மனது கனத்துப் போய் கிடந்தது. சென்னையிலிருந்து கிளம்பிய போது இருந்த உற்சாகமும், ஆர்வமும் சுத்தமாய் காணாமல் போய் இருந்தது.என்னென்னவோ எதிர்பார்ப்புகளுடன் கிளம்பி வந்திருந்தேன். அவளிடம் என்னென்னவோ கேட்க வேண்டும். இடைப் பட்ட இந்த மூன்று வருடங்களில் நடந்த பல விஷயங்களை சொல்ல வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு கிளம்பினேன். ஆனால் மனம் இப்போது பொம்மையைத் தொலைத்த குழந்தையைப் போல சோர்ந்துப் போய்க் கிடந்தது.
இத்தனைக்கும் அவள் சந்தோஷமாய்த்தான் இருக்கிறாள். இங்க பார்த்தியா அவரு என் பிறந்த நாளுக்கு வாங்கிக் கொடுத்தது என்று ஒரு சிகப்புப் புடவையைக் காட்டி சிரித்துக் கொண்டுதான் இருக்கிறாள். ஒரு வேளை நான்தான் தேவை இல்லாமல் மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்கிறேனோ? தப்பு தப்பாய் நான்தான் கற்பனை பண்ணிக் கொள்கிறேனோ?
சார் டிக்கெட். கண்டக்டரின் குரல் என்னை அவர் பக்கம் திருப்பியது.
சென்னை ஒண்ணு கொடுங்க.
சில்லறை பரிமாற்றங்களுக்குப் பின் மீண்டும் இருக்கையில் சாய்ந்து கொண்டேன். தூக்கம் வர மறுத்தது. ஜன்னலின் வழியே தெரிந்த பெயர் தெரியாத மரங்களோடு என் நினைவுகளும் பின்னோக்கிப் போனது.
கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் நானும் அவளும் மிக நெருங்கிய நண்பர்கள். ஒரு சிலர் எங்களை காதல்ர்கள் என்றும், ஒரு சிலர் நாங்கள் கடலை போடுகிறோம் என்றும், வெகு குறைவான சிலர் மட்டும் எங்களை நண்பர்கள் என்றும் சொல்லுவார்கள். ஆனால் நாங்கள் இதைப் பொருட் படுத்தியதில்லை.
ஒரு சிலரைப் பார்த்த உடன் நமக்கு ரொம்பப் பிடித்துப் போய் விடும். எவ்வளவு யோசித்தாலும் அதற்கான காரணமும் நம்மால் கண்டு பிடிக்க முடியாது.அப்படி எந்த வித காரணங்களும் இல்லாமலே எனக்கு அவளையும், அவளுக்கு என்னையும் பிடித்துப் போனது.
கல்லூரியில் படித்த அந்த நான்கு வருடங்களில், அவள் என்னை ரொம்பவுமே ஆச்சர்யப் படுத்தினாள். சர்வ சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும் போதே பல தகவல்களை சொல்லிவிட்டுச் செல்வாள்.
வருடங்களையும், நாட்களையும் அவள் எப்படி மறக்காமல் வைத்திருக்கிறாள் என்று இன்று வரை யோசித்துக் கொண்டிருப்பேன். இன்னிக்கு என்ன நாள் தெரியுமா. ஏப்ரல் 30. ஏறக்குறைய பதினாறு வருடம் வியட்நாமில் நடை பெற்ற அந்த கோரமான போர் முடிவுக்கு வந்த நாள் இன்று என்பாள்.
அப்படி அவள் எனக்குள் ஏற்படுத்திய பிரமிப்புகள் ஏராளம். அவள் என்னிடம் “ஏதாவது சாதிக்கணும்டா. நானும் பொறந்தேன், வாழ்ந்தேன்னு இல்லாம, நம்ம பேரை சொல்ற மாதிரி ஏதாவது சாதிக்கணும்டா” என்று அடிக்கடி சொல்லுவாள். சும்மா ஒரு லட்சியமுமே இலாமல் சுற்றிக் கொண்டிருந்த என்னை யோசிக்க வைத்தவள் அவள்தான்.
நான் ஓரளவு கவிதை எழுதுவேன். 10 கவிதைகள் எழுதினால், 2 சூப்பரா இருக்கும். 4 சுமாராதான் இருக்கும். 4 மோசமா இருக்கும். முகத்திற்கு நேராக என் பல கவிதைகளை குப்பை மாதிரி இருக்கு என்று சொல்லி இருக்கிறாள்.
நான் முகம் வாடுவதைப் பார்த்து, கோவிச்சுக்காதடா, உண்மையிலேயே எனக்கு அப்படித்தான் தோணுது. நான் சொல்றதையே தாங்கிக்க முடியலைன்னா, வேற யாராவது சொன்னா எப்படி தாங்கிப்ப. வெறுமனே எண்ணிக்கைகளுக்காக கவிதை எழுதறதை நிறுத்து முதல்ல, என்று என் தலையில் குட்டி சொல்லிக் கொடுத்தவள் அவள்தான்.
அந்த நான்கு வருடங்களில், பல்வேறு சமயங்களில் எங்களுடைய விருப்பு வெறுப்புகளை, கனவுகளை பகிர்ந்துக் கொண்டிருக்கிறோம். ஏதோ ஒரு காரணத்திற்காக, அவளைத் தவறாய் ஒருவன் பேசியதை என்னிடம் சொல்லி வாய் விட்டு கதறி அழுதிருக்கிறாள். அவளது அழுகை, ஆனந்தம், கோபம், கிறுக்குத் தனங்கள், சென்டிமென்ட்ஸ் எதுவுமே எனக்கு பரிச்சயமற்றவை அல்ல. ஒரு தோழனாய் எல்லாவற்றையும் உணர்ந்திருக்கிறேன்.
உண்மையான நட்பிற்கு நாங்கள்தான் இலக்கணமாய் இருப்பதாய் எங்களுடைய ஒவ்வொரு கணங்களையும் கழித்திருந்திருக்கிறோம். ரொம்ப மெச்சூரிட்டியாய் நடந்துக் கொள்வதாய் மனதுக்குள்ளேயே நினைத்திருந்திருக்கிறோம். ஆனால் நாங்கள் அந்த வயதில் புரிந்துக் கொள்ளாதது ஒன்று இருந்தது. அது “காலம் எங்களை எப்படியும் பிரித்துப் போட்டு விடும் என்பதே”.
ஆச்சு. நான்கு வருடங்கள் வெகு வேகமாய் ஓடி விட, வேலை தேடி சென்னை வந்து சேர்ந்தோம். நான் என் ஃப்ரண்ட்ஸோடு ஒரு மேன்சனிலும் அவள் ஒரு P.G யிலுமாக அடைக்கலம் புகுந்தோம் . எங்கள் செட்டிலுள்ள 27 பெண்களில் வேலை தேடி கிளம்பிய 8 பேரில் அவளும் ஒருத்தி.
சென்னையின் பரபரப்பும், சினிமா தியேட்டர்களும் என்னைக் கவர்ந்திழுக்க விளையாட்டாய் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்த வேளைகளில், அவள் ஏதேதொ கம்பெனி இண்டர்வியூக்கு போய் விட்டு வந்து அப்படி இப்படி என்று சொல்லுவாள்.
சில சமயம் அவள் பெரிய கம்பெனி என்று சொல்லிய ஒரு சில கம்பெனியின் பெயர்களை நான் அப்போதுதான் முதன் முதலாய் கேள்விப்படுவேன். அவளிடம் பேசிக் கொண்டிருக்கும் வேளைகளில், இனிமேல் ரொம்ப தீவிரமாய் இவளைப் போல வேலை தேட வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.
ஆனால் பேசி முடித்து விட்டு, ரூமுக்கு வந்து நண்பர்களுடன் அரட்டை அடிக்க ஆரம்பித்ததும், எல்லாவற்றையும் மறந்து “நாளைக்கு” என்று தள்ளிப் போட்டு விடுவேன். இந்த “நாளைக்கு” என்ற வார்த்தை என் வாழ்வில் ஏற்படுத்திய பாதிப்புகளை பின்னாளில்தான் நான் புரிந்துக் கொண்டேன்.
நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஏதேதோ முயற்சி செய்து அவள் ஒரு பெரிய S/W கம்பெனியில் வேலைக்கும் சேர்ந்து விட்டாள். தன்னுடைய செலவுகள் போக வீட்டிற்கு மாதம் 10,000 ரூபாய் அவள் அனுப்பிக் கொண்டிருந்த வேளையில், நான் செகண்ட் ஷோ படம் பார்த்து விட்டு “நல்ல கதை மச்சி. கெடுத்துட்டான். ஃபோட்டொகிராஃபி யும், எடிட்டிங்கும் இல்லைன்னா படம் ரொம்ப சொதப்பி இருக்கும்” என்று நள்ளிரவு 2 மணிக்கு நண்பர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்தேன்.
அப்புறம் கூட இருப்பவர்கள் ஒவ்வொருவராய் மெல்ல செட்டிலாக ஆரம்பிக்க, நிஜமாலுமே எதிர்காலத்தின் மேல் ஒரு பயம் வந்து MNC யாவது மண்ணாவது, எக்ஸ்பீரியன்ஸ் தான் முக்கியம்னு ஏதோ ஒன்றில் உள்ளே நுழைந்து, முட்டி, மோதி, வதை பட்டு, மெல்ல உயர்ந்து இதோ இப்போது நானும் Well settled S/E இஞ்சினீயர்.
இடைப்பட்ட இந்த மூன்று வருடங்களில் எவ்வளவோ மாற்றங்கள். திடீரென்று ஒரு நாள் வீட்டில எனக்கு ரொம்ப சீரியஸா மாப்ளை பார்க்கிறாங்கடா. நான் கல்யாணத்துக்கப்புறமும் வேலைக்கு போவேன்னு சொல்லி இருக்கேன். ஆனா அப்பா பார்க்கலாம்மா ன்னு சொல்லி இருக்காரு என்று சொன்னாள்.
அடுத்த இரண்டு மாதங்கள் நாங்கள் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு வந்திருக்கும் வரன்களைப் பற்றிதான் பேசிக் கொள்ளுவோம். ஒரு நாள் இரவு 12 மணிக்கு போன் செய்து ஒரு வரன் ஃபிக்ஸ் பண்ணி இருக்கங்கடா.
மாப்ளை பேரு கார்த்திக். ஈரோட்டில்யே பிஸினஸ் பண்றாரு. நல்லா செட்டில் ஆன குடும்பம். இதை விட்டா வேற நல்ல சம்பந்தம் கிடைக்காதுன்னு அம்மாவும், அப்பாவும் ரொம்ப கம்பெல் பண்றாங்க. மாப்ளையும் பார்க்க நல்லா இருக்காரு. எனக்கும் பிடிச்சிருக்கு. வேலையை விடணுமேன்னுதான் ரொம்ப யோசிக்கறேன். என்று சொன்னாள்.
இது நடந்த மூன்றாவது மாதத்தின் கடைசியில், கார்த்திக்கின் கையால், தனது கழுத்தில் தாலி கட்டிக் கொண்டாள். அவள் அப்போது ரொம்ப சந்தோஷமாக இருந்தாள் என்பதை அவள் கண்கள் எனக்கு சொல்லியது.
ஒரு நல்ல தோழி இல்லாத சென்னை வாழ்க்கைக்கு மெல்ல என்னை நான் பழக்கப் படுத்திக் கொண்ட வேளையில் ஆன்சைட் போகும் வாய்ப்பு ஒன்று தேடி வர, மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக இந்தியா வராமல், மிடில் ஈஸ்ட் நாடுகளிலும், அமெரிக்காவிலும் இருந்துவிட்டு இப்போதுதான் திரும்பி வருகிறேன்.
முதல் வேளையாக ஈரோடு போய் அவளது குடும்பத்தைப் பார்த்து விட்டு திரும்பி வந்துக் கொண்டிருக்கிறேன். ஒரு சுட்டிப் பாப்பா, அன்பான கணவன் என்று சந்தோஷமாய் அவள் வாழ்ந்து வந்தாலும், உள்ளே ஏதோ ஒன்று எனக்கு உறுத்திக் கொண்டிருக்கிறது.
நம்ம செட் ஆளுங்க வேற யாரு கூடயாவது கான்டாக்ட் இருக்கா?
இல்லைடா எங்க புள்ளைங்க எல்லாம் அப்படி அப்படியே கல்யாணம் குழந்தைன்னு செட்டிலாயிட்டாளுங்க. எல்லாருமே ரொம்ப பிஸியா இருக்காளுங்க. பசங்கள்ல கல்யாணத்துக்கப்புறம் நான் பேசிக்கிட்டிருக்கற ஒரே ஆளு நீ ஒருத்தன்தான். போன மாசம் கூட ஜீவா கோயம்புத்தூர்ல கல்யாணம்னு பத்திரிக்கை அனுப்பி இருந்தான். நான்தான் யாரு அவ்வளவு தூரம் போய்க்கிட்டுன்னு விட்டுட்டேன்.
அடிப்பாவி மெயில்லயாவது ஒரு கங்க்ராட்ஸ்னு மெசேஜ் அனுப்பி இருக்கலாமே?
எங்கடா வீட்டு வேலை செய்யறதுக்கே டைம் சரியா இருக்கு. குழந்தையை வேற பார்த்துக்கணும். மெயில் செக் பண்ணியே வருஷக் கணக்கு ஆவுது. மெயில் ஐ.டி எல்லாம் எப்பவோ காணாம போயிருக்கும்.
சரி சும்மாதான இருக்க. அவர்க்கு பிஸினஸ்ல ஹெல்ப் பண்ணிக்கிட்டு அவர் கூட அவரு ஆஃபிசுக்காவது போய்ட்டு வரலாமில்லை.
இல்லைடா. எங்க மாமியாருக்கு பிடிக்காது. அங்க எல்லாம் நீ எதுக்கும்மான்னு கேப்பாங்க. நானும் எதுக்கு தேவை இல்லாமன்னு விட்டுட்டேன்.
எங்களின் பலதரப்பட்ட சம்பாஷணைகளிற்கு நடுவே நான் கேட்ட இது போன்ற பல கேள்விகளிற்கு, அவள் கொடுத்த பதில்கள் என்னை இப்போது தூங்க விடாமல் செய்து கொண்டிருக்கிறது.
ஐந்து மணி நேரம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த எங்கள் நட்பை சந்தேகிக்காத ஒரு கணவன், விட்டுப் பிரிய மனமில்லாதவாறு துரு துரு வென்றிருக்கும் ஒரு குழந்தை என்று அவள் சந்தோஷமாயிருந்தாலும், என்னை விட ரொமபவே அதிகமாய் இருக்கும் அவளது Logical Analysis உம், Programming Skills உம், Banking Domain Knowledge உம், எவரும் திட்டமிட்டுச் செய்யாமலேயே அவளது வீட்டின் சமையலறையோடு முடங்கிப் போய் விட்டதே என்ற ஆதங்கம் எனக்குள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது.
நான் செஞ்ச தக்காளி சட்னி சாப்பிட்டதே இல்லையே நீ? சாப்ட்டுப் பாரு. அவருக்கு ரொம்ம்ம்ம்பப் பிடிச்ச டிஷ் இது.
கணவன் மனைவி இருவரும் வற்புறுத்தி சாப்பிட வைத்த உணவின் சுவை இன்னமும் கொஞ்சம் நாக்கில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. காதுகளில் மட்டும் “நம்ம பேரை சொல்ற மாதிரி ஏதாவது சாதிக்கணும்டா” எனும் அவளது குரல் விடாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
ம்ம்..
நந்தா!!!
கதை இல்லை இல்லை நடைமுறை வாழ்க்கையை அழகா சொல்லிற்கீங்க….
வாழ்த்துகள்!!!!
நந்தா
மேலும் அலுவலகம் சார்ந்துதான் தங்கள் திறமைகள் பெண்கள் வெளிப்படுத்த வேண்டுமென்பதில்லையே..உண்மையிலேயே அவர்களுக்குப் பிடித்திருந்தால் சரிதான்.என்னைப் பொருத்தவரை நிறைவுதான் முக்கியம்.அந்த நிறைவு எதில் கிடைக்கிறதோ அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டியதுதான்.
நல்ல எழுத்து நடை..
புத்திசாலியான பெண் சமயலறைக்கு செல்வதில் தப்பொன்றும் இல்லையே
பெண்கள் பெரும்பாலும் சுழ்நிலை கைதிகள்…என் கல்லூரியில்…பெண்களை..நாங்கள்..இவ்வாறு கேட்டதுண்டு..படிச்சு..வேலைக்கு போகப் போறதில்லையின்னா..ஒரு ஆரவம்..இருக்கிறவங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்காம பண்ணுறீங்க…
ஆனா இதுல…வேற ஒரு பரிமாணம்..இருக்குன்னு சொல்லிருக்கீங்க..அருமை..
உண்மை சுடுகிறது..
ennamo solla vaaringa,naan ennatha solla?
இது என்னங்க, நந்தாவின் ஆட்டோகிராபா?
இருந்தாலும் நிதர்சனத்தை சொல்லியமைக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
என்னங்க ரவி அர்த்தம் அதுக்கு???
நன்றி எழில்.
//மேலும் அலுவலகம் சார்ந்துதான் தங்கள் திறமைகள் பெண்கள் வெளிப்படுத்த வேண்டுமென்பதில்லையே..//
அய்யனார் பதிவைப் போட்டவுடன் ஒரு சில கேள்விகளை நான் எதிர் பார்த்தேன். அதில் நீங்கள் கேட்ட கேள்விகளும் ஒன்று.
நான் ரொம்ப முக்கியமாய் சொல்ல வருவது இதுதான். அவள் சந்தோஷமாய்தான் இருக்கிறாள். ஆனால் நான்கு வருடங்களில் அவளது கனவுகளை உடனிருந்து கேட்டவன் என்ற முறையில் அவன்தான் சந்தோஷமாய் இல்லை. மற்ற படி இது சரி தவறு என்று நான் எதையும் கூற வர வில்லை. இப்படி நடந்தது. நடந்துக் கொண்டிருக்கிறது. என்று மட்டுமே சொல்லுகிறேன்.
கதை ஃபுல்லா நெகட்டிவ்ல சொல்லப்பட்டதுனால, பாசிட்டிவா முடிக்கணும்னா எப்படி முடிக்கணும்னு ஒரு முடிவு இருக்கு. அதை அப்புறமாக போடுகிறேன்.
…..
நன்றி TBCD.
ஆழியூரான் தொடர்ச்சியாக படித்து வருகிறீர்கள். வருகைக்கு நன்றி.
அப்பாடி 1,2,3,4,5… .இன்னும் பின்னூட்டம் போட போற எல்லோரையும் வழிமொழிகிறேன்…
நன்றி துர்கா, பிரேம்குமார்.
ஜே.கே ஃபீல் பண்ணாதீங்க விடுங்க.
பாரி எஸ்கேப் ஆகிட்டீங்களா. அடுத்த முறை கவனிச்சுக்கறேன்.
உள்ளதைச் சொல்லி இருக்கீங்க..அதான் ஒரு ம்ம்..கதைக்கு இரண்டு முடிவு கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒன்னு, அது climax மாத்துற தமிழ்த் திரைப்படம் மாதிரி வாடிக்கையாளரை மையமா வைச்சதா ஆக்கிடும். இல்லை, கதையா பார்க்க விடாம விவாதமா பார்க்க வைச்சிடும். எந்த முடிவு இருந்தாலும் ஒரு முடிவு இருப்பது தான் சரி. positiveஆ சொல்றேன்னு மெனக்கெட்டு முடிவை மட்டும் positiveஆ மாத்தினா கதையில் நீங்கள் ஆரம்பித்த தொனிக்கு ஒட்டாது. திடீர் திருப்பம் தரும் ஒரு பக்கக் கதை போலவும் ஆகலாம். இப்ப இருக்க முடிவு இயல்பா இருக்கு.
அருமை நண்பா!!!
நன்றி ரவி மற்றும் வினையூக்கி.
ரவி, விக்ரமன் படத்தில வர்ற மாதிரி ஓவர் நைட்ல நான் அவள் புருஷன் கிட்டயும் மாமியார்கிட்டயும் பேசி கன்வின்ஸ் பண்ணி அவளை ஒரு கலெக்டராக்கறமாதிரி எல்லாம் முடிவை மாத்த மாட்டேங்க. நான் போட இருப்பதை முடிவு என்று சொல்வதை விட ஒரு பிற் சேர்க்கை என்றுதான் நினைத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் நீங்கள் சொன்ன அனைத்தும் நியாயமான காரணங்களே.
(கமெண்ட்ஸ் ஆப்ஷன் தெரியுங்க. பதில் சொல்ல வசதியா இருக்குமேன்னுதாதான் இப்படியே விட்டுட்டேன்.)
ரொம்ப நல்லா இருக்கு நந்தா…
இன்னொன்னும் இருக்கு நந்தா…வேலைக்கு போன பின்னாலும் கனவுகளை தொலைத்த பெண்கள் இருக்கிறார்கள்..அது இன்னும் கொடுமை…
//நான் ரொம்ப முக்கியமாய் சொல்ல வருவது இதுதான். அவள் சந்தோஷமாய்தான் இருக்கிறாள். ஆனால் நான்கு வருடங்களில் அவளது கனவுகளை உடனிருந்து கேட்டவன் என்ற முறையில் அவன்தான் சந்தோஷமாய் இல்லை//
ஹ்ம்ம்…இருக்குறதை அப்படியே ஏத்துக்கறது நம் பெண்களுக்கு தானா வரும் இயல்பு.. தனக்கு எது வேனும், எது தேவையில்லை என்று யோசிக்க கூட மறந்து விடுகிறார்கள்…இதுவும் நல்லது தான் ஒரு விதத்தில்…
எந்த கனவுகளும் தொலைக்கப்படுவதில்லை நந்தா.. அது பத்திரமா தான் இருக்கு…:-)
நன்றி
அவள் கண்டிப்பாக தொலைத்திருக்க மாட்டாள் என்று தெரிந்தே நண்பனுக்கு இந்த ஆதங்கம்னு எனக்கு தோனுது.. இல்லைனா இந்த கருத்து வாபஸ்…:-))
//ஹ்ம்ம்…இருக்குறதை அப்படியே ஏத்துக்கறது நம் பெண்களுக்கு தானா வரும் இயல்பு.. தனக்கு எது வேனும், எது தேவையில்லை என்று யோசிக்க கூட மறந்து விடுகிறார்கள்…//
வாங்க மங்கை. சொல்ல நினைத்ததை ரொம்ப சரியா உணர்ந்துக் கொண்டுள்ளீர்கள். உங்க கருத்தை வாபஸ் பண்ண வேண்டிய அவசியமில்லை.
//இன்னொன்னும் இருக்கு நந்தா…வேலைக்கு போன பின்னாலும் கனவுகளை தொலைத்த பெண்கள் இருக்கிறார்கள்..அது இன்னும் கொடுமை…//
உண்மைதான். நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.
ஒரு கதை என்கிற இலக்கிய வடிவத்துக்கு ஒரு முடிவு தான் இருக்கணும்ங்கிறது என் எதிர்ப்பார்ப்பு. அது positiveஆ இருந்தாலும் சரி negativeஆ இருந்தாலும் சரி. கதை தொடக்கத்தில் இருந்து இருக்கும் தொனிக்கு இயல்பா இருக்கணும், எழுதுபவரின் நிலைப்பாட்டைத் திணிப்பதாக இருக்கக்கூடாது. உண்மை வாழ்க்கையில் எழுத்தாளரால் மாற்றத்தை உண்டு பண்ண இயல முடியாதபோது அதைக் கதையில் மட்டும் மாற்றி மகிழ்வது கனவு வாழ்க்கை தான். உண்மையிலேயே positiveஆக நடந்திருந்தால் அப்படி எழுதுவது சரி. ஆனால், இப்படி இருந்திருந்தால் நல்லா இருந்திருக்குமே என்று எழுதி மகிழும்போது, கதையின் தாக்கம் குறைந்து விடுகிறதுன்னு தான் நினைக்கிறேன். நாம நினைவில் வைத்திருக்கும் கதைகள், இலக்கியங்கள் எதுக்கும் இரண்டாவது முடிவு, பிற்சேர்க்கை கிடையாதே? அப்படி இரு தரப்பு வாதங்களை அலசிப் பார்க்குறது தான் நோக்கம்னா அதுக்கு கதை வடிவம் சிறந்தது இல்லைன்னு தோணுது. கட்டுரையின் ஒரு பகுதியாக குட்டிக் கதையாகச் சொல்லலாம்.
இது உங்களின் இந்தக் கதைக்குன்னு இல்ல. கருத்து சொல்றேன், positiveஆ சொல்றேன்னு கதை, கவிதை வடிவங்களின் வீச்சைக் குறைப்பதைப் பரவலா பார்க்கிறேன். மற்ற மறுமொழிகள் எல்லாம் கதை மாந்தரைக் குறித்ததுன்னா இது கதை வடிவத்தைக் குறித்தது
–
இனி கதையில் வரும் தோழி குறித்து..உண்மையிலேயே ஒரு கனவையும் அதை நினைவாக்க வேண்டும் என்ற உறுதியையும் எந்தப் புறச்சூழலும் தடுத்து விட முடியாது என்பது என் அனுபவம். கனவுகள் நிறைவேதாதற்கு வேறு எதையும் காரணம் சுட்டுவார்கள் என்றால் கனவை விட இன்னொன்றைப் பெரிதாக மதித்திருக்கிறார்கள், சமரசம் செய்து கொண்டார்கள் என்று தான் பொருள். இந்தக் கதையில் தன் முனைப்பைக் காட்டிலும் குடும்பத்தின் இணக்கச் சூழலைப் பெரிதாக மதித்திருக்கிறாள். ஆக, அவள் பார்வையில் அவை எதையுமே தொலைத்திருக்க மாட்டாள். எதைக் கொடுத்து எதை வாங்குவது என்ற தெளிவு அனைவருக்கும், குறிப்பாகப் பெண்களுக்கும் உண்டு. அவள் தனக்கு முன் குடும்பத்தைப் பார்க்கிறாள். தோழன் பிற எல்லாவற்றுக்கும் முன் தோழியின் கனவைப் பார்க்கிறான். இந்தப் பார்வை வேறுபாடு தான் முக்கியம்.
–
சரி கதையை விட நீளமான மறுமொழியை முடித்துக் கொள்கிறேன்
நந்தா, நல்ல கதை. ரொம்ப இயல்பா இருக்கு. நிறைய இடங்களில் நடக்குற விஷயங்களை சொல்லியிருக்கீங்க. ரொம்ப அருமையா பாடுவா என் உறவுக்கார பெண் ஒருத்தி. நிறைய மேடைக் கச்சேரிகள் செய்தவள். பல முறை வானொலியில் பாடியிருக்கிறாள். தொழில் முறை பாடகியாக வருவதற்காய் அவள் குடும்பமே பாடுபட்டுக்கொண்டிருந்தது. இப்போது திருமணமாகி 6 வருடத்தில் பாட்டு கேட்கும் வழக்கம் கூட குறைந்து போய்விட்டது அவளுக்கு. அவளும் இவ்விஷயத்தில் உங்கள் நாயகியைப் போலவே துளியும் வருத்தமின்றி அல்லது அதை காண்பித்துக் கொள்ளாதுதான் வளைய வருகிறாள். ஹ்ம்ம்… ஒவ்வொரு முறையும் அவளைப் பார்க்கும்போதெல்லான் என் நெஞ்சையடைக்கும் ஊமை சோகத்தை அழகாய் வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள். அதுனாலயே கதையோட ரொம்பவே ஒன்றிட்டேன்.
அப்புறம், பிறசேர்க்கையா இன்னொரு பாஸிடிவ் முடிவைத் தர்ர விஷயத்துல நான் ரவிசங்கரின் கருத்தை வழிமொழியறேன். அது கொஞ்சம் செயற்கையா இருக்கும்ன்றது என்னோட அபிப்ராயம்.
ரவி உண்மையைச் சொல்றேன். கலக்கிட்டீங்க.
இலக்கியத்தைப் பற்றியும், கதையைப் பற்றியும் அதன் முடிவு வடிவங்களைப் பற்றியும் நீங்கள் சொன்னதை முழுதும் ஒத்துக் கொள்கிறேன்.
//அவள் தனக்கு முன் குடும்பத்தைப் பார்க்கிறாள். தோழன் பிற எல்லாவற்றுக்கும் முன் தோழியின் கனவைப் பார்க்கிறான். இந்தப் பார்வை வேறுபாடு தான் முக்கியம்.//
இந்த வேறுபாட்டைத்தான் நானும் சொல்ல முயன்றிருக்கிறேன்.
//சமரசம் செய்து கொண்டார்கள் என்று தான் பொருள்//
இந்த சமரசம்தான் பெரும்பாலான பெண்களின் வாழ்க்கை நெறியாகவே ஆகிவிட்டது ரவி.
//சரி கதையை விட நீளமான மறுமொழியை முடித்துக் கொள்கிறேன்//
மிக மிகத் தேவையான ஒன்றுதான்.
ஒரே பீலிங்க்ஸ் நந்தா.
“நம்ம பேரை சொல்ற மாதிரி ஏதாவது சாதிக்கணும்டா” – இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள், ஆனால் வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் திரும்பி விடுகிறார்கள்/திருப்பப்பட்டு விடுகிறார்கள். அவள் அந்த வாழ்க்கையை மணமுவந்தும் ஏற்றுக்கொண்டிருக்கலாம், அமைந்து விட்டது என்றும் தன்னை அதற்கு தக்க பழக்கப்படுத்திக் கொண்டிருக்கலாம். இப்படிதான் பல பெண்கள் (ஆண்களும் கூட பொறுந்தும் என நினைக்கிறேன்) நிஜத்தில்.
சுகமான முடிவு…
உங்க பிற்சேர்க்கைக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.
இதே போன்ற ஒரு கதை அல்ல, சம்பவத்தை நான் எழுதி இருக்கிறேன்.
அவளோட கனவுகளை அவளே புதைத்துக்கொண்டு. அல்லது சமுதாயத்தால் மறக்க வைக்கப்பட்டதை அவள் அனுசரித்து போகலாம். பழகிய நமக்கும் ஏற்றுக்கொள்வது என்பது சாத்தியமல்லதான்.
//ரவி, விக்ரமன் படத்தில வர்ற மாதிரி ஓவர் நைட்ல நான் அவள் புருஷன் கிட்டயும் மாமியார்கிட்டயும் பேசி கன்வின்ஸ் பண்ணி அவளை ஒரு கலெக்டராக்கறமாதிரி எல்லாம் முடிவை மாத்த மாட்டேங்க. நான் போட இருப்பதை முடிவு என்று சொல்வதை விட ஒரு பிற் சேர்க்கை என்றுதான் நினைத்துக் கொள்ள வேண்டும். //
மொதல்ல போடுங்க சார்!
ஓவர் பில்டப்பா இருக்குதே!
நந்தா…நல்ல கதை…அய்யனார் கூறியதை வழிமொழிகிறேன்.
// ஹ்ம்ம்… ஒவ்வொரு முறையும் அவளைப் பார்க்கும்போதெல்லான் என் நெஞ்சையடைக்கும் ஊமை சோகத்தை அழகாய் வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள். அதுனாலயே கதையோட ரொம்பவே ஒன்றிட்டேன்.//
நன்றி லக்ஷ்மி. இது மாதிரி பல பேரை நாம வாழ்க்கையில சந்திச்சுக்கிட்டுதான் இருக்கோம்.
நன்றி தம்பி, கோபிநாத்.
இயல்பான, எளிமையான, அழகான நடை + கதை.
வாழ்த்துக்கள்!!!
கனவுகள் சிலருக்கு கனவாகவேப் போய்விடுகிறது. அந்த சிலரிலும் பெண்கள் பலராக இருப்பதுதான் வேதனை!
வாங்க அருட்பெருங்கோ… உண்மையிலேயே அது வேதனைதான்.
ரொம்ப இயல்பாக இருக்கிறது
வாழ்த்துக்கள்
நந்தா நடுவில் வேலை அதிகமானதால் உங்கள் பதிவைப் படிக்க முடிய வில்லை.
இந்த கதை என்னை ரொம்பவே உருக்கி விட்டது நந்தா. எனது மன உணர்வுகளை எபடிச் சொல்வதென்றே தெரிய வில்லை. இது போன்று பல பெண்களை நான் பார்த்திருக்கிறேன்.
குடும்பத்துக்குள் வாழ்ந்து விட்டுப் போகும் ஒரு மனுஷியாக மட்டும் நாம் பெண்களைப் பார்க்கிறோம். இவ்வளவு ஏன் எனது சகோதரிக்கோ, தாய்க்கோ இது போன்று ஏதாவது கனவுகள் இருந்திருக்கக் கூடும் என்று கூட நினைத்துப் பார்த்ததில்லை.
வாழ்த்துக்கள் நந்தா.
நந்தா..
கதையின் நடை, கதை எழுதுவதே முழுத் தொழிலாக கொண்ட எழுத்தாளர்களை நினைவுறுத்தியது. எந்த இடத்திலும் புன்னகை மாறாமல் தான் பதிவினை படிக்க நேர்ந்தது.
பெண்ணே ஏன் இப்படி,, உன் கனவுகளைப் புதைத்து வாழ்கையின் எதார்த்தத்தை எப்படி உன்னால் இயல்பாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. உன் திறமைகள் பாழாகி விட்டதே என்ற எழுத்தாளரின் அங்கலாய்ப்போடு தான் கதை பின்னப்பட்டிருக்கிறது.இது தான் எழுத்தாளரின் கோணம். நந்தா..சரி தானே?
சிலரின் கதை ஒரு தொடக்கத்துடனும், அத்தொடக்கத்துக்கேற்ப முடிவுடனும் முடிவுறும். கதை இப்படித் தான் இருக்க வேண்டும் என்று எதாவது வரையறை இருக்கிறதா, என்பது தெரியவில்லை. இப்போது வரும் கதைகள் பெரும்பாலும், சம்பவங்களின் தொகுப்பாகவே இருக்கின்றன. அவை தான் இயல்பான வாழ்க்கை நடப்பையும் வெளிப்படுத்துகின்றன.
நீங்கள் வரைந்துள்ள இக்கதையில், இரு வேறு பாலினம், அவர்களின் வயதுக்கேற்பவும், சூழலுக்கேற்பவும் மாறும் அவர்களின் தன்மை, இவை இரண்டுமே செம்மையாக வெளிப்படுத்தப்பட்டிருக்கினறன. அதுவும் மிக தெளிவாகவும், தீர்க்கமாகவும் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். உங்களின் கேள்வியை இக்கதை மூலம் பெண் குலத்திடம் கேட்க விழைகிறீர்கள் என்று தான் எனக்குப் புரிந்தது.
நன்றி திகழ்மிளிர். உங்க பேரு நல்லா இருக்கு. (இதைச் சொல்ற 234 வது ஆளு நீ நீங்கறீங்களா)
நன்றி பாலாஜி.
சௌம்யா உங்களுக்கு ஒரு பெரிய்ய நன்றி. உங்க மறுமொழியில இருந்தே ரொம்ப ரசிச்சிருக்கீங்கன்னுப் புரியுது. நீங்க சொன்னது ஓரளவு உண்மைதாங்க. கல்யாணமாகி விட்ட எனது தோழிகளும், எனது மற்றும் என் நண்பர்களின் தங்கைகளும் எனக்குள் ஏற்படுத்திய தாக்கங்கள் இதில் கொஞ்சம் இருக்கிறது. அதுதான் இந்த அங்கலாய்ப்பாக வெளிப்பட்டிருக்கிறது.
நான் கேட்க நினைப்பதும், விடை தேடிக் கொண்டிருக்கும் முயற்சிகளும் இன்னும் நிறையவே இருக்கின்றது. அவை அவ்வப்போது ஏதாவது ஒரு ரூபத்தில் இப்படி வெளிப்படுகின்றது.
நந்தா,
நல்ல உயிரோட்டமுள்ள கதை. (என்னால கதைன்னு நெனச்சுப் பாக்கவே முடியல.. நேர்ல பாக்கற மாதிரி இருக்கு).
எல்லோரும் சொன்ன மாதிரி வாழ்வியல் நிதர்சனத்தை அழகா வடிச்சிருக்கீங்க…
தலைப்பு ரொம்பப் பொருத்தம்! சபாஷ்.
வாழ்த்துக்கள்.
very good blog congratulations
regard from Catalonia Spain
thank you
நந்தா இன்று நாம் (பதிவர் சந்திப்பில்) பேசிய விசயம் தான். அருமையாக எழுத்தில் கொண்டு வந்துள்ளீர்கள்.
நந்தா,
இந்த கதையை என்றோ படித்து விட்டேன். இன்னிக்கு தான் மறுமொழிய முடிந்தது
இது கதை என்பதை விட நம்மை சுற்றி தினமும் நடக்கும் நிகழ்வு என்றே தோன்றுகிறது. என்னுடைய பல தோழிகளை இத்துடன் சம்பந்தப்படுத்தி பார்க்க முடிகிறது. இதை கதை என்று வைத்தோ இல்லை நிகழ்வு என்று வைத்தோ முடிவு அல்லது யோசனை என்று என்னால் சொல்ல முடிகின்றவை மூன்று ..
1. தன் குடும்பத்தின் மகிழ்வே தனக்கு நிறைவு தருகிறது என்று அப்படியே இருந்து விடுவது.
2. மெதுவாக தன் குடும்பத்தினரிடம் பேசி தன் கனவுகளை நனவாக்க குறைந்தபட்சம் முயற்சியாவது செய்வது,
3. குழந்தைகள் ஓரளவு வளர்ந்த பின் மறைத்து வைக்கப்பட்ட தன் திறமையை வெளிக்கொணர்வது..
பொதுவாக நம் நாட்டு பெண்கள் இந்த மூன்று வகைகளுக்குள் அடங்கி விடுகின்றனர். எந்த வகையாக இருந்தாலும் தன்னிறைவு என்று ஒன்று வந்து விட்டால் போதுமில்லையா? இதே விஷயம் ஆண்களுக்கும் பொருந்தும், குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பில் தன் கனவுகளை,லட்சியங்களை தொலைக்கும் ஆண்களும் உள்ளனர்.
நன்றி ராக்ஸ். ஏதோ என்னை பாதித்ததை எழுதி இருக்கிறேன்.
நன்றி Té la mà Maria.
வாருங்கள் முரளி கண்ணன். ரொம்ப சுறு சுறுப்பா இருக்கீங்க. நாம பேசிட்டுப் போன அன்னிக்கு நைட்டே போய் பார்த்துட்டீங்க. எனக்குதான் கொஞ்சம் வேலை அதிகம். போகப் போக விரிவா பேசலாம். நன்றி.
வாருங்கள் வேதா.
//என்னுடைய பல தோழிகளை இத்துடன் சம்பந்தப்படுத்தி பார்க்க முடிகிறது.//
எனக்கும் இது நடந்தது. அதைத்தான் வார்த்தைகளால் சொல்லி இருக்கிறேன்.
நீங்கள் சொன்ன மூன்று யோசனைகளில், பெரும்பாலானோர் அந்த முதல் யோசனையையே பின்பற்றிக் கொள்கின்றனர் என்பது என் எண்ணம்.
//எந்த வகையாக இருந்தாலும் தன்னிறைவு என்று ஒன்று வந்து விட்டால் போதுமில்லையா? இதே விஷயம் ஆண்களுக்கும் பொருந்தும், குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பில் தன் கனவுகளை,லட்சியங்களை தொலைக்கும் ஆண்களும் உள்ளனர்.//
நீங்கள் சொன்னது மிகச் சரி. தன்னிறைவு அடைவது வேறு. சமரசம் செய்து கொள்வது வேறு. ஆனால் அது அவரவர்களுக்குத்தான் தெரியும்.
ஆண்களும் இந்த விஷயத்தில் சேர்த்தி என்பதை மறுக்க முடியாதுதான். என்ன அவர்களை விட இவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவ்வளவுதான். நன்றி வேதா.
kanavugalai tholaithu vittu..innum evvalavu naal kanavu kandukondey irupeergal nandha !
கனவு மெய்ப்பட நிறைய போராட வேண்டியிருக்கு உழைக்க வேண்டியிருக்கு. அதை பெண்கள் திருமணத்தின் பின் மறந்து போறாங்க. பலருக்காக விட்டக்கொடுத்து தங்:களையும் சோம்பேறிகளாக்கிகிட்டு வாழ்வையும் தொலைச்சிடுறாங்க. மொத்தத்தில் மற்றவர்களுக்காக வாழப்பழகிக்கிறாங்க. இதை தான் தான் தீர்மானிக்க வேணும். மற்றவர்கள் அல்ல.
hi Mr.Nandha
ungalaukku kalyanam aacha? unga wife oda talents a neenga purinchu encourage pannuveengala?
வாங்க நித்யா.
இன்னும் ஆகலைங்க.
ஊருக்குதான் உபதேசம்னு சொல்லிக்கிட்டு திரிவதில் எனக்கு உடன்பாடு இல்லைங்க.
தெளிவான எழுது நடை, நீங்கள் சொல்ல வந்தது என்ன…….இத்தனை அறிவு ஜீவியாய் இருந்த அவள் இன்று தனது அறிவை பயன்படுத்தாமல் வீட்டினுள் முடங்கி போனாலே எனபது தானே? பெண்களை பொறுத்தவரை கல்யாணத்திற்கு முன்பு (க.மு.) கல்யாணத்திற்கு பின்பு ( க.பி)…..அப்படித்தான் பொதுவாக வாழ முடிகிறது, இல்லையென்றால் டிவோர்ஸ் தான், எதாவது ஒன்று தான் தேர்ந்து எடுக்க முடிகிறது பெரும்பாலும், மிக குறைவார சதவிகிதத்தினர் மட்டுமே க.மு, க.பி இரண்டிலும் ஒரே மாதிரியாக வாழ்கின்றனர்.
fantastic nandha… no words to explain my feel.
Nandha …..great nandha …you words impressed me a lot …keep it going
கதை ரொம்பவே நல்லாருக்கு. நீங்க எழுப்பி இருக்குற கேள்வியும், அய்யனாரின் பதில்கேள்வியும் யோசிக்கவைக்கின்றன. என்கூட பொறியியல் படித்த பல திறமையான பெண்கள் இன்று குழந்தைவளர்ப்பிலும் கத்திரிக்காய் கொத்ஸு வைப்பதிலுமே…! அவரவர் தனிப்பட்ட நிறைவு என்று திருப்தியடைந்தாலும், ஒருவரின் திறன்கள் சமூகமேம்பாட்டுக்குப் பயனில்லாது வீணில் கழிந்துபோவது வருத்தத்திற்குரியதுதான் இல்லையா? இதை இன்னும் விரித்துப் பேசிக்கொண்டே போனால் அது ஒரு மகாபாரதமாகிவிடும்… எனவே…
நந்தா, I’m so impressed. ரொம்ப இயல்பா அருமையா சொல்லிருக்கீங்க!
காதலை வேணும்னா அனுபவம் இல்லாம பேசலாம்.. இதெல்லாம் பேச, கூட உள்ள பெண்கள புரிஞ்சுக்கிற மனசு வேணும்!
Good work, keep it up
என் நெஞ்சம் நனைந்தது…
நான் அனுபவித்த சம்பவம் போன்ற ஒரு உணர்வு…
ada poya……