில் மருதனின் இந்தியப்பிரிவினை குறித்தான புத்தகத்தை திருப்பிப் பார்த்தேன். ஏற்கனவே அவரது சுபாஷ், ஃபிடல், ஸ்டாலின் ஆகியோரைப் பற்றிய நூல்கள் என்னை பயமுறுத்தி இருந்த படியால் நம்பி அதை வாங்க முடிய வில்லை. நான் ஃபிக்ஷன் எழுத்துக்களை ஃபிக்ஷன் எழுத்துக்கள் போல எழுதுவது சம்பவங்களின் நம்பகத்தன்மையையே கேள்விக் குறியாக்கி விடுகின்றது. எனவே இவரது புத்தகங்களை எவரேனும் தீவிரமாய் பரிந்துரை செய்தால் தவிர வாங்குவதில்லை. ச.நா.கண்ணன் தனது வலைப்பதிவில் அடுத்தகட்ட சுஜாதாவாக தகுதியானவர் என்று மருதன் அவர்களை சொல்லி இருப்பார். அதுதான் இலக்கு எனில் மருதன் அவர்கள் தன் பயணத்தை இன்னும் தொடங்கவே இல்லை என்றுதான் நான் சொல்வேன். ஆரம்பகட்ட வாசகர்களுக்கு பல்வேறு விஷயங்களைக் கொண்டு போய்ச் சேர்ப்பதில் இவரது மற்றும் மற்ற கிழக்கு நூல்கள் ஒரு பெரும் பங்கு வகிக்கின்றன என்பதில் எனக்கு பலத்த உடன்பாடே. ஆனால் படைப்பிலக்கியம் எனும் வகையில் இவர்களின் எத்தனை புத்தகங்கள் இடம் பெறும் என்பதிலும், சுஜாதாவின் இடம் போன்றவைகளையும் ஒத்துக் கொள்ள முடிவதே இல்லை. இஅவர்களுடைய தளமே வேறு என்பதில் நான் உறுதியாய் இருக்கிறேன்.

ஏற்கனவே போன வருடம் இதே போன்று சுபாஷ் சந்திர போஸ் குறித்து அ.ரெங்கசாமி எழுதிய “இமயத் தியாகம்” எனும் புத்தகம் (அது 250 ரூபாய் வேறு) ஏற்படுத்திய கடுப்பு அடங்கவே பல நாட்கள் ஆயிற்று. புத்தகங்களை கொஞ்சம் கூடப் படித்துப் பார்க்காமல் எப்படி வாங்க முடியும் என்று தெரிய வில்லை. காந்தியின் கடைசி 200 நாட்கள், இமயத் தியாகம், நெல்லை கண்ணனின் சில புத்தகங்கள், உள்ளிட்ட பல புத்தகங்கள் இப்படிதான் இருந்தன. ஸ்டாலில் இருந்தவர்களும் பிரித்துப் பார்க்கக் கூடாது என்று சொல்லி விட்டார்கள். சாம்பிளுக்கு ஒரு புத்தகத்தின் கவரை பிரித்து வைக்கலாம் என்ற குறைந்த பட்ச அறிவு கூட அவர்களுக்கு வர வில்லை. இதை நேரடியாகவே சில பதிப்பகங்களில் சொல்லி விட்டு போங்கடா என்று வந்து விட்டேன்.

காலச்சுவட்டில் சு.ராவின் சிறுகதைகளை முழுத் தொகுப்பை வாங்க நினைத்தேன் விலை ரொம்பவே கலவரப்படுத்தியது. இந்த முறையும் சுராவின் புனைவுகள், தேவதேவன் கவிதைகள், பிரமிள் தொகுப்பு, ஜெ.மோவின் புனைவுகள், ஆத்மநாம் தொகுப்பு, புதுமைப்பித்தன் தொகுப்பு, விக்ரமாதித்யனின் தேர்ந்தெடுத்த கவிதைத் தொகுப்பு, ஆகிய புத்தகங்களை அடுத்த வருடத்திற்கு தள்ளிப் போட்டு கிளம்பி விட்டேன். (எவ்வளவு வாங்கினாலும் நமக்கெல்லாம் விடியாது போல)

மொத்தமாய் முடித்து விட்டு கண்காட்சி அரங்கை விட்டு வெளியே வந்த போது விஜய் பேச்சு எங்கள் மூச்சு புகழ் விஜயன் பேசி முடித்துக் கொண்டிருந்தார். கடைசி 2 நிமிடங்கள் மட்டுமே கேட்க முடிந்தது. மிகச் சிறப்பாய் பேசி இருக்கிறார் என்பதை அந்த நிமிடங்களும் அதன் தொடர்ச்சியான கைதட்டல்களும் உணர்த்தியது.

இப்படி துண்டுத் துண்டாய் ஒரே நாளில் பலத்த உணர்வுக் குவியல்களுமாய், தொடர் சம்பவங்களுமாய் என்னுடைய தமிழ் புத்தாண்டு நேற்று தொடங்கி இருக்கிறது.

வாங்கிய புத்தகங்கள் எல்லாவற்றையும் பட்டியலிட முடியாது. எனவே  நினைவிலிருப்பவற்றை இங்கே பட்டியலிடுகின்றேன். பார்த்து வயிறெரிந்துக் கொள்ளுங்கள்.

கதைகள்

  • எஸ்.ரா சிறுகதைகள்
  • ஜி.நாகராஜன் ஆக்கங்கள்
  • காவல் கோட்டம் – சு.வெங்கடேசன்
  • புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்
  • நாஞ்சில் நாடன் சிறுகதைகள்
  • நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை
  • காமரூப கதைகள் – சாரு
  • எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது – சாரு
  • குழந்தைகள் கதை வரிசை – எஸ்.ரா
  • ஆலமர இடையழகு – எழில்வரதன்
  • ரதிபெண்கள் திரியும் அங்காடித் தெரு – எழில்வரதன்
  • புறநானூற்றுச் சிறுகதைகள் – நா.பா

கவிதைகள்

  • இன்னும் தொலையாத தனிமை – மகுடேசுவரன்
  • மண்ணே மணந்து மணக்கிறது – மகுடேசுவரன்
  • அப்துல் ரகுமானின் கவிதைகள்
  • என் அந்தப்புரத்திற்கு ஒரு கடவுளைக் கேட்டேன்
  • கனவைப் போலொரு மரணம் – அ. வெண்ணிலா
  • அந்நியர்கள் உள்ளே வரலாம் – யுகபாரதி
  • வனப்பேச்சி , எஞ்சோட்டுப் பெண் – தமிழச்சி
  • உயிரின் கோடிட்ட இடங்கள்
  • ஒற்றைக் கனவும் அடைவிடாத நானும்
  • அ.வெண்ணிலாவின் மேலும் இரு கவிதை புத்தகங்கள்
  • உமா மகேசுவரியின் கவிதைகள்
  • ஈழம் குறித்தான தேர்ந்தெடுத்த கவிதைகள்
  • உனக்கும் எனக்குமான சொல் – அழகிய பெரியவன்

பத்தி எழுத்துக்கள் / கட்டுரைகள்

  • கந்தர்வன் கவிதைகள் குறித்தான கட்டுரைகள்
  • பேசா பொருளைப் பேச துணிந்தேன் – அ.மார்க்ஸ்
  • ஆரிய உதடுகள் உன்னது.திராவிட உதடுகள் என்னது – பாமரன்
  • இன்றெமக்கு வேண்டியது சமாதானமே
  • ஈழம் – முடிவில்லாப் பயணத்தின் முடிவில்லா வரலாறு
  • தொடரும் காஷ்மீர் யுத்தம்
  • பிரபாகரன் – செல்லமுத்து குப்புசாமி
  • சாவித்திரி கணேசனின் அரசியல் கட்டுரைகள்
  • விளம்பர உலகம் – யுவகிருஷ்ணா

மற்றவை நினைவில் இல்லை. முடிந்தால் பின்னூட்டத்தில் சொல்கிறேன். :)

விடுபட்டுப் போன சில புத்தகங்கள் பிற்சேர்க்கையாக :

  • ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி  – துரை.தண்டபானியின் விளக்க உரையுடன்
  • திருவெம்பாவை திருப்பாவை – ராய.சொ வின் விளக்க உரையுடன்
  • மன்மத இயந்திரம் – ஆண்டாள் ப்ரியதர்ஷினி
  • தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி
  • ஆதியில் சொற்கள் இருந்தன – அ.வெண்ணிலா
  • நீரில் அலையும் முகம் – அ.வெண்ணிலா
  • எனக்கான ஒரு பொழுது – வைகறைச் சிற்பி
  • உயிரின் கோடிட்ட இடங்கள் – ரிலுவான் கான்
  • இடமும் இருப்பும் – மனுஷ்ய புத்திரன்
  • காதல் பிசாசே – யுக பாரதி
  • சவ்வு மிட்டாய்காரனின் கை தட்டும் பொம்மை – திலீபன் கண்ணதாசன்
  • இரண்டாவது சந்திப்பு – மு.மாறன்
  • யாரோ ஒருவன் இடம் மாறி இறங்குகிறான் – பொன்.ரவீந்திரன்
  • மனிதன் என்பது புனை பெயர் – கோ.வசந்த குமாரன்
  • காற்றுக்குப் பதிலாய் – குகை.மா.புகழேந்தி
  • நிறங்கள் பெயர் மாறி விட்டன் – குகை.மா.புகழேந்தி
  • பொல்லாத பேரழகி – த.கண்ணன்
  • புறாக்கள் மறைந்த இரவு – பழநி பாரதி
  • அழகான பூக்களுக்கு – ராசி அழகப்பன்
  • உங்களிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை – க.அமசப்பிரியா
  • கடவுளோடு விளையடும் குழந்தைகள் – மு.முருகேஷ்
  • நிழல்களைத் தேடி – புதிய மாதவி
  • முடிவிலும் தொடங்குகின்றன பல – பொன்.குமார்
  • தீராது – உதயசங்கர்
  • உயிரில் கசியும் மரணம் – சுதிர் செந்தில்
  • புறவழிச்சாலை – தமிழ் மணவாளன்
  • இறுதிப் பூ – உமா மகேஸ்வரி
  • காந்தியைக் கொன்றது தவறுதான் – ரமேஷ் பிரேதன்
  • காக்கைச் சோறு – அப்துல் ரகுமான்
  • சுட்டு விரல் – அப்துல் ரகுமான்
  • மனக்கோழி – தமிழ்முருகன்
  • பறவைகள் புறக்கணித்த நகரம் – சக்தி அருளானந்தம்
  • தீராக்காதல் – சுரேந்தர்நாத்
  • அரைக்கம்பத்தில் தொப்புள் கொடி – ஈழம் குறித்தான கவிதைத் தொகுப்பு – தொகுத்தவர் அறிவுமதி.

17 Comments »

  1. நல்ல விரிவான பதிவு.

    தமிழச்சி – /*என்னவோ இவரை ரொம்பவே கொண்டாடுகிறார்கள் என்ற எண்ணம் பலமாய் எழும்பியது.*/ எனக்கும் இது போன்று தோன்றியதுண்டு.கனிமொழியின் தோழியாய் இருப்பதனால் இருக்கலாம்.

    Comment by ப்ரியன் — January 15, 2009 @ 9:40 am

  2. //எப்போதும் அரங்கில் முதல் வரிசையிலேயே இருக்கும் தீம்தரிகிடவும், அன்பென்று கொட்டு முரசே பாரதியார் படமும் இந்த வருடம் காணவில்லை.//

    ஒருத்தரோட புத்தக கண்காட்சி பதிவையும் படிக்கவில்லையா..?

    ஓ ஞாநி என்ற பெயரில் ஸ்டால் உள்ளேதான் இருந்தது.. சரியாகக் கவனிக்காமல் விட்டிருப்பாய்..

    Comment by உண்மைத்தமிழன் — January 15, 2009 @ 10:18 am

  3. //ஒருத்தரோட புத்தக கண்காட்சி பதிவையும் படிக்கவில்லையா..? //

    இல்லை தலைவரே. அண்ணன் ரொம்ப பிஸி.

    //ஓ ஞாநி என்ற பெயரில் ஸ்டால் உள்ளேதான் இருந்தது.. சரியாகக் கவனிக்காமல் விட்டிருப்பாய்..//

    ஓஓஓஒ இதுதானா அது. நன்றிங்கண்ணோவ்

    Comment by நந்தா — January 15, 2009 @ 11:34 am

  4. Nee ippadiye aadu. paarkkaren naanum ethanai naalaikku ippadi aaduvennu…

    Comment by Anony — January 15, 2009 @ 10:50 pm

  5. சரி இதுல எத்தனை புக்கை நீங்க எங்களுக்கு படிக்க கொடுபீங்கன்னு கொஞ்சம் சேர்த்து சொல்லிட்டுப் போங்க.

    Comment by பேரை சொல்ல மாட்டேன் — January 15, 2009 @ 10:51 pm

  6. //காலச்சுவட்டில் சு.ராவின் சிறுகதைகளை முழுத் தொகுப்பை வாங்க நினைத்தேன் விலை ரொம்பவே கலவரப்படுத்தியது. இந்த முறையும் சுராவின் புனைவுகள், தேவதேவன் கவிதைகள், பிரமிள் தொகுப்பு, ஜெ.மோவின் புனைவுகள், ஆத்மநாம் தொகுப்பு, புதுமைப்பித்தன் தொகுப்பு, விக்ரமாதித்யனின் தேர்ந்தெடுத்த கவிதைத் தொகுப்பு, ஆகிய புத்தகங்களை அடுத்த வருடத்திற்கு தள்ளிப் போட்டு கிளம்பி விட்டேன். //

    //(எவ்வளவு வாங்கினாலும் நமக்கெல்லாம் விடியாது போல)//

    இதை இன்னும் கொஞ்சம் அழுத்திச் சொல்லுங்கள். :)

    ஹ்ம்ம்ம்ம். இந்த முறை நல்ல வேட்டைதான் போல. பெரு மூச்சுதான் வருகிறது எனக்கு.

    Comment by ரமேஷ் — January 15, 2009 @ 10:53 pm

  7. இந்த பதிவுல கூடவா இந்த அனானி ஆட்டம்? என்ன கொடுமை நந்தா இது? நீங்க ஒருவேளை அநியாயத்துக்கு நல்லவரா இருக்கறதுனாலயோ என்னவோ? :) )))

    Comment by லக்ஷ்மி — January 16, 2009 @ 12:13 am

  8. //இந்த பதிவுல கூடவா இந்த அனானி ஆட்டம்? என்ன கொடுமை நந்தா இது? நீங்க ஒருவேளை அநியாயத்துக்கு நல்லவரா இருக்கறதுனாலயோ என்னவோ? :) )))//

    ஆமாங்க. எதைச் சொன்னாலும் அனானியா வந்துதான் சொல்லுவேன்னு சில பேரு அடம் பிடிச்சு திரியறாங்க போல.

    Comment by நந்தா — January 16, 2009 @ 1:50 am

  9. பலநாட்களுக்கு பிறகு அண்ணன்…
    இவ்வளவு புத்தகங்களா ?!!

    Comment by தமிழன்-கறுப்பி... — January 16, 2009 @ 1:55 am

  10. //ஏற்கனவே மிகத் தெளிவாய் திட்டமிட்டிருந்த படியால் உடன் பிறப்புடன் 11.30 க்கு தொடங்கும் கண்காட்சிக்கு 11.15 க்கே போய் நிற்க முடிந்தது//

    அந்த அறிவாளி கூடவா போனீங்க நீங்க…

    ரொம்ப கொடுத்து வெச்சவருங்க நீங்க…

    Comment by நரேஷ் — January 16, 2009 @ 2:34 am

  11. //மொத்தமாய் முடித்து விட்டு கண்காட்சி அரங்கை விட்டு வெளியே வந்த போது விஜய் பேச்சு எங்கள் மூச்சு புகழ் விஜயன் பேசி முடித்துக் கொண்டிருந்தார். //
    u have jst escaped..
    விஜயனுக்கு முன்னால் ஒரு தமிழ் பேராசிரியர் பேசினார். அவர் தமிழ் இலக்கணத்தில் left & right புகுந்து அனைவருக்கும் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அதை அனைவரும் மிக ரசித்துக் கொண்டிருந்தனர். அவரது பேச்சில் அவருக்கு மட்டுமே புரிந்த பல நகைச்சுவைகள் இருந்தது அந்த பெரும் கூட்டத்தில் அவர் மட்டும் சிரித்ததின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது . அவர் பேசிய தலைப்பு தெரியவில்லை. நான் அவரது பேச்சிற்கு “சாவடிக்கரன்டா உன்னை” என்பது போன்ற நல்ல தலைப்பாய் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

    Comment by Karthikeyan G — January 16, 2009 @ 8:24 am

  12. அட. பதிவு எழுதி இருக்கீங்களா.. அடடா.. கவனிக்கவில்லையே..

    Comment by Saravana Kumar MSK — January 25, 2009 @ 12:08 pm

  13. இவ்ளோ புத்தகங்கள் வாங்கி இருக்கீங்களா.. பொறாமையாதான் இருக்கு.. லைட்டா..

    Comment by Saravana Kumar MSK — January 25, 2009 @ 12:10 pm

  14. பிரமிள் தொகுப்பு எந்த பதிப்பகம் மூலம் வெளிவருகிறது என்று தெரியுமா.. தேடி பார்த்தேன்.. சில பதிப்பகங்களில் கேட்டும் பார்த்தேன்.. கிடைக்கவே இல்லை..

    Comment by Saravana Kumar MSK — January 25, 2009 @ 12:13 pm

  15. நந்தா.. இனி அடிக்கடி பதிவு எழுதவும்.. குறைந்த பட்சம் முயற்சிக்கவும்..

    Comment by Saravana Kumar MSK — January 25, 2009 @ 12:14 pm

  16. நீண்ட இடைவெளிக்குப்பிறகு உங்கள் எழுத்தைப் படிக்கையிலும், நீங்கள் படிக்கும் புத்தகங்கள் பற்றிப் படிக்கையிலும் மிக மகிழ்ச்சி.

    அன்பு நித்யன்

    Comment by நித்யகுமாரன் — January 28, 2009 @ 1:01 am

  17. நல்ல தெரிவுகள். நானும் ஒரு நீண்ட பட்டியல் வைத்திருக்கிறேன். கொஞ்சம்போல போட்டுவிட்டு நிறுத்தவிட்டேன். காரணம், film காட்டறாங்கப்பா என்று யாராவது சொல்லிவிட்டால் என்ன செய்வது:) ஆனால், என்னோட பொம்மை நல்லா இருக்கா? என்ற சிறுபிள்ளைத்தனம் புத்தகங்கள் விடயத்தில் இன்னும் இருக்கிறது. இம்முறை வாங்கிய புத்தகங்களின் எண்ணிக்கை 210. நீங்கள் ஏன் இப்போதெல்லாம் அதிகம் எழுதுவதில்லை நந்தா?

    Comment by tamilnathy — February 19, 2009 @ 10:58 pm

RSS feed for comments on this post. TrackBack URL

Leave a comment

Powered by WordPress