nav-left cat-right
cat-right

டைரிக்குறிப்புகள் 20-08-2010

டைரிக்குறிப்புகள்ஆயிற்று. சரியாக சொல்லப்போனால் இன்றுடன் 15 மாதங்கள் பதிவுகளை எழுதி. வெறுமனே பதிவுலகில் பார்வையாளனாகவும், அவசியப்படுகின்ற இடங்களில் மட்டும் பின்னூட்டமிடுபவனாகவும் மட்டுமே இருந்திருக்கிறேன்.

கடைசியாக சென்ற வருடம் மே மாதம் ஈழத்துப் போர் முடிவுக்கு வந்திருந்த அந்த கடைசி காலகட்டத்தில் எழுதியது. அதற்குப் பின்பு தொடர்ச்சியாக நான் எழுத நினைத்த எந்த விஷயத்திலும் ஈழமும், சகோதர மக்களின் நிலை குறித்தான பொறுமலும், ஆளும் மத்திய, மாநில மானங்கெட்ட அரசுகளின் மீதான காழ்ப்பில்லாமல் எந்த விஷயமும் வெளிப்படவே இல்லாமல் போனது. இன்னும் சொல்லப்போனால் எழுதப்படுகின்ற அனைத்தும் அழுவாச்சிக் காவியங்களாக மட்டுமே இருந்தது பதிவுலகை விட்டு தள்ளி நிற்க வைத்ததன் முக்கிய காரணமாய் இருந்திருக்கிறது.

தொடர்ச்சியாக அந்த அமைதியும், எதை எழுதுவது என்ற என்ற பதிவு குறித்தான யோசனைகள் எதுவும் செய்ய வேண்டிய தேவையில்லாத அந்த சோம்பேறித்தனமும் மெல்ல ஆட்கொண்டு விட சுகம் பழகி விட்டது. அதுவே இவ்வளவு பெரிய இடைவெளிக்கு காரணமாகி விட்டது.இடைப்பட்ட காலங்கள் திரைப்படங்கள், புத்தகங்கள், கம்ப்யூட்டர் கேம்ஸ், ரௌத்ரங்கள், கண்டனங்கள், என்று நிகழ்வுகளின் பின்னே காணாமல் போயிருக்கிறது. பார்க்கலாம் இனியாயினும் இது சரியாக தொடருமா என்று?

**************************

சென்ற வாரம் ஊருக்குச் சென்றிருந்த போது கொங்கு முன்னேற்றப் பேரவையின் பொதுக்கூட்டம் நடந்ததை பார்க்க வேண்டி இருந்தது. பொதுக்கூட்டத்தில் பேசிய பலரும் புதிய பேச்சாளர்கள். மேடைப்பேச்சு குறித்தான அரிச்சுவடி கூட அதில் ஒரு சிலருக்கு தெரியவில்லை என்பதைப் பார்க்க வேடிக்கையாய் இருந்தது. பேசிய அனைவரும் எடுத்துக்காட்டுகளுக்கு கொங்கு மண்டலத்தை உதாரணமாகச் சொல்லிக் கொண்டிருந்தனர். சில கம்யூனிஸ்டுகளுக்கு எதற்கெடுத்தாலும் சீனா ரஷ்யா என்பதைப் போல இவர்களுக்கு கொங்கு என்பதாகிப் போயிருக்கிறது.

சரி உதாரணம் சொல்றீங்கன்னா அதுக்கு ஒரு அளவு வேணாமா? மேடையில் பேசிய ஒரு பெண் ”உதாரணத்துக்கு எடுத்துக்கிடீங்கன்னா நாங்க கொங்குப் பெண்கள் எல்லாம் பணத்திற்காக எப்போது அடுத்தவரை நம்பியிருக்கக் கூடாதுன்னுட்டு அங்க இருக்கிற தனியார் டீவிக்களில் விளம்பரம் செய்வது, காம்பயரிங் பண்ணுவது, FM ல் பேசுவதுன்னு சொந்தக் காலில் நிக்கிறோமுங்க. நீங்களும் அதையே செஞ்சீங்கன்னா முன்னுக்கு வருவீங்கன்னு”அள்ளி விட்டுக்கிட்டிருந்தார். பேசறது எங்க மேட்டூர் பக்கத்துல இருக்கிற ஒரு சின்ன கிராமத்துல. ஏனுங்க அம்மணி கொஞ்சம் இடம் பார்த்து உதாரணம் சொல்லக்கூடாதா? அங்க உள்ள இருக்கிற பல ஊர்களில் இன்னும் கேபிள் வசதியே சரியா இல்லை. நீங்க என்னடான்னா டீவியில பெசி காசு சம்பாதிங்கறீங்க.

இதையெல்லாம் ஒரு சின்ன முறுவலை உதிர்த்து விட்டு தீர்மானமாய் நகர்ந்து விடலாம். ஆனால் அதைத் தண்டி கோபத்தைக் கிளப்பிய விஷயங்களும் நடந்தது. ஒரு விடுதலைப் போராட்ட வீரனை தனது சாதி வெறியின் பொருட்டு தங்களுக்கான தனிச் சொத்தாய் மாற்றிக் கொண்டிருந்தன அவலத்தை காண்வேண்டிய துர்பாக்கியம் நேர்ந்தது. தீர்த்தகிரி என்ற தீரன் சின்னமலை எனும் விடுதலைப்போராட்ட வீரன் தான் பிறந்த சமூகம் காரணமாக கொங்கு வேளாளக் கவுண்டர்களிற்கு மட்டுமேயான உதாரண புருஷனாகவும், ரோல் மாடலாகவும் முன்னெடுக்கப்படிருக்கிறார். உண்மையில் இதைவிட மோசமாக அந்த வீரனை வேறு எவ்ரும் அசிங்கப்படுத்தி விட முடியாது. உதாரணத்த்ற்கும், கருத்தில் கொள்வதற்கும் கூட தன் சார்ந்த சமுதாயத்தில் பிறந்த தலைவனையே தேடுவது என்பதை ஓர் முற்றிப் போன சாதி வெறி பிடித்த நோய்க்கூறு மனநிலையாக மட்டுமே என்னால் பார்க்க முடிகின்றது

தொடர்ச்சியாக ஆவேசமாய் ஒருவர் அந்த காலத்தில் இருந்த மாதிரி “ஊர்க்கட்டுப்பாடுகள்” எல்லாம் வந்தால்தான் ஒரு ஒழுக்கமும், கட்டுப்பாடும் இருக்கும் என்ற ரீதியில் பேசியத்தைக் கேட்க நேர்ந்த போது படு கேவலமாய் இருந்தது. கூட்டத்திலிருந்த எவரும் அதற்கெதிராய் சின்ன முக்கல் முனகல் கூட இல்லாமல் பரவச நிலையில் கேட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்த போது “இப்போ எல்லாம் யாரு சார் ஜாதி பார்க்கிறா” என்ற ரீதியில் ஜெ.மோ தளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேசிய நபர்கள் நினைவுக்கு வந்தனர்.

விவசாயிகள், மண் பாரம்பரியம் உடையவர்கள், 48% வருவாய் ஈட்டித் தருபவர்கள் என்று இவர்கள் பெருமை பேசும் அதே கொங்கு மண்டலம்தான் சாதி தீண்டாமைக்கு அடையாளச் சின்னமாய் இன்றும் நிலைத்து நிற்கும் உத்தப்புரம் சுவரின் மற்றைய வடிவங்களைத் தனக்குள் தாங்கி நின்றுக் கொண்டிருக்கிறது. இன்றும் பெ.தி.க வின் அறிக்கைகளின் படி தனி டம்ளர்களை புழக்கத்தில் வைத்திருக்கும் அதிகளவு டீக்கடைகளை கொண்ட மண்டலமாக இருப்பதிற்கும் சேர்த்து கொங்கு மண்டலம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

தொடர்ச்சியாக இது போன்ற அவலங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. காமராசர் எப்போதோ நாடார்களின் தலைவராகவும், ராணி வேலு நாச்சியார் தேவர்களின் வீரச் சின்னமாகவும், சமீப காலங்களில் தீரன் சின்னமலையும் கொங்கு வேளாளக் கவுண்டர்களுக்கான தனிச் சொத்தாகவும், ஆக மொத்தம் எல்லா தலைவர்களையும் கூறு போட்டு பிரித்துக் கொள்வதில் சாதி வெறி பிடித்த பல கூட்டங்கள் போராடிக் கொண்டிருக்கின்றன.

முத்துராமலிங்கரை தேவர்களின் பிரதிநிதியாக கொண்டாடுவதில் நாம் ஆச்சர்யம் கொள்ளப் போவதில்லை. தலைவன் எவ்வழியோ, தொண்டர்களும் அவ்வழி என்று சமாதானம் செய்து கொள்ளலாம். ஆனால் காமராசரையும், சின்னமலையையும் இப்படி கொண்டாடுவதன் அனர்த்தங்கள்தான் மிகப்பெரும் எரிச்சலைத் தருகின்றது.

ஆனால் இவர்கள் அனைவருக்கும் சாதி என்ற வார்த்தையை பயன்படுத்துவதில் மட்டும் இன்னும் தயக்கங்கள் மிச்சமிருக்கிறது. ஓட்டுகளுக்காகவோ, அல்லது கூசியோ ”நம்ம சாதி…” என்று பொது மேடைகளில் முழங்குவதில்லை. மிகக்கவனமாக அதைத் தவிர்த்து சமுதாயம் என்ற முலாம் பூசிய வார்த்தையை கையாண்டுக் கொண்டிருக்கின்றனர். கெட்டவார்த்தைகளாக்கப்பட்டு விட்ட வார்த்தைகளின் அணிவகுப்பில் தொடர்ச்சியாக இந்த ”சமுதாயம்” என்ற வார்த்தையும் சேர்ந்திருக்கிறது. இனி வரும் காலங்களில் இது எப்படி வேண்டுமானாலும் உருமாற்றம் அடையலாம்.

**************************

இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளாம். செய்த குற்றங்கள் மறைக்கப்பட்டு இந்தியாவை ஒளிர வைத்தவர், எவர்க்கும் அஞ்சாதவர், சிறுபான்மையினருக்காகவும், ஏழைகளுக்காக்வும் பாடுபட்டவர் என்றெல்லாம் செய்தித்தாள்களிலும், போஸ்டர்களிலும் அங்காங்கே சிரித்துக் கொண்டிருக்கிறார்.

சில விஷயங்களில் காலமும், மாறதியும் ஒரு மிகப்பெரிய வரம். ஆனால் தான் வாழ்ந்த காலங்களில் செய்த தவறுகள் மறைக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக புனித பிம்பமேற்றி சாதாரண மனிதரை ஒரு மாபெரும் தலைவனாக கட்டமைக்க முற்படும் ஊடகங்களும், அரசியல்வாதிகளும் இருக்கும் நாட்டில் காலமும், மறதியும் ஒரு மிகப்பெரிய சாபக்கேடு.

ஃபோபர்ஸ் ஊழல், போபால் பிரச்சினை, ஆண்டர்சனின் கைக்கூலியாகச் செய்ல்பட்டது, ”ஆலமரம் சாயும் போது பூமியில் அதிர்வுகள் ஏற்படத்தான் செய்யும்” என்ற மாபெரும் மனித நேயப் பார்வை, ஈழத்து மக்களை வேட்டையாடிய IPKF ஐ அனுப்பிய புண்ணியம், ஷா பனோ கேஸில் எடுத்த கோழைத்தனமான முடிவு என்று அவரின் மற்றொரு முகத்தையும் அவ்வப்போது எவரேனும் சுட்டிக்காண்டிருக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.

ஆளும் அரசுகளுக்கு ஆதரவாக வறட்டு ஜால்ரா சத்தங்கள் அதிகமாகிக் கொண்டிருக்கும் இந்த கட்டத்தில், செத்தவங்களைப் பத்தி தப்பா பேசக் கூடாது என்ற தேவையற்ற பழக்கங்களும், சராசரி மனிதர்களின் இயல் குணமான சிவப்பு தோலைப் பார்த்து மரியாதை கொண்டிருக்கும் பல கிராமத்து வெள்ளந்தி மக்களும் நிறைந்துள்ள சமுதாயத்தில் இதை செய்ய வில்லையெனில் அடுத்த தலைமுறையோ அல்லது அதற்கடுத்த தலைமுறையோ ”கூடிய சீக்கிரம் ராஜீவ்காந்தி ஆட்சி அமைப்போம்” என்ற கோஷத்தைக் கேட்க நேரிடும்.என்னைப் பொறுத்த வரை இன்னொரு முறை எம்மக்களுக்கு அந்த துர்பாக்கிய நிலை ஏற்பட வேண்டாம்.

**************************

மக்களின் பிரச்சினைகளை கலைஞர் அரசு எதிர் கொள்ளும் விதம் அதிமுக விற்கு சற்றும் சளைக்காமல் இருக்கிறது. இன்றைய நாளில் நம்முன்னே முக்கிய பிரச்சினையாய் இருப்பது பாதிக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டம் தங்களது எதிர்ப்பு உணர்வை எந்த அறவழிப்போராட்டத்தின் மூலம் காண்பிப்பது என்பதே.

எதிர் பிரச்சாரம் செய்த மாணவர்கள் கைது, உண்ணாவிரதம் இருந்த தோழர்கள் மீது தடியடி, விமர்சனம் செய்த பத்திரிக்கையாளர் கைது, அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்திய மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினரும்,சட்டக்கல்லூரி மாணவருமான அசோக்குமார் மீதான வெறி பிடித்த காவல் துறையின் சித்திரவதைகள், வசவுகள்… இப்படி பல விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஒரு பக்கம் அறவழிப்போராட்டங்களைக் கூட இரும்புக்கரம் கொண்டு அடக்க நினைக்கும் அரசாங்கமும், காவல் துறையும். மறு புறம் மறியல், உண்ணாவிரதப் போராட்டங்களைக் கூட “பொதுமக்கள் அவதி, இயல்பு வாதிக்கை பாதிப்பு” என்ற தலைப்புகளின் மூலம் பிரச்சினையை திசை திருப்பும் ஊடகங்கள். இந்த மோசமான சூழலுக்கு நடுவேதான் ஜனநாயகமும் நீதியும் காப்பாற்றப்படுவதாக கலைஞர் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

6 Responses to “டைரிக்குறிப்புகள் 20-08-2010”

 1. உமா says:

  பதிவிற்கு நன்றி!

 2. கணேஷ் says:

  Welcome back Nandha. Keep going.

 3. Stalin Felix says:

  கலக்கல் நந்தா

 4. suganthi says:

  Hi Nandha….Welcome to the second innings 😉

  The ads that come on TV to ‘invite’ people to the ‘yezhuchi’ maanaadu-s are equally hilarious..
  —-
  Hello..congress than poster adikudhu.thats ok.aana ippo MGR – katchi-ku apparpatta makkal thalaivar aayitar.Kalaignar-in nanbar avar.
  —-

  2011 looked like a cake walk for the present govt..but looks like it might hold surprises..lets see..

 5. Welcome Back.. :)

  நீங்க சொன்ன அனைத்துடனும் ஒத்து போகிறேன்..

 6. m.jayapal says:

  The fear of Pan Tamil movement is shaking our erstwhile Cheran tamils viz Keralites. They are the another wreckers of Tamil Elam movement. They think they are safe exploit bigger share of Indian cake if only India continues to be so called federal government. In the place of bramins ,keralites came to enjoy the power to the detriment of tamils.they donot know one they will get assimilated in tamil.

Leave a Reply