nav-left cat-right
cat-right

நகரம் மற்றும் கிராமம் சார்ந்தவைகளைப் பற்றிய சில அர்த்தமற்ற புலம்பல்கள்

முகத்தில் அணிந்திருக்கும் அறிவு ஜீவி முகமூடியைக் களைந்து விட்டு, எந்த வித போலித்தனமுமில்லாமல் அர்த்தங்களற்று பேசித்திரிய மனது விரும்புகின்றது.

நகர வாழ்க்கையின் வெம்மை என்னை கொஞ்ச கொஞ்சமாய் விழுங்கிக் கொண்டிருக்கிறது! நின்று நிதானித்து கடந்த சில நாட்களாய் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று திரும்பிப் பார்த்தால் ஒன்று மட்டுமே புரிந்திருக்கின்றது. நான் வெறுமனே ஓடிக் கொண்டிருந்திருக்கின்றேன். இனிமேலும் வெறுமனே ஓடிக் கொண்டேதான் இருக்க வேண்டும் என்று நகரம் எனக்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றது. “மச்சான் நான் இப்போ மீட்டிங்ல இருக்கேண்டா அப்புறமா பேசறேன். சாரி” என்று சொல்லி விட்டு கொஞ்சம் கூட குற்ற உணர்வில்லாமல் மறுபடி வேலைகளுக்குள் மூழ்கி விட எனக்கு எளிதில் பழக்கப் பட்டு விட்டது. அன்றைய நாளின் மிகப்பெரிய சந்தோஷமாய் பயணித்த பேருந்தில் கூட்டமில்லாமலிருந்ததை சொல்லித் திரிந்து கொண்டிருக்கின்றேன்.

யோசித்துப் பார்க்கையில் எல்லாமே அர்த்தமற்றதாய் தென்படுகின்றது. அலுவலகத்தினுள்ளே நுழையும் போதே ஒரு முகமூடி அணிந்து கொள்வது எல்லாருக்கும் அவசியமாகி விட்டது.. தன்னுடைய நடை, உடை, பேச்சு எல்லாவற்றிலுமே போலிப்பூச்சுக்களை தேடித் தேடி பூசிக் கொள்ளுகின்றோம். வேலைகளிற்கு நடுவில் ரிலாக்ஸ் செய்வதற்காக பேசும் பேச்சில் கூட நம்முடைய அறிவுத் திறமையை வெளிப்படுத்த தயார் செய்து கொண்டிருக்கின்றோம்.

அமெரிக்கா, பில்கேட்ஸ், சேகுவேரா, மார்க்ஸ், ஈழத் தமிழர்கள், இந்து பேப்பர், ஷேக்ஸ்பியர் கவிதைகள், ஜாஸ் மியூசிக், மடோனா லேட்டஸ்ட் ஆல்பம் இவையனைத்தும் நம்முடைய அறிவை நிர்ணயிக்கும் அளவுகோல்களாகிப் போனது.பரந்து பட்டிருக்கும் கூட்டத்தில் இவை எல்லாவற்றையும்  பற்றிப் பேசத் தெரிந்தவன் “அறிவாளி” என்ற லேபிளை சுமப்பவனாய் மாறிப் போகின்றான். ஏனோ இந்த சுமை மட்டும் நமக்கு வலிப்பதே இல்லை. விரும்பி துரத்திக் கொண்டிருக்கின்றோம்.

ஃபாஷன் என்பது காலத்திற்கு காலம் மாறிக் கொண்டே இருக்கிறது. ஒரு காலத்தில் “ஐ லவ் அமெரிக்கா” என்பது ஃபேஷனாயிருந்தது. இப்போது அமெரிக்காவை எனக்கு சுத்தமாய் பிடிக்காது என்று சொல்லித் திரிபவன் வித்தியாசமாய் ஏதோ விஷயம் தெரிந்தவனாய் பார்க்கப் படுகின்றான். அவன் விரும்புவதும் அதைதான். குடித்து விட்டு சுயம் மறந்து கிடக்கும் தருணங்களில் அவனும் தன் அறைத் தோழர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கலாம். “மாப்பி இந்த முறையாவது விசா க்ளியராகலைன்னா செமை கடுப்பாயிடும்டா”என்று.

ஏனோ “ஹேய் அந்த நாய்க்குட்டியை பாரேன். சோ க்யூட் இல்லை” என்று எவரேனும் சொல்லும் போது, தீர்க்கமாய் அவரது கண்களை உற்றுப் பார்க்கத் தோன்றுகின்றது. நீ உண்மையில்தான் இதைச் சொன்னாயா? உனக்கு உண்மையில் நாய்க்குட்டிகள் பிடிக்குமா? இல்லை சும்மாவேனும் கூட்டத்தின் நடுவே உன் இருப்பை வெளிப்படுத்துகின்றாயா? மனதினுள் கேள்விகள் எழும்புகின்றது. அழகாய் தென்படும் எதனையும் சிலாகிப்பதற்கு முன்பு உபயோகிக்கின்ற வார்த்தைகளை கவனமாய் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது “வாவ் இட் லுக்ஸ் சோ குட்”, “நைஸ் வொர்க். ஹாட்ஸ் ஆஃப் மேன்”… பட்டியலிட்டால் விரல் விட்டு எண்ணிடலாம் இது போன்ற சம்யத்தில் நாம் பயன் படுத்தும் வாக்கியங்களை.

இன்ன இன்ன வார்த்தைகளை மட்டுமே நான் உபயோகிக்க வேண்டும் என்று இந்த சமுதாயம் எனக்கு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. சுற்றி இருகும் கூட்டத்தின் நடுவே “அடங்கொக்கா மக்க, மாப்பிள்ளை கலக்கிட்டடா” என்று சிலாகிக்க, பாராட்ட தைரியம் வர மறுக்கிறது. என் பிம்பம் களைந்து விடுமோ என்று பயம் எழும்புகின்றது.  கட்டமைவுகளை உடைத்தெரியும் தைரியமும் இன்றி, பொதுப்புத்தியுடன் வாழவும் முடியாமல் எனக்குள் நானே குமைந்து கொண்டிருக்கிறேன்.

இந்த போராட்டங்களுக்கு நடுவில் நான் எப்போது வாழ்ந்தேன் என்று யோசித்துப் பார்த்தால் குழந்தைப் பருவத்தை தாண்டி வேறு எதுவும் தோன்ற மறுக்கிறது. உண்டு, உறங்கி, வேலைகள் செய்து, எனக்கென்று ஒதுக்கப்பட்ட வாழ்நாட்களின் மொத்த எண்ணிக்கையில் ஒன்றைக் கழித்து, மறுபடி அடுத்த நாளை எனது கணக்கிலிருந்து குறைப்பதற்கான முயற்சிகளை தொடங்குகின்றேன்.உடலில் தெம்பு இருக்கும் வரைக்கும் பணம், வேலை என்று ஓடி விட்டு திடீரென்று ஒரு நாளில் பட்டென்று எல்லாவற்றையும் அறுத்துக் கொண்டு இறந்து போய்விடும் வாழ்க்கையைதான் நம்மில் பலரும் செய்துக் கொண்டிருக்கிறோமோ??

சுயத்தைத் தொலைத்த்து விட்டு, போலியாய் சிரித்து, போலியாய் பேசி வாழும் இந்த நகர மனிதர்களின் மீது நம்பிக்கை தொலைந்து போய் பல காலமாகி நிற்கின்றது. ஏனோ கிராமத்து வீடும், “கிராமங்கள், இந்தியாவின் சொர்க்கங்கள்” என்ற பழமொழியும் இப்போதெல்லாம் அடிக்கடி என் கனவில் வருகின்றது. நான் மறந்து போன பல நண்பர்களும், எங்களது பள்ளிகால ஆர்ப்பாட்டங்களும், அடிக்கடி நினைவுகளில் இடறுகின்றன. சேர்ந்தாற்போல ஒரு வாரம் ஊரில் இருந்தது எப்போது என்று பார்த்தால் ஞாபகம் வர மறுக்கிறது. ஐந்து வருடத்திற்கு முந்திய, பணம் என்பது குறித்து அதிகம் அலட்டல்கள் இல்லாததுமான கல்லூரி பருவத்தின் கடைசியான கால கட்டங்களில் இருந்திருப்பேன் என்று எனக்குள் நானே சொல்லிக் கொள்கின்றேன்.

வெள்ளந்தியாய் வாழும் என் கிராமத்து நண்பர்களைப் போலவே இருக்க ஆசைப்படுகின்றேன். கத்தையாய் பத்தாயிரம் ரூபாயை, முதல் மாத சம்பளமாய் என் கையில் வாங்கிய அந்த தினத்திலிருந்து அவர்கள் மீதான என் புறக்கணிப்பு தொடங்கியிருக்கலாம். “மச்சான் அவன் சென்னையில ஏதோ பெரிய கம்பெனியில வேலை பார்க்கிறாண்டா” என்று அவர்களுக்கிடையேயான பேச்சுக்களின் போது வெளிப்படும் என் மீதான பிரமிப்பை நான் காப்பாற்றிக் கொள்ள மிகவும் பிரயத்தனப்பட்டு வந்திருக்கின்றேன்.

மூன்று மாதத்திற்கொரு முறை ஊருக்கு போகும் போது கூட, எவரையும் சந்திக்கப்பிடிக்காமல், வீட்டினுள்ளேயே முடங்கிக் கொண்டிருக்கிறேன். என்ன பேசுவது இவர்களிடம்? இவர்களுக்கு சிட்னி ஷெல்டனும் தெரியாது, சினிமேட்டோகிராஃபியும் தெரியாது? என்னதான் பேசுவது இவர்களிடம்? என்னை நானே சிம்மாசனத்தில் ஏற்றி வைத்துக்கொண்டு, அவர்களிடம் அந்நியப்பட்டு நின்றிருக்கின்றேன். சலனமற்று இருக்கும் தருணங்களில் உட்கார்ந்து யோசிக்கையில்தான் நாம் செய்யும் தவறுகள் நமக்கு புலப்படுகின்றது.

தொடர் யோசிப்பின் விளைவாய் ஊருக்குப் போய் கொஞ்ச நாள் இருந்து விட்டு வரவேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன்.

……………

30 நாட்கள் ஒரு பெரும் விடுமுறையில் ஊருக்கு போய்விட்டு இப்போதுதான் திரும்பியிருந்தேன். ஒரு மாத கிராம வாழ்க்கை பூடகமாய் எனக்கு பல விஷயங்களை சொல்லி விட்டுச் சென்றிருந்திருக்கிறது. பலத்த எதிர்பார்ப்புகள் எப்போதும் ஏமாற்றத்தைத்தான் தருமோ? “சாஃப்ட்வேர் வாழ்க்கை பிடிக்க வில்லை.நிலா சோறு, ஓட்டு வீடு, அம்மா செய்த பருப்பு சாதம் ஆகியவைதான் பிடித்திருக்கின்றது” என்பது போன்ற சாஃப்ட்வேர் இளைஞனின் ஏக்கங்களைப் போன்று எழுதப்பட்ட கவிதைகளைப் பார்த்து நானும் கனவுகளில் வேயப்பட்ட ஒரு அமைப்பைப் பிடித்துக் கொண்டு அதுதான் கிராமம் என்று தொங்கிக் கொண்டிருந்திருக்கிறேன்.

சங்கர், முருகன் ஆகியோருடனான ஒரு மாலைப்பொழுதில் நடந்த உரையாடல் எனது அதிர்ச்சிகளின் தொடக்கப்புள்ளியாய் இருந்தது. என்னை ஒருமையில் கூப்பிடுவதா? பன்மையில் கூப்பிடுவதா என்று அவர்கள் திணறியதை உணர்ந்த போது என்னை நானே கேவலமாய் உணர்ந்தேன்.

நினைவு தெரிந்ததிலிருந்து சண்முகத்தை நான் அண்ணே என்றுதான் அழைத்திருக்கிறேன். எங்கள் வீட்டிலிருந்து நான்கு தெரு தள்ளி ஒரு டீக்கடை வைத்திருப்பார். என்னை விட குறைந்தது பதினைந்து வருடமாவது பெரியவரயிருப்பார். பன்னிரண்டாம் வகுப்பில் எங்களுடன் படித்த கோமள வள்ளியை அவருக்கு கட்டிக் கொடுத்து விட்டார்கள் என்று கேள்விப்பட்ட போது அதிர்ச்சியாயிருந்தது. கோமள வள்ளி பி.ஜி படிக்கப் போறேன்னு அடம் பிடிச்சாளாம். அவங்கப்பா விறகுக் கட்டையாலயே அடிச்சு சம்மதிக்க வெச்சாராம் என்று நண்பர்கள் சொன்னார்கள். வள்ளியின் அப்பாவும், சண்முகமும் டீக்கடை வைத்திருக்கும் ஒரே ஜாதிக்காரர்கள் என்ற ஒரு காரணமே இருவரும் சம்மந்தம் செய்து கொள்ள போதுமான காரணமாய் இருந்தது.

டேய் இதுக்கே இப்படி டென்ஷன் ஆகற? பர்வீணோட கதையைக் கேட்டா ஆடியேப் போய்டுவ என்று சொன்னார்கள். பர்வீணுக்கு கல்யாணம் ஆன 5வது நாளிலேயே அனாதை மாதிரி ஓடி வந்திருக்கிறாள். சினிமாவில் மட்டுமே நான் பார்த்திருந்த சைக்கோ கணவனின் தொல்லை தாங்காமல் வந்து விட்டாளாம். அவன் மட்டுமில்லாமல் குடும்பமே கொடுமைப் படுத்தியிருக்கிறார்களாம். நியாயம் கேட்கப்போன அவள் வாப்பாவை, ஓடுகாலிக்கெல்லாம் எங்க வீட்ல இடமில்லைன்னு சொல்லி திட்டி அனுப்பிட்டாங்களாம். தன் பொண்ணு வாழ்க்கையை சரியா விசாரிக்காம கட்டிக் கொடுத்து நாமளே கெடுத்துட்டமேங்கற விசனத்துலயே அவ அப்பா 2 மாசம் கழிச்சு செத்துப் போயிட்டாராம். இப்போ அவ அப்பா பார்த்துக்கிட்டிருக்கிற மெடிக்கல் ஷாப்பை இவதான் பார்த்துக்கிறா.

ஏண்டா இவ்வளாவு நடந்திருக்கு. நம்ம ஊரிலிருந்து யாருமே போய் நியாயம் கேக்கலையா என்று நான் உணர்ச்சிவசப்பட்டேன். இல்லைடா உள்ளூர் ஆளுங்களுக்கு அவங்கப்பா மேல கோபம். நம்ம சைக்கிள் கடை ஜியாவுதீனோட அண்ணனுக்கு எல்லாம் சேர்ந்து பொண்ணு கேட்டாங்களாம். அவங்கப்பா உள்ளூர்லயே வேணாங்கன்னு சொன்னாராம். அதனால இவங்களுக்கு கோபம். வெளியூரு வெளியூருன்னு தேடிப்போயி பொண்ணு கொடுத்தாரு இல்லை. அதான் இப்படின்னு அவர் எழவு அன்னிக்கு கூட பேசினாங்கடா என்று சொன்னார்கள்.

தீபாவுக்கு இன்னும் கல்யாணமே ஆவலை. அவ சம்பளத்துலதான் குடும்பமே ஓடுது. அதான் உனக்கே தெரியுமே அவங்கப்பா சரியான குடி. கல்யாணம் பண்ணி வெச்சுட்டா சம்பளம் போய்டுமேன்னு பண்ணி வெக்காம இருக்காரு. அவங்கம்மா புருஷனை எதிர்த்து பேச பயப்படுது. அதான் அப்படியே இருக்கா. அவளா எங்கயாவது ஓடிப்போனாதான்டா உண்டு.

மத்தவங்களைப் பத்தி அதிகமா ஒண்ணும் தெரியலை. நம்ம ஊரா இருந்தாக்கூட ஏதாவது தெரிஞ்சிருக்கும். எல்லாம் சுத்துவட்டாரமா போய்ட்டாங்களா ஒண்ணுமே தெரியலை. அவங்க வீட்ல போய் என்னன்னு கேக்க. ஸ்கூல் ஃப்ரண்டுங்கக்கா. சரஸ்வதி இருக்கான்னு கேட்டா முறைச்சே கொன்னுப்புடுவாங்க. என்று வரிசையாய்ச் சொல்லிக் கொண்டே போனார்கள். வசுமதி எங்கடா இருக்கா? என்ற கேள்வியை நான் கேட்காமலேயே இருந்திருக்கலாம். மௌனமாய் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு சன்னமாய், உனக்கு விஷயமே தெரியாதா? 6 மாசத்துக்கு முன்னாடிதாண்டா… செத்துப் பொய்ட்டா. சூசைட் பண்ணிக்கிட்டாடா. லவ் மேட்டராம்டா மச்சான் என்றார்கள்.

அவ லவ் பண்ண ஆளு எங்கூடதாண்டா டீச்சர் ட்ரெய்னிங் படிச்சான். அவன் மூலமாதான் எனக்கு நிறைய  விஷயம் தெரிஞ்சுது. வசுமதி எவ்வளவோ கேட்டுப் பார்த்தாளாம்டா. அவங்கப்பா தான் முடியவே முடியாதுன்னுட்டாராம். அந்த ஆளே போன வருசம் ஸ்டேஷ்ன்லயே கூட வேலை பாக்கிற லேடி P.C எசகு பிசகா இருந்ததை ஊரே பார்த்து மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிச்சு. அந்த லேடி கான்ஸ்டபிளை எல்லாருமா சேர்ந்து அடிச்சு ஊருக்குத் துரத்திட்டாங்க.

மனது கனத்துக்கிடந்தது. வசுமதியும் பர்வீணும் எங்க செட்டிலேயே ரொம்ப அழகான பொண்ணுங்க. எங்க எல்லாத்துக்கும் நல்லா பேசுவாங்க. +2 என்ட்ரன்ஸ் கோச்சிங்க்கு எல்லாரும் பஸ்ல போகும் போது நாங்க யார் நின்னுட்டு வந்தாலும், வலிஞ்சு எல்லாத்தோட பேகையும் வாங்கி வெச்சுக்குவாங்க. பர்வீண் அவங்கப்பா இல்லாத சமயத்தில் நான்  மருந்து வாங்கிய போதெல்லாம், காசு வாங்கியதாய் எனக்கு நினைவே இல்லை. கெமிஸ்ட்ரி லேப் ப்ராக்டிகலப்போ எனக்கு சால்ட் கஷ்டமாய் வந்து விட, அவளோட “சோடியம் க்ளோரைடு” உப்பை எனக்கு தந்து விட்டு, என்னுடையதை வசுமதி வாங்கிக் கொண்டதும், ஹிஸ்டரி க்ரூப் பழனிச்சாமி அவளை போடி என்று சொன்னதற்கு நாள் முழுக்க அவள் உட்கார்ந்து அழுததும் அன்றிரவு முழுக்க என் கனவுகளில் வந்துக் கொண்டே இருந்தது.

கிளம்பி வருவதற்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி, வசுமதியோட அப்பாவையும் அம்மாவையும் ஒரு கல்யாணத்துல பார்த்தேன். வெள்ளை சட்டை வேஷ்டியோட யாருக்கிட்டயோ சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டிருந்தான். எப்படிரா சொந்த பொண்ணை கொன்னுட்டு இப்படி வெக்கமில்லாமல் சிரிக்க முடியுது என்று அவன் சட்டையை பிடித்து கேட்கவேண்டும் போலிருந்தது.

இங்கே என்னவோ தப்பாய் இருக்கிறது. என்ன என்றுதான் தெரிய வில்லை. எப்பவாவது சாயங்கால நேரத்துல மில்லுல போய் உக்காந்திருக்கலாமேன்னு போய் உட்கார்ந்திருந்தப்போ, மில்லில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவரை அப்பா மிரட்டிக் கொண்டிருந்தார். “என்னா குமாரு… நான் இல்லாதப்போ உங்க காலணி ஆளுங்க நடமாட்டம், மில்லுல ரொம்ப அதிகமா இருக்குன்னு பழனிச்சாமி சொல்லிட்டுப் போனாரு? எது ஒழுங்கா வேலையில இருக்கணுமா வேணாமா” என்று கேட்டுக் கொண்டிருந்தார். எனக்குள் “காலணி ஆளுங்க” என்ற வார்த்தையே திரும்ப திரும்ப சுற்றிக் கொண்டிருந்தது.

பார்த்து பேசிய நான்காவது நிமிடத்திலேயே “ஏனுங்க தம்பி நீங்க நம்மாளுங்களா?” என்று வெட்கமில்லாமல் கேட்பவர்கள் ஊர்ப்பெரியவர்கள் என்று சொல்லிக் கொண்டு ஊருக்குள் வளைய வந்துக் கொண்டிருப்பதும், இருபது ஏக்கரு நிலம், பத்து பசு மாடு வெச்சிருந்தாலும் அடுத்த பட்ஜெட்ல கடனை தள்ளுபடி செஞ்சிடுவான்யா, நாம ஏன் இப்போ போயி பணத்தைக் கட்டிக்கிட்டு என்று சொல்லி விட்டு புல்லட் வண்டியில் சிரித்துக் கொண்டே ஏறிப்போவதும், எல்லாவற்றிற்கும் மேலாக காலில் செருப்பு இல்லாமல் குத்துக்காலிட்டு பஸ்ஸ்டாண்டில உக்காந்திக்கிட்டிருந்த ஒரு வயசான தாத்தாவும் எனக்கு ஒன்றை திருப்பித் திருப்பி சொல்லாமல் சொல்லி விட்டுப் போயிருந்தார்கள்.

“அவ்வளவு சீக்கிரத்தில் கிராமங்கள் இந்தியாவின் சொர்க்கங்களாய் மாறிவிட முடியாது”.

27 Responses to “நகரம் மற்றும் கிராமம் சார்ந்தவைகளைப் பற்றிய சில அர்த்தமற்ற புலம்பல்கள்”

  1. * ஒரு வழியா திரைப்படங்களை விட்டு வந்துட்டீங்க :)

    * முதற் பகுதியில் நகர வாழ்க்கை விவரிப்பில் ஒரு வறண்ட எழுத்து நடை போலவும் பின்பகுதியில் ஊர்க் கதைகளை விவரிக்கையில் கூடிய இயல்பாகவும் இருக்கிற மாதிரி இருக்கு.. நிறைய சிறு பத்திரிக்கை படிக்கிறீங்களா..முதற் பகுதி நடை கரடு முரடா செயற்கையா இருக்கு.

    * so cute, hats off இவற்றுடன் cho chweet, amazing, cool, sexy போன்ற சொற்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

    * முதற் பகுதியில் கிராமத்தைப் பத்தி அழகான நினைப்பு இருந்தப்ப “ஆகா ஏமாறப் போறீங்க”ன்னு நினைச்சேன் :) நல்ல வேளை, உண்மையைத் தெரிஞ்சுகிட்டீங்க. பாரதி ராசா படங்கள்ல தான் ஊர் மக்கள் வெள்ளந்தியா இருக்காங்க ! நகரத்தில் பெரிய அளவில் பகை என்றால் ஊரில் தெரியாமல் வேப்பந்தழை வெட்டியதற்கும், அடுத்த வீட்டுக் கோழி கூட இரண்டு முட்டை போட்டதற்கும் புகைபவர்கள் இருக்கிறார்கள் :) ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பங்காளிச் சண்டை இருக்கும் ! ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும் போதும் “இப்ப யார் யார் கூட முறைப்பாடு”ன்னு கேட்டுத் தெளிய வேண்டியிருக்கு :) எங்க ஊரைப் பத்தி பக்கம் பக்கமா எழுதலாம்..எழுதணும்..

  2. //ஒரு வழியா திரைப்படங்களை விட்டு வந்துட்டீங்க //

    ஆமா ரவி. ஆனால் பல பேரு தொடர்ச்சியா திரைப்படங்களைப் பற்றி எழுதச் சொல்றாங்க. அதையும் எழுதணும்.

    //நிறைய சிறு பத்திரிக்கை படிக்கிறீங்களா..முதற் பகுதி நடை கரடு முரடா செயற்கையா இருக்கு.//

    :) . அப்படியா. சொல்லப்போனால் எனக்கு முதல் பகுதி வேகமா வந்துடுச்சு. இரண்டாவது பகுதிக்குதான் கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருந்தது. ஹ்ம்ம்ம் சிறுபத்திரிக்கைகளா அல்லது தற்போது வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களின் தாக்கம் அப்படியே எழுத்திலும் பிரதிபலித்து விட்டதா என்பதை சற்றே விலகி நின்று கவனிக்க வேண்டும். செய்கிறேன்.

    //“இப்ப யார் யார் கூட முறைப்பாடு”ன்னு கேட்டுத் தெளிய வேண்டியிருக்கு எங்க ஊரைப் பத்தி பக்கம் பக்கமா எழுதலாம்..எழுதணும்..//

    சீக்கிரம் எழுதுங்க. காத்துக்கிட்டிருக்கோம்.

  3. Voice on Wings says:

    கிராமமோ, நகரமோ…. இரு சூழல்களிலும் இருப்பவர்கள் மக்கள்தானே? அவர்களுடைய குறைபாடுகள் இடத்துக்கேற்றவாறு வேணா மாறுபடலாம், ஆனா முற்றிலும் இல்லாம போயிடாது.

  4. நந்தா: இது கதையா, உண்மையா?

    உண்மை என்றால் வருத்தம் தரவைக்கிறது. ஆனால் இந்த நிலை மாறும்.

  5. //அவர்களுடைய குறைபாடுகள் இடத்துக்கேற்றவாறு வேணா மாறுபடலாம், ஆனா முற்றிலும் இல்லாம போயிடாது//

    சரிதான் வாய்ஸ் ஆன் விங்ஸ். ஆனால் கிராமங்களைப் பற்றிய பொய்யாய் ஒரு கனவுலகை ஏற்படுத்தி நாம் வாழ்ந்து வருகிறோம். நிஜத்தில் கிராமங்களும் தன் கொடிய முகத்தைக் காட்டிக் கொண்டுதானிருக்கிறது.

    //நந்தா: இது கதையா, உண்மையா?
    உண்மை என்றால் வருத்தம் தரவைக்கிறது. ஆனால் இந்த நிலை மாறும்.//

    பத்ரி வெகு சத்தியமான உண்மை இது. இதில் குறிப்பிட்ட பலவற்றிற்கு நானே சாட்சியாய் இருந்திருக்கின்றேன். சொல்லப்போனால் நான் பல விஷயங்களை சொல்லாமல் இருக்கின்றேன். மாறி விடும் என்ற நம்பிகையில்??? நன்றி.

  6. நந்தா,

    திரைப்படம் சார்ந்த பதிவுகள் என்னவாயிற்று? தொடர்ந்து எழுத சோம்பலாக இருந்தால் அவ்வப்போதாவது சினிமா குறித்து எழுதுங்கள்…

    தத்துவங்களை நோக்கி மனித இயந்திரங்கள் நகரும் புள்ளியை இந்தப் பதிவு தொட்டிருக்கிறது நந்தா… நீங்கள் கேட்டுள்ள அனைத்து கேள்விகளுக்குமான விடைகளை எந்த திசையில் நீங்கள் கண்டறியப் போகிறீர்கள் என்பதை பொறுத்து இனி வரும் உங்கள் பதிவுகள் அமையும்.

    வினாக்களை துரத்திக் கொண்டு ஓடுகிறோமா அல்லது வினாக்களிலிருந்து தப்பிக்க ஓடுகிறோமா… பார்த்தீர்களா இதுவுமே ஒரு வினாவாகத்தான் அமைந்துவிட்டது…

    அனைத்தையும் சந்தேகி என்றான் ஒருவன். அனைத்தை குறித்தும் கேள்வி கேள் என்றான் இன்னொருவன்… ரெளத்ரம் பழகு என்றவனே மண்டியிட்டு மன்னிப்பும் கேட்டிருக்கிறான்.

    இயல்பாக இருப்பதாக சொல்வதும், நினைப்பதும் கூட முகமூடி அணிந்துதானே…

    தொடர்ந்து எழுதுங்கள் நந்தா…

    நீங்கள் கேட்டுள்ள கேள்விகளுக்கான விடைகளை இனி வரும் உங்கள் பதிவிலிருந்து அறிய காத்திருக்கிறேன்.

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

  7. lakshmi says:

    நந்தா, வர வர உங்க எழுத்து நடை ரொம்பவே மெருகேறிக்கிட்டிருக்கு. வாழ்த்துக்கள். கிராமங்களைப் பத்தின குரூர முகத்தை அழகாச் சொல்லியிருக்கீங்க.

  8. நிதர்சனங்களை தொட்டுச் சென்றிருக்கும் இந்த இடுகை மிக முக்கியமான ஒன்றாக கருதுகிறேன்.
    பேரன்புடன் நித்யகுமாரன்

  9. நன்றி பைத்தியக்காரன்.

    //திரைப்படம் சார்ந்த பதிவுகள் என்னவாயிற்று? தொடர்ந்து எழுத சோம்பலாக இருந்தால் அவ்வப்போதாவது சினிமா குறித்து எழுதுங்கள்…//

    சோம்பல் இல்லை. வேலைப்பளு அதிகம். தொடர்ந்து எழுதுவேன்.

    //இயல்பாக இருப்பதாக சொல்வதும், நினைப்பதும் கூட முகமூடி அணிந்துதானே…//

    யோசிக்க வைக்கிறீர்கள். இது குறித்தும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

    //நீங்கள் கேட்டுள்ள கேள்விகளுக்கான விடைகளை இனி வரும் உங்கள் பதிவிலிருந்து அறிய காத்திருக்கிறேன்.//

    அதற்கான புள்ளியை நோக்கிதான் நகர முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன்.

    //நந்தா, வர வர உங்க எழுத்து நடை ரொம்பவே மெருகேறிக்கிட்டிருக்கு. வாழ்த்துக்கள். கிராமங்களைப் பத்தின குரூர முகத்தை அழகாச் சொல்லியிருக்கீங்க.//

    :) . நன்றி லக்ஷ்மி.

  10. திரு.நந்தா அவர்களுக்கு,

    உங்களது பதிவை நேர்மையற்றுத்தான் வாசித்தேன் என்பதை முதலிலேயே கூறிவிடுகிறேன்.

    பதிவின் முதல் பாதியை வாசித்துக் கொண்டிருக்கும் போதே கிராமங்கள் பற்றிய எதிர்கருத்துக்கள் எட்டிப்பார்த்துக் கொண்டே வந்தன. பதிவை முழுதும் வாசித்த பிறகு ஒரு மெல்லிய மெளனம்.

    பதிவின் பேசுபொருள் பற்றி : என்னத்த சொல்றது? எத்தனை முகமூடிகளையும், அடையாளங்களையும் கழட்டுவது என்ற நினைவே அயற்சியாக இருக்கிறது.

  11. உங்கள் பதிவுகள் சில வலைச்சரத்தில் தொகுத்து கொள்ள எடுத்துக்கொண்டேன்.
    http://blogintamil.blogspot.com/2008/07/blog-post_2658.html

    நன்றி.

    அன்புடன் புதுகைத் தென்றல்.

  12. //பதிவை முழுதும் வாசித்த பிறகு ஒரு மெல்லிய மெளனம். //

    இதை நான் பாராட்டாய் எடுத்துக்கொள்ளலாமா. :)

    //பதிவின் பேசுபொருள் பற்றி : என்னத்த சொல்றது? எத்தனை முகமூடிகளையும், அடையாளங்களையும் கழட்டுவது என்ற நினைவே அயற்சியாக இருக்கிறது.//

    அதே அயர்ச்சிதான் இங்கேயும் சில சமயங்களில் வரம்பு மீறும் போது.

    //உங்கள் பதிவுகள் சில வலைச்சரத்தில் தொகுத்து கொள்ள எடுத்துக்கொண்டேன்.
    http://blogintamil.blogspot.com/2008/07/blog-post_2658.html//
    நன்றி புதுகைத் தென்றல்.

  13. பாலாஜி says:

    உண்டு, உறங்கி, வேலைகள் செய்து, எனக்கென்று ஒதுக்கப்பட்ட வாழ்நாட்களின் மொத்த எண்ணிக்கையில் ஒன்றைக் கழித்து, மறுபடி அடுத்த நாளை எனது கணக்கிலிருந்து குறைப்பதற்கான முயற்சிகளை தொடங்குகின்றேன்.உடலில் தெம்பு இருக்கும் வரைக்கும் பணம், வேலை என்று ஓடி விட்டு திடீரென்று ஒரு நாளில் பட்டென்று எல்லாவற்றையும் அறுத்துக் கொண்டு இறந்து போய்விடும் வாழ்க்கையைதான் நம்மில் பலரும் செய்துக் கொண்டிருக்கிறோமோ??//

    நந்தா இந்த வரிகள் எனக்குள் பல கேள்விகளை எழுப்பி இருக்கின்றது. உணர்வைத் தொடும் பல விஷயங்களைச் சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  14. //இதை நான் பாராட்டாய் எடுத்துக்கொள்ளலாமா.//

    நிச்சயமா.. :)

  15. porkkodi says:

    இப்போதெல்லாம் உங்கள் எழுத்துக்களை படிப்பது கைவந்துவிட்டதுபோல தோன்றுகிறது.

    //உடலில் தெம்பு இருக்கும் வரைக்கும் பணம், வேலை என்று ஓடி விட்டு திடீரென்று ஒரு நாளில் பட்டென்று எல்லாவற்றையும் அறுத்துக் கொண்டு இறந்து போய்விடும் வாழ்க்கையைதான் நம்மில் பலரும் செய்துக் கொண்டிருக்கிறோமோ??//

    உண்மைதான். ஆனால் ஓடிக்கொண்டிருக்கும் போது நின்று நிதானித்து இதையெல்லாம் யோசனை செய்துகொண்டிருந்தால் நம் மீது ஏறி மிதித்துக்கொண்டு ஓட நம் பின்னே ஆயிரம் பேர் ஓடிவந்துகொண்டிருக்கிறார்கள்.

    :)

  16. porkkodi says:

    மேலும், கிராமங்களில் வெளிப்படையாகத் தெரியும் வன்மம் நகரங்களில் மேலும் செறிவூட்டப்பட்டு, நாகரீகத்தின் போர்வையில், நாசூக்காக செய்யப்படுவதும் உண்மை. எனக்கென்னமோ, கிராமங்களே பரவாயில்லையோ என்று சில சமயம் தோன்றத்தொடங்கிவிட்டது. நகரம் என்பது என்வரையில் எந்நேரமும் வெடிக்கக்காத்திருக்கும் ஒரு எரிமலையாகவே தோன்றுகிறது. நகரம் அனுமதிக்கும் தனிமையும், தனிமனித உரிமையும் கிராமங்களில் இல்லையென்றாலும் நகரங்கள் அளவுக்குமீறிய சுதந்திரம் தந்து கெடுக்கிறதோ என்ற எண்ணமும் இருக்கிறது.

    ஆமாம் உங்க ஊர் எங்க இருக்கு?

  17. Athiyaman says:

    நந்தா,

    வாழ்க்கைய ரொம்ப சிரியஸா எடுத்க்காதீங்க. அர்த்த‌ம் தேட‌றதெல்லாம்…

    ஸ்ஃப்ட்வெர்ல வேல பாக்க முடியலேயேனு என்னை போல் பலர் உங்களை பார்த்து பொறாமை படறோம். :) )

    Don’t worry, be happy and make others happy
    -Mehar Baba

    athu oru aazamaana saying thaan…

  18. நன்றி பாலாஜி,

    //இப்போதெல்லாம் உங்கள் எழுத்துக்களை படிப்பது கைவந்துவிட்டதுபோல தோன்றுகிறது. //

    அய்யய்யோ எளிதில் அனுமானித்து விட முடிகிறது என்று சொல்கிறீர்களோ?? :)

    //நகரம் அனுமதிக்கும் தனிமையும், தனிமனித உரிமையும் கிராமங்களில் இல்லையென்றாலும் நகரங்கள் அளவுக்குமீறிய சுதந்திரம் தந்து கெடுக்கிறதோ என்ற எண்ணமும் இருக்கிறது.//

    இது தனி மனித அனுப்வங்களைப் பொறுத்து மாறுபடும். உண்மைதான்.

    என் ஊர் கொளத்தூர். வீரப்பன் ஏரியாங்க பார்த்துப் பேசுங்க.

  19. நகர வாழ்க்கையின் தனிமை பற்றி டி.எஸ்.எலியாட் (நயூயார்க் நகரை பற்றி கூறியது) :

    “Millions of people being lonesome together”

  20. Raji says:

    the incidents you said about friends lives are not only specific to villages, but also in cities..this is what I think..

  21. porkkodi says:

    enna sir, padhivum illa, soundum illa? enna aachu?

  22. அருமையா எழுதியிருக்கீங்க நந்தா.

  23. மிக நல்ல கருத்துள்ள பதிவு…தாக்கங்களை பதிவாக்க வாழ்த்துக்கள்

  24. Mosae selvakumar says:

    eye opening article….

  25. anony says:

    Good one.

  26. selvanayaki says:

    why are you not writing nowadays? you should.

  27. நன்றி செல்வநாயகி. கூடிய சீக்கிரம் தொடர்வேன்.

Leave a Reply