nav-left cat-right
cat-right

அஞ்சாதே – திரைப்பார்வை

மேட்டுப்பட்டி எனும் கிராமத்தில் ஊரையே ஏய்த்துப் பிழைக்கும், ஜமீன்தாராக வருபவர் ஆண்டை ஆவுடையப்பன். இவரது ஒரே மகள்தான் நாயகி சந்தியா. அதே கிராமத்தில் கூலி வேலை செய்து பிழைப்பவராக வரும் ராமய்யாவின் ஒரே மகன்தான் நாயகன் முத்துக்காளை. பட்டணத்தில் படிப்பை முடித்து விட்டு கிராமத்திற்கு வரும் சந்தியா, தனது பணத்திமிரினாலும், படித்தவள் எனும் கர்வத்தினாலும் அந்த ஊரிலுள்ள எல்லாரையும் அவமானப்படுத்திக் கொண்டு இருக்கிறாள். ஆனால் முத்துக்காளையை மட்டும் அவளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஒவ்வொரு முறையும் எளிதாக தப்பித்து விடுவதோடு அவளை மட்டம் தட்டியும் விடுகிறான். ஆத்திரமடைந்த சந்தியா ஆட்களை வைத்து அடிக்க முயற்சி செய்வதிலிருந்து எல்லாவகையிலும் முத்துக்களையை பழி வாங்க முயற்சிக்கிறாள்.

ஒரு நாள் ஒரு வரப்பின் மீது இருவரும் ஒரே சமய்த்தில் எதிரெதிரே வந்து விட வழக்கம் போல் நாயகனை அசிங்கப் படுத்த முயல, தன்மானம் மிகுந்த முத்துக்களை சந்தியாவைப் பிடித்து சேற்றில் தள்ளி விட்டு விட்டு பொம்பளைன்னா யாரு? வெட்கம்னா என்னா? தமிழ் கலாச்சாரம்னா என்னா? என்று ஒரு பத்து நிமிடம் லெக்சர் அடிக்கிறான். அன்று இரவு கட்டிலில் கமுந்து படுத்துக்கொண்டு செயினை வாயில் கடித்தபடி முதன் முதலில் வெட்கப்பட்டுக் கொண்டு தமிழ் கலாச்சாரம் பற்றிப் பேசிய முத்துக்களையுடன் அரைகுறை ஆடையுடன் டூயட் பாடுவது போல சந்தியாகனவு காணுகிறாள். இதற்கு நடுவில் சந்தியாவின் முறைமாமனாக வரும் மைனர் சங்கரபாண்டி சந்தியாவை அடைய நினைக்கிறான்.ஆவுடையப்பனும் மகளுடைய காதலை தீவிரமாக எதிர்க்கிறார். சங்கரபாண்டி, ஆவுடையப்பன் இவர்கள் இருவரையும் எதிர்த்து முத்துப்பாண்டியும், சந்தியாவும் தமது காதலில் ஜெயித்தார்களா? இல்லையா என்பதை சொல்வதுதான் இந்த “மேட்டுப்பட்டி முத்துக்காளை” திரைப்படத்தின் கதை…..

முன் குறிப்பு: விமர்சனம் செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு படத்தின் முக்கால்வாசி கதையை சொல்லி விட்டு க்ளைமாக்ஸ் ஃபைட்டை வெள்ளித் திரையில் காண்க என்று சொல்லி விட்டுப் போவதில் எனக்கு எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை. இருப்பினும் காட்சிகளைப் பற்றிப் பேசவோ, சிலாகிக்கவோ, வர்ணிக்கவோ முயலும் போது, துருத்திக்கொண்டு வந்து மையக்கதை எப்படியாவது வெளிப்பட்டு விடத்தான் செய்கிறது. ஆகவே படத்தின் கதை தெரியாமல் சென்று அமர்ந்து ஃப்ரஷ்ஷாக கதையை ரசிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த விமர்சனத்தின் கடைசிவரிகளை மட்டும் படித்து விட்டுச் செல்லுங்கள்.

——————————————————————————–

அஞ்சாதே – இது இரு நண்பர்களின் நட்பை மையமாய் வைத்து எழுதப்பட்டிருக்கும் கதையா, இல்லை காவல் துறையை மையமாய் வைத்து பின்னப்பட்ட கதையா இல்லை ஒரு மோசமான குற்றவாளியைத் தேடிச் செல்லும் த்ரில்லர் கதையா என்று கேட்டால் ஒற்றை வார்த்தையில் சொல்லி விட முடியாதுதான். ஏறக்குறைய ஒரு மல்டி டைமன்ஷனில் எடுக்கப்பட்டிருக்கும் படம் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஏன்னா நம் எல்லாருடைய வாழ்க்கையுமே கொஞ்சம் மல்டி டைமென்ஷன் உடையதுதான். ஸ்கூல் படிக்கும் வரை இஞ்சினீயராவேன் என்றே வாழ்ந்துக் கொண்டிருந்து விட்டு, தடம் மாறிப் போய் ஆரம்பப் பள்ளி ஆசிரியராகவோ, இரும்புக்கடை முதலாளியாகவோ வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மில் பலரைப் பார்த்தவர்கள் வாழ்க்கை இங்கு ஆரம்பித்து, இந்தக் கோட்டில் பயணம் செய்து, இப்படி முடிந்து விடும் என்று அடித்துக் கூற முடியாது.

இந்தப் படமும் அப்படி நேர்கோட்டில் பயணிக்காமலேதான் செல்கிறது. படத்தின் ஒவ்வொரு கேரக்டர்களிலும், காட்சிகளிலும் மிஷ்கின்னின் உழைப்பு தெரிகிறது.

நரேனின் நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. என்ன பேச்சில் கொஞ்சம் மலையாள வாடை அடிப்பது போல் தெரிகிறது.கிருபாவாக நடித்துள்ள அமிர் அஜ்மல் ஒரு நல்ல தேர்வு. பொன்வண்ணன் என்னை இன்னும் தமில் சினிமா உலகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வில்லை என்று நிரூபித்துக் காட்டுகிறார். நடுத்தர வர்க்கத்து மக்களின் வாழ்க்கை முறையை, குடியிருப்புகளை கண்முன் நிறுத்தி இருக்கிறார் இயக்குனர். படத்தின் பெரும்பாலான பகுதியை நேச்சுரல் லைட்டிங்கிலேயே எடுத்திருப்பது ஒளிப்பதிவாளரின் திறமையைக் காட்டி இருக்கிறது. “கண்ணதாசன் காரைக்குடி” பாடலின் நல்ல நடன அமைப்பு, படம் முழுதும் ஆட்சி செய்யும் சுந்தர் சி.பாபுவுன் பிண்ணனி இசை, ப்ள்ஸ் & மைனஸ் நிரம்பிய வில்லன் பிரசன்னா, மற்றும் பாண்டியராஜனின் நடிப்பு இப்படி பல விஷயங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் இவை அனைத்தும் ஒரு சாதாரண மசாலா படத்தில் கூட நிரம்பி இருக்கும் கலை அம்சங்கள். இவை அனைத்தையும் தாண்டிய ஏதோ ஒன்று இப்படம் முழுதும் நிரம்பி வழிந்துக் கொண்டிருப்பதை உணர முடிகிறது.

உலக சினிமா அரங்கில் காட்சி ஊடகமாய் செயல் பட்டுக்கொண்டிருக்கும் சினிமா, தமிழ் சினிமா வரலாற்றில் மட்டும் எப்படியோ, வசன ஊடகமாகவே பின் தங்கி வந்துகொண்டிருக்கிறது. அவ்வப்போது மட்டும் இதைத் தாண்டிய சில முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தத் திரைப்படமும் அப்படிப்பட்ட ஒரு முயற்சி என்று சொல்லலாம்.

படத்தின் முதல் காட்சியிலேயே,கிருபாவை மிரட்டும் தாதாக்களையும், உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் கிருபாவையும் பாட்டம் ஆங்கிலிளேயே காண்பிக்கும் இயக்குநர் இந்த இரண்டு ஃப்ரேம்களுக்கு நடுவே 5 நொடிகள் வெறுமனே வானத்தை மட்டும் காண்பிக்கும் போதே, இப்படத்தில் வசனங்களை விட காட்சிப்படுத்துதல்தான் முக்கியத்துவம் பெறப்போகிறது என்பது புரிந்து விடுகிறது. (இதே சீனை வேறு யாராவது எடுத்திருந்தால் தாதாக்களின் பின்னாலிருந்து அவர்களது பார்வையில் கிருபாவை நிறுத்தி அதே பழைய லாங் ஷாட் டெக்னிக்கையே பயன்படுத்தி இருப்பார்கள் என்பது என் எண்ணம்.)

படம் விட்டு வெளியே வந்த பின்பும் கண்ணதாசன் காரைக்குடி பாடல் மனதில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது.

இன்னொரு அழகான விஷயம் குருவி கேரக்டர்.மக்கா எங்க இருந்துய்யா பிடிச்சீங்க இப்படி ஒரு கேரக்டரை. சோடா குடிக்கணும் 5 ரூபாய் கொடு, என்று மிரட்டும் காட்சியிலும் சரி, குடத்தை எடுத்துக் கொண்டு திட்டிக் கொண்டே தண்ணீர் பிடிக்கப் போகும் காட்சிகளிலும் சரி, அசத்துகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, இறுதியில் கிருபா ஏண்டா என்னை சுட்டான்? நான்தான் பார்த்தேனே. ஏண்டா என்னைச் சுட்டான்? என்று சொல்லிக் கொண்டே செத்துப் போகும் காட்சியில் மனிதர் கலக்கி எடுத்திருக்கார்.

படம் முழுக்க முகம் காட்டாமல் வரும் மொட்டை கேரக்டர். இது தமிழ் சினிமாவிற்கு புதுசு என்று நினைக்கிறேன். நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் லவ் ஃபெய்லியர், எக்ஸாம்ல அவுட் என்பது போன்ற சொத்தை காரணங்களால் தடம் மாறிச் செல்லும் பலரை கண்முன் நிறுத்துகிறது இந்த கேரக்டர். இதே வேறு படமாய் இருந்திருந்தால் த்ரில்லிங்காய் எடுத்துப் போகிறேன் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு, கடைசி நிமிடத்தில் இவன்தான் அந்த க்ரூப்பிற்கே தலைவன் என்பது போல் பூச்சுத்தி இருப்பார்கள். ஆனால் மொட்டை போன்ற கேரக்டர்கள் எப்போதுமே தலைவனாக முடியாது என்பதை காட்டியுள்ளார்கள்.

ஒரு போலிஸ் ட்ரெய்னியின் ஆரம்ப கால வாழ்நாட்களை இவ்வளவு உண்மையாக வேறு சினிமாவில் படம் பிடித்துக் காட்டியதில்லை. அதிலும் முக்கியமாய் தன் பொண்டாட்டியின் கள்ளக் காதலை தெரிந்து, அவளது தலையை வெட்டி எடுத்து வரும் அந்த காட்சி. தினம் தோறும் செய்தித்தாள்களில் நாம் பார்த்து பதறும் ஒரு விஷயம் எவ்வளவு எளிதாக அங்கே எடுத்துக் கொள்ளப் படுகிறது என்பதை அழகாய் சொல்லி இருக்கிறது.

பின்னாடி வெட்டுப்பட்டவனையும், பாட்டியையும் வைத்துக் கொண்டு நரேன் வண்டி ஓட்டிக் கொண்டு வரும் காட்சியில் நரேன் கலக்கி இருக்கிறார். அவன் பிணமாகி விட்ட பின்பு பூக்கார கிழவி அந்த இடத்தில் பூக்களைத் தூவும் போது தியேட்டரில் ஒரு ஆள்விடாமல் கை தட்டுகிறார்கள்.

ஒளிப்பதிவாளருக்கு தனியே ஒரு பெரிய்ய சல்யூட் வைக்க வேண்டும். படம் முழுக்க அராஜகம் பண்ணி இருக்கிறார். ப்ரசன்னா கும்பல் கிருபாவின் வீட்டில் ஒளிந்துக் கொள்ளும் காட்சிகளில், அதே 30 வாட்ஸ் பல்பு வெளிச்சத்தில், கால்களின் இயக்கங்களை மட்டுமே காட்டி 3 நிமிடம் எடுத்திருக்கிறார். இதற்கு பெரிய்ய துணிவு வேண்டும் ஏன்னா “டேய் மூஞ்சை காட்டுங்கடா” என்று கத்த தண்ணியடித்து விட்டு தியேட்டருக்கு வரும் ஒரு கும்பல் எப்போதுமே காத்துக் கொண்டிருக்கிறது. அதே போல் இறுதி காட்சியில், குருவி சுடப்பட்டவுடன், சத்யா, படுத்த படியே ஊர்ந்து கொண்டே வந்து குருவியை நெருங்கும் காட்சியில் காமிரா புகுந்து விளையாடி இருக்கிறது. இப்படி பல காட்சிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்தப் படத்தின் இன்னொரு பெரிய ப்ளஸ் இசை. எந்த இடத்தில் மௌனம் காப்பது, எந்த இடத்தில் புகுந்து விளையாடுவது எனும் கலையை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார் இசையமைப்பாளர். சப்பையை தயா சுடும் காட்சியில் வெறுமனே குண்டுச் சத்தத்தின் மூலமே கலவரப்படுத்தி இருக்கிறார். சப்பையின் கடைசி நொடிகளை படமாக்கிய விதம் எனக்கு மிகவும் ;பிடித்திருந்தது. அதே போல் கால்களை மட்டுமே காட்டி படமெடுத்த அந்த காட்சிகளையும் உயிர்ப்பிக்க வைத்திருப்பதும் இசைதான்.

பொதுவாய் தமிழ் படங்களில் ஹீரோவைச் சுற்றியே கதை ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் இந்த திரைக்கதை ஒவ்வொரு கேரக்டரைச் சுற்றியும் பிணையப்பட்டுள்ளது. ஸ்கூல் பெண்கள் தப்பிக்கும் காட்சி, பெண்களை கடத்தும் காட்சி, “I am really proud of you my child” என்று பொன்வண்ணன் கடத்தப்பட்ட பெண்ணிடம் சொல்லும் காட்சி என்று சின்ன சின்ன கவிதைகளை படம் முழுக்க அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.

பிரசன்னாவின் நடிப்பு, கேரக்டரைசேஷன், பாண்டியராஜனின் புதிய பரிமாணம் என்று பல விஷயங்களைச் சொல்லிக் கொண்டேப் போகலாம்.

என்னய்யா ஓவரா கூவற? அப்படி என்ன பெரிசா படம் எடுத்துட்டாங்க. இந்த படத்துல மைனஸ் பாயிண்டே இல்லையா? என்னமோ அப்படி மெச்சிக்கற என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சொல்லலாங்க. இதுலயும் குறையை நிறைய கண்டு பிடிக்கலாம்.

விஜயலட்சுமி இன்னும் கொஞ்சம் நடித்திருக்கலாம். தான் செலக்ஷன் ஆகலைன்னு அஜ்மல் உணர்ச்சி இல்லாமல் பேச ஆரம்பிக்கும் போதே அவர் திடீர்னு வெடிச்சு அழப்போறார்னு தெரிஞ்சுடுது. தேவையே இல்லாமல் க்ளைமாக்ஸ்ல நரேனும் ப்ரசன்னாவும் போடும் ஒரு ஃபைட், அவ்வப்போது படத்தில் தெரியும் சித்திரம் பேசுதடி வாடை,
தேவையின்றி இடைச் செருகப்பட்ட “கத்தாழை கண்ணால” பாடல், வில்லன்னா தலை நிறைய முடியோடதான் இருக்கணும் எனும் பழைய டெக்னிக் முறை. இப்படி சில விஷயங்களைச் சொல்லலாம்.

ஆனால் எனக்கு படத்திலேயே மிகவும் பிடிக்காத ஒரு விஷயம் கடைசியில் “இன்று ஹீரோ பெரிய போலிஸ் அதிகாரியாகவும்,ஹீரோயின் குடும்பத் தலைவியாகவும் இருக்க நாம் விடை பெறுவோம்” என்று போடும் ஒரு டைட்டில் கார்டு. ப்ளீஸ் மிஷ்கின் தயவு செய்து இது மாதிரி விஷயங்களில் யாருக்காகவும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாதீர்கள். மொட்டை செத்த உடன் லாங் ஷாட்ல காமிராவை மேலே தூக்கிக் கொண்டு போய் கரும்புத்தோட்டத்தை காண்பித்தீர்கள் பாருங்கள் நீங்கள் அங்கேயே முடித்திருக்க வேண்டும்.

படத்தில் குறியீடுகளாக அவ்வப்போது சில விஷயங்களைக் காட்டி இருக்கிறீர்கள். உதாரணத்திற்கு கிருபா க்ளைமாக்ஸில் தப்பித்து ஓடும் போது “அப்பாவிடம் நான் என்னண்ணா சொல்வது என்று விஜயலட்சுமி கேட்கும் போது ஒரு சேற்றில் கால் வைத்து 2 அடி எடுத்து வைத்தவர் திரும்ப வந்து “நான் சேத்துல காலை வெச்சுட்டேன்னு சொல்லிடு” என்று சொல்லும் காட்சியிலும் கிருபா தான் போட்ட மோதிரத்தை சத்யா கழுத்தில் செயினாக போட்டிருக்கிறான் என்று உணரும் காட்சிகளும் சரி நன்றாகவே இருந்தாலும், உங்களிடமிருந்து நா(ன்)ங்கள் இன்னும் நிறையவே எதிர்பார்க்கிறோம் மிஷ்கின். இன்னும் ஆழமாய் வலியை உணர்த்தும் குறியீடுகளை எதிர்பார்க்கிறோம். அதற்கான தகுதியும் உங்களுக்கு இருக்கிறது.

————————————————————————-
பின் குறிப்புகள்: அடுத்தவருக்கு தொந்தரவு தருகிறோம் என்ற லஜ்ஜை கொஞ்சமுமின்றி, குடித்து விட்டு படத்துக்கு வந்து விட்டு அவ்வப்போது கெட்டவார்த்தைகளை வீசும் பொறுக்கிகளையும், அங்க வந்து உக்காந்துக்கிட்டு ஊருக்கே கேட்கும் படியாக கால் மணி நேரம் போன் பேசும் ஜென்டில்மேன்களையும் நிற்க வைத்து மூஞ்சிலேயே குத்த வேண்டும் எனும் எண்ணம் நாளுக்கு நாள் எனக்குள் அதிகமாகிக் கொண்டே வ்ருகிறது

இந்த படத்தை விமர்சனம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே நான் பார்க்கக் கிடையாது. அதுவுமில்லாமல் நான் இந்த படத்தை பார்த்ததும் ஒரே ஒரு முறைதான்.எனவே இதை விமர்சனம் என்று சொல்வதை விட இப்படத்தைப் பற்றிய எனது பார்வை என்றுதான் சொல்ல விரும்புகிறேன்.

உங்களில் எவரேனும் நாளை இப்படத்தைப் பார்த்து விட்டு வந்து எனக்கு இப்படம் பிடிக்கலை என்றோ, அடப்போய்யா இது ஒரு குப்பை படம் இதுக்குப் போய் இப்படி சிலாகிச்சு எழுதி இருக்க என்றோ அல்லது ஆமா மாப்ளை படம் நல்லாதான் இருக்கு என்றோ சொல்லலாம்.

ஆனால் என்னைப் பொறுத்த வரை இந்த படம் என்னை பெரிதும் கவர்ந்திருக்கிறது. அது அவ்வளவு எளிதில் மாறி விடாது.

24 Responses to “அஞ்சாதே – திரைப்பார்வை”

  1. ராம் says:

    சரி .. ரொம்ப நன்றி!

    இதே மாதிரி, தமிழ் நாட்லே சக்கை போடு போடும் யாருக்கு யாரோ படத்த பத்தியும் உங்க பார்வையை எழுதுங்களேன் ;-)

    ..ராம்

  2. //இதே மாதிரி, தமிழ் நாட்லே சக்கை போடு போடும் யாருக்கு யாரோ படத்த பத்தியும் உங்க பார்வையை எழுதுங்களேன் ;-) //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    எதுனாலும் பேசித் தீர்த்துக்கலாம். ஏன் இந்த கொலைவெறி. நான் உங்களுக்கு என்ன பாவம் பண்ணேன்???

  3. ராம் says:

    ha ha .. was just kidding (with my previous comment) !

    I read elsewhere that அஞ்சாதே is a good movie and your analytical review confirmed. Waiting for the DVD to be out.

    ..ram

  4. [...] நந்தா சொல்வதைப் பார்த்தால், இந்தப் படம் ‘பொல்லாதவனை’ விட தூளாக இருக்கும் போல! Mysskin introduces new guys like a one- armed guy called Kuruvi (played by a former stuntman Bomb Ramesh, who lost an arm while shooting an explosion scene for a film) a go-between Satya and Kripa, he is terrific. Prasanna is a revelation as the deadly, charismatic but ruthless and terrifying psychopathic rapist Daya (the weird wig is a minus), Pandirajan without his moustache as the humorous accomplice of Daya is a scream and provides some funny moments. And Ajmal makes a promising debut; he’s clearly an actor to look out for. [...]

  5. தினேஷ் says:

    நன்றாக விமரிசித்து உள்ளீர்கள். படத்தைப் பார்க்க வேண்டும்.

    “அடுத்தவருக்கு தொந்தரவு தருகிறோம் என்ற லஜ்ஜை கொஞ்சமுமின்றி, குடித்து விட்டு படத்துக்கு வந்து விட்டு அவ்வப்போது கெட்டவார்த்தைகளை வீசும் பொறுக்கிகளையும், அங்க வந்து உக்காந்துக்கிட்டு ஊருக்கே கேட்கும் படியாக கால் மணி நேரம் போன் பேசும் ஜென்டில்மேன்களையும் நிற்க வைத்து மூஞ்சிலேயே குத்த வேண்டும் எனும் எண்ணம் நாளுக்கு நாள் எனக்குள் அதிகமாகிக் கொண்டே வ்ருகிறது”

    என்ன செய்றது, இந்த மாதிரி ரசிகர்களின் ஆதரவுனால தானே ஆரம்ப நாட்களில் தியேட்டரில் கல்லா ரொம்புது!!!!!!!

  6. //I read elsewhere that அஞ்சாதே is a good movie and your analytical review confirmed. Waiting for the DVD to be out.//

    நன்றி ராம் மற்றும் தினேஷ். பார்க்கக்கூடிய படம்தான்.

    //நந்தா சொல்வதைப் பார்த்தால், இந்தப் படம் ‘பொல்லாதவனை’ விட தூளாக இருக்கும் போல!//

    அது வேறு வகை இது வேறு வகை. இது கொஞ்சம் எமோஷனல் கலந்தது. ஆனால் சில வித்தியாசமான முயற்சிகளில் இந்த படம் பொல்லாதவனை மிஞ்சி விட்டது.

  7. ravishankar says:

    tube tamilல் சன் தொலைக்காட்சி திரைவிமர்சனம் பார்த்தேன்.. திரை விமர்சனத் துண்டுக் காட்சிகளைப் பார்க்கவே வித்தியாசம் தெரிகிறது..முழு படமும் இணையத்தில் வரக் காத்திருக்கிறேன் ;)

    திரை விமர்சனத்தில் முழுப் படக்கத்தையையும் சொல்வதை பெரிய குறையாக கருதுவதில்லை..எப்படியும் ஓரிரு நண்பர்கள் மூலமும் கதைகளை அறிந்து கொண்டு விடுகிறோம். இணையத்தில் தரவிறக்கிப் பார்க்கும் பிற மொழிப் படங்களுக்கு எல்லாம் விலாவரியாக விக்கிப்பீடியாவில் கதை படித்து விட்டுத் தான் படம் பார்க்கத் தொடங்குவது. நல்ல படங்கள் அதற்குப் பிறகும் சுவாரசியமா இருக்கும்..இரண்டாம், மூன்றாம் முறை கூட சில படங்களை சுவாரசியமா பார்க்குறோமே.. பிறர் கதை சொல்வது, எழுத்தில் கதை படிப்பது – இதை எல்லாம் தாண்டி இயக்குநரின் எந்த அளவு காட்சிப்படுத்தும் திறமை வைத்திருக்கிறார் என்று அறிய உதவும்..

  8. //திரை விமர்சனத்தில் முழுப் படக்கத்தையையும் சொல்வதை பெரிய குறையாக கருதுவதில்லை..//

    இல்லை ரவி. நான் என்னை வைத்து சொன்னேன். நான் முடிந்தளவு படம் பார்ப்பதற்கு முன்பு கதை கேட்பதைத் தவிர்த்து விடுவேன். நல்ல படமா இல்லையா என்பதை மட்டும் தெரிந்து கொள்வேன். மூவி ரிவ்யூவைப் படிக்கும் போது கூட கதைப் பகுதியை விட்டு விட்டுத்தான் படிப்பேன் பொதுவாக. முதல் முறை ஒரு படம் எந்த வித எதிர்பார்ப்புமில்லாமல் போய் உட்காரும் போது எந்தளவில் கவர்கிறது என்பதை தெரிந்துக் கொள்ள விரும்புவேன்.

    விமர்சனம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பொதுமைப் படுத்த வில்லை.

    இரண்டாவது, மூன்றாவது முறை போய் உட்காருவதென்பது படத்தின் பல நுணுக்கமான விஷயங்களை இனம் கண்டு ரசிக்க என்றும் சொல்லலாம்.

  9. கணேஷ் says:

    நந்தா படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி இருக்கிறது உங்கள் விமர்சனம். படத்தை ரொம்ப ஃபீல் பண்ணி பார்த்திருப்பீங்க போல.

  10. பெரிய எதிர்பார்ப்பு இல்லையெனிலும்,
    இந்தப் படம் பார்க்கணும் தோணுது…

  11. "செல்வி" விஜயலட்சுமி ரசிகர் மன்றம் , வடபழனி says:

    // விஜயலட்சுமி இன்னும் கொஞ்சம் நடித்திருக்கலாம்

    எங்கள் தலைவி விஜயலட்சுமி நடிப்பை பற்றி குறை கூறிய நந்து அவர்களையும் , மேலும் எங்கள் தலைவி விஜயலட்சுமிக்கு ஒரு பாடல் கூட கொடுக்காத இயக்குனர் மிஸ்கின் அவர்களை எங்கள் ரசிகர் மன்றத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

    வணக்கம்

  12. நந்தா,

    ரொம்ப ரசித்துப் படம் பார்த்திருக்கிறீர்கள் போலிருக்கு.

    பெங்களூருக்கு எப்ப வருமோ ஆண்டவனுக்கே(ஹிஹி) வெளிச்சம்.

    நான் தமிழ்ப்படங்களுக்கான விமர்சனம் எழுதியது, ஆங்கிலம் ஹிந்தி என நிறைய எழுதிய பிறகுதான் என்று நினைக்கிறேன். அப்படியிருக்கும் பொழுதும் பெரும்பாலும் கதையை சொல்வதைத் தவிர்த்துவிடுவேன்.

    ஆனால் சில உலக திரைப்படங்களுக்கு மட்டும் கதை சொல்லியிருக்கிறேன் ஏனென்றால் உலக சினிமா படங்களை மக்கள் பார்ப்பது கொஞ்சம் குறைவுதான் என்பதாலும் அங்கே கதையைவிடவும் முக்கியமான விஷயங்கள் நிறைய இருக்கும் என்பதாலும் அதைப் பற்றி அங்கே எழுதுவேன் உதாரணம் y tu mamma tambien, baise moi போல.

    அதே போல் நான் திரை விமர்சனம் எழுதித்தான் கொஞ்சம் போல் பிரபல்யமானேன் என்று நினைக்கிறேன். உதாரணம் Searching for bobby fischer, Last Samurai போல். சினிமா என்பது எனக்கு மிகவும் பிடித்தமானதாகவே தொடர்ச்சியாக இருக்கிறது. சரி நிறைய பொழம்பியாய்விட்டது வர்றேன்.

  13. Satheesh says:

    Nandha,

    Your review is very strait forward and good… Me too don’t like to know the story before i see the film… but when i have a biased opinion abt any film, i wait for a week, will read vikatan’s review and will try for the film if it gets more than 40 marks…

    Have u seen the film in udayam theatre (chennai)?.. you jus like that reflected audience’s reactions like claps, badwords and chatting in mobiles exactly…

  14. நன்றி கணேஷ், தென்றல்,மோகன், முரளி மற்றும் சதீஷ்.

    //Have u seen the film in udayam theatre (chennai)?.. you jus like that reflected audience’s reactions like claps, badwords and chatting in mobiles exactly…//

    சதீஷ் உதயம் தியேட்டரில் இப்போழுதெல்லாம், வெள்ளிக்கிழமை இரவு படம் பார்க்க வேண்டும் என்று நினைத்தாலே பயமாக இருக்கிறது.

    எனக்கே இப்படியென்றால், குடும்பத்துடன் வருபவர்களுக்கு எவ்வளவு எரிச்சல் ஏற்படும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

  15. நரேஷ் குமார் says:

    //எங்கள் தலைவி விஜயலட்சுமி நடிப்பை பற்றி குறை கூறிய நந்து அவர்களையும் , மேலும் எங்கள் தலைவி விஜயலட்சுமிக்கு ஒரு பாடல் கூட கொடுக்காத இயக்குனர் மிஸ்கின் அவர்களை எங்கள் ரசிகர் மன்றத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். //

    உண்மையில் படத்தில விஜயலட்சுமிக்கு ஒரு பாட்டு இருக்காமாம். ஆனா என்ன காரணத்துக்காகவோ அது திரையில் இல்லாம போய்டுச்சு! அய்ய்ய்ய்யோ பாவம்!

  16. [...] நந்தா எழுதிய அஞ்சாதே விமர்சனம் [...]

  17. dear nandha,

    i did not see the film till now. but the way you have given your review, tempting me to see it. really mr. miskin has to see yr review. it is equal to a 10000000000……. claps in the theatre. really good (your way of writting). i like your transparency in expressing good and bad things. keep it up.

    i am sorry to say this, this is the first time i am visiting your blog. it is really good…….

    i am at muscat now. the film is not yet released here.

    meet u back after saw the film.

    by

    அழகாபுரி முருகானந்தம், Palani

  18. அஞ்சாதே எனக்கும் பிடித்திருந்தது.
    மேலும் நல்ல படங்கள் கொடுக்க வாழ்த்துவோம்.

  19. //இது இரு நண்பர்களின் நட்பை மையமாய் வைத்து எழுதப்பட்டிருக்கும் கதையா, இல்லை காவல் துறையை மையமாய் வைத்து பின்னப்பட்ட கதையா இல்லை ஒரு மோசமான குற்றவாளியைத் தேடிச் செல்லும் த்ரில்லர் கதையா என்று கேட்டால் ஒற்றை வார்த்தையில் சொல்லி விட முடியாதுதான்//

    எல்லாவற்றுக்கும் மேலாய் தாங்கிக்கொள்ளவியலாத தோல்வியின் உக்கிரம் படம் முழுக்க விரவியிருப்பதை நீங்கள் உணரவில்லையா நந்தா? படம் முடியும் வரையிலும் முடிந்தபின்னும் என் கண் முன்னால் நின்று கொண்டிருந்தது அதுதான். படத்தில் என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரமும் க்ருபா தான். மிக நீண்ட விமர்சனம்… உங்களுக்கு எந்த அளவிற்கு படம் பிடித்தமானதாயிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. நல்லாருக்குங்க. :)

    படத்தின் ஆரம்ப 20 நிமிடங்களை தவற விட்டதால் என்னால் விமர்சனம் எழுத முடியவில்லை. :(

  20. முத்துக்குமார் says:

    எனக்குப்பிடித்த சில விஷயங்கள் :

    - முகமூடியுடன் கொல்ல வரும் வன்முறையாளர்களை துப்பாக்கியால் சுட முயன்று இயலாமல் கீழே போட்டுவிட்டு அவர்களை அறைகூவி அழைத்து ஒவ்வொருவராய் சாய்க்கும் இடம். இதுவும் ஒரு குறியீடாக சில செய்திகளை சொல்லும் இடமே !
    - பாஸ்கரின் மிகையில்லாத நடிப்பு. குணச்சித்திர வேடத்தில் தமிழ் சினிமாவில் அரசாள இவருக்கு எல்லா தகுதியும் உண்டு ;
    - தன் கருத்தை/நீதியை/விமர்சனத்தை பெரும்பாலும் எந்த கதாபாத்திரத்தின் மேலும் திணிக்காமல் எல்லோரையும் தரையில் கால் பாவ அவர்களாகவே உலவ விட்டிருப்பது ;

    அன்புடன்
    முத்து

  21. அஞ்சாதே எதிர்பார்ப்புக்களோட பார்த்தேன். நீங்க சொல்கிற அத்தனை ‘சிறு கவிதைகளும்’ நல்லாயிருந்துச்சு ஆனாலும் படத்தில் அப்படி ஒரு இறுக்கம். அஞ்சாதே படம் அச்சத்தையே தந்தது.

    யதார்த்தமாய் எடுக்கப்படுகின்ற பல படங்களும் ரவுடி, தாதா போன்ற கதைச் சூழல்களிலேயே எடுக்கப்படுகிறது ஒரு வருத்தம். பிஞ்சுக் குழந்தைகள் கடத்தலை இத்தனை இறுக்கமாகப் பார்த்ததில் அதுவும் குடும்பத்தோடு பார்த்ததில் கொஞ்சம் கதிகலங்கித்தான் போனோம்.

    ஏனோ இதுபோன்ற விஷயங்களை எதார்த்தமில்லாமல் காட்டிச் செல்வதே நல்லதோ எனத் தோன்றியது. ஒருவேளை நண்பர்கலுடன் மட்டும் பார்த்திருந்தால் இத்தனை இறுக்கம் இருந்திருக்காது என நினைக்கிறேன்.

    படத்தின் மையம் நட்பென்கிறீர்கள் எனக்கென்னவோ குழந்தைக் கடத்தல்தான் எனப் படுகிறது.

  22. really very excellent அஞ்சாதே thanks to myshin.

  23. சிரில் எனக்குத் தெரிந்த பல பெண்கள் கூட படம் சுமார் என்றுதான் சொல்லிச் சென்ன்றார்கள். காரணம் ஒன்றும் பெரி்தாய் இல்லை. படம் பயங்கர சீரியஸாய், போகுதாம். ரவுடிகள் பற்றிய கதை. அதனால் எனக்குப் பிடிக்க வில்லை என்று சொன்னார்கள்..

    எனவே கூடும்பத்திலுள்ளவர்களுக்கு எவ்வளவு தூரம் இப்படம் பிடிக்கும் என்று சொல்ல முடியவில்லை. நண்பர்ளுடன் சேர்ந்து பார்த்தால் இன்னும் ஆதிகமாய் பிடித்திருக்கும்.

    //படத்தின் ஆரம்ப 20 நிமிடங்களை தவற விட்டதால் என்னால் விமர்சனம் எழுத முடியவில்லை. :( //

    மேடம் போங்க போய் படத்தை மறுக்கா ஒரு வாட்டி பாருங்க போங்க.

    //i am sorry to say this, this is the first time i am visiting your blog. it is really good…….//

    சிலாகிப்புக்கு நன்றி அழகாபுரி முருகானந்தம்.

Leave a Reply