nav-left cat-right
cat-right

BCCI : மணி கட்ட ஆளில்லாததோர் பூனை

மரணத்தை விட பெரிய தண்டனை எது தெரியுமா? மறக்கப்படுதலும், நிராகரிக்கப் படுதலும் தான்.

இந்தியாவில் வேறு எந்த விளையாட்டுக்கும் கிடைக்காத அங்கீகாரம், புகழ், பணம், லைம் லைட் வெளிச்சம் எல்லாமே ஒரே இடத்தில் குவிந்து கிடப்பது என்னவோ கிரிக்கெட்டில் மட்டும்தான். ஆனால் ஒட்டு மொத்த இந்திய கிரிக்கெட்டையும் Represent செய்வதாக தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் BCCI யின் செயல்பாடுகள் சமீப காலமாய் கட்டுக்கடங்கா சர்வாதிகாரத் தன்மையுடன் சென்று கொண்டிருக்கிறதோ என்று எண்ண வைக்கிறது. அணி வீரர்களுக்கு என்று அவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளும், தேர்வு செய்வதற்கு என்று தங்களுக்குள் கடைபிடிக்கும் சில எழுதப் படாத சட்ட திட்டங்களும் வெகு நிச்சயமாய் BCCI யின் மீது வெறுப்பைக் கூட்டிக் கொண்டே செல்கிறது.

இந்திய அணித் தேர்வில் Transparancy இருக்க வேண்டும் என்ற குரல் அவ்வப் போது கடும் கோபத்துடனும், வேகத்துடனும் எழுந்துக் கொண்டுதான் இருக்கின்றது. இது மட்டுமின்றி இந்திய மைதானங்கள், உள்ளூர் போட்டிகள், ஃபாஸ்ட் பவுலிங் பிட்சுகள் போன்ற பல விஷயங்கள் குறித்தான BCCI யின் மீதான பல கேள்விகளுக்கு அவர்கள் தரப்பிலிருந்து, சமாதானமாகவோ, தீர்வாகவோ எந்த ஒரு பதிலையும் இது வரை எவரும் பெற்றிருக்க வில்லை. ஒரு வேளை BCCI விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களோ???

கடந்த வருடம் ஒரு நாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களில் ஒருவர், பல மாத காலம் ஃபார்மில் இல்லை என்று சொல்லி கழட்டி விடப்பட்ட பின்பும், பல போராட்டங்களிற்குப் பின்பு அணியில் இடம் பிடித்து, தன்னுடைய திறமையை, கோபத்தைக் காட்டியவர், ஒரு கால கட்டத்தில் படு மோசமாய்ச் சொதப்பிக் கொண்டிருந்த இந்திய அணியை,தலைமைப் பொறுப்பேற்று, ஒரு மிகச் சிறந்த இடத்திற்கு கொண்டு வந்தவர், யுவராஜ், சேவாக், கைஃப், ஸாஹீர், ஹர்பஜன் போன்ற பல வீர்ர்களை வளர்த்தெடுத்தவர், ” Even I would like to die for such a captain” என்று இன்றும் யுவராஜால் மிக மரியாதையாக பார்க்கப்படும் ஒரு வீரர் சவுரவ் கங்குலி. கிரிக்கெட் தேர்வுக்குழு தயவு தாட்சணையின்றி ஒரு சிறந்த வீரரை, அதுவும் தன் கிரிக்கெட் வாழ்க்கையின் அதிக பட்ச ஃபார்மில் இருக்கும் போதே நீக்கி இருக்கின்றது.

வெறுமனே சில மாதங்களிற்கு முன்பு பேட்டிங்கின் மூலம் இன்னும் அதிக பட்சமாக தனது பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக ராகுல் டிராவிட் கேப்டன் பொறுப்பிலிருந்து தானாக முன் வந்து விலகி இருந்திரா விட்டால், தான் அணியில் இடம் பெறுவோமோ மாட்டோமா என்ற கவலையுடன் டிராவிட் இப்போது உட்காந்திருக்க வேண்டிய தேவையே வந்திருக்காது. அவரை கழட்டி விட்டிருக்கும் இதே தேர்வாளர்கள், ஒன்று சேர்ந்து டிராவிட் இந்த மூன்று நாடுகள் மோதும் போட்டியில், இந்திய அணிக்கு கோப்பையை பெற்றுத் தருவார் எனும் நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்று பேட்டி அளித்துக் கொண்டிருந்திருப்பார்கள்.

கிரிக்கெட் கான்ட்ரவெர்சியில் சித்து சொன்னது போல தோனிதான் இப்படி விரும்பினார் என்று காரணம் சொல்வதாய் இருந்தால், அணித் தேர்வாளராக அவரையே நியமித்து விடலாமே? அப்புறம் எதற்கு வெங்சர்காரும், ராஜூவும்???

இந்திய அணியை விமர்சித்து நல்வழிப் படுத்துகிறோம் என்று சொல்லிக் கொண்டு திரியும் இந்த வெங்சர்கார், ரவி சாஸ்திரி, கவாஸ்கர் போன்றோர் மீது என் தனிப்பட்ட குற்றச் சாட்டுகள் என நான் வைக்க விரும்புவது நிறைய்ய இருக்கிறது. வெங்சர்கார் தான் ஆர்ட்டிகிள் எழுத கூடாது என்று BCCI சொன்னால் அதை ஈகோ, பிரச்சினையாக பார்ப்பார். ரவி சாஸ்திரியை இந்திய அணி மேனேஜராய் பொறுப்பேற்று அவர்களை வழி நடத்தச் சொன்னால், முன் வர மாட்டார். ஆனால் கமெண்டரி பாக்ஸில் உட்கார்ந்துக் கொண்டு கொடுத்த காசுக்கு மிச்சமாய் கூவச் சொன்னால் சந்தோஷமாய் செய்வார். இவர்கள் எவரும் தனது தனிப்பட்ட வருமானத்தை உறுதிப் படுத்திக் கொண்டு, ஒரு பொழுது போக்கைப் போல இந்திய அணியை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்களோ என்று அவ்வப் போது தோன்றுவதுண்டு.

உலக கிரிக்கெட்டிலேயே மிக லாபகரமான ஒரு அமைப்பாக கருதப் படுவது BCCI தான். ஆனால் BCCI யின் செயல்பாடுகளை சொல்ல சொந்தமாய் ஒரு இணையத் தளம் கூட இன்னும் ஆரம்பிக்காதது, திட்டமிட்டே Transparant முறையை தவிர்க்கும் பொருட்டுதானோ என்று தோன்றுகிறது. http://bcci.cricket.deepthi.com யை விடுங்கள். அது சொந்தத் தளம் இல்லை.

சில காலங்களிற்கு முன்பு, பல வருடங்களாய் எதிர் கேள்வியில்லா தலைவராய் இருந்து வந்தார் ஜக்மோகன் டால்மியா. தனது பதவிக்காலம் முடிந்தும், தன் ஈகோவைத் திருப்தி செய்து கொள்ள கௌரவத் தலைவர் என்று புதிதாய் ஒரு பதவியை ஏற்பாடு செய்து, ஏகபோக ஆட்சி செய்து வந்திருக்கிறார். பின்பு அதுவே பல பிரச்சினைகளுக்குப் பின்பு தேர்தல் நடத்தப் பட்டு சரத் பவார் கையில் கொடுக்கப் பட்டது. அவரது காலத்திலும் சரி, பவாரின் காலத்திலும் சரி BCCI ல் பிரச்சினைகளுக்கு மட்டுமே பஞ்சமே இருந்ததில்லை.

இந்திய கிரிக்கெட் மைதானங்கள் பேட்டிங்குக்கு சாதகமாய் இருக்கும் சூழ்நிலையை மாற்றி, முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாய் சில மைதானங்களை அமைக்க வேண்டும், அதன் மூலம் இந்திய வீரர்களை அயல் நாட்டு மைதானங்களிற்கு ஏற்றவாறு தயார் செய்ய வேண்டும், 125, 132 கி.மீ வேகங்களைத் தாண்டி, 140ஐ சர்வ சாதாரணமாய்த் தொடும் வேகப் பந்து வீச்சாளர்களை உருவாக்க வேண்டும், பலகாலமாய் நடத்தி வரும் (அலுத்துப் போன) 5 நாட்கள் விளையாடும் ரஞ்சிப் போட்டி மட்டுமல்லாது, ஒரு நாள் போட்டி, 20 ஓவர், 40 ஓவர்கள் கொண்ட பல்வேறு வகை மாறுபட்ட போட்டிகள் நடத்தவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் பல காலமாய் எழுப்பப் பெற்று வந்தாலும் அதை மதிக்காமல் இருந்து வந்த BCCI, திடீரென்று ஏற்படுத்தப்பட்ட ICL ன் அறிவிப்புகளுக்குப் பின்புதான், அவசர அவசரமாய் முழித்துக் கொண்டு, இனி நாங்களும் இது போன்ற போட்டிகளை நடத்துவோம் என்று அறிவிப்பு செய்கிறது.

இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வாங்கித் தந்தவர், இன்றுவரை தலை சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் என்று பெயர் எடுத்தவர், 16 வருடம் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்தவர், 5 வருடம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாய் இருந்து வழி நடத்திய மிகச் சிறந்த முண்ணனி வீரராக கபில்தேவ் இளம் வீரர்களை வளர்த்தெடுக்கும் பொருட்டு, ICL என்று ஒரு அமைப்பு தொடங்கக் கூடாதா? ICL ல் பங்கு பெறும் வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்காக தேர்வு செய்யப் பட மாட்டார்கள் என்று சர்வாதிகாரத்துடன் BCCI அறிவித்த போது கையைக் கட்டிக் கொண்டு வெறுமனே பார்வையாளராகத்தானே பலரால் இருக்க முடிந்தது. தான் விருப்பப் பட்ட அணிக்கு விளையாடும் உரிமையை பெற்றுத் தராமல் அப்புறம் எதற்கும் நாம் ஜனநாயகத்தைப் பற்றியும், தனி மனித சுதந்திரத்தைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்க வேண்டும்???

இதே கிரிக்கெட் காண்ட்ரவெர்சியில் சில மாதங்களிற்கு முன்பு, எனக்கு கிரிக்கெட்டைத் தவிர வேறு எதுவும் தெரியாது. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் கிரிக்கெட் மட்டுமே மூச்சாக இருந்து வந்திருக்கிறேன். இப்போது என்னால் ஆர்ட்டிக்கிள் எழுதியோ, வேறு ஏதேனும் வகையிலோ, அதிகமாய் பணம் சம்பாதிக்க வாய்ப்பு இருக்கலாம். ஆனால் அது எதுவுமே, இளம் வீரர்களை வளர்த்தெடுக்கும் இந்த பொறுப்பிற்கு ஈடாகாது. என்னுடைய 16 வருட பங்களிப்பிற்குப் பிறகும் நேரடியாகவும், மறைமுகமாகவும் நான் கிரிக்கெட்டில் ஈடுபட கூடாது என்று சொல்ல இவர்கள் யார்? என்று கபில்தேவ் உணர்ச்சியுடன் கூறிய போதும், பதில் சொல்ல கையாலாகத BCCI அதே விடாப்பிடியுடன்தான் இருந்து வந்திருக்கிறது.

உங்களில் எவரேனும் இளம் வீரர்கள் தேவைதானே? மூத்த வீரர்களை அதிரடியாக நீக்கினால் அப்படி என்ன தவறு என்று கேட்கலாம். நீங்கள் உங்கள் அலுவலகத்தில் வேறு எவரையும் விட சிறப்பான முறையில் பல வருடங்களாய் உழைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், நீ எனக்கு தேவையில்லை என்று நிராகரிக்கப் படுவதனால் ஏற்படும் வலியை உங்களால் உணர முடியுமாயின், இதனையும் நீங்கள் உணரலாம்.

என்னுடைய மற்றும் உங்களுடைய எதிர்க்குரல்கள் பெரிய அளவில் மாற்றத்தை உண்டு பண்ணாமல் போகலாம். நாளை இந்த இளம் அணியினர் கூட எப்படியாவது போராடி வெற்றிகளைப் பெற்றுத் தரலாம். நாமும் கூட வழக்கம் போல் பழையதை மறந்து அடுத்த மேட்சை பார்க்க நம்மை தயார் செய்து கொள்ளலாம். ”யங்ஸ்டர்ஸ் கூட பரவாயில்லைப்பா, சுமாரா விளையாடுரானுங்க” என்று ஓவர்களின் நடுவே பேச்சுகளை பரிமாறிக் கொள்ளலாம்.

ஆனால் எது நடந்தாலும் ஒன்றை மாற்ற முடியாது. மரணத்தை விட பெரிய தண்டனை எது தெரியுமா? மறக்கப்படுதலும், நிராகரிக்கப் படுதலும் தான்.

நேற்று கபில் தேவ். இன்று கங்குலி மற்றும் டிராவிட். நாளை அது சச்சினாகவோ, யுவராஜாகவோ, ஏன் தோனியாகக் கூட இருக்கலாம்.

மணி கட்ட ஆளில்லாமல் அப்போதும் பூனை துள்ளிக் குதித்துக் கொண்டுதானிருக்கும். நாம் வழக்கம் போல் அடுத்த போட்டியைப் பார்க்க தயாரகிக் கொண்டிருப்போம்.

27 Responses to “BCCI : மணி கட்ட ஆளில்லாததோர் பூனை”

  1. குசும்பன் says:

    பளார் பளார் என்று கண்ணத்தில் அறைவது போல் இருக்கிறது, இத்தனை காரமாக கோபமாக ஒரு கிர்கெட் கட்டுரையை சமீபத்தில் படிக்கவில்லை மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்!

    //நீங்கள் உங்கள் அலுவலகத்தில் வேறு எவரையும் விட சிறப்பான முறையில் பல வருடங்களாய் உழைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், நீ எனக்கு தேவையில்லை என்று நிராகரிக்கப் படுவதனால் ஏற்படும் வலியை உங்களால் உணர முடியுமாயின், இதனையும் நீங்கள் உணரலாம்.///

    மிக மிக சத்தியமான வார்த்தைகள்!

  2. நந்தா, மிக அழகாக…அழுத்தமாக சொல்லிருக்கீங்க!

    உங்களுடைய பல பதிவுகள் என்னுடைய எண்ணங்களை பிரதிபலிப்பதாக இருக்கிறது.

  3. Sridhar Narayanan says:

    ஹ்ம்ம்… நல்லாத்தான் எழுதியிருக்கீங்க… ஆனா சில முக்கியமான விஷயங்களை ஒரு பக்கமாக சொல்லியிருக்கீங்க…

    //யுவராஜ், சேவாக், கைஃப், ஸாஹீர், ஹர்பஜன் போன்ற பல வீர்ர்களை வளர்த்தெடுத்தவர்,//

    கங்குலி நல்ல திறமையுள்ள வீரர்தான். ஆனால் இப்பொழுது அவருடைய வயது மற்றும் fitness அவருக்கு சாதகமாக இல்லை. இப்படி பொத்தாம் பொதுவாக மற்ற வீரர்களின் திறமைக்கு அவரை காரணம் காட்டுவதற்க்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று தெரியவில்லை. அவரே டொரோந்தோவில் நடந்த சஹாரா கப்பில்தான் பிரகாசித்தார். அப்பொழுது அணித்தலைவர் டெண்டுல்கர். ‘கங்குலி எனது ரகசிய ஆயுதம்’ என்றெல்லாம் பெருமையுடன் பேட்டி அளித்தார். அப்பொழுது கங்குலியை டெண்டுல்கர்தான் வளர்த்தெடுத்தார் என்று சொல்ல முடியுமா? அவர் தலைம்யேற்றிருந்த பொழுது இந்திய அணிக்கு ஏறுமுகம். அதற்கு அவரை மட்டும் காரணமாக சொல்ல முடியாது.

    //உலக கிரிக்கெட்டிலேயே மிக லாபகரமான ஒரு அமைப்பாக கருதப் படுவது BCCI தான்.//

    அப்படிப்பட்ட BCCI-னால் ஒரு கவாஸ்கரையோ, ரவி சாஸ்திரியையோ தங்கள் வாரியத்திற்காக ஆக்கபூர்வ பணியில் அமர்த்த முடியவில்லையே? ஏன் கவாஸ்கர் திறமை இல்லாதவரா? ICC-ல் கூட பொறுப்பில் இருக்கிறாரே இன்னமும். ரவி சாஸ்திரி சேப்பல் விலகியவுடன் இடைக்கால மேனேஜராக பொறுப்பேற்று பங்களாதேஷ் தொடரில் பங்கேற்றாரே. பின் என்ன பிரச்னை? அவரவர்க்கு தொழில் முக்கியமில்லயா? முன்னாள் வீரர்கள் என்றாலும் அவர்களுடைய திறமையை மதிக்க கூடிய இடத்தில்தானே அவர்களும் பிரகாசிக்க முடியும்?

    கவாஸ்கரையோ, ரவி சாஸ்திரியையோ குற்றம் கூறுவதை விட, நல்ல திறமையானவர்களை தங்கள் பக்கம் வரும்படி செய்ய முடியாத / விரும்பாத கிரிக்கெட் வாரியத்தை பற்றி சொல்லுங்கள். அது நியாயம். ஒரு ESPN நிறுவனமோ, 9 Channel நிறுவனமோ அளிக்ககூடிய பணம் மற்றும் மரியாதையில் சிறிதளவேனும் இந்திய கிரிக்கெட் வாரியம் செய்யத் தயாராயிருந்தால் நிச்சயம் மற்றவர்களின் பங்களிப்பை பெற முடியும்.

    //தனது பதவிக்காலம் முடிந்தும், தன் ஈகோவைத் திருப்தி செய்து கொள்ள கௌரவத் தலைவர் என்று புதிதாய் ஒரு பதவியை ஏற்பாடு செய்து,//

    Chief-in-patron என்றொரு பதவியை உருவாக்க ஏற்பாடுகள் நடந்தது. ஆனால் வெற்றி பெறவில்லை. அவருக்கு பதிலாக இன்னொருவரை தலைவராக அமர்த்துவாதற்க்கு நடந்த எலக்ஷ்னை பற்றி நிறைய காண்ட்ரவர்ஸிகள் வந்தன. பின்னர் சரத் பவார் வந்து விட்டார். டால்மியாவின் Chief-in-patron கனவு கனவாகவே இருந்து விட்டதுதான் உண்மை.

    //இளம் வீரர்களை வளர்த்தெடுக்கும் இந்த பொறுப்பிற்கு ஈடாகாது. //

    ICL என்பது கபில்தேவ் மட்டும் நடத்துவது அல்ல. Zee டிவியின் ஒரு வணிக முயற்சிதான் அது. 20-20 கிரிக்கெட்டின் வீச்சை கணக்கு பண்ணி தொடங்கப் பட்டதுதான் அது. நீங்கள் சொன்னீர்களே ‘காசுக்கு மிச்சம் வைக்காமல் கூவுவது’ அதைப் போலதான் இங்கும். கபில்தேவ் அதன் சேர்மனாக பணியாற்றுகிறார். அதனால் அவர் அதன் சார்பாக பேசினார். இப்பொழுது இந்தியகிரிக்கெட் வாரியம் IPL என்றொரு லீக் முறையை கொண்டு வந்து விட்டது. இரண்டுக்கும் ஒன்றும் பெரிதாக் வித்தியாசம்ம் இல்லை. கபில்தேவ் என்னவெல்லாம் சொன்னாரோ அதையெல்லாம் BCCI-யே செய்வதாக சொல்லிவிட்டது. அவர்தான் பாவம் NCA-தலைவர் பொறுப்பிலிருந்து விலக்கபட்டார். தற்பொழுது ரவி சாஸ்திரிதான் அதன் தலைவர்.

    //நேற்று கபில் தேவ். இன்று கங்குலி மற்றும் டிராவிட். நாளை அது சச்சினாகவோ//

    அட… கபில்தேவின் கடைசி பந்தயங்களின் பொழுது Sriநாத் தயாராக இருந்தார். இரண்டு வேகபந்து வீச்சாளர்களுக்க்தான் இடம் இருந்த காலத்தில், கபில் தேவும், மனோஜ் பிரபாகரும் இடம் பெற்றிருந்த பொழுது, இவர்கள் இருவரையும் விட வேகமாக பந்து வீசக்கூடிய ஷ்ரிநாத் அணியில் தேர்வாக வாய்ப்பே இல்லாமல் இருந்தது. இது ஒரு இயல்பான சுழற்சி முறைதானே. கங்குலி தேர்வான பொழுது சஞ்சய் மஞ்சிரேகரோ, அஸாருதீனோ பாதிக்கபடத்தானே செய்தார்கள்.

    ஸ்டீவ் வாக் 1999 உலக கோப்பை ஜெயித்த உடன் ஒரு நாள் போட்டிகள்லிருந்து தூக்கப் பட்டார். என்ன செய்வது? அவருடைய வயது மற்றும் அவர் இடத்திற்க்கு அடுத்த ஆட்கள் தயாராக இருந்தனர் என்பதுதான் உண்மை.

    //மணி கட்ட ஆளில்லாமல் அப்போதும் பூனை துள்ளிக் குதித்துக் கொண்டுதானிருக்கும். //

    இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு அரசு நிறுவனம் அல்ல. அது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஒரு அங்கம்.

    கிரிக்கெட் ரசிகர்களாகிய நாம் உணர்ச்சி வசப்பட்டு அது ஒரு தேசத்தின் அடையாளமாக பார்க்கிறோம். அவ்வளவே! அந்த பூனை இருட்டுல குதிச்சாலும், விட்டதுல பாஞ்சாலும் நம்ம கையில ஒண்ணும் இல்ல. டி.வி. ரிமோட் கண்ட்ரோல் தவிர.

    ஹாக்கியின் தோல்விக்கு அப்புறம், ஒரு உலக கோப்பையை இந்தியா வென்றதினாலும், இந்திய பாகிஸ்தான் பந்தயங்களின் பரபரப்பினாலும் கிரிக்கெட் விளையாட்டு அநியாயத்திற்க்கு பிரபலமடைந்து நாம் அதை அளவுக்கு மீறி உணர்ச்சிவசப்பட்டு போஷிக்கிறோம் அல்லது விமர்சிக்கிறோம். அன்று பாகிஸ்தான். இன்று ஆஸ்திரேலியா.

    //மரணத்தை விட பெரிய தண்டனை எது தெரியுமா? மறக்கப்படுதலும், நிராகரிக்கப் படுதலும் தான்.
    //

    அது சரி! அவர்கள் எல்லாரும் கிரிக்கெட் வாரியத்தோடு காண்ட்ராக்ட் போட்டு விளையாடும் ப்ரொபஷனல்ஸ். கங்குலியோ, டிராவிடோ இப்பொழுது தேர்வாகததால் பண இழப்பு எதுவும் இல்லை. பீலே, பெக்கர், பிராட்மென், சோபர்ஸ், நம்ம கவாஸ்கர் எல்லாருக்கும் ஏற்பட்ட நிலைமதான். அவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் தங்கள் ப்ரொபஷனல் வாழ்க்கையை நன்றாகத்தான் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

    இந்த வீரர்கள் விளையாடும்பொழுது அவர்கள் என்னவெல்லாம் சம்பாதிக்கிறார்கள் என்று பொருமுவதும், அவர்கள் தேர்வு செய்யப் படவில்லையென்றால், அய்யோ அவர்கள் பாவம், எல்லோரும் மறந்துவிடப் போகிறார்கள் என்று அனுதாபப் படுவதும்… இரண்டுமே தேவையில்லைதான்.

  4. ஸ்ஸ்ஸ்ஸ்….. இந்தப் பக்கம் ஒரே சூடா இருக்குப்பா
    நான் அப்பால வரேன்

  5. அருண் says:

    மிக நல்ல பதிவு நந்த…ithu குறித்த எனது கருத்துக்களை, http://idlyvadai.blogspot.com/2008/01/blog-post_1020.html
    இதில் comment செய்துள்ளேன்.

  6. //பளார் பளார் என்று கண்ணத்தில் அறைவது போல் இருக்கிறது, இத்தனை காரமாக கோபமாக ஒரு கிர்கெட் கட்டுரையை சமீபத்தில் படிக்கவில்லை மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்!//

    //நந்தா, மிக அழகாக…அழுத்தமாக சொல்லிருக்கீங்க!

    உங்களுடைய பல பதிவுகள் என்னுடைய எண்ணங்களை பிரதிபலிப்பதாக இருக்கிறது.//

    நன்றிகள் பல குசும்பன் & தென்றல்.

    ஸ்ரீதர் சீக்கிரம் பதில் சொல்லுகிறேன் அதுவரை வெய்ட்டீஸ்……..

  7. Fast Bowler says:

    நேர்த்தியாக எழுதப்பட்டுள்ள கட்டுரை. உங்களுடைய கருத்துக்களுடன் ஒத்துப்போகிறேன் ICL பற்றியதை தவிர.

  8. //கங்குலி நல்ல திறமையுள்ள வீரர்தான். ஆனால் இப்பொழுது அவருடைய வயது மற்றும் fitness அவருக்கு சாதகமாக இல்லை.//

    ஸ்ரீதர் பொத்தாம் பொதுவாக வயது ஃபிட்னஸ் என்று சொல்லாதீர்கள். ஃபிட்னஸின் காரணமாக கங்குலி கடந்த வருடத்தில் எத்தனை மேட்சுகளில் விளையாடாமல் இருந்திருக்கிறார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.
    //அவர் தலைம்யேற்றிருந்த பொழுது இந்திய அணிக்கு ஏறுமுகம். அதற்கு அவரை மட்டும் காரணமாக சொல்ல முடியாது.//

    அவர் தலைமையேற்றிருந்த போது இந்திய அணிக்கு ஏறுமுகமா?? யாருங்க சொன்னது. புதிய வீரர்களை கொண்டு வர முயற்சி செயதது கிரேக் சேப்பல்தான் என்று பலரும் இங்கே சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இதற்கான முயற்சிகள் கங்குலி கேப்டனாய் இருக்கும் போதே பரவலாக ஆரம்பிக்கப் பட்டு விட்டது.

    //அப்பொழுது கங்குலியை டெண்டுல்கர்தான் வளர்த்தெடுத்தார் என்று சொல்ல முடியுமா? அவர் தலைம்யேற்றிருந்த பொழுது இந்திய அணிக்கு ஏறுமுகம். அதற்கு அவரை மட்டும் காரணமாக சொல்ல முடியாது.//

    NEO Sports சேனல்ல பார்த்தீங்கனா, எப்ப பார்த்தாலும் பழைய இந்திய மேட்சுகளையேதான் போட்டுக்கிட்டு இருப்பாங்க. அதுல கங்குலி கேப்டனாய் இருந்த கால கட்டங்களில் பார்த்தீங்கனா தெரியும். யார் யாரையோ எல்லாம் வெச்சு விளையாடி வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார். என்னால் தினமும் இது போன்ற ஒரு மேட்சையாவது அதில் பார்க்க முடிகின்றது.

    //அவரே டொரோந்தோவில் நடந்த சஹாரா கப்பில்தான் பிரகாசித்தார்.//

    ஏங்க அதற்கு முன்பே இங்கிலாந்தில் அடித்த சதங்கள் மறந்து விட்டதா உங்களுக்கு. சஹாராவில் அவர் தான் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் என்று நீரூபித்தார். அந்த சீரீஸில் அவரைத் தவிர வேறு எவருமே விளையாட வில்லை. ”ஒன் மேன் ஷோ” என்ற வார்த்தை மிக நிச்சயமாய் அந்த சீரிஸில் அவருக்குப் பொருந்தும்.

    //கவாஸ்கரையோ, ரவி சாஸ்திரியையோ குற்றம் கூறுவதை விட, நல்ல திறமையானவர்களை தங்கள் பக்கம் வரும்படி செய்ய முடியாத / விரும்பாத கிரிக்கெட் வாரியத்தை பற்றி சொல்லுங்கள். அது நியாயம். ஒரு ESPN நிறுவனமோ, 9 Channel நிறுவனமோ அளிக்ககூடிய பணம் மற்றும் மரியாதையில் சிறிதளவேனும் இந்திய கிரிக்கெட் வாரியம் செய்யத் தயாராயிருந்தால் நிச்சயம் மற்றவர்களின் பங்களிப்பை பெற முடியும்.//

    நானும் அதைத்தான் சொல்கிறேன். இதில் முதல் குற்றவாளி BCCI தான். அவர்கள் அடையும் லாபத்திற்கு ESPN தருவதற்கு மேலேயே கொடுக்கலாம். ஆனால் கொடுப்பதில்லை என்பதுதானே பிரச்சினை. இவ்வளவு ஏன் இந்திய அணிக்கு ஒரு ஃபீல்டிங் கோச் வேண்டுமென்று முடிபவெடுத்து ராபின் சிங்கை நியமித்ததே சில மாதங்களுக்கு முன்புதானே. இதை எல்லாம் மற்ற அணிகள் எப்போதே செய்ய ஆரம்பித்து விட்டனவே…. இதற்கு எல்லாம் BCCI பொறுப்பெடுத்துக் கொள்ளாதா????

    //ICL என்பது கபில்தேவ் மட்டும் நடத்துவது அல்ல. Zee டிவியின் ஒரு வணிக முயற்சிதான் அது. 20-20 கிரிக்கெட்டின் வீச்சை கணக்கு பண்ணி தொடங்கப் பட்டதுதான் அது. நீங்கள் சொன்னீர்களே ‘காசுக்கு மிச்சம் வைக்காமல் கூவுவது’ அதைப் போலதான் இங்கும். கபில்தேவ் அதன் சேர்மனாக பணியாற்றுகிறார். அதனால் அவர் அதன் சார்பாக பேசினார். இப்பொழுது இந்தியகிரிக்கெட் வாரியம் IPL என்றொரு லீக் முறையை கொண்டு வந்து விட்டது. இரண்டுக்கும் ஒன்றும் பெரிதாக் வித்தியாசம்ம் இல்லை. கபில்தேவ் என்னவெல்லாம் சொன்னாரோ அதையெல்லாம் BCCI-யே செய்வதாக சொல்லிவிட்டது. அவர்தான் பாவம் NCA-தலைவர் பொறுப்பிலிருந்து விலக்கபட்டார். தற்பொழுது ரவி சாஸ்திரிதான் அதன் தலைவர்.//

    இது உங்களுக்கு சர்வாதிகாரமாகவே பட வில்லையா ஸ்ரீதர். இத்தனை வருடங்கள் கழித்தும் கபில்தேவ்வும், zee யும் முயற்சி செய்து நாங்கள் இதை செய்யவிருக்கிறோ என்று கூறிய பின்புதானே BCCI ஞானோதயம் பெற்று நாங்களே செய்யறோம் என்று சொல்லியது. ஏன் இந்த புத்தி அவர்களுக்கு முன்பு எங்கே போயிற்று?

    அட இது கபில்தேவ்வின் வணிக முயற்சியாகவே இருக்கட்டும்பா. ICL ல விளையாடினா அவங்க நல்ல ப்ளேயராவே இருந்தாலும் எடுத்துக்க மாட்டோம்பா என்று BCCI சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

    //அது சரி! அவர்கள் எல்லாரும் கிரிக்கெட் வாரியத்தோடு காண்ட்ராக்ட் போட்டு விளையாடும் ப்ரொபஷனல்ஸ். கங்குலியோ, டிராவிடோ இப்பொழுது தேர்வாகததால் பண இழப்பு எதுவும் இல்லை. பீலே, பெக்கர், பிராட்மென், சோபர்ஸ், நம்ம கவாஸ்கர் எல்லாருக்கும் ஏற்பட்ட நிலைமதான். அவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் தங்கள் ப்ரொபஷனல் வாழ்க்கையை நன்றாகத்தான் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.//

    மன்னிக்கவும்…. கிரிக்கெட் வாழ்க்கையை வெறுமனே பணத்திற்கான ஈடாக மட்டுமே நீங்கள் பார்க்கிறீர்கள். இதற்கு என்ன சொல்வதென்று தெரிய வில்லை. அதை ஒரு அங்கீகாரமாகவோ, கனவாகவோ நீங்கள் பார்க்காமல் இருக்கும் வரை நான் சொல்வதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள் என்று எனக்குத் தெரிய வில்லை.

    //இந்த வீரர்கள் விளையாடும்பொழுது அவர்கள் என்னவெல்லாம் சம்பாதிக்கிறார்கள் என்று பொருமுவதும், அவர்கள் தேர்வு செய்யப் படவில்லையென்றால், அய்யோ அவர்கள் பாவம், எல்லோரும் மறந்துவிடப் போகிறார்கள் என்று அனுதாபப் படுவதும்… இரண்டுமே தேவையில்லைதான்.//

    அப்போ என்ன பண்ணலாம். எது நடந்தாலும் அப்படியே மண்ணு மாதிரி இருந்துட்டுப் போயிடலாமா?? என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் குறித்தான எனது பார்வைகளை அதே வேகத்துடன், தார்மீகக் கோபத்துடன் பதிவு செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அது தேவை இல்லை என்பதை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது.

    இன்னும் இது மாதிரி பல விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம் ஸ்ரீதர். இப்போதைக்கு இது போது. தேவைப் பட்டால் பின்னாடி சொல்கிறேன்.

  9. நந்தா,
    காரமான அதே நேரத்தில் நிதானமான அலசல். பெரும்பாலும் உங்கள் கருத்துகளுடன் ஒத்துப் போகிறேன்,
    ஒன்றைத் தவிர ! ICL-ம் வணிக (லாப) நோக்குடன் தொடங்கப்பட்ட ஒரு அமைப்பு தான், அவர்களும்
    கிரிக்கெட்டை வைத்து காசு பார்க்க விரும்பினாலும், திமிர் பிடித்த, உருப்படாத BCCI-யின் monopoly-யை
    உடைப்பதும், இளைஞர்களை ஊக்குவிப்பதும் ICL-ன் நோக்கமாகத் தெரிவதால், அவர்களை நிச்சயம்
    ஆதரிக்க வேண்டும் !!!

    எனது “பாகம் இரண்டை” வாசித்தீர்களா?

    http://balaji_ammu.blogspot.com/2008/01/416-2.html

    எ.அ.பாலா

  10. Krishna says:

    Right post at the right time. Sorry for writing in English.

  11. நன்றி பாலா, ஃபாஸ்ட் பவுலர், கிருஷ்ணா…

    ICL ஐப் பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். இதை நான் கபில்தேவ் எனும் கிரிக்கெட் வீரரின் கனவு என்று சாயம் பூச வர வில்லை. அது வணிக நோக்காகவே இருந்தாலும் BCCI எப்போழுதோ செய்திருக்க வேண்டிய முயற்சியை அடையாளம் காட்டிய ஒன்று அது. அது மட்டுமின்றி வெகு நிச்சயம் BCCI யின் மோனோபாலிக்கு இது போன்ற ஒன்றுதான் வெகு நிச்சயம் சவால் விடக் கூடியதாய் அமையும்.

  12. Fast Bowler says:

    BCCI-ன் monopoly-க்கு சாவு மணி அடித்ததை தவிர ICL சாதித்ததும் சாதிக்க போவதும் வெகு குறைவே. மாறாக வளர்ந்து வரும் இளம் வீரர்கள் யாரும் ICL-உடன் இணைந்து ஆடுவதை விரும்ப மாட்டார்கள். அப்படி இணைந்தால் இந்திய அணிக்காக அவர்கள் விளையாடுவது கனவாக மட்டுமே அவர்களுக்கு இருக்கும். BCCI-ன் அராஜகம் அப்படி. அதனால், மூத்த வீரர்களையும் வெளிநாட்டு வீரர்களையும் மட்டுமே வைத்துக் கொண்டு ICL நீண்ட நாட்களுக்கு தாக்கு பிடிக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.

    மேலும், BCCI-ன் கொட்டத்தை அடக்க வேண்டுமானால் அரசு தலைப்பட வேண்டும்.

  13. Fast Bowler says:

    BCCI-ன் monoploly-க்கு சாவு மணி என்பதை விட தற்காலிக நடுக்கம் தந்துள்ளது என்பதே சரியாக இருக்கும்.

  14. //மாறாக வளர்ந்து வரும் இளம் வீரர்கள் யாரும் ICL-உடன் இணைந்து ஆடுவதை விரும்ப மாட்டார்கள். அப்படி இணைந்தால் இந்திய அணிக்காக அவர்கள் விளையாடுவது கனவாக மட்டுமே அவர்களுக்கு இருக்கும். BCCI-ன் அராஜகம் அப்படி.//

    இதுதான் எனக்கு உச்சகட்ட அநியாயமாய் தோன்றுகிறது ஃபாஸ்ட் பவுலர்….

    இந்திய கிரிக்கெட் அணிக்கான Representatives என்பது போய் ஏதோ சர்வாதிகார கார்ப்பரேட் கம்பெனியைப் போல நடந்து கொள்கிறது…. இது என்னை ரொம்பவே கொதிப்படைய வைத்த விஷயம்….

  15. Sridhar Narayanan says:

    நந்தா,

    பின்னூட்டம் வெளியிட்டமைக்கும், உங்களின் பதில்களுக்கும் மிக்க நன்றி.

    //அதே வேகத்துடன், தார்மீகக் கோபத்துடன் பதிவு செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்//

    நன்றாக செய்யுங்கள். இன்னொரு பக்கம் இருப்பதை எடுத்து சொல்லும் ஒரு சின்ன முயற்சிதான் எனது பின்னூட்டம். என்னுடைய வாதங்களில் தவறேதும் இருந்தால் தயவுசெய்து பொறுத்து கொள்ளவும்.

    ————————————–

    //அப்படி இணைந்தால் இந்திய அணிக்காக அவர்கள் விளையாடுவது கனவாக மட்டுமே அவர்களுக்கு இருக்கும். BCCI-ன் அராஜகம் அப்படி

    இதுதான் எனக்கு உச்சகட்ட அநியாயமாய் தோன்றுகிறது ஃபாஸ்ட் பவுலர்….//

    BCCI-ன் மோனோபோலி என்று நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான். ஏற்கெனவே சொன்னது மாதிரி அவர்கள் ஒரு அரசு சார்ந்த நிறுவனம் அல்ல. இந்திய கிரிக்கெட் அணி என்று சொல்வதை விட BCCI-XI என்று சொல்வது technically correct. அவர்கள் வணிக நோக்கோடுதான் வாரியத்தை நடத்துகிறார்கள்.

    நீங்களே யோசித்து பாருங்கள்.. ICL-க்கும், IPL-க்கும் என்ன வித்தியாசம்? நோக்கம், செயல்பாடுகள் எல்லாம் அதேதானே. என்ன லாபத்தை Zee TV எடுத்து கொள்வதா BCCI எடுத்து கொள்வதா என்பதில்தானே பிரச்னை? இன்னும் சிறிது தீர்க்கமாக பார்க்கலாம்..

    //இத்தனை வருடங்கள் கழித்தும் கபில்தேவ்வும், zee யும் முயற்சி செய்து நாங்கள் இதை செய்யவிருக்கிறோ என்று கூறிய பின்புதானே BCCI ஞானோதயம் பெற்று நாங்களே செய்யறோம் என்று சொல்லியது.//

    நீங்கள் இன்னும் ICL என்பது என்னவோ ஒரு noble initiative மாதிரி நினைத்து கொண்டிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. 20-20 போட்டிகளின் வெற்றியை மனதில் கொண்டு தொடங்கபட்டது. வேறு என்ன போட்டிகளை நடத்துகிறது ICL? எனக்கு தெரிந்து அவர்கள் வேறு எந்த போட்டியையும் நடத்துவதில்லை.

    BCCI 2007 T20 உலக கோப்பை வரை அந்த பார்மேட்டின் வணிக சாத்தியங்கள் மேல நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. உலக கோப்பையை வென்றவுடன் அந்த கொண்டாட்டங்களினால் அவர்கள் விழித்து கொண்டு IPL தொடங்கியிருக்கிறார்கள்.

    இது ஏர்டெல் மற்றும் வோடபோன் நடத்தும் போட்டி வணிக உத்திகளை ஒத்ததுதான்.

    //ICL ல விளையாடினா அவங்க நல்ல ப்ளேயராவே இருந்தாலும் எடுத்துக்க மாட்டோம்பா என்று BCCI சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.
    //

    நீங்கள் லோக்கல் லீக் மேட்சுகள் ஆடியிருக்கிறீர்களா என்று தெரியவில்லை. நானும் ஆடியதில்லை. ஆனால் கவனித்து இருக்கிறேன். அங்கே பற்ப்பல லெவல்கள் உண்டு. A லீக், B லீக், C லீக்… அதாவது புதிதாக தம் திறமையை நிரூபிக்க வேண்டி வருபவர்கள் முதலில் C லெவலில் ஆடுவார்கள். நல்ல பெர்பார்மண்ஸ் இருந்தால் B லெவல் அடுத்து A லெவல் இப்படி தொடர்வார்கள்.

    நான் எங்கள் கல்லூரியில் அருமையாக ஆடினேன். சதமடித்தேன் என்றெல்லாம் கணக்கில் எடுத்து கொள்ள மாட்டார்கள். இந்த லீகில் என்ன ஆடினாய? எத்தனை விக்கெட்கள் எடுத்தாய் என்பதை வைத்துதான் ஒரு வீரரை அந்தந்த டீம் தேர்வு செய்யும்.

    ICL நடத்தும் போட்டிகளுக்கு ICC-ன் அங்கீகாரம் கிடையாது. அதனால் அந்த மேட்சுகளுக்கான புள்ளி விவரங்கள் BCCI கணக்கில் எடுத்து கொள்ள மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். சரி. ICL-ல காண்டிராக்ட் போட்டாலே தவறு என்று சொல்கிறார்களே எனறால்…. BCCI-ன் சார்பாக ரஞ்சி, துலிப் போன்ற தேசிய அளவு லீக் நடக்கின்றன. ICL தரும் பணத்திற்க்காக (நீங்கள்தானே ‘கொடுத்த காசுக்கு மிஞ்சி கூவுகிறார்’ என்று சொன்னீர்கள். இங்கே வீரர்கள் ICL போவதும் காசுக்குத்தானே தவிர வேறு என்ன காரணம்?) புதிய வீரர்கள் எல்லாம் அங்கே சென்று விட்டால் யார் லோக்கல் லீகில் விளையாடுவது? BCCI எப்படி தனது அணியை தேர்வு செய்வது? போட்டிகளுக்கு தயார் செய்வது?

    உணர்ச்சி வசப்பட்டு திட்டாமல், நடைமுறை சாத்தியங்களை யோசித்து பாருங்களேன்? IPL என்று தனியாக தொடங்காமல் ICL லீக்கையே இவர்கள் அங்கீகரிக்கலாம். ஆனால் அப்படி கட்டாயம் எதுவும் இல்லையே…

    —————————————-

    கங்குலியின் தேர்வு பற்றி…

    பிட்னெஸ் என்று நான் குறிப்பிடுவது போட்டிகளில் பங்கேற்பது மட்டுமல்ல. பீல்டிங் மற்றும் ஓட்டங்களில் காட்டும் அலெர்ட்னஸ், திறனும் கூட. வயதாக ஆக ஆக ஒரு போட்டி விளையாடி முடித்து அடுத்த போட்டிக்கு தயாராவது சற்று சிரமம்தான். இதை நான் சொல்லவில்லை. சச்சின் டெண்டுல்கர் சொல்லியிருக்கிறார். கங்குலி பல மேட்ச்களில் பீல்டிங்க் போது களத்தில் இல்லாமல் இருந்திருக்கிறார். கிரிக்கெட்டின் தன்மை மாறிக் கொண்டே வருகிறது இப்பொழுது. ‘அவர் ஹூக் ஷாட்டில் கில்லாடி… ‘ என்று தனிப்பட்ட திறமையை மட்டும் போற்றாமல், மேட்ச் ஜெயிப்பதற்கான பங்களிப்பு என்ற வகையில், பீல்டிங், 1 ரன்னை 2 ரன்னாக மாற்றுவது போன்ற பல திறமைகளையும் கவனத்தில் எடுத்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் கங்குலியின் பங்களிப்பு நிறைய குறைவுதான்.

    //அவர் தலைமையேற்றிருந்த போது இந்திய அணிக்கு ஏறுமுகமா?? யாருங்க சொன்னது. புதிய வீரர்களை கொண்டு வர முயற்சி செயதது கிரேக் சேப்பல்தான் என்று பலரும் இங்கே சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இதற்கான முயற்சிகள் கங்குலி கேப்டனாய் இருக்கும் போதே பரவலாக ஆரம்பிக்கப் பட்டு விட்டது.
    //

    ஏறுமுகம் என்று சொன்னது, அவர் அதிக வெற்றிகளை பெற்று தந்த கேப்டன் என்ற முறையில்.

    அப்பொழுது நன்றாக (அல்லது சுமாராக) விளையாடிக் கொண்டிருந்த அசாருதீன், மஞ்சிரேக்கர் (அல்லது வேறு யாரோ) வீரர்களை தவிர்த்து புதிய வீரர்களை கங்குலியும், தேர்வு குழுவினரும் கொண்டு வந்தது ஒரு சாதனை என்றால், தற்பொழுது மட்டும் தோனியையும், வெங்க்சர்காரையும் திட்டுவது ஏனோ?

    நான் சொல்ல வந்தது என்னவென்றால், ஒரு கேப்டனாக அவர் நிறைய வெற்றிகளை பெற்றிருக்கிறார். அதற்காக பாராட்டுங்கள். ஆனால், அது ஒரு கூட்டு முயற்சி. இளையவர்களை வளர்த்தெடுத்தார் என்றெல்லாம் சொன்னால், அதை எப்படி சொல்கிறார்கள், ஏன் சொல்கிறார்கள் என்றுதான் புரியவில்லை.

    சேப்பலின் முயற்சிகள் வெளிப்படையானவை. எல்லாரும் அதை விமர்சித்து விட்டார்கள். ஒரு முறை நடிகர் சுனில் ஷெட்டியின் விமர்ச்னம் கூட படித்தேன். அந்த மாதிரி கங்குலி தனிப்பட்ட முறையில் புதிய வீரர்களுக்காக என்ன செய்தார் என்பது தெரியவில்லை.

    அவர் ஒரு தொலைநோக்காளராக தெரியவில்லை. பல விஷயங்களில் கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்ட மாதிரிதான் பட்டது. ஸ்டீவ் வாக்-உடன் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அவரை டாஸ் போட காத்திருந்த வைத்தது , அல்லது ப்ளின்டாப்-ஐ போல் சட்டையை கழற்றி வெற்றியை கொண்டாடியது போன்றவைகளையோ சொல்லலாம். தன்னை ஒரு aggressive captain-ஆக காட்டிக் கொள்ள முயற்சித்தார். அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றார். ஆனால் அவர் பேட்டிகள் மற்றும் இதர செய்கைகள் அந்த அளவிற்க்கு தெரியவில்லை.

    //அதை ஒரு அங்கீகாரமாகவோ, கனவாகவோ நீங்கள் பார்க்காமல் இருக்கும் வரை//

    இது ஒரு பிரச்னைதான். யுவராஜ் சிங்கிற்க்கும் கனவுதான். பத்ரிக்கும் கனவுதான். கங்குலிக்கும் கனவுதான். யாருடைய கனவுகளுக்கு சாத்தியம் அதிகம் இருக்கிறதோ அவர்களின் கனவு பலிக்கிறது.

    இங்கு நான் குறிப்பிட நினத்தது இந்த காண்டிராக்ட் முறை வீரர்களுக்கு இப்பொழுது சாதகமாக இருப்பதை பற்றி. கபில்தேவ், ஷ்ரிகாந்த் காலத்தில் காண்டிராக்ட் முறை கிடையாது. விளையாடினால்தான் பைசா. இப்பொழுது அப்படி இல்லை.

    அது மட்டுமல்ல – 80-களில் நடந்த ஷார்ஜா பந்தயத்தில் ஜாவேத் மியாந்ததின் கடைசி பந்து சிக்சரை யாரும் மறந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அந்த பந்தை வீசியவர் ஹரியானாவை சேர்ந்த சேத்தன் சர்மா. பிறகு அவர் ந்யுசிலாந்து அணிக்கு எதிராக எல்லாம் ஹாட்ட்ரிக் செய்து, இங்கிலாந்துக்கு எதிராக சதமடித்து பல சாதனைகள் செய்தாலும் அவர் அவ்வளவாக சோபிக்கவில்லை. T20 உலக கோப்பையில் சோனி டிவியில் அவர் ஒரு expert commentator. மிக நன்றாகவே பேசினார். சொல்ல வருவது என்னவென்றால் இப்பொழுது வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. கவாஸ்கர், கபில்தேவ், ரவி சாஸ்திரி, சஞ்சய் மஞ்சிரேகர் போன்றோர் தங்கள் கேரியரை நன்றாகவே extend செய்து கொண்டுள்ளார்கள்.

    தற்போதைய இணைய உலகில் யாரும் யாரையும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.

    மீண்டும் ஒரு நன்றி.

  16. ஸ்ரீதர் நிறைய்ய சொல்லி இருக்கிறீர்கள். சீக்கிரம் பதில் சொல்ல முயற்சிக்கிறேன். கொஞ்சம் ஆணியும் இருக்கிறது. :(

  17. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க! ஒவ்வொரு பாயிண்டுமே தனிப்பதிவு அளவு பேசப்பட வேண்டிய விஷயம். ஆனா ரொம்ப ஒருபக்க வாதமா போச்சு. ஸ்ரீதர் வேற நிறையா எழுதி இருக்காரு. பின்னூட்டங்கள் எல்லாம் முழுசாப் படிச்சு முடிக்கலை.

    ஆனா பாஸ்ட் பௌலர் சொல்வது போல் அரசு தலையீடு மட்டும் வேண்டவே வேண்டாம். அம்புட்டுதான்.

    அப்புறம் நான் பொத்தாம் பொதுவா பிசிசிஐக்கு ஆமாம் போட வரலை. எங்க எல்லாம் பணம் இருக்கோ அங்க எல்லாம் பாலிடிக்ஸ் இருக்கத்தான் போகுது. நான் சொல்ல வந்தது எல்லாம் நம் தேர்வாளர்கள் முன்னாடி ரெண்டு அணுகுமுறைகள் இருந்தது

    1) சில சீனியர்களை வைத்துக் கொண்டு சில இளைஞர்களைக் கொண்டு வந்து ஒரு அணியை உருவாக்குவது
    2) அதிகமாக இளைஞர்களைக் கொண்டு வருவது

    அவர்கள் இரண்டாவது வழிமுறையைத் தேர்ந்தெடுத்து இருக்கின்றனர். அதற்கு சில காரண காரியங்கள் இருப்பதாகப் பட்டது. அதனால் அது ஒன்றும் பெரும் தவறில்லை. அதற்காக அவர்களை முட்டாள்கள் எனத் திட்டி, கொடும்பாவி எரித்து, ரயில் மறியல் போராட்டம் எல்லாம் செய்ய வேண்டாம் எனச் சொல்லி இருக்கிறேன். என்னளவில் கங்குலி மட்டுமில்லை. திராவிட்டையும் கூட அணியில் வைத்து சுழற்சி முறையில் பலரையும் ஆட வைக்க வேண்டும் என்பதான் நல்லது. ஆனால் வேறு அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்த தேர்வாளர்கள் ஒன்றும் முட்டாள்தனமான முடிவை எடுக்கவில்லை என்பதே என் வாதம்.

    மற்ற பிரச்சனைகளான, ஐசிஎல் / ஐபிஎல், கவாஸ்கர் /ரவி சாஸ்திரி/ கபில் நிலைபாடுகள் பற்றி பேச இப்பொழுது எனக்கு நேரமில்லை என்பதால் சாய்ஸில் விடுகிறேன்.

  18. ஸ்ரீதர் ஆரோக்கியமான விவாதத்திற்கு முதலில் ஒரு பெரிய்ய நன்றி.

    முதலில் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். ICL ஒன்றுதான் இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களை வளர்த்தெடுக்கச் சிறந்த கனவு நிறுவன அமைப்பு என்று நான் சொல்ல வில்லை. அதே போல் இதில் ஈடுபடுபவ்ர்கள் எல்லாரும் வணிக நோக்கு முற்றிலும் இல்லாத தியாகிகள் என்றும் நான் ஏமாறும் ஆள் இல்லை.

    ICL போட்டிகள் நடைபெற மைதானங்கள் அளிக்கக் கூடாது என்று மிரட்டுவதை ஒரு சீப்பான மூன்றாந்தர வில்லனின் நடவடிக்கையாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது.

    //BCCI-ன் மோனோபோலி என்று நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான். ஏற்கெனவே சொன்னது மாதிரி அவர்கள் ஒரு அரசு சார்ந்த நிறுவனம் அல்ல. இந்திய கிரிக்கெட் அணி என்று சொல்வதை விட BCCI-XI என்று சொல்வது technically correct. அவர்கள் வணிக நோக்கோடுதான் வாரியத்தை நடத்துகிறார்கள்.//

    நீங்களே சொல்கிறீர்கள் ஸ்ரீதர். BCCI நடந்து கொள்வது மோனோபாலி முறையில்தான் என்று. ஆனால் அதில் நடக்கும் தவறுகளைச் சுட்டிக் காட்டினால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்றும் சொல்கிறீர்கள். cricinfo, NDTV, Sidhu, Jadeja உள்ளிட்டோர் சுட்டிக்காட்டுயே ஒன்றையும் மதிக்காத BCCI இங்கே தமிழ் வலைப் பதிவுகளில் நாம் அடித்துக் கொள்வதால் மட்டும் திருந்திவிடவா போகிறது என்று நாம் நினைக்க ஆரம்பித்து விட்டால் அபபுறம் BCCI பற்றி மட்டுமல்ல, அரசியல் அமைப்புகள், அரசாங்க அமைப்புகள் உள்ளிட்ட எவர் செய்யும் எந்த தவறுகளைப் பற்றியுமே நாம் பேசாமல், கதை, கவிதை என்ற அளவில் நம் வட்டத்தைக் குறுக்கிக் கொண்டு எழுதப் பழ்கிக் கொள்வது மட்டுமே தீர்வாய் அமையும். ஆனால் இப்படி எழுதுவதன் குறைந்த பட்சப் பயன்பாடாய் இந்த விஷயங்களை, தவறுகளை இன்னும் ஒரு நாலு பேருக்கு கொண்டு போய்ச் சேர்ப்பதைக் கூட சொல்லித் திருப்திப் பட்டுக் கொள்ளலாம்.

    //வேறு என்ன போட்டிகளை நடத்துகிறது ICL? எனக்கு தெரிந்து அவர்கள் வேறு எந்த போட்டியையும் நடத்துவதில்லை.//

    இந்த லிங்கைப் பாருங்கள். http://content-ind.cricinfo.com/icl/content/story/325950.html
    என்னைப் பொறுத்த வரை வெகு நிச்சயம் இது போன்ற ஒரு சில போட்டிகள் வீரர்கள் தம்மை வளர்த்தெடுத்துக் கொள்ள உதவும். மறுபடி சொல்கிறேன். இது வணிக நோக்கில்லா முயறசி என்று நான் நிறுவ முயல வில்லை.

    எனக்குத் தெரிந்து சேலஞ்சர் கோப்பையை பிரபலப் படுத்தியதைத் தவிர BCCI உருப்படியாக வேறு எதையும் செய்ய வில்லை. இந்திய அணிக்கு வெளிநாட்டு கோச்தான் வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய ஸ்ட்ரேட்டஜியையும் நம்மால் தெரிந்துக் கொள்ள முடியும் என்று காலம் காலமாய் சொல்ல வந்து கொண்டிருக்கும் BCCI இது போன்று சர்வதேச வெளிநாட்டு வீரர்களுடன் சேர்ந்து ஆடுவது வெகு நிச்சயமாய் நம் இளம் வீரர்களுக்கு பயனளிக்கும் என்று இது போன்று செய்ய முன் வராதது ஏன்.

    //ICL நடத்தும் போட்டிகளுக்கு ICC-ன் அங்கீகாரம் கிடையாது. அதனால் அந்த மேட்சுகளுக்கான புள்ளி விவரங்கள் BCCI கணக்கில் எடுத்து கொள்ள மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். //

    My god…ஸ்ரீதர் மற்ற விஷயங்களில் இவ்வளவு தெளிவாய் இருக்கும் நீங்கள் இதை மட்டும் புரிந்துக் கொள்ள மறுப்பது ஏன்? லாரா உள்ளிட்ட சர்வதேச விளையாட்டு வீரர்கள் இருந்தும் இதை ICC அங்கீகரிக்க மறுப்பதற்கு காரணம் உங்களுக்கு தெரியாதா? இவை அனைத்துமே BCCI யின் குறுக்கீடுகள் இல்லாமல்தான் நடந்தன என்று நீங்கள் நம்புகிறீர்களா????

    //IPL என்று தனியாக தொடங்காமல் ICL லீக்கையே இவர்கள் அங்கீகரிக்கலாம். ஆனால் அப்படி கட்டாயம் எதுவும் இல்லையே… //

    There you are…. Here By the time, we the Millions of people are taking Cricket as one of the main part in our life and acting like that, They the worthless BCCI playing it as their EGO and HOBBY.

    ICL என்ற ஒன்று தொடங்கப்படாமல் இருக்குமானால், சத்தியமாக இன்னும் பத்து வருசம் ஆகியிருந்தாலும் கூட BCCI, IPL என்ற ஒன்றைத் தொடங்கி இருக்காது. நானும் செய்ய மாட்டேன். மற்றவர்கள் செய்ய வந்தாலும் அதை எனது ஈகோவாகப் பார்ப்பேன் என்பதை உச்சகட்ட திமிராகத்தான் பார்க்க முடிகிறது.

    ————————————

    //அப்பொழுது நன்றாக (அல்லது சுமாராக) விளையாடிக் கொண்டிருந்த அசாருதீன், மஞ்சிரேக்கர் (அல்லது வேறு யாரோ) வீரர்களை தவிர்த்து புதிய வீரர்களை கங்குலியும், தேர்வு குழுவினரும் கொண்டு வந்தது ஒரு சாதனை என்றால், தற்பொழுது மட்டும் தோனியையும், வெங்க்சர்காரையும் திட்டுவது ஏனோ?//

    இதுக்கு முன்னாடி எத்தனை ப்ளேயருங்க 10000 ரன்களைத் தாண்டி இருக்கிறார்கள். அதே போல் கங்குலி உள்ளே வந்ததும் ஏதோ ஏற்கனவே இருக்கிற அசாருதீன், மஞ்சுரேகரை எல்லம் காலி செய்து விட்டுத்தான் என்று நீங்கள் சொல்கிறீர்களா???
    எனக்குத் தெரிந்து எல்லாருமே சுழற்சி முறையில் வந்தவர்கள்தான். 1992 லேயே அறிமுகமாகி விட்டு மீண்டும் கழட்டி விடப்பட்டு 1996ல் மீண்டும் தன் திறமையைக் காட்டி தேர்வு செய்யப்பட்டு வந்தவர்தான் கங்குலி. மஞ்சுரேகர் போன்றவர்கள் எல்லாம் தானாக வெளியேறியவர்கள். இப்படி கழட்டி விடப்பட்டவர்கள் அல்ல. அதுவுமில்லாமல் மஞ்சுரேகர் டிராவிட்டைப் போன்ற சிறந்த தடுப்பாட்டக்காரராய் இருந்தாலும் அவரது மொத்த ரன்களே 1994 தான். ஒரே ஒரு செஞ்சுரி மட்டுமே அடித்தவர். (அவ்ர் நல்ல ஆட்டக்காரர் என்று நான் நிறுவ வர வில்லை). இருவருடைய பர்ஃபார்மென்ஸையும் ஒரே அளவில் வைத்து பார்ப்பது தவறு என்று சொல்ல வருகிறேன்.

    //ஸ்டீவ் வாக்-உடன் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அவரை டாஸ் போட காத்திருந்த வைத்தது , அல்லது ப்ளின்டாப்-ஐ போல் சட்டையை கழற்றி வெற்றியை கொண்டாடியது போன்றவைகளையோ சொல்லலாம். தன்னை ஒரு aggressive captain-ஆக காட்டிக் கொள்ள முயற்சித்தார். //

    வெல் ஸ்ரீதர் ஒரே செயல் பார்ப்பவர் ஒவ்வொருவருக்கும் எப்படிப்பட்ட எண்ணங்களைத் தோற்றுவிக்கிறது என்பதை வைத்தே தனியாக ஒரு பதிவு போட வேண்டும் என்று ரொம்ப நாளாய் யோசித்து வருகிறேன். இந்த வார்த்தைகள் அதை இன்னும் பலப் படுத்தி இருக்கின்றன. அவர் அக்ரெசிவ் கேப்டனாக விளங்கினாரா, அல்லது காட்டிக் கொள்ள முயற்சித்தாரா என்பதை அவரவர் மன நிலையைப் பொறுத்தது. அதை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மாற்ற முடியாது.

    //இப்பொழுது வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. கவாஸ்கர், கபில்தேவ், ரவி சாஸ்திரி, சஞ்சய் மஞ்சிரேகர் போன்றோர் தங்கள் கேரியரை நன்றாகவே extend செய்து கொண்டுள்ளார்கள். //

    நானும் திடீரென்று கங்குலியை இப்படி நிராதரவாக விட்டு விட்டால் அவர் எங்கே போவார் என்ற ரீதியில் கேட்க வில்லை. எனக்கும் தெரியும். அவருக்கு பிழைக்க 1008 வழிகள் இருக்கின்றன என்று. யாருக்குத் தெரியும்? அவருக்கு பெங்கால்ல இருக்கிற செல்வாக்குக்கு மினிஸ்டரா கூட வந்து நிக்கலாம். :)

    அது மேட்டரு இல்லைங்க. சுழற்சி முறையை உபயோகிக்காமல் இத்தனை வருடம் விளையாடிய வீரரை அசிங்கப் படுத்துவது தவறுதான். அதே மாதிரி ஏற்கனவே ஆஸ்திரேலியாவில ஸ்டீவ் வாகுக்கு நடக்கலையா என்று கேட்டீர்கள். ஏன் சவுத் ஆஃப்ரிகாவில் க்ளூஸ்னரும், போலக்கும் கூடத்தான் அவமானப் ப்டுத்தப் பட்டார்கள். ஜிம்பாப்வே அணியிலும், மேற்கிந்தியத் தீவுகள் அணியிலும் நடக்காத பிரச்சினைகளா? ஒரு தவறுக்கு இன்னொரு தவறை உதாரணம் காட்டுவது தீர்வாகாது ஸ்ரீதர்.

    நிறைய்ய டைப் பண்ண வெச்சிருக்கீங்க. கொலை வெறியில இருக்கேன் உங்க மேல. :)

  19. Fast Bowler says:

    //ஆனா பாஸ்ட் பௌலர் சொல்வது போல் அரசு தலையீடு மட்டும் வேண்டவே வேண்டாம். அம்புட்டுதான். //

    இ.கொ., சொல்வது ஒருவகையில் சரியே. அரசு தலைப்பட்டால் இதைவிட மோசமான நிலைக்கு கூட தள்ளப்படலாம். ஆனால், நான் அரசு தலையிட வேண்டும் என்று சொல்வதற்கு காரணம், தலையில் குட்ட ஆளில்லாத நாட்டாமையாக பி.சி.சி.ஐ செயல்படுவதை சிறிதளவாவது மட்டுப்படுத்தவே.

    //திராவிட்டையும் கூட அணியில் வைத்து சுழற்சி முறையில் பலரையும் ஆட வைக்க வேண்டும் என்பதான் நல்லது//

    இது ஒரு தொலைநோக்குள்ள தீர்வாக அமைந்திருக்கும்.

    //ஆனால் வேறு அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்த தேர்வாளர்கள் ஒன்றும் முட்டாள்தனமான முடிவை எடுக்கவில்லை என்பதே என் வாதம்.//

    இதில் தான் இ.கொ.வும் மற்றவர்களும் வேறுபடுகிறோம். :)

  20. Sridhar Narayanan says:

    //நிறைய்ய டைப் பண்ண வெச்சிருக்கீங்க. கொலை வெறியில இருக்கேன் உங்க மேல. //

    :-) விட்டா ஆட்டோ அனுப்பிச்சிடுவீங்க போல.

    மிக்க நன்றி பின்னூட்டம் வெளியிட்டமைக்கும், தொடர்ச்சியான பதில்களுக்கும். இரண்டு பேரும் இரண்டு வெவ்வேறு புள்ளியில் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிகிறது. உங்களின் ஆதங்கம் / கோபம் எனக்கு புரிகிறது. ஆனால் கொஞ்சம் ரேஷனலாக சிந்தித்து பார்த்தால் வேறு சில கோணங்கள் கிடைக்கலாம்.

    இருக்கட்டும் அப்படியே! வேறு சமயம் கிடைத்தால் இன்னும் தெளிவாக உரையாடலாம் :-)

    நன்றிகள் பல!

  21. இங்க விவாதம் சூப்பரா, analytical-ஆ நடப்பது கண்டு சந்தோஷமே :)

    என்ன, கிரிக்கெட் மேட்டர்னா நம்ம பதிவு பக்கம் ஆஜராகும் ஸ்ரீதர் இந்த தடவை ஆளையே
    காணோம் ;-)

  22. ******************
    //ஆனால் வேறு அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்த தேர்வாளர்கள் ஒன்றும் முட்டாள்தனமான முடிவை எடுக்கவில்லை என்பதே என் வாதம்.//

    இதில் தான் இ.கொ.வும் மற்றவர்களும் வேறுபடுகிறோம்.
    ***********************
    And that is the fundamental issue ;-)

  23. Sridhar Narayanan says:

    //ஆனால் கொஞ்சம் ரேஷனலாக சிந்தித்து பார்த்தால் வேறு சில கோணங்கள் கிடைக்கலாம்.
    //

    மேலே சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட கூடிய சாத்தியம் இருப்பதினால் இந்த பின்னூட்டம். நான் சொல்ல வந்தது – இருவரும் வெவ்வேறு தளத்தில் சிந்திப்பதால் ஒரே அலைவரிசையில் ஒத்துப் போக வாய்ப்புகள் கம்மி. தவறாக எண்ண வேண்டாம். :-)

  24. //மிக்க நன்றி பின்னூட்டம் வெளியிட்டமைக்கும், தொடர்ச்சியான பதில்களுக்கும். இரண்டு பேரும் இரண்டு வெவ்வேறு புள்ளியில் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிகிறது. உங்களின் ஆதங்கம் / கோபம் எனக்கு புரிகிறது. ஆனால் கொஞ்சம் ரேஷனலாக சிந்தித்து பார்த்தால் வேறு சில கோணங்கள் கிடைக்கலாம்.

    இருக்கட்டும் அப்படியே! வேறு சமயம் கிடைத்தால் இன்னும் தெளிவாக உரையாடலாம் :-) //

    புரிகிறது…. கண்டிப்பாக.

    //நன்றிகள் பல!//

    யானும் அவ்வண்ணமே கோரும்…………

  25. //இதில் தான் இ.கொ.வும் மற்றவர்களும் வேறுபடுகிறோம்.
    ***********************
    And that is the fundamental issue ;-) //

    நான் சொல்ல வருபவதும் இதுவேதான்.

  26. Sridhar Narayanan says:

    //என்ன, கிரிக்கெட் மேட்டர்னா நம்ம பதிவு பக்கம் ஆஜராகும் ஸ்ரீதர் இந்த தடவை ஆளையே
    காணோம் //

    படித்தேன் பாலா. அங்க பதில் போடுறதுக்கு முன்னாடி இ.கொ. பதிவோட வந்திட்டார். அப்படியே எல்லாரோட கருத்துகளும் படிச்சிட்டு பொழுது போக்கிட்டு இருந்தேன்.

    நந்தா இங்க நிறைய கருத்துகளோட ICL பத்தி எழுதினதால இந்த பக்கம் பின்னூட்டம் போடலாம்னு.. அது பெருசா போய் அவர் இப்ப கொலைவெறியோட சுத்திகிட்டிருக்கார். கொஞ்ச நாள் underground போயிடனம்னும் போல :-) )))

  27. //ஆனால் எது நடந்தாலும் ஒன்றை மாற்ற முடியாது. மரணத்தை விட பெரிய தண்டனை எது தெரியுமா? மறக்கப்படுதலும், நிராகரிக்கப் படுதலும் தான்.

    நேற்று கபில் தேவ். இன்று கங்குலி மற்றும் டிராவிட். நாளை அது சச்சினாகவோ, யுவராஜாகவோ, ஏன் தோனியாகக் கூட இருக்கலாம்.//

    சச்சின் தற்போதே, ஆஸ்தேரிலியாவில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் வெற்றிக்கு காரணமாக இருக்கும் பொழுதே நிராகரிக்கப்படுகிறார்.

    சச்சின் மட்டும் அந்த இரு இறுது ஆட்டங்களிலும் ஆட வில்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்பது தான் (அவர் ஆட்டமிழந்த பின்னர் ) தெரிந்ததே

Leave a Reply