nav-left cat-right
cat-right

சேலம் ரயில்வே கோட்டம் – வறட்டு ஜம்பமா???

கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன்பே முதன் முதலில் பெரியாரால் குரல் கொடுக்கப்பட்ட சேலம் ரயில்வே கோட்டம் இன்று நனவாகியிருக்கிறது. இந்த ரயில்வே கோட்டத்தை தொடங்குவது குறித்து இந்தியா முழுதும் பல்வேறு இடங்களிலிருந்து பல்வேறு வகையான கருத்துக்கள் எழும்பியுள்ளது.

இது வெறுமனே அரசியல் ஸ்டண்டுப்பா. எப்படிப் பார்த்தாலும் பாலக்கோடு ரயில்வே கோட்டம், சதர்ன் ரயில்வேயின் தலைமையிடமான, சென்னைக்குக் கீழேதான் வரப் போகிறது. ரயில்வே கோட்டங்களுக்கும், மாநில எல்லைகளுக்கு சம்பந்தம் இல்லை. அப்படியிருக்க இவ்வளவு ஆர்ப்பாட்டமாக சேலம் கோட்டத்தை துவக்குவது என்பது வெறுமனே வோட்டு அரசியல்தான் என்ற குரல், சேலம் கோட்டம் துவக்குவதால் ஏற்படும் சந்தோஷ, ஆரவாரக் கூச்சலுக்கு இணையாக பதிவாகி இருக்கிறது. இந்தப் பிரச்சினையில் மார்க்சிஸ்டுகளின் நிலைப்பாடு பல்வேறு விதமாக கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கிறது.

இதன் பின்னே நிலவுகின்ற அரசியல் நிலவரங்களை தமிழ்நாட்டின் சார்பாக பதிவு செய்யும் நிலையில் நாம் இருக்கிறோம்.

இந்தியாவைப் பொறுத்தவரை கொங்கன் ரயில்வேயைத் தவிர்த்து மொத்தம் 16 பிரிவுகள்(Zones) உள்ளன. அவற்றில் மிக முக்கியமான ஒன்று சென்னையை தலைநகரமாகக் கொண்டு இயங்கிவரும் சதர்ன் ரயில்வே. இது தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி மற்றும் ஆந்திரா, கர்நாடகத்தின் சிறு பகுதிகளை தனது போக்குவரத்து எல்லையாகக் கொண்டுள்ளது.

சதர்ன் ரயில்வேயைப் பொறுத்த வரை இதற்கு முன்பு ஐந்து கோட்டங்கள் இருந்தன. பாலக்கோடு, திருவனந்தபுரம், மதுரை, திருச்சி மற்றும் சென்னை ஆகியவைதான் அவை. இவற்றுள் பாலக்கோடு கோட்டம் கிலோமீட்டர்கள் அளவில் மற்ற கோட்டங்கள் அளவே இருந்தாலும், மிக முக்கிய வணிக நகரங்களான சேலம்,திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகியவற்றின் மூலம் மற்ற கோட்டங்களை விட அதிகமான வருவாயைத் தரும் ஒரு கோட்டமாகவே இருந்து வந்திருக்கிறது.

இப்போது புதிதாய் திருத்தியமைக்கப்பட்ட அளவுகளின் படி, சேலம் கோட்ட எல்லையாக

  • ஊட்டி-கோவை வடக்கு ஜங்ஷன் (79 கி.மீ),
  • கோவை வடக்கு-ஈரோடு-சேலம்-ஜோலார்பேட்டை (277 கி.மீ),
  • இருகூர்-போத்தனூர்-கோவை ஜங்ஷன் (19 கி.மீ),
  • சேலம்-கரூர் (85 கி.மீ),
  • கரூர்-திண்டுக்கல் (74 கி.மீ),
  • சேலம்-விருத்தாசலம் (135 கி.மீ),
  • சேலம்-மேட்டூர் (37 கி.மீ),
  • ஈரோடு-திருச்சி (137 கி.மீ) மொத்தம் 862 கி.மீட்டர்கள் சேலம் கோட்ட எல்லையாக வரையறுக்கப் பட்டிருக்கிறது.

இந்தக் கோட்டம் உருவாவதற்கு பல ஆண்டுகள் நாம் போராட வேண்டி இருந்தது. பல்வேறு வகையான அச்சுறுத்தல்களைச் சந்திக்க வேண்டி இருந்தது. அரசியல் நாகரீகத்தில், தமிழகத்திற்கு கொஞ்சமும் சளைக்காத கேரளாவில் கூட பாரபட்சமின்றி அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து இதை எதிர்த்து முட்டுக்கட்டை போட்டன. ஆனால் தமிழகத்தில் எங்கே இந்தத் திட்டம் நமது ஆட்சிக்காலத்தில் நடக்கா விட்டால் முழுப் பெயரும் திமுகவிற்கு போய் விடுமோ என்ற பயத்தை அதிமுக தலைமையிடம் காண முடிந்தது.

கடந்த சில வருடங்களாகத்தான் மத்திய அரசிடம் தமிழக மாநில அரசு மிகுந்த செல்வாக்கு உடைய ஒன்றாகவும், சண்டயிட்டோ, போராடியோ தமது உரிமைகளை பெறும் வலிமை மிகுந்த ஒன்றாகவும் இருந்துக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் மத்திய அரசுக்கும், தமிழ்நாட்டுக்கும் ஏழாம் பொருத்தம்தான் என்பது எல்லாரும் அறிந்ததே.1997லேயே சேலம்மைசூர் ப்ராட்கேஜ் திட்டத்தின் போது அப்போதைய அமைச்சர் ராமவிலாஸ் பாஸ்வானிடமும், பிரதமர் தேவேகவுடாவிடமும், இதற்கான கோரிக்கை பலமாய் வைக்கப் பட்டது. ஆனால் இத்திட்டம் இருவராலும் சுத்தமாகக் கண்டுக் கொள்ளப் படவே இல்லை. தேவகவுடா இதை நிராகரித்ததற்கு இயல்பாய் இருந்த தமிழக வெறுப்புணர்வுதான் காரணம் என்று சொல்லப்பட்டது.

பின்பு ஏ.கே.மூர்த்தி இணை அமைச்சராய் இருந்த காலகட்டத்திலும் கூட இத்திட்டம் நிறைவேறா பகற்கனவாகவே இருந்தது. அரசியல் வட்டாரங்களில் இதற்கு நிதீஷ்குமாரின் முட்டுக்கட்டைகளே காரணம் என்று சொல்லப் பட்டது. பின்பு லாலு பிரசாத் ரயில்வே அமைச்சரான பின்பு இவருடைய காலத்தில் நிறைவேற்றினால்தான் உண்டு என்று பல்வேறு தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்டது.

கலைஞருக்கு மத்திய அரசிடமும், லாலுவிடமும் இருந்த செல்வாக்கை பயன்படுத்தி இதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. லாலு முதன் முறையாக இது குறித்தான தீர்மானத்தை பாராளுமன்றத்தில் கொணர்ந்த போது கூட கேரள எம்.பிக்களிடமிருந்து அதிக அளவில் எதிர்ப்புகள் இல்லை. ஆனால் இது குறித்தான வேலைகளைத் தொடங்கிய பின்பே கேரளாவிலுள்ள அனைத்துக் கட்சியிடமிருந்தும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது.

ஜூலை 31, 2007 ல் சேலம் ரயில்வே கோட்டம் திறப்பது உறுதி என மத்திய அமைச்சர் லாலு உறுதியளித்தார்

ஆகஸ்ட் 19, 2007 ல் சேலம் ரயில் கோட்டத்தின் எல்லைகள் குறித்து தமிழக, கேரள முதல்வர்களுடன் பேசிய பிறகே இறுதி செய்யப்படும் என ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியதாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.சேலம் ரயில் கோட்டம் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கு கேரளாவிலிருந்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து கேரளாவிலிருந்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.இருந்தாலும் நாடாளுமன்றத்தில் தனது மாநில எம்.பிக்கள் மூலம் ரகளை செய்து பார்த்தது. மேலும், ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்தையும், புதிய கோட்டத்தைத் தொடங்கக் கூடாது என நிர்ப்பந்தித்து, நெருக்கடி கொடுத்தது.இந்த நிலையில், புதிய கோட்டத்தின் எல்லைகள் தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று லாலு கூறியதாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் புதிதாக ஒரு தகவலை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தினார்.

இது குறித்து கேரள அரசு வெளியிட்ட அறிக்கையில், சேலம் ரயில் கோட்டத்தை தொடங்குவது குறித்து கேரள அரசுடன் முறையாக கலந்து ஆலோசிக்கவில்லை என்று லாலு பிரசாத் யாதவுக்கு முதல்வர் அச்சுதானந்தன் போன் மூலம் அதிருப்தியை தெரிவித்ததாகவும்,

அதற்குப் பதிலளித்த லாலு பிரசாத் யாதவ், சேலம் கோட்டத்தின் எல்லைகள் குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தமிழக மற்றும் கேரள முதல்வர்களுடன் பேசிய பிறகே அதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று லாலு கூறியதாக அந்த அறிக்கையில் சொல்லப்பட்டது.கேரள அரசின் இந்த புதிய தகவல், சேலம் ரயில் கோட்டம் தொடர்பான குழப்பத்தை மேலும் அதிகரித்தது

ஆகஸ்ட் 23, 2007 ல் கேரளாவைக் கண்டித்து வருகிற ஆகஸ்ட் 25ம் தேதி முதல் கேரள ரயில் மறியல் போராட்டம், விடிய விடிய நடத்தப்படும் என வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அதிரடியாக அறிவித்தார்.திடீரென்று இரு மாநில முதல்வர்களுடன் பேசிய பிறகே சேலம் கோட்டம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் வெளியிட்ட அறிவிப்பு தமிழகத் தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய. லாலுவுக்கும், வேலுவுக்கும் இடையே இதுதொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.இந்த நிலையில் திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், வேளாண்துறை அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம், சேலம் கோட்ட விவகாரம் தொடர்பாக நேரடியாக களம் இறங்கினார் (அல்லது இறக்கி விடப்பட்டார்).

திட்டமிட்டபடி செப்டம்பர் 14ம் தேதி சேலம் கோட்டம் தொடங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் வருகிற 25ம் தேதி முதல் கேரளாவைச் சேர்ந்த ஒரு ரயிலையும் சேலம் வழியாக இயக்க அனுமதிக்க மாட்டோம் என்று அதிரடியாக அறிவித்தார்.

அப்போது வித்தியாச வித்தியாசமான அறிக்கைகளால் திமுகவை சங்கடத்திற்குள்ளாக்கி வந்த பா..கவிற்கு செக் வைப்பதற்காகவே, வீரபாண்டியாரை களமிறக்கியதாக சொல்லப்பட்டது. இந்தப் பிரச்சினையை இப்படி சமாளித்ததன் மூலம் தான் ஒரு சிறந்த ராஜ தந்திரி என்பதை மீண்டும் ஒரு முறை கலைஞர் நீருபித்துள்ளார் என்று பத்திரிக்கைகள் செய்திகளிட்டது.

ஆகஸ்ட் 25, 2007 ல் சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் தலைமையிலும், கோவையில் பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலும், நெல்லையிலும், ஓணம் பண்டிகைக்காக பல்வேறு இடங்களிலிருந்து கேரளாவிற்கு பயணிகள் சென்றுக் கொண்டிருந்த அந்த சமயத்தில் காலை 4 மணி முதல் ரயில் மறியல் போராட்டம் தீவிரமாக நடத்தப்பட்டது. திருப்பூர், கோவை, சேலம், நெல்லை என கேரள ரயில்கள் செல்லும் ஊர்களில் ஆயிரக்கணக்கானோர் ரயில்களை மறித்து கேரளாவை ஸ்தம்பிக்க வைத்தனர். இதனால், கேரளாவுக்கும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கான ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நிலைமை விபரீமாவதை உணர்ந்த மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அவசரம் அவசரமாக முதல்வர் கருணாநிதியை போனில் தொடர்பு கொண்டு, சேலத்தில் திட்டமிட்டபடி ரயில் கோட்டம் அமையும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். போராட்டத்தை வாபஸ் பெறுமாறு அறிவுறுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டதனடிப்படையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

நடுவே கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தொழிலதிபர்களிடமிருந்து பிரதமருக்கும், லாலுவுக்கும் ஃபாக்ஸ், -மெயில் மூலம் சேலம் கோட்டத்தை ஆதரித்து கோரிக்கைகள் குவிந்த வண்ணம் இருந்தது.

பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தோழர் கோவை.இராமகிருட்டிணன் அவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக மக்களை அரசியல் இயக்கங்களை, திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

இந்த தீவிரம்தான் இன்று சேலம் கோட்டம் திறப்பிற்கு பெரிய்ய முனைப்பாய் இருந்திருக்கிறது. பேருந்துப் பிரயாணத்தின் போது புலப்படாத ஒன்று தொடர் வண்டிப்பிரயாணத்தின் போது நன்றாகவே புலப்படும். . ஏறக்குறைய சோலையார்ப்பேட்டையில் இருந்தே மலையாள மணம் கமழத் தொடங்கி விடும். ஜோலார்ப்பேடையிலிருந்து திருப்பத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழக எல்லைகளுக்குட்பட்ட, மிக அதிக வருவாயை ஈட்டித் தரக்கூடிய பகுதிகள் கேரளாவின் முன்னேற்றத்திற்கு வருமானம் ஈட்டித் தரக்கூடியதாய் மாறிப் போனது.

கேரளாவிலுள்ள சின்ன சின்ன ரயில் சந்திப்புகள் கூட பலத்த வசதிகளுடனும், கவனிப்புடனும் இருக்கும் போது, தமிழகத்திலுள்ள சில சந்திப்புகளில் அடிப்படை வசதிகள் கூட சரியாக நிறைவேற்றப்படாமல் இருந்தது. பேண்டரி கார்னரிலிருந்து, அங்குள்ள புக் ஸ்டால் உள்ளிட்ட பல இடங்கள் கேரளர்களுக்கென்று மறைமுகமாய் எழுதப்பட்டிருந்தது.

ஜோலார்பேட்டையை சுற்றியுள்ள சந்திப்புகளில் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் அடிக்கடி விபத்துக்குள்ளானதை பாலக்கோடு கோட்ட அதிகாரிகள் கண்டுகொள்ள வில்லை என்று குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

தமிழக சிறு வியாபரிகள் சரக்குகள் உள்ளிட்ட பண மற்றும் வழக்கு விஷயங்களிற்கு கேரளா செல்ல வேண்டி இருந்தது. முன்பு அவ்வளவாய் வசதி செய்யப்படாத காலத்தில் கூட்டமாக ஒரு 50 பேருக்கு மேல் கல்லூரி மாணவர்கள் Students Concession உடன் டூர் செல்ல பாலக்கோடு வரை சென்று விண்ணப்பப் படிவங்கள் வாங்கி வர வேண்டி இருந்தது.

கோவை வரை போய் வந்துக் கொண்டிருந்த பல தொடர் வண்டிகள் எளிதாக எர்ணாகுளம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டன. அதில் மிக முக்கியமானது பேங்களூர்கோவை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ். இந்த காரணத்துக்காக கோவை எக்ஸ்பிரஸ் சமீப காலமாக தாமதமாகவே வந்துக் கொண்டிருக்கிறது.

இது யாவற்றையும் விட முக்கியமான ஒன்று இருந்தது.தென் மாநிலங்களில் கேரளம் ஒன்றில்தான் எந்த ரயில்வே தலைமையிடம் எதுவும் கிடையாது. ஆகையால் பாலக்கோட்டையோ அல்லது கேரளாவின் ஏதேனும் ஒரு பகுதியையோ தலைமையிடமாகக் கொண்டு தனியாக இன்னொரு பிரிவு (Zone) உருவாக்கப்பட வேண்டும் என்று மறைவாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அது மட்டும் இதற்கு முன்பு நடந்திருந்தால் தமிழகத்தின் முக்கியப் பகுதிகள் மற்றும் அவற்றின் வருமானம் முழுக்க முழுக்க கேரளாவின் வசம் போயிருந்திருக்கும். சேலம் கோட்டம் பகற் கனவாகவே போயிருந்திருக்கும்.

ஆனால் இப்போதும் நாம் முன்னேற வேண்டியது இன்னும் நிறைய்ய இருக்கிறது. சேலம் கோட்டத்தில்தான் மிக அதிக தொலைவிற்கு மீட்டர் கேஜ் ட்ராக்குகளாகவே உள்ளன. இவற்றை ப்ராட் கேஜாக மாற்ற வேண்டிய பொறுப்பு, தானியங்கி சிக்னல்கள், எல்லா சந்திப்புகளுக்கும் சரியான நடைபாதை வசதி, ஸ்டேதன் வசதிகள் என்று சேலம் கோட்டம் இன்னும் பிரயாணிக்க வேண்டிய தூரம் நிறைய்ய இருக்கிறது.

ஆனால் எது எப்படியோ, சேலம் கோட்டம் கலைஞரின் அரசியல் வாழ்க்கையில் மற்றுமொரு மைல்கல்தான்.

14 Responses to “சேலம் ரயில்வே கோட்டம் – வறட்டு ஜம்பமா???”

  1. Sathya says:

    Hello,

    You have said all of the past happenings.

    But where are the arguments (may be in past/future) to support the title of this entry???…Varattu Jambam…

    You mean to say even though we got this (Salem divison) done, there is no use for Tamil Nadu?

    Sathya

  2. முத்துக்குமார் says:

    நானும் தலைப்பு படித்து சேலம் கோட்டத்திற்கு ஏதேனும் பாதிப்போ என்று பதைத்துப்போய் பதிவை படிக்கவந்தேன். நல்லவேளை அப்படியெதுவுமில்லை. தலைப்பு விஷயத்தில் சற்று கவனமாக இரு(ஈர்)க்கவும்.

    இது வெறும் ஆரம்பம் மட்டுமே. தமிழகம் மிக ஒற்றுமையாக இருப்பது மிக மிக அவசியம். இல்லையேல் தமிழக அரசியலில் நிலவும் நோய் மனப்பான்மையை சாதகமாக பயன்படுத்தி நம் தலையிலேயே மிளகாய் அரைக்கவும் நேரலாம்.

    முன்னும் இனியும் இல்லாத அளவிற்கு மத்தியில் நாம் செல்வாக்கோடு திக்ழ்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையிலேயே நம்மால் இதை நாம் கேட்ட முழுமையோடு நிறைவேற்ற இயலவில்லை. நாம் கேட்ட பொள்ளாச்சி நமக்கு கிடைக்கவில்லை என்பதை கவனித்தால் நான் சொல்வதில் உள்ள உண்மை புரியும்.

    நம்மைவிட குறைந்த எண்ணிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களைக்கொண்ட அவர்களாலேயே இவ்வளவு நெருக்கடிகளும் இடையூறுகளும் கொடுத்து, தாமதப்படுத்த முடியுமானால் நாம் எந்தளவு ஒற்றுமையில்லாது இருக்கிறோம் என்பதில் சற்று அவமானகரமாகவே இருக்கிறது.

    அன்புடன்
    முத்துக்குமார்

  3. நல்ல தகவல்களுடன் ஒரு கட்டுரை. தொழிற்சங்க பிரச்சினை பாலக்காடு கோட்டத்தில் அதிகம் என்று முன்னர் அடிக்கடி கேள்விப்பட்டுள்ளேன். உண்மையா என்று தெரியவில்லை

  4. இல்லை சத்யா, முத்துக்குமார் தவறாகப் புரிந்துக் கொண்டீர்கள் என்று நினைக்கிறேன். அல்லது நான் சரியாக எடுத்துச் சொல்லாமல் விட்டிருக்கலாம்.

    “சேலம் ரயில்வே கோட்டம் – வறட்டு ஜம்பமா???” என்ற கேள்விக்கு விடைதேடிதான் இந்த பதிவே. மற்ற படி சூடான இடுகைகளில் இடம் பெற வேண்டும் என்று வேண்டுமென்றே கவர்ச்சியான தலைப்புகளை வைப்பதை நான் எப்போதுமே விரும்பியதில்லை.

    இந்த சேலம் கோட்டத்திற்காக நடந்த அரசியல் விளையாட்டுகளையும், போராட்டங்களையும் எடுத்துச் சொல்லும் ஒரு முயற்சி.

    இதற்கான போராட்டத்தின் பல்வேறு சமயங்களில் மார்க்சிஸ்ட் கட்சியினர், ஜெயலலிதா, அச்சுதானந்தன் உள்ளிட்ட பலர் அளித்த அறிக்கைகள் இது ஏதோ சர்வ சாதாரணமாக தமிழ்நாட்டிற்குக் கிடைத்த ஒன்று என்பது போல இருந்திருக்கிறது.

    ஜெயலலிதா வீரபாண்டியாரை உடனே கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்றெல்லாம் கொதித்தெழுந்து அறிக்கை விட்டார். அச்சுதானந்தன் ஒரு சமயத்தில் திருப்பூர், கோவைத் தவிர்த்த சேலம் கோட்டம் உருவாவது கேரளமக்களின் போராட்டம். இது தமிழக மக்களின் போராட்டம் அல்ல என்றெல்லாம் அறிக்கை விட்டார்.

    தமிழ்நாட்டில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன. சேலம் கோட்டம் அந்தளவிற்கு முக்கியமான பிரச்சினை அல்ல என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்தனர்.

    சதர்ன் ரயில்வேயின் ஜெனரல் மேனேஜராய் இருந்த தாமஸ் வர்கீஸ் தானும் ஒரு கேரளத்தவராய் இருந்ததாலோ என்னவோ, தன்னால் முடிந்த அளவு இதற்கான முட்டுக் கட்டைகள் போட்டார்.இதையெல்லாம் தாண்டித்தான் இன்று சேலம் கோட்டம் உருவாகி இருக்கின்றது. இத்தனைப் போராட்டங்களயும் தாண்டித்தான் இது நடைபெற்றுள்ளது.

    இதற்காக நிச்சயம் நாம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம். இத்தனை ஆர்ப்பாட்டம் வேண்டாம் என்று எவர் சொன்னாலும் நாம் பொருட்படுத்தத் தேவையில்லை என்ற அர்த்தத்தில்தான் நான் சொன்னேன்.

    அப்புறம் இப்போதைய நிலையில் வெகு நிச்சயமாய் சேலம் கோட்டத்தால் வருவாயும் பயன்களும் முன்பை விட அதிகமே. முக்கியமாய் தேவையான தொடர் வண்டிகளைத் தவிர மற்றவை எர்ணாகுளம் வரை நீட்டிப்பு செய்யப்பட மாட்டாது. இதன் வருவாயை வைத்து சேலம் கோட்டம் முடிக்க வேண்டிய பணிகள் நிறைய்ய இருக்கின்றன என்பதும் முக்கியமான ஒன்றுதான்.

  5. முத்துக்குமார் says:

    நந்தா, துரித பதிலுக்கு நன்றி. தங்களின் recap நன்றாக இருக்கிறது. இந்த நேரத்தில் இப்படிப்பட்ட மீள்பார்வை நமது அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் மிக மிக அவசியம்; அப்போதுதான் நாம் இது கிடைக்க எவ்வளவு பாடுபட்டிருக்கிறோம், தேவையேயின்றி எந்தளவு நம் சக்தி போராட்டங்களில் விரயமாக்கப்பட்டிருக்கிறது என்பது புலனாகும்.

    இதில் மிக பலமான முட்டுக்கட்டை திரு.எம்.கே.நாராயணன் மூலமாகவும் போடப்பட்டதாக படித்தேன். தெளிவான ஆதாடமில்லையெனினும், வெறும் வதந்தி என்று புறங்கையால் ஒதுக்கித்தள்ள இயலாதுதானே ?

    இதுபோன்ற விஷயங்களில் ஜெ. சொல்வதையெல்லாம் புறக்கணித்தலே நமக்கு நலம் பயக்கும்.

    “எங்கள் பகுதிகளை எங்கள் நிர்வாகத்திற்கு உட்படுத்தி நாங்களே நிர்வகிக்க வேண்டும் என்று விரும்புவது எந்த விதத்தில் தவறு ? இதற்கு நீங்கள் ஏன் தடைபோடவேண்டும் ? உங்கள் பகுதியை நாங்கள் நிர்வகிக்க வேண்டுமென்றா கேட்டோம் ? அப்படி கேட்டால்தான் விட்டுவிடுவீர்களா ? உங்களுக்கு அதனால் வருவாய் இழப்பெனில் அதை ஈடுகட்ட மாற்று வழிகளை ஆராய்வதே உங்களுக்கு உகந்ததேயன்றி எங்கள் மாநில பகுதிகளை அநியாயமாக நீங்களே ஆண்டுகொண்டிருக்கவேண்டும்; அதில் வரும் வருவாயில் எங்கள் மாநிலத்துக்குட்பட்ட பகுதிகளுக்கு செலவழிக்க மாட்டோம் என்று நீங்கள் துடிப்பது எந்தவிதத்திலும் நியாயமான நேர்மையான செயல் அல்ல”

    என்றும்

    “சேலம் கோட்டத்தை உருவாக்குதல் கேரள மக்களின் போராட்டமெனில் கேரள மக்கள் தமிழக உரிமையை உண்ர்ந்து குரல் கொடுப்பதால் அவர்களுக்கு தமிழகம் சார்பில் நன்றிகள் பல. ஆனால் மக்கள் எங்கள் சார்பில் போராடும்போது அரசு சார்பில் ஏன் எதிர்க்கிறீர்கள் ? அப்படியாடின் உங்கள் அரசு உங்கள் மக்களுக்கே எதிரானதா ?”

    என்றும் அச்சுதானந்தன்-களிடம் கேட்டிருக்கவேண்டும் நம்மாட்கள். ம்ம்ம்ம் ….

    அன்புடன்
    முத்துக்குமார்

  6. நிறைய தகவல்களுடன் கூடிய நல்ல பதிவு. நன்றி..!

  7. //நந்தா, துரித பதிலுக்கு நன்றி. தங்களின் recap நன்றாக இருக்கிறது. இந்த நேரத்தில் இப்படிப்பட்ட மீள்பார்வை நமது அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் மிக மிக அவசியம்; அப்போதுதான் நாம் இது கிடைக்க எவ்வளவு பாடுபட்டிருக்கிறோம், தேவையேயின்றி எந்தளவு நம் சக்தி போராட்டங்களில் விரயமாக்கப்பட்டிருக்கிறது என்பது புலனாகும்.//

    புரிதலுக்கு நன்றி முத்துக்குமார்.

    நீங்கள் கேட்டிருப்பது அனைத்தும் வெகு நியாயமான கேள்விகளே. நேற்று இரவு ஏசியானெட் உள்ளிட்ட பல மலையாள தொலைக்காட்சிகளில் பல்ர் இது குறித்து சொத்தை விவாதங்களை அடுக்கிக் கொண்டிருந்தனர்.

    எனக்கு மலையாளம் தெரியாது. என் வீட்டிலேயே இருந்த ஒரு கேரளா நண்பனை வைத்து மொழி பெயர்ப்பு செய்ய வைத்து, செய்ய வைத்து பல விஷயங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டியதாய் இருந்தது.

  8. நந்தா,

    நல்ல ஒரு தலைப்பு. பல கோணங்களிலிருந்தும் அலசி, போதுமான தகவல்களைத் திரட்டியிருக்கிறீர்கள்.

    முத்துக்குமார் சொன்னதையே நானும் வழிமொழிகிறேன்.

    ‘ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு!’ – அவ்வளவே.

    வாழ்த்துக்கள்.

    தோழமையுடன்,
    இராகவன் என்ற சரவணன் மு.

  9. J K says:

    நல்ல பதிவு…

    நல்ல பல கருத்துக்களை திரட்டியுள்ளீர்கள்.

    நன்றி…

  10. நந்தா நிறைய விஷயம் சேகரித்து எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    //ஆனால் எது எப்படியோ, சேலம் கோட்டம் கலைஞரின் அரசியல் வாழ்க்கையில் மற்றுமொரு மைல்கல்தான்.//

    :)

  11. நல்ல நடை, ஒட்டுமொத்த தகவல்கள் என்று இந்தப்பதிவை ஒரு தலைசிறந்த எழுத்தாளரைப் போல செம்மையாக எழிதியுள்ளீர்கள். இதுபோன்ற பதிவுகளை தொடர்ந்து காலதாமதமானாலும் பரவாயில்லை எழுதுங்கள். நன்றி.

  12. ராகவன், கே.கே, மோகன்தாஸ், ஊற்று கருத்துக்களுக்கு நன்றி.

  13. Naresh Kumar says:

    //நல்ல நடை, ஒட்டுமொத்த தகவல்கள் என்று இந்தப்பதிவை ஒரு தலைசிறந்த எழுத்தாளரைப் போல செம்மையாக எழிதியுள்ளீர்கள். இதுபோன்ற பதிவுகளை தொடர்ந்து காலதாமதமானாலும் பரவாயில்லை எழுதுங்கள். நன்றி//

    இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணகளம் ஆக்கிடுறாங்கப்பா

    (சும்மா ஒரு காமெடிக்காக, தப்பா எடுத்துக்காதீங்க ஊற்று!)

Leave a Reply