nav-left cat-right
cat-right

சினிமா – சில நினைவுகள்

ஒவ்வொரு காலத்திலும் ஒரு வகையான தொடர் விளையாட்டுகள் வலைப்பதிவுகளை சில காலத்திற்கு ஆக்கிரமித்துக் கொள்கின்றது. இந்த முறை சினிமா குறித்தானதொரு ஆட்டம்.சினிமா தொடர் விளையாட்டுக்கு என்னை அழைத்த முரளி கண்ணனிற்கும், RVக்கும் ஒரு நன்றி.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

வயது என்று எந்த ஒரு இலக்கத்தையும் அறுதியிட்டு கூற முடியாது. ஐன்ன வயது படங்கள் என்ற உடன் எனக்கு இன்னமும் நினைவில் நிற்பது எங்கள் வீட்டை விட்டு வெளியே வந்த உடன் தெரியும் படியாய் வீட்டிற்கு எதிர்புறமும், பக்கங்களிலும் ஒட்டியிருக்கும் போஸ்டர்கள்தான். கிராமங்களில் போடும் படங்களை விளம்பரப்படுத்த மாட்டு வண்டியில் நோட்டிஸை தூக்கி எறிந்து விநியோகித்துக் கொண்டு போகும் காலங்களிற்கு அப்புறம் பிறந்தவன் என்பதால், மாட்டு வண்டியின் பின்னே ஓடிய அனுபவம் எனக்கில்லை. ஒன்றாவதோ, இரண்டாவதோ ஏதோ ஒன்றை படித்துக் கொண்டிருந்த ஓர் நாள் காலை, தூக்கக் கலக்கத்துடன் வெளியே வந்த போது கண்முன்னே “பாட்டி சொன்ன கதை” என்ற ஒரு பெரிய போஸ்டர் தென்பட்டது. வயதான ஒரு பாட்டி மகுடி ஊதிக் கொண்டிருக்க, எதிரில் பாம்பு படம் எடுத்துக் கொண்டிருந்தது போன்ற ஒரு காட்சி பிரதானமாய் நடுவிலும், போர் வீரர்கள் நிரம்பிய படை ஒரு மூலையிலும், வேறு சில மிருகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாயும், கதாநாயகன் உருவிய வாளுடனும் காட்சியளித்துக் கொண்டிருந்தார்கள்.

பார்த்த உடன் தெரிந்தது ஏதோ மாயாஜாலப் படம் என்று. இது போன்ற படங்களை மிகவும் விரும்பிப் பார்க்கும் வயது அது. பொதுவாய் இது போன்ற படங்களில் ஏதேனும் ஒரு “ராவ்” கதாநாயகனாய், அழகாய் பிறை வடிவ திருநீறையும், குங்குமத்தையும் சூடியபடி வலம் வருவார். பார்க்கவே அழகாய் தெரிவார்கள். நான் சொன்ன இந்த “பாட்டி சொன்ன கதை” படமும் அதே வகைதான். சின்ன வயதில் பிடித்துப் போய் விட்ட படம் அது. இப்போதெல்லாம் இது போன்ற குழந்தைகளுக்கான மாயாஜாலப் படங்களும், அரசர்களின் கதை சொல்லும் படங்களும் வருவது அறவே நின்றுப் போய் விட்டது.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

சாலிகிராமம் பங்கஜம் தியேட்டரில் ஜெயம் கொண்டான் படத்தை பார்த்தேன். சத்தியமாய்ச் சொல்கிறேன் லேகா, பாவனா என்ற இரண்டு அழகுப் பிசாசுகளுக்காகத்தான் படம் பார்க்கப் போனேன். நடிகைகளை கேவலப்படுத்தாமல் எடுத்ததற்காகவும், கொஞ்சம் கொஞ்சம் யதார்த்தமாய் இருந்ததற்காகவும் ஓரளவு பிடித்துப் போய் விட்டது. இது போன்ற கமர்சியல் படங்கள் எல்லாம் ஹரி, பேரரசு ரக இயக்குநர்களின் படங்களிற்கு எவ்வளவோ தேவலை.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

டீவியில் போட்ட காதல் திரைப்படம்தான் கடைசியாய் பார்த்தது. இந்தப் படத்தை ஏற்கனவே பார்த்திருந்தாலும், இந்த படம் ஒரு வித சோக உணர்வை ஏற்படுத்துவதாலும் இந்த படத்தை இரண்டாம் முறை பார்ப்பதை தவிர்த்தே வந்திருந்தேன். காலச்சுவட்டில் எழுதும் அ.ராமசாமி தனது அகவெளியும், புறவெளியும் நூலில் காதல் படம்,பெரியாரை அசிங்கப்படுத்தும் ஒரு முயற்சி என்று எதையும் எதையுமோ சம்பந்தப்படுத்தி, பரத் அழுக்குதாடியுடனும், பரட்டைத் தலையுடனும் தோன்றும் அந்த காட்சி பெரியாரைக் குறித்தான ஒரு குறியீடு என்றும் சொல்லி இருந்தார். அதற்காகவே இப்படத்தைப் பார்த்தேன். அதைப் பற்றி ஒருவரியில் சொல்வதென்றால் அவர் சொன்னது எனக்கு அபத்தமாய் பட்டது. அவரது காதல் படம் குறித்தான அந்த விமர்சனமும் “நுண்ணரசியல்” என்ற அவரது வார்த்தைப் பிரயோகமும்….Totally crap in my point of view.

4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

ஒற்றையாய் எதைச் சொல்லுவதென்று தெரியவில்லை. கொஞ்சம் விவரங்கள் தெரிவதற்கு முன்பு மணிரத்னமும், பாலச்சந்தரும் இயக்கிய படங்களின் வசனங்கள் எனக்கு அத்துபடி. நாயகன், தளபதி, இதயத்தைத் திருடாதே, அவள் ஒரு தொடர்கதை என்று பல படங்கள் என்னை ரொம்பவே உருக்கி இருக்கின்றன. ஆனால் இன்றும் கமலின் “தேவர் மகன்” படம் அதை எல்லாம் தாண்டி நின்றுக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். கொஞ்ச நேரமே வந்தாலும் சிவாஜியின் முழு நடிப்பும் வெளிப்பட்டிருக்கும். அதே கலைஞனை படையப்பா படத்தில் பார்த்த போது “அடக் கருமமே” என்று தோன்றியது.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

தமிழ்ச்சினிமா சம்பந்தப்பட்ட அரசியல் சம்பவம் பெரிதாய் கோபங்களை எழுப்பியதைத் தவிர வேறு வகையில் என்னை பாதித்ததில்லை. தன்னை பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொள்ளும் சத்யராஜ், வடிவேலு மற்றும் சிலர் கருத்துச் சுதந்திரத்தை மறுத்து “ஜெயமோகனை” மிக மோசமான முறையில் ஏகவசனத்தில் பேசியது, குஷ்பூ மேட்டர், ராமதாஸ் பரபரப்பு அரசியலுக்காக ரஜினி, விஜயகாந்த் ஆகியோரது படங்களை எதிர்த்து செய்த மொக்கை அரசியல் என்று பல விஷயங்கள் என்னை வெறுமனே கோபப்படுத்திச் சென்றிருக்கின்றன.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

தமிழ் சினிமாவின் தொழில் நுட்பம் என்பது ஒற்றைப் படத்தில் திடீரென்று முழித்துக் கொண்டாற்போல புரட்சியாய் மாறியது அல்ல. அது படிப்படியாய் உருமாற்றம் அடைந்திருக்கிறது. ஸ்பெசல் எஃபெக்ட்ஸ், ஃபோட்டோகிராபியில் தமிழ் சினிமாவின் தொழில் நுட்பம் மற்றவர்களுக்கு சவால் விடக்கூடிய அளவுக்கு திறமையுடன் இருக்கிறது என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. மிகவும் பிடித்துப் போனது என்றால் பி.சி.ஸ்ரீராம் ஆரம்பித்து வைத்த ஒளிப்பதிவு புரட்சி என்று சொல்லலாம். இந்த வார்த்தைகளுக்கு மறுப்பு சொல்பவர்கள் ஏன் அப்போ பாலு மகேந்திரா என்ன கெட்டுப் போய்ட்டார் என்று சொல்லலாம். பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவு நேச்சுரல் லைட்டிங்குடன் சேர்ந்து இயல்பு நிலையை அளிக்கக் கூடியவை. ஸ்ரீராமுடையது நவீன தொழில் நுட்பங்களுடன் சேர்ந்து ஓர் கனவுத் தன்மையை வழங்கக் கூடியது. இவர் இல்லாமலிருந்திருந்தால் இன்றைய நிலையை நாம் அடைய இன்னும் 5 வருடங்களாவது  போராடி இருந்திருக்க வேண்டியிருந்திருக்கும்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

ஓ. வெகு தீவிரமாக. பதிவுலகில் என்னுடைய முதல் கட்டுரைத் தொகுப்பே தொடர்ச்சியான சினிமா பற்றிய கட்டுரைகள் குறித்தான விமர்சனம்தான். தற்போதைய பல விமர்சனங்கள் வெறும் அதிர்ச்சி மதிப்பீடுகளிற்காவும், எல்லாரும் சிலாகிக்கும் ஒரு படத்தில் தவறுகள் சொன்னால் தன்னை வித்தியாசமாய் பார்ப்பார்கள் என்ற தன் மைய, சிறும்பான்மை பொதுப்புத்தியின் அடிப்படையிலும், வேறு சிலவோ சினிமா என்ற ஊடகத்தை சரியான அர்த்தத்தில் உள்வாங்கிக் கொள்ளாமல் விவேக்கின் தனி ட்ராக் காமெடி சூப்பர் என்ற ரீதியிலும் வந்துக் கொண்டிருக்கிறது. இவற்றிற்கு நடுவில்தான் நல்ல கட்டுரைகளை தேடிப்பிடித்து படிக்க வேண்டியதாய் இருக்கிறது. தமிழ் சினிமா குறித்தான கட்டுரைகளைத்தான் படிப்பேனே தவிர, நடிகர்கள், நடிகைகள் குறித்தன செய்திகளோ, கிசு கிசுக்களோ எனக்குள் பெரும் எரிச்சலை உண்டு செய்பவை என்பதால் அந்தப் பக்கம் தலை வைத்துக் கூடப் படுப்பதில்லை.

7. தமிழ்ச்சினிமா இசை?

பெரும்பான்மையான தமிழர்களுக்கு இசை என்பது தமிழ் சினிமா இசையாகத்தான் இருக்கிறது. நானும் அதற்கு விதி விலக்கல்ல. சங்கீத கான சபாக்கள் என்னை வசீகரித்ததில்லை. அதற்கான அடிப்படை ஞானமும் எனக்கில்லை. இளையராஜாவும் ஏ.ஆர் ரகுமானும் எனது இசை விருப்பங்களில் பெரும்பான்மையானவற்றை நிரப்பிக் கொள்ளுவார்கள். அமீர் உட்பட பலர் தமிழ் சினிமா உலகத் தரத்தை அடைய வேண்டுமென்றால் பாடல்கள் இல்லாத சினிமா வர வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள். எனக்கு என்னமோ அந்த கருத்து உலக சினிமா என்பதை ஐரோப்பிய நாடுகளின் படங்களிலிருந்து பெறப்பட்ட கருத்தாக்கமாய்தான் பார்க்க முடிகின்றது. தமிழர்களின் வாழ்வு இசையோடு இணைந்தது. தமிழில் ஆல்பங்களும் பெரிதாய் வருவதில்லை.

அதே சமயம் தமிழ் பாடல்கள் கதாநாயகிகளை எக்ஸ்ப்ளாய்ட் செய்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன. என்னைப் பொறுத்த வரை படத்துடன் இணைந்த தமிழ் சினிமா பாடல்கள் மட்டும் இடம் பெறலாம். மற்ற படி ஸ்விசர்லாந்தில் டூயட் பாடல், கதாநாயகனின் அறிமுகப் பாடல், துதி பாட்ல்கள் ஆகியவை தமிழ் சினிமாவின் சாபக் கேடு.

சோகத்தை பிழியும் புல்லாங்குழல் மற்றும் வயலின் இசைகள் என்னை கொள்ளை கொண்டவை. குறிப்பாய் வீடு படத்தின் தீம் மியூசிக்காய் “Nothing But Wind” இசை எனது ஆல் டைம் ஃபேவரிட்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

உண்டு. அதிகம் தாக்கிய படங்கள் என்றால் Life is Beautiful மற்றும் Childrens of Heaven ஆகியவற்றை சொல்லலாம். பெரும்பாலான உலக சினிமாக்கள் அடிநாதமாய் தனிமை அல்லது சோகத்தை முன் நிறுத்துவதால் தற்போதைய மன நிலை காரணமாய் அது போன்ற படங்களை தவிர்த்து வருகிறேன். பிறிதொரு நாளுக்காய் அவை காத்துக் கொண்டிருக்கிறன.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடித் தொடர்பு நிச்சயமாய் இல்லை. நண்பர்கள் அல்லது நண்பர்களின் நண்பர்கள் மூலமாய் மட்டுமே பரிச்சயம் இருந்திருக்கின்றது. ஆனால் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் இயக்குநராய் போக முயற்சி செய்யலமா என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். கல்லூரி முடித்த காலங்களில் 3D Studio Max, Maya, Special Effects கோர்ஸ்களை முடித்து விட்டு இருந்த கால கட்டங்களில்,  AVID Editing உம் முடித்து விட்டு வெகு தீவிரமாய் எடிட்டிங் அல்லது போஸ்ட் ப்ரொடக்ஷன் பக்கம் போய் விடலாம் என்று முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் திரைத் துறையில் அப்போது யாருமே தெரியாததாலும், ஆரம்ப காலகட்டங்களில் மிகுந்த சிரமப்பட வேண்டும் என்ற நெருக்கடிகளாலும், எனது முடிவை மாற்றிக் கொண்டு வேறு பக்கம் நகர்ந்து விட்டேன். ஆனால் கல்லூரி கால 6 வருடங்களில் மிக தீர்க்கமாய் நான் மல்டிமீடியா ஃபீல்டுதான் போவேன் என்று இருந்தவன் நான் ஒருவன் தான். காலம் என்னை மல்டிமீடியா துறை சார்ந்த வேறொரு வேலையில் அமர்த்தி விட்டது.

மனதின் மூலையில் இன்றும் ஒரு சிறு ஆசை இருக்கின்றது. நான்-லீனியர் எடிட்டிங் அல்லது போஸ்ட் ப்ரொடக்‌ஷ்ன் பக்கம் முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று. ஆனால் என்னை மீறி நடந்துக் கொண்டிருக்கும் சில செயல்கள் அதை காலத்தின் கையில் விட்டிருகின்றது.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மிக நன்றாகவே இருக்கும். இளம் தலைமுறையினரிடம் உலக சினிமா பற்றிய அரைகுறை அறிவேனும் இருக்கின்றது. பல இயக்குநர்கள் நல்ல வாசகர்களாய் இருக்கின்றார்கள். தொழில் நுட்பத்தில் கோலிவுட்டிற்கு சவால் விடக் கூடிய கலைஞர்கள் தன்னை வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நடு நடுவில் பேரரசு, ஷக்தி சிதம்பரம்,ஹரி போன்றவர்கள் பயத்தினை ஏற்படுத்துகின்றனர்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

தமிழில் சினிமா கிடையாது என்பது கொஞசம் அயர்ச்சியடைய வைத்தாலும் ஆங்கில, மற்றும் பிற மொழிப் படங்கள் அந்த இடைவெளியை நிரப்பிக் கொள்ளும். ஏற்கனவே படிக்க வேண்டிய புத்தகங்கள் எக்கச் சக்கமாய் இருப்பதால் சினிமா கட்டுரைகள் இல்லாதது பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தாது.

வெகு ஜன வாசகர்களுக்கு வெகு நிச்சயமாய் பைத்தியம் பிடித்தது போல் இருக்கும். சன், கலைஞர் டீவிக்களில் 24 மணி நேரமும் அம்மி, அருந்ததி, தாய்,அக்கா, மஞ்சள் குங்குமம், விதவை ஆகிய தலைப்புகளில் மெகா / நெடுந்தொடர்கள் இடம் பிடிக்கும். குமுதம், குங்குமம், ஆ.வி பத்திரிக்கைகள் தனது பத்திரிக்கைத் தொழிலை நிறுத்தி விடும்.தமிழர்கள் மெல்ல நடிகர் நடிகைகளை மறந்து வேறு விஷயங்களின் மீது பிடிப்பினை ஏற்படுத்திக் கொள்ள முயலுவார்கள். அது சாமியார்களாய் இருக்கலாம், டீவி தொடர்களாய் இருக்கலாம், கிரிக்கெட்டாய் இருக்கலாம். மொத்தத்தில் ஏதேனும் ஒரு போதை தேவைப்பட்டுக் கொண்டே இருப்பது வாழ்வின் அர்த்தங்களில் ஒன்றாய் போய் விடுகிறது.

ஒரு வழியாய் எனது வேலை முடிந்து விட்டது.இனி இந்த தொடர் விளையாட்டிற்கு நான் அழைக்க விரும்பும் ஐந்து பேர்.

1,2.லக்‌ஷ்மி & பாலபாரதி
3.ஆசிஃப்
4.பொன்ஸ்
5.கென்

12 Responses to “சினிமா – சில நினைவுகள்”

  1. RV says:

    Excellent post, thanks for writing!

    I am probably much older than you, but I do remember those Raja Rani movies – probably dubbed from Telugu – starring Kantha Rao and other Raos vividly. I used to enjoy them greatly when I was a kid…

  2. பொன்ஸ் says:

    > 4.பொன்ஸ்
    தலைவா, இதிலிருந்தே நீங்க என் பதிவைப் படிக்கிறதில்லைன்னு தெரியுது.. நானே ஆடிக்கொருதரம் அமாவாசைக்கொருதரம் எழுதுறேன்.. அதை ரீடரில் வச்சிருக்கேன்னு பஜனை பண்றீங்க.. என்னவோ போங்க..

    பிகு: நானும் இந்த இடுகையை முழுக்க படிக்கவில்லை.. late in the game :(

  3. நன்றி முரளி, RV.

    //தலைவா, இதிலிருந்தே நீங்க என் பதிவைப் படிக்கிறதில்லைன்னு தெரியுது.. நானே ஆடிக்கொருதரம் அமாவாசைக்கொருதரம் எழுதுறேன்.. அதை ரீடரில் வச்சிருக்கேன்னு பஜனை பண்றீங்க.. என்னவோ போங்க..//

    என்ன வார்த்தை சொல்லிட்டீங்க போங்க.எதோ ஒரு 2 வாரமா படிக்கலைன்னா அதுக்காக இப்படியா மானத்தை வாங்கறது. நான் உங்களை கூப்பிடறதுக்கு முன்னாடியாவது ஒரு தடவை பார்த்திருக்கலாம். அதுக்காக இப்படியா மானத்தை வாங்கறது. சென்னை பக்கம் வராமலா போய்டுவீங்க. கவனிச்சுக்கறேன்.

    //நானும் இந்த இடுகையை முழுக்க படிக்கவில்லை.. late in the game //

    பழிக்குப் பழியா?

  4. குடும்பத்தோட விசேஷத்துக்கு கூப்பிடறா மாதிரியேவா தொடர் விளையாட்டுக்கும் கூப்பிடறது? அய்யா, உங்க அழும்புக்கு ஒரு எல்லையே இல்லையா?

  5. //எதோ ஒரு 2 வாரமா படிக்கலைன்னா அதுக்காக இப்படியா மானத்தை வாங்கறது. நான் உங்களை கூப்பிடறதுக்கு முன்னாடியாவது ஒரு தடவை பார்த்திருக்கலாம். அதுக்காக இப்படியா மானத்தை வாங்கறது. //

    நந்தா, இப்படியா ஒப்புதல் வாக்குமூலமெல்லாம் கொடுக்கறது?

    பொன்ஸ் யாரும் கூப்பிடாமல் தனக்க்குத் தானேவாக கேள்வி பதில் எழுதிகிட்டார்னு நாளைய வரலாறு சொல்லிடக் கூடாதுன்ற நல்ல எண்ணத்துல பிலேட்டட் கேள்விகள் கொடுத்திருக்கேன்னு அடிச்சு விட வேண்டியதுதானே? ;)

  6. பொன்ஸ் says:

    //பொன்ஸ் யாரும் கூப்பிடாமல் தனக்க்குத் தானேவாக கேள்வி பதில் எழுதிகிட்டார்னு நாளைய வரலாறு சொல்லிடக் கூடாதுன்ற நல்ல எண்ணத்துல பிலேட்டட் கேள்விகள் கொடுத்திருக்கேன்னு அடிச்சு விட வேண்டியதுதானே? ;) //
    ஆகா! அக்கா.. __/\___

  7. பொன்ஸ் says:

    நந்தா,
    அந்த லிங்கை வேற தப்பா போட்டிருக்கீங்க.. pookri.com.. இனிமேலாச்சும் சரியா… :)

  8. //குடும்பத்தோட விசேஷத்துக்கு கூப்பிடறா மாதிரியேவா தொடர் விளையாட்டுக்கும் கூப்பிடறது? அய்யா, உங்க அழும்புக்கு ஒரு எல்லையே இல்லையா?//

    சரி சரி பதிலுக்கு நீங்க பதிவைப் போடுங்க, தலை தீபாவளிக்கு (பார்றா இங்கேயும் தலை!!!) கொஞ்சம் விசேஷம் இருந்தாலும், கேப்ல உங்க பதிவைப் போட்டுடுங்க!!!

    //நந்தா, இப்படியா ஒப்புதல் வாக்குமூலமெல்லாம் கொடுக்கறது?//

    சரி வுடுங்கப்பா, சும்மா சும்மா நந்தவையே அடிச்சுக்கிட்டு, அவருதான் நல்லவருன்னு ஊருக்கே தெரியுமே!!!

  9. சினிமான்ன உடனே எத்தாம் பெரிய பதிவு???!! ஆத்தாடி…

  10. http://malarvanam.blogspot.com/2008/10/blog-post_28.html

    போட்டாச்சு.. போட்டாச்சு..

  11. Cleo Elmer says:

    Unlike the mainstream ideas, I’ve to disagree with you, as there are in order that many different components to consider. Properly if you are open for link alternate, perhaps we should always keep in touch with one another, in order that we can build a better weblog together. What do you assume?

Leave a Reply