தமிழ் சினிமா : விமர்சன சூழலும் நாயகிகள் எனும் நுகர்வுப் பொருளும்

மத அடிப்படைவாதங்கள், தமிழ் தேசியம், பிராந்திய உணர்வு, என்று பல்வேறு பிரச்சினைகள் குறித்து பல்வேறு விதமாய் ஒவ்வொரு பத்தி எழுத்தாளர்களும், விமர்சகர்களும் கருத்துத் தெரிவித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தமிழ் சினிமாவின் விமர்சன சூழலைக் குறித்து யமுனா ராஜேந்திரன் எழுதியுள்ள “நகல் போலி சினிமா : தமிழ் விமர்சனச் சூழல்” இந்த கட்டுரை இதற்கான மறு பார்வையை எழுதச் சொல்லி எனக்குள் தூண்டியிருக்கிறது.

இந்திய சினிமா, குறிப்பாக தமிழ் சினிமா ஒரு மோசமான சூழலால் கட்டுண்டிருக்கிறது. இந்த, இந்த அபத்தங்கள் இப்போது ஆரம்பித்தது என்று குறிப்பிட்டுச் சொல்லுபடியாய் இல்லாமல், தொன்று தொட்டு நெடுங்காலமாய் இருந்து வந்துக் கொண்டிருக்கிறது. மறைமுகமாய் தமிழ் சினிமா, கலாச்சாரம் என்ற சொல்லாடலை உபயோகப்படுத்தி, மெல்ல மக்களிடையே ஏற்படுத்தி வைத்திருக்கும் கருத்தியல்களையும், அல்பத்தனமான உணர்ச்சிகளையும், இவை எவற்றையும் விட, விகாரமாய் நிறுவி வைத்திருக்கும் கட்டமைப்புகளையும் நாம் மறு விசாரணை செய்ய வேண்டிய அவசியத்திலிருக்கிறோம். சொல்லப்போனால் இதுவே வெகு தாமதம் தான். “Any how,It’s better late than never”.

யமுனா ராஜேந்திரனின் இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் பல விஷயங்களைக் கண்டிப்பாய் ஒத்துக்கொள்ள வேண்டியவைதான். அது தமிழ் சினிமா குறித்தான சரியான சொல்லாடல்கள் இல்லை எனும் கவலை, உலக சினிமா என்பதற்கு தமிழ் சினிமா அறிவு ஜீவிகளின் புரிதல், திரைப்பட விழாக்களின் பின்னாலான, வர்த்தக நோக்கம், திரைப்பட அமைப்புகள் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களின் பின்னே நிலவும் அரசியல், என்று பல விஷயங்களைச் சொல்லிக் கொண்டு போகலாம். இது குறித்தான அவரது புரிதல்களை அவர் வெளிப்படுத்தும் போது சினிமாவை நேசிக்கும் எந்த ஒரு மனிதனுக்கும், மேலதிகமாய் ஒரு கவலை ஏற்படும் என்பது உண்மையே.

ஆனால் இவரது இந்த கட்டுரையில் ஒரு சில இடங்களில் மட்டும் நாம் முரண்பட வேண்டி இருக்கிறது. “தமிழ் சினிமா விமர்சனச் சூழல் தனது அடிப்படையான தப்படியைக் கூட இன்னும் முன் வைக்கவில்லை.” என்று ஆரம்பித்து, இன்று ஒரு சிலரால் “தீவிர விமர்சகர்கள்” என்று கொண்டாடப்படுபவர்கள் மீதான இவரது காட்டமான விமர்சனங்களைக் குறித்து பேசும் போது நாம் சற்றே மாறுபட வேண்டியுள்ளது. அதற்குக் காரணங்களும் உள்ளது.

தமிழ் சினிமாவின் தற்போதைய அறுவறுப்பான சூழ்நிலைக்கு ஓர் முக்கிய காரணம் சரியான விமர்சன சூழல் இல்லாததும் கூட. இன்றும் எங்கள் ஊர்களில் திரை விமர்சனம் என்பது, சன் டீவியின் விமர்சனமாகவோ, குமுதம் அல்லது ஆ.வியின் விமர்சனமாகவோ மட்டுமே புரிந்துக் கொள்ளப்படுகிறது. சற்றே முன்னேறிய அல்லது கணிணி வல்லுநர்களுக்கு மேலதிக வாய்ப்பாக இணையத்தில் ஆங்காங்கு எழுதப்படும் பதிவுகள் மற்றும் ஏதேனும் பொழுது போக்குத் தளங்களின் விமர்சனங்கள் (இதற்கும் ஆ.வி டைப் விமர்சனத்திற்கும் அதிக வித்தியாசமில்லை) கிடைக்கிறது.

தமிழ் திரைப்படங்களுக்கு வெகு ஜன ஊடகங்களில் எழுதப்படும் திரை விமர்சனங்கள், பல்வேறு அரசியல்களினடிப்படையிலேயே மதிப்பிடப்படுகின்றன. குறிப்பிட்ட திரைப்படத்தின் இயக்குநர் அல்லது கதாநாயகன், போன்றவர்களுக்கும், சம்பந்தப்பட்ட ஊடகத்திற்குமிடையேயான நட்புறவினடிப்படையிலேயே இத்தகைய விமர்சனங்கள் எழுதப்படுகின்றன. உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம் 100 க்கு 40 மார்க் போடறேன் எடுத்துக்கோ என்ற தொனியில் எழுதப்படும் இத்தகைய விமர்சனங்களில் நிறைந்துள்ளப் போலித்தனங்களைப் பார்க்கையில் ஒரு வித ரௌத்ரம் ஏற்படுகிறது.

அறந்தை நாராயணன் போன்றோ ஏற்படுத்திக் கொடுத்த விமர்சன சூழல், சமீப காலங்களில்தான் மீண்டும் உயிர்ப்பெற்றுள்ளது. சாரு, அ.ராமசாமி, எஸ்.ரா, யமுனா, ப.திருநாவுக்கரசு, விஸ்வாமித்ரன், தியோடார் பாஸ்கரன்,வெங்கட் சாமிநாதன், வெங்கடேஷ் சக்ரவர்த்தி, காஞ்சனை சீனிவாசன், பாமரன், பிஸ்மி,போன்ற விமர்சகர்களும், திலகவதி, செழியன் போன்றோரின் உலக சினிமா பற்றிய நூல்களும் கொஞ்சமேனும் வாசகர்களுக்கு போய்ச் சேர்ந்திருக்கிறது. இவர்கள் ஒவ்வொருவரும் மார்க்சிய சார்பு, திராவிட சார்பு,அழகியல் விரும்புபவர்கள், விளிம்பு நிலை பார்வையாளர்கள்,என ஒவ்வொரு தளங்களில் இருந்து இயங்கிக் கொண்டிருப்பவர்களே. தான் சார்ந்த அரசியல் சித்தாந்தங்கள் இவர்களது விமர்சனங்களிலும் எட்டிப்பார்த்துக் கொண்டுதானிருகிறது.

அது எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் பராசக்தி குறித்த திராவிட பார்வையாகட்டும், அல்லது யமுனாவின் மார்க்சிய பார்வைகளாகட்டும் ஒவ்வொருவரும் தனது சார்பு நிலையை வெளிப்படையாகவே தெரிவித்து கட்டுரைகளும், விமர்சனங்களும், எழுதிக் கொண்டிருப்பவர்களே. இங்கே நெருடலே யமுனா இடது சாரி விமர்சனச் செயல்பாட்டை ஒட்டு மொத்தமாய் முன் நிறுத்தி, பிற அரசியல் சார்புகளையும், காலச்சுவடு எழுத்தாளர்கள் என்று சொல்லி தியோடார், அ.ராமசாமி போன்றவர்களயும், இன்ன பிற காரணங்களுக்காக எஸ்.ரா, சாரு போன்றவர்களையும் எளிதில் புறம் தள்ளுவதுதான்.

நிற்க. கருத்தியல் அடிப்படையில் இந்த விமர்சகர்கள் அனைவரும், எல்லா படங்களுக்கும், வெகு ஜனநாயகமான, முன் மதிப்பீடுகளற்ற, நடு நிலை விமர்சனங்கள் தான் எழுதி இருக்கிறார்கள் என்று நான் சொல்ல வர வில்லை. இந்த விமர்சகர்களின் ஒரு சில விமர்சங்களில் நிலவும் தேவையில்லாத காட்டமும், காட்சி ஊடகம் என்பதை மறந்து வெறுமனே தான் சார்ந்த அரசியல் சார்பை முன்னிறுத்தி, வெறுப்பினை உமிழும் சில சந்தர்ப்பங்களையும் நாம் அறிந்துதான் இருக்கின்றோம். இது யமுனாவிர்கும் பொருந்தும்.

தமிழ் சினிமா இப்போதிருக்கும் நிலையில், இவர்கள் செய்யும் சிறு சிறு பிழைகளை புறம் தள்ளி, இவர்களனைவரிடமிருந்தும், மேலதிகமாய் இன்னும் அதி தீவிர செயல்பாடுகளை வேண்டி நிற்கும் சூழ்நிலையில் நாம் நிற்கின்றோம். ஏனெனில் இப்போது (என்னைப் பொறுத்தவரை) நம் முன் விரவி நிற்கும் முக்கியப் பிரச்சினை விமர்சனங்கள் எத்தகைய தன்மையுடையதாய் இருக்க வேண்டும் என்பதே அல்ல. அதை விட பூதாகரமாய் தமிழ் சினிமாவின் அவலங்களும், அறுவறுப்புகளும் நம் முன் பல்லிளித்துக் கொண்டு நிற்கின்றன. அப்படி என்ன தமிழ் சினிமா சூழல் கட்டமைத்து விட்டது?? இதெல்லாம் சும்மா அளவுக்கதிகமாய் மதிப்பீடுகளைக் குறைத்து கூறும் ஒரு முயற்சி என்று எவரேனும் சொல்லலாம். ஆனால் இப்படியாய் நாம் கூறுவதற்கும் ஆதாரங்களாய் சில இருக்கத்தான் செய்கின்றன.

நடிகைகள் அல்லது சதை வியாபாரிகள்:

தமிழ் சினிமாவில் நடிகைகளை வெறும் நுகர்வுப்பண்டமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருவதை என்னால் ஒரு உச்சக்கட்ட அறுவறுப்பான ஒன்றாகவே பார்க்க முடிகிறது. பெண்ணியம் குறித்து பல்வேறு தளங்களில் விவாதங்களும் கேள்விகளும் எழுப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தனது உச்சகட்ட பாக்கியமாய்,”கதாநாயகனிடம் திட்டுக்களோ, அடியோ அல்லது இலவசமாய் தமிழ் கலாச்சரம் பற்றிய உபதேசங்களையும் வாங்கிக் கொண்டு, அவனது காலைச் சுற்றிக் கிடப்பதே” தனது லட்சியமாய் கொண்டு வாழும் அழகு பொம்மைகளையே கதாநாயகிகள் என்று தமிழ் சினிமா சூழல் நமக்கு ஒரு புனைவை ஏற்படுத்தி இருக்கின்றது. சத்யராஜ், சிம்பு,தனுஷ்,விஜய்,சரத்குமார் போன்ற கதாநாயகர்களின் பல திரைப்படங்களில் நாயகிகள் ஏதாவது ஒரு பாட்டில், நாயகனின் காலைச் சுற்றிக் கட்டியபடி உட்கார்ந்திருப்பார்கள். இதை மதிக்காத ஓர் தோரணையில் நாயகன் படு அலட்சியமாய், எங்கேயோ பார்த்த படி காலை விரித்த படி நின்றுக் கொண்டிருப்பான். இந்த இடத்தில் நாயகி தனது நடிப்புத் திறமைக்கு விடப்பட்ட சவாலாய் கருதிக் கொண்டு எவ்வளவுக்கெவ்வளவு விரகதாபத்தை தனது முகத்தில் காட்ட வேண்டுமோ அவ்வளவு தூரம் முயற்சித்து நடித்திருப்பார். மிஞ்சி மிஞ்சிப் போனால் அவருக்கு அந்த படத்தில் இதை விட சிறந்த ஓர் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் ஓர் இடம் கிடைக்குமா என்பது சந்தேகமே.

“உங்களுக்கெல்லாம் அம்மான்னு ஒரு ஸ்தானம் இல்லைன்னா மரியாதையே இருக்காது” என்று தனது காதலியைப் பார்த்து விஜய் ஒரு வசனத்தை பேசியிருப்பார். அப்படி கோபப்பட்டு கேவலமாய் நினைக்கும் எந்த ஒரு பெண்ணையும் தனது காதலியாய் அல்லது மனைவியாய் ஏற்றுக் கொள்ள ஓர் அடிமட்ட மடையன் கூட நினைக்க மாட்டான். ஆனால் தான் துரத்தித் துரத்திக் காதலிக்கும் ஒரு பெண்ணிடம் இது போன்று பல முறைகள் அந்த படத்தில் விளாசியிருப்பார். இந்த வசனம் சொல்லப்பட்ட போது, தியேட்டரில் இருந்த பெரும்பாலான கல்லூரி மாணவன்களும் மூச்சு விடாமல் ஆரவாரம் செய்தார்கள். தனது டார்கெட் ஆடியன்ஸை திருப்திப்படுத்தும் பொருட்டு தனது பெரும்பாலான படங்களில் இது போன்ற ஒரு சில சீன்களை தொடர்ச்சியாய் கையாண்டுக் கொண்டிருக்கிறார் விஜய். அவர் நடித்த சிவகாசி படம் இதற்கு இன்னொரு உதாரணம். எல்லாரும் கூடியிருக்கும் ஒரு கல்யாண மண்டபத்தில் ஒரு பெண்ணை Humiliate செய்வது என்பது சத்தியமாய் ஒரு பொறுக்கித் தனமான செயலே.எந்த ஒரு சுய மரியாதையுள்ள பெண்ணும், தன்னை அசிங்கப்படுத்தும் அப்படி ஒருவனை விரோதியாய்தான் பார்ப்பாளேயொழிய அவனுடன் கட்டிப் புரண்டு, காதல் செய்ய நினைக்க மாட்டாள்.

ஆனால் தமிழ் சினிமா இங்கு சுய மரியாதையுள்ள மற்றும் படித்த பெண்களை கர்வக்காரிகளாகவும், அகம்பாவம் மிக்கவர்களாகவும், ஏழைகளையும், முதியவர்களை மதிக்காத திமிர் பிடித்தவளாகவுமே நமக்கு அடையாளப்படுத்தி வருகிறது. பாலிவுட்டுடன் போட்டி போடக் கூடிய அளவுக்கு சிறந்ததாய் தற்போது விளங்குவது நம் கோலிவுட்தான் என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழ் சினிமாவின் பல்வேறு திரைப்படங்களில், “அய்யா நம்ம சின்னம்மா பட்டணத்துல படிப்பை முடிச்சுட்டு நாளைக்கு வர்றாங்களாம்” என்று சொல்லும் ஓர் ஒற்றை வரியைத் தொடர்ந்து தொடங்கும் கதாநாயகியின் அறிமுகம். அவரது அறிமுக காட்சியில் ஒன்று அவர் ஏதேனும் ஒரு சிறுமியையோ, அல்லது ஓர் முதியவரையோ கோபம் கொண்டு அறைவாள் அல்லது தனது காரை அரை நொடி கூட பிரேக் போடத் தயங்குபவளாய் ஏதேனும் ஓர் கோழியையோ, ஆட்டையோ சாகடித்துச் செல்லும், ஓர் அற்ப பிறவியாகவே காட்டி வருகிறது.

இப்போ எல்லாம் எங்கய்யா இப்படி படம் எடுக்கிறாங்க? அது எல்லாம் இப்போ இல்லை என்று கூற நினைப்பவர்க்கு நான் சொல்ல வருவது இதுதான். படித்த அல்லது தான் சார்ந்த துறையில் திறமை மிக்கவர்களாய் இருக்கும் பெண்களை இவ்வாறு கர்வக்காரிகளாகவும் அல்லது ஆண்களைக் கண்டாலே வெறுக்கும் ஓர் அகம்பாவக்காரிகளாவும் காட்டிக் காட்டியே தமிழ் சினிமா மக்களின் மனதில் விதைத்த நஞ்சுக்கள் ஏராளம். வெகு நிச்சயமாய் இது பெண்கள் குறித்தான ஓர் மறைவான கட்டமைவு ஏற்பட காரணமாய் இருந்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கும், வில்லனுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். வில்லன் “உன்னை கற்பழிக்கிறேன்” என்று சொல்லி கற்பழிப்பான். கதாநாயகன் “உன்னைக் காதலிக்கிறேன்” என்று சொல்லி கற்பழிப்பான். அவ்வளவே. உலக சினிமா தரத்திற்கு தமிழ் சினிமாவும் கொண்டுச் செல்லப்பட வேண்டும் என்று சொல்லி அதனடிப்படையில் நிகழ்த்தப்படவேண்டிய புற மாற்றங்களாகச் சொல்லப்பட்டு வரும் விஷயங்களில் முக்கியமானவை, 2 1/2 மணி நேரச் சினிமா என்பதிலிருந்து மாற்றுதல், காட்சிகளை இடைவேளைக்கு முன், பின் என்று பிரிக்காமல், இடைவேளையற்ற சினிமாவாக மாற்றுதல், பாடல்களற்ற சினிமாவை உருவாக்குதல் என்று பல்வேறு விஷயங்களை விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள். ஆனால் பாடல் காட்சிகளில்லா சினிமாவை எவர் ஏற்றுக் கொள்ளக்கூடும். தனக்கு பிடித்த நாயகியின் பல்வேறு தாபங்களையும், கணவனின் முன் மனைவி கூட செய்ய யோசிக்கும் உடல் அசைவுகளயும், க்ளோசப் ஷாட்டில் நாயகியின் அங்கங்களையும், காதல் விளையாட்டுகளையும் பார்த்து கிளர்ச்சியுறும் கூட்டமாய், ஒரு சமூகத்தையே, தமிழ் சினிமா மாற்றி வைத்திருக்கும் இந்த சூழலில், பாடல்களில்லாமல் திரைப்படங்களா???? “போங்கடா போய் பொழப்பைப் பாருங்கடா” என்று தமிழ் சினிமா ரசிகர்கள் கோபம் கொள்ளக்கூடும்.

தமிழ் சினிமா, தனது ரசிகர்களுக்கு செய்த ஒரு பெரும் தொண்டு, அவர்களை “விசிலடிச்சான் குஞ்சுகளாக” மாற்றி வைத்திருப்பதுதான். சந்திரமுகி திரைப்படத்தில், ரஜினியைப் பார்த்து, நயன்தாரா “இப்போ பேசாம போ…. போ” என்று ஒருமையில் பேசுவார். இந்த காட்சி வரும் போது தியேட்டரில் பாதி பேருக்கு மேல் “ஏய்ய்ய்ய்ய்” என்று கத்த ஆரம்பித்து விட்டார்கள். தனது ரசிகர்களின் உச்ச கட்ட ரசனையை தெரிந்துதானோ என்னவோ, அவர்களை சமரசம் செய்ய, ரஜினியும், நயனைப் பார்த்து அடுத்த காட்சியில் “போடி” என்று சொல்லி விட்டுப் போவார். அதன் பின்பே எங்கள் ரசிகர்கள் தலைவர் பழி வாங்கிட்டார் என்ற அல்ப உணர்ச்சியுடன் சமாதானமடைவார்கள். தமிழ் சினிமா கட்டமைத்த இத்தகைய ரசனையான சூழலிற்கு வெகு நிச்சயம் வெட்கப்பட வேண்டும்.

தாலி, கற்பு,கலாச்சாரம் என்ற பெயரில் தமிழ் சினிமா பெண்களுக்கும், கதாநாயகிகளுக்கும் மட்டும் என்று கட்டமைத்திருக்கும் விதிகள் ஏராளம். தாலி என்ற ஒன்று மட்டும் இல்லாவிட்டால், பாதி இயக்குநர்கள் திரைப்படங்களே எடுத்திருக்க முடியாது. இவர்கள் தாலியை வைத்து இன்னும் பம்பரம் விடாதது மட்டும்தான் பாக்கி. நாயகி தனது தாலியை அவிழ்த்தெறியும் போது, அடிக்கின்ற கடல் அலைகள் நின்று விடுகின்றது, கூடு திரும்பும் பறவைகள் பறப்பதை நிறுத்தி விடுகின்றன, “அய்யோ ஒரு கோபத்தில் நான் தாலியை அவிழ்த்தெறிந்து விட்டேனே” என்ற எண்ணத்தில் நாயகி கதறி அழுகின்றாள்….டேய் என்னதாண்டா பிரசினை உங்களுக்கு?? நீங்க எல்லாம் நார்மலாவே படம் எடுக்க மாட்டீங்களா என்று நாம் கதற வேண்டியதாயிருக்கிறது. நாயகியின் தொப்புளை வைத்து என்ன என்ன செய்யலாம் என்று ஆராய்ச்சி செய்தது போல், தாலியை வைத்து எப்படி எப்படி எல்லாம் செண்டிமெண்டுகளை உருவாக்கலாம் என்று இவர்கள் யோசித்து வைத்திருந்திருக்கிறார்கள். அதன் உச்ச கட்டமாக குஷ்பூ ஒரு படத்தில் தாலியால் ஒருவனை கொலையும் செய்கிறார்.

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு வரை கற்பழிப்பு என்பதற்கான தண்டனையாய் நம் தமிழ் சினிமா கிராம பஞ்சாயத்துக்கள் வழங்கி வந்த தீர்ப்பு, “கெடுத்தவன் பொண்ணைக் கட்டிக்கணும்”. ஒரு பொண்ணை நமக்கு பிடிச்சுப் போச்சுன்னா, அவளுக்காக அலைய வேண்டிய தேவையில்லை. காதல் கடிதம் எழுதி, அவள் வரும் பஸ் ஸ்டாப்பில் காத்திருக்க வேண்டிய தேவையில்லை. “உன்னைத் தவிர வேறொரு பொண்ணை ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்” என்று வசனம் பேசத் தேவையில்லை. ஏன் அவளுக்கு ஒரு ஐஸ் க்ரீம் வாங்கிக் கொடுக்கக் கூட தேவையில்லை. வேறு என்ன செய்யலாம்? ரொம்ப சிம்பிள், அவளைக் கெடுத்துடலாம். அது எப்படி அவ்வளவு சாதாரண விஷயமா? அவள் தனியே இருக்க வேண்டுமே அதற்கு என்கிறீர்களா?? அடப் போங்க சார், கல்லூரி லைப்ரரி, ஊர் ஆத்தங்கரை, சவுக்குத் தோப்பு எல்லாம் எதற்கு இருக்கிறது? அங்கே தாராளமாய் துரத்திப் பிடித்துக் கற்பழித்துக் கொள்ளலாம். சுடுகாட்டுல கூட ஒண்ணு ரெண்டு பேரை நீங்க பார்த்து விட முடியும். எங்கள் ஊர் தமிழ் சினிமாக்களில் வரும் இத்தகைய இடங்களில் மட்டும் நாய் கூட கண்ணில் படாது. இங்க இன்னொரு விஷயமும் இருக்கு, அந்த பொண்ணை நீங்க காதலிக்கிறேன்னு சொன்னீங்கன்னா ஊரே ஒண்ணு கூடி அருவாளைத் தூக்கிட்டு வந்து உங்க காதலை எதிர்க்கும். மாறா அவளைக் கற்பழிச்சுட்டேன் என்று சொல்லி விட்டீர்களானால், ஊரே ஒண்ணு கூடி இருவரையும் சேர்த்து வைத்து விடும்.

கற்பழிப்பு என்ற சொல்லாடலின் மூலம் தமிழ் சினிமா தமிழ் பெண்களுக்கு ஒரு மிகப் பெரிய கட்டமைப்பை ஏற்படுத்த முயற்சி செய்துள்ள்ளது. கற்பு கெட்டுப் போச்சுன்னா அவ தற்கொலை செஞ்சுக்கணும். வீரம் வெளைஞ்ச மண்ணு படத்தில விஜயகாந்த் “என் தங்கச்சி எவனாலோயோ கெடுக்கப்பட்டான்னு ஊர் சொல்லக்கூடாதுடா” என்று சொல்லி வில்லனை அடித்து கெடுத்து, சாகடிக்கப்பட்ட தனது தங்கையின் கழுத்தில் தாலியைக் கட்டச் சொல்லுவார். இந்த காட்சி காட்டப்பட்ட போது, விஜயகாந்த், பார்வையாளர்கள், தியேட்டர் ஆப்பரேட்டர், தியேட்டருக்கு வெளியே, விளக்குக் கம்பத்தில் காலைத் தூக்கி சிறுந்ர் கழித்துக் கொண்டிருந்த நாய் என எல்லாருமே கண்ணீர் வெள்ளத்தில் மிதந்தனர்.

சரி இப்போ எல்லாம் இது போன்ற படங்கள் முற்றிலுமாய் குறைந்து விட்டனவே. தமிழ் சினிமா ஒன்றும் அவ்வளவு மோசமான சூழலில் இல்லை. இது எல்லாம் உங்களை மாதிரி, மசாலா படங்களை ரசிக்கத் தெரியாதவர்கள் பேசும் உளறல் என்று எவரேனும் சொல்லலாம். காட்சியமைப்புகள்தான் மாறியிருக்கின்றனவே தவிர, கட்டமைப்புகள் மாற வில்லை. இன்றும் ஹரி, பேரரசு பட நாயகர்களால், தமிழ் பொண்ணுன்னா எப்படி இருக்கணும் தெரியுமா? என்று ஆரம்பித்து, நாயகியிடம் அறிவுரை கூறும் வசனங்கள் இடம் பெறத்தான் செய்கின்றன. இதைச் சொல்ல ஆண் என்ற ஒரே ஒரு தகுதி மட்டும் போதும் கதாநாயகனுக்கு. வேறெதுவும் தேவையில்லை.

பெண்ணின் உடலை மையமாய் வைத்து விவாதங்களும், வன்முறையும், கலாச்சார மாற்றங்களும் இங்கே தொடர்ச்சியாய் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெண்ணின் உடலை ஒரு துய்ப்புக்களமாய் உபயோகித்துக் கொண்டிருக்கும் ஒரு அவலம் தொடர்ச்சியாய் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. உடலரசியலினடிப்படையில் இதைப் பார்க்கும் போது இதன் பின்னே நிலவும் நுண்ணரசியலும், அவை நிறுவ முயல்வதும் நமக்கு புலப்படும். தன்னுடைய உடலை, அங்கங்களை (exhibitionism) வெளிக்காட்டி ஒரு ஆணை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி செய்யும் ஒவ்வொரு முறையும், பெண் மறைமுகமாய், தன்னுடைய உடல் கூறுகளை வெளிச் சொல்லி, “ஒரு பெண்ணை அசிங்கப்படுத்த, அவளது உடலடிப்படையில் மேற்கொள்ளும் தீண்டல்களே போதும்” எனும் கட்டமைவை தமிழ் சினிமா மறைமுகமாய் ஏற்படுத்தி இருக்கின்றது. அப்படி இல்லா விட்டால், நம்மால், நாயகியை நாயகன் உடலளவில் அசிங்கப்படுத்தும் காட்சிகளைப் பார்த்து சுரணையில்லாமல் ரசித்துக் கொண்டிருக்க முடியாது.

தமிழ் சினிமாவில் திருமணத்திற்கப்புறம் நடிக்கும் நாயகிகளின் எண்ணிக்கையை சொல்லி விடுங்கள் பார்க்கலாம். இதன் பின்னே ஒளிந்திருக்கும் பச்சையான ஆதிக்க உணர்வுகளை, உடல் ரீதியான தமிழ் சினிமாவின் அவலத்தை எவரேனும் புரிந்துக் கொள்ள மறுக்கிறோம் என்றால், நாமும் நமது சுய தேவைகளுக்காக பெண்களை உபயோகப் படுத்திக் கொள்வதில் தவறில்லை என்று கருதும், ஓர் அப்பட்டமான ஆதிக்கவாதிதான் என்றுதான் அர்த்தப் படுத்தத் தோன்றுகிறது எனககு.

நமீதா,ஸ்ரேயா, மாளாவிகா, மும்தாஜ், ரம்யா, வேதிகா போன்ற இததகைய கதாநாயகிகளைப் பார்க்கும் போது ஒரு வித பரிதாப உணர்வே வருகிறது. இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு இவர்கள் தமிழ் சினிமாவில் நாயகிகள் என்று சொல்லிக் கொண்டு வலம் வந்துக் கொண்டிருக்கலாம். திரைப்படம் சார்ந்த விழாக்களில் முடியும் வரை குறைவான ஆடைகளை அணிந்துக் கொண்டுப் போய், கேமெராக்களை தன் பக்கம் திருப்புமாறு செய்யலாம். நடு நடுவே அருவிக்கரையிலோ அல்லது வயல் வரப்பிலோ (எந்த இடமாய் இருந்தால் என்ன), முழுதாய் வேட்டி சட்டையையோ, பேண்ட் சட்டையையோ அணிந்த நாயகனுடன் பிகினியுடன் “எந்த மரத்துக் கட்டை நீ” என்பது போன்ற வரிகளுடன் ஆரம்பிக்கும் பாடலுக்கு சிரித்த படியே நடனமாடலாம். உன்னை பார்த்து பார்த்து சலித்து விட்டது என்று தமிழ் ரசிகர்கள் இன்னொரு கதாநாயகியிடம் மையல் கொள்ள ஆரம்பிக்கும் நேரத்தில், தெலுங்குப்படத்திற்கோ அல்லது ஏதேனும் ஒரு தொழிலதிபரையோ பார்த்து கல்யாணம் செய்து கொள்ளலாம்.

இத்தனை வருடம் லைம் லைட்டிலேயே இருந்துக் கொண்டு திடீரென்று ஒரு வீடும், காரும் ஷாப்பிங்கும், சமையலறை வேலைகளும் மட்டுமே தனது உலகமாய் மாறிப்போனதனலான உளவியல் மாற்றங்களை நாயகி சரிவர புரிந்துக் கொண்டால், அவருடைய மண வாழ்க்கையாவது நிம்மதியாயிருக்கும். இல்லையெனில் குடும்ப நல கோர்ட்டுகளில் ஒரு வழக்கை அதிகப்படுத்தி இன்னும் சில நாள் மீடியாக்களின் காமெராக்களில் வலம் வரலாம். பின்பு அக்கா வேடம், சின்னத்திரை நாயகி வேடம் என்று தனது வாழ்க்கையை ஒரு முற்றுப் பெறா பயணமாகவே முடித்துக் கொள்ளலாம். ஆண்டுக்கு குறைந்தது மூன்று கதா நாயகிகளாவது தற்கொலை செய்து கொள்வதன் பின்னாலான உளவியல் மற்றும் உடல் சார் பிரச்சினைகளை ஏனோ தமிழ் சினிமா புறக்கணித்தே வந்துக் கொண்டிருக்கிறது.

இப்பொழுதெல்லாம், “எனக்கு ரொம்பப் பிடிச்சது, என்னோட டெட்டி பியர்தான்” என்று சிணுங்கிக் கொண்டே பேட்டி தரும் கதாநாயகிகளைப் பார்க்கையில் இரக்க உணர்வும், பரிதாபமும் மட்டுமே மிஞ்சி நிற்கிறது.

பி.கு: சினிமா விமர்சகர்கள் குறித்தான காட்டமான பார்வைக்கு மறுமொழியாய் ஆரம்பித்த இந்த கட்டுரை நாயகிகளின் அபலைத்தனத்தில் வந்து முடிந்திருக்கின்றது. தமிழ் சினிமாவில் நிரம்பி இருக்கும் அபத்தங்களின் ஆரம்பம்தான் இது.இன்னும் இதைத்தாண்டி விமர்சகர்களின் பல்வேறு சார்பு நிலைப்பாடு குறித்தும், பெண்கள் பிரச்சினைகளைத் தவிர்த்து, பொது வெளியில் தமிழ் சினிமா ஏற்படுத்தி இருக்கும் வேறு சில அற்பத்தனங்கள் குறித்தும், கலாச்சார மற்றும் பாசிச உணர்வுகள் குறித்தும் தொடர்ச்சியாய் அடுத்த பகுதியில் பேசுவோம்.

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

நந்தா, என்ன ஆச்சு? நல்லாத் தான இருந்தீங்க :) இது நீங்க எழுதினது தானா? உங்கள் மற்ற இடுகைகளுக்கும் இதுக்கும் அந்த அளவு நடை வேறுபாடுகள் !!

அப்புறம், நீங்கள் குறிப்பிட்ட திருமண மண்டபக் காட்சி போக்கிரியில் இல்லை. சிவகாசியில் :)

//நமீதா,ஸ்ரேயா, மாளாவிகா, மும்தாஜ், ரம்யா, வேதிகா போன்ற இததகைய கதாநாயகிகளைப் பார்க்கும் போது ஒரு வித பரிதாப உணர்வே வருகிறது.//

இதைச் சொல்லி PKSஇடமோ, இல்லை இளவஞ்சியிடமோ சரியாய்த் திட்டு வாங்கியிருந்தேன். திட்டுவாங்கியது நினைவில் இருக்கிறது யாரென்று மறந்துவிட்டது.

நீங்க நல்லாயிருங்க! :)

//அப்புறம், நீங்கள் குறிப்பிட்ட திருமண மண்டபக் காட்சி போக்கிரியில் இல்லை. சிவகாசியில் :) //

ரவி, எல்லாம் ஒரே மாதிரியே இருக்கா???? அதான் குழப்பமாயிட்டேன். (எப்படி நல்லா சமாளிக்கிறனா???) :)

//இது நீங்க எழுதினது தானா? உங்கள் மற்ற இடுகைகளுக்கும் இதுக்கும் அந்த அளவு நடை வேறுபாடுகள் !!//

தெரியலை ரவி இது குறித்தான ஒரு கோபம் ரொம்ப நாட்களாகவே என் மனதுள் இருந்துக் கொண்டிருந்தது. ஒருவேளை அதனால் வெளிப்படும் விதம் மாறி இருக்கலாம். விமர்சகர்களைக் குறித்து வரும் அடுத்த பகுதியில் ஒரு வேளை, சற்று மேம்பட்டு வெளிப்படலாம்.

இன்னா வாத்தியாரே, எங்களோட ரசனை மேம்பாட்டுக் தான் நாங்க ஆங்கில திரைப்படம் பார்க்கிறோமில்ல.. :P

அது என்னவோ தெரியல்ல, ஆங்கிலப்படும் என்றால், பாடல் காட்சிகள் இல்லாமல் பார்க்க முடிகின்றது(அனனத்து தரப்பு இல்லை என்றாலும் 60-70%) . ஆனால், அங்கேயும் இடைவேளை விடுறாங்க பெரும்பாலும்.

நீ கேட்டே, நான் கொடுத்தேன்..நீ கொடுத்தே நான் பார்க்கிறேன் என்ற சமாளிப்பிலே ஓடுகிறது. ரஜினியின் ஆளுமை துணை இருக்கும் போதும், மீனாவின் தொப்புளை ஒரு பாடலில் தொடர்ச்சியாக காட்டி படம் எடுக்கிறார்கள் என்றால், அதன் நோக்கம் பணம் செய்வது மட்டுமில்லை. நெறியாளர்களின் வக்கிரமும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அற்பத்தனத்தின் உச்சங்களில் ஒன்று, கதாநாயகிகளின், மார்பை, பல் வேறு கோணத்தில் திரையில் காட்டுவது. கதாநாயகிகளின் தாவனியோ, சேலையோ, சரியாக ஒரு மார்பை மட்டுமே மூடுவது. (இதில் சேலை அணியாமல் இருக்கக் கூட அவர்களுக்கு உரிமை இருக்கு, ஆனால், முடி மூடாமல் காட்டும் அரசியல், கவனிக்கத்தக்கது.)

dear nandha- first up all thanks for responding my article
i appreciate your views when differing me you maintained the ‘civilized language’not like suresh kannan, who wrote an ‘awkward’ comment on my whole critical wrtings ( wife’s jacket and hook and so on ) – not a single ’specific’ references to any of my writings.any how,i think you missed my context of my articel,esraa charu and theodore bhaskaran ‘comparitively’ writing in ‘mainstream’ press( ’sidelining’ what is happening in the ‘periphery’ of tamil cinema) and i am writing ‘with in the periphery’ and my articel is ‘ideological and political’which is missing in their writings. anpudan rajendran.

அன்பு நந்தா…

மிகத் தீவிரமான வாசிப்பனுபவமும், நிஜமான கோபமும் உண்டெனில் மாத்திரமே இதுபோன்ற கட்டுரைகளை வடிக்க முடியும். இந்த கட்டுரை காட்டும் சுட்டியின் வழியே நிறைய வாசிக்கக் கொடுத்துள்ளீர்கள் மிக்க நன்றி.

சமீபத்தில் சில திரைப்படங்களை பார்த்துவிட்டு ஏதேனும் விமர்சனம் எழுதி விடாமா என்று யோசித்துக்கொண்டிருக்கையில், இவை போன்ற படங்களுக்கு நாமும் விளம்பரம் தரவேண்டுமா என்ற கேள்வி தோன்றி என்னை மாற்றிவிட்டது (நண்பர்கள் தப்பித்தார்கள்). யாரடி நீ மோகினி பார்த்தபின், ஏனோ ஓர் அசூயை உணர்வு ஏற்பட்டது. இதுதான் திரைப்படத்திற்கான கட்டமைவா என்று வினா எழும்பியது. சமீப காலமாக, முருகனடிமை அவர்களின் தூண்டலால் ICAF அமைப்பில் உறுப்பினராகி சில உலக திரைப்படங்களை கண்டு வருகிறேன். அவை நம்மை அழைத்துப்போகும் தளங்களை நமது படங்களில் மிக மிக அரிதாகவே பார்க்கிறேன். பேரரசு போன்ற களைகள் அதிகரித்து வருவதும் மிகுந்த வேதனையளிக்கிறது.

கதைக்காக என்று கதைவிட்டுக் கொண்டு அரிய, புதிய காம சித்து விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தி வரும் நம் இயக்குனர் குழாம் மிகவும் பாராட்டத்தக்கது (முதுகில் சோப்பு போடும் உச்சகட்ட அசிங்கத்தை நிகழ்த்திய எஸ்.ஏ.சந்திரசேகர் குழுவை மன்னிக்கவே முடியாது). படங்களின் தரத்திற்கு அவர்களே முழுமுதல் காரணகர்த்தாக்கள். அவர்களின் சிந்தை தடுமாற்றத்திற்கு நம்மைப் போன்றோர் பலிக்கடாவாவதோடு மட்டுமின்றி ஒரு தவறான முன்னுதாரணமாக அடுத்த தலைமுறைக்கு சில படங்கள் அமைந்து விடுகின்றன. பணம் செய்வதற்காக ஆயிரம் வழிகள் உள்ளபோது சமுதாய அக்கறை சிறிதும் இன்றி, சிறிதளவான மனசாட்சி சார்ந்த பயமின்றியும், தங்களுடைய வாழ்க்கை முன்னேற்றம் மட்டுமே பிரதானம் என வரித்துக்கொண்டு குப்பைகளைக் கொட்டும் வியாபாரிகளை நாம் இனங்கண்டு விரட்ட வேண்டும். அடுத்த தலைமுறைக்கு அடிப்படைகளை கற்றுத்தர வேண்டும்.

மிகத்தீவிரமாக தெளிந்த நீரோடையையொத்து வரும் உங்கள் கட்டுரையில் உங்களின் அங்கத உணர்வு மிக அழகாக அமைந்திருக்கிறது. ஒரு சீரிய கருத்தாழம் தேடும் கட்டுரையில் அழகான நகைச்சுவை வரிகளும் இணைந்து வாசிப்பை ஓர் அதியற்புத அனுபவமாக மாற்றுகின்றன.

எ.கா. 1

இந்த காட்சி காட்டப்பட்ட போது, விஜயகாந்த், பார்வையாளர்கள், தியேட்டர் ஆப்பரேட்டர், தியேட்டருக்கு வெளியே, விளக்குக் கம்பத்தில் காலைத் தூக்கி சிறுந்ர் கழித்துக் கொண்டிருந்த நாய் என எல்லாருமே கண்ணீர் வெள்ளத்தில் மிதந்தனர்

எ.கா. 2

முழுதாய் வேட்டி சட்டையையோ, பேண்ட் சட்டையையோ அணிந்த நாயகனுடன் பிகினியுடன் “எந்த மரத்துக் கட்டை நீ” என்பது போன்ற வரிகளுடன் ஆரம்பிக்கும் பாடலுக்கு சிரித்த படியே நடனமாடலாம்

நல்லதொரு வாசிப்பனுபவம் தந்த உங்களுக்கு என்றென்றும் என் நன்றிகள்

பேரன்புடன் நித்யகுமாரன்.

//ஆனால், அங்கேயும் இடைவேளை விடுறாங்க பெரும்பாலும்.//

இல்லை டி.பி.சி.டி இந்த இடைவேளை சினிமா அரங்கத்தினர் தனது திண்பண்ட வியாபாரங்களுக்காக, வலிந்து கொடுக்கும் ஒரு ப்ரேக் என்றுதான் சொல்ல வேண்டும்.

திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் நம் ஊர் திரைப்படங்களை இடைவேளை இல்லாமல்தான் திரையிடுகின்றனர். அப்போது அந்த பார்வையாளர்களுக்கு, திடீரென்று இடைவேளையின் போது வரும் திருப்பம் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. சீராகப் போய்க் கொண்டிருக்கும் ஒரு திரைக்கதையில், எதற்காக இப்படி ஒரு அதிர்வினை ஏற்படுத்தி குறைக்கும் ஓர் திரைக்கதை என்று குழம்புகிறார்கள்.

//நீ கேட்டே, நான் கொடுத்தேன்..நீ கொடுத்தே நான் பார்க்கிறேன் என்ற சமாளிப்பிலே ஓடுகிறது. ரஜினியின் ஆளுமை துணை இருக்கும் போதும், மீனாவின் தொப்புளை ஒரு பாடலில் தொடர்ச்சியாக காட்டி படம் எடுக்கிறார்கள் என்றால், அதன் நோக்கம் பணம் செய்வது மட்டுமில்லை. நெறியாளர்களின் வக்கிரமும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அற்பத்தனத்தின் உச்சங்களில் ஒன்று, கதாநாயகிகளின், மார்பை, பல் வேறு கோணத்தில் திரையில் காட்டுவது. கதாநாயகிகளின் தாவனியோ, சேலையோ, சரியாக ஒரு மார்பை மட்டுமே மூடுவது. (இதில் சேலை அணியாமல் இருக்கக் கூட அவர்களுக்கு உரிமை இருக்கு, ஆனால், முடி மூடாமல் காட்டும் அரசியல், கவனிக்கத்தக்கது.)//

ஒத்துப் போகிறேன். இதைத்தான் நானும் பேசி இருக்கிறேன். நன்றி.

Very good article.

Izzath

நந்தா உங்களின் கருத்து என்னை மிகவும் யோசிக்கவைத்தது. இந்த அவலத்தை போக்க என்ன வழி?. இப்போதைக்கு இம்மாதிரி படங்கள் பார்த்து வருவதை நிறுத்தலாம் என்றிருக்கிறேன்

தமிழ் திரைபடங்களின் கதைகளத்தில் பெரிதாக மாற்றம் இன்னும் வரவில்லை என அடித்து கூறலாம்.இதனாலேயே மேற்சொன்ன அனைத்தும வகிரங்களும் அரங்கேறுகின்றன.
Chak de! பார்க்கும் பொழுது பொறாமையாக இருந்தது.

நல்ல பதிவு.

சொல்ல மறந்துவிட்டேன், நேர்த்தியான வார்த்தைகளின் தொகுப்பாக இருந்தது கட்டுரை

//மணிரத்தினத்தின் ‘ஆயுத பூஜை‘க்குப் பின்னாடி ‘அமரோஸ் பெரோசு’ம், வேட்டையாடு விளையாடுவுக்குப் பின்னாடி ‘டீரெயில்டும்’ சங்கரின் ‘வெயிலு’க்குப் பின்னாடி ‘சினிமா பாரடைஸே’வும் இருக்கிறது என்கிற நிஜத்தைக் கூட நாணயமாகச் சொல்லாதவர்கள்தான் தமிழ் சூழலில் புதிய சினிமாவைப் படைப்பவர்கள் என அறியப்பட்டிருக்கிறார்கள் என்பது இன்னொரு மகத்தான சோகம்.
//

பச்சைகிளி முத்துசாரம் படமே ‘Derailed’ ஐ தழுவி எடுக்கபட்டது என நினைக்கிறேன்

//dear nandha- first up all thanks for responding my article
i appreciate your views when differing me you maintained the ‘civilized language’//

நன்றி யமுனா.

//any how,i think you missed my context of my articel,esraa charu and theodore bhaskaran ‘comparitively’ writing in ‘mainstream’ press( ’sidelining’ what is happening in the ‘periphery’ of tamil cinema) and i am writing ‘with in the periphery’ and my articel is ‘ideological and political’which is missing in their writings. anpudan rajendran.//

இல்லை யமுனா, இந்த கட்டுரை இன்னும் முடிந்து விட வில்லை. இதன் தொடர்ச்சி இன்னும் இருக்கிறது. விமர்சகர்களின் ஒரு சில தவறுகள் உட்பட நான் சொல்ல வேண்டியவை இன்னும பல இருக்கின்றது.

எஸ்.ரா,சாரு, தியோடார் போன்றோரின் விமர்சனங்கள் ஒரு கோட்பாடற்று இருக்கின்றன என நீங்கள் சொல்ல வருவதை உணர முடிகிறது. நான் சொல்ல வருவது, அதையும் தாண்டிய இவர்களைப் போன்றோரின் தேவை இன்னும் தமிழ் சினிமாவிற்கு இருக்கிறது என்பதே. விரிவாய் அடுத்த பகுதியில் பேசுகிறேன். நன்றி.

நந்தா,

நடிகைகள் குறித்த அறச்சீற்றமே உங்களின் கட்டுரையின் முக்கியத் தொணியாக உள்ளது. யமுனாவின் கட்டுரை சில எழுத்துவியாதிகளின் (மன்னிக்க என்னால் இப்படித்தான் சொல்ல முடிகிறது) முரண்களைப் பேசுகிறது.

உங்கள் பதிவில் சொல்லப்பட்டு இருக்கும் கருத்துக்கு மட்டும் சில எதிர்வினைகள்.

**

சமீபத்தில் சென்னை மாநகராட்சி ரோட்டில் ஒண்ணுக்குப்போனால் (நாய்களுக்கு அல்ல) அபராதம் என்ற ஒரு சட்டம் கொண்டுவந்ததாக நினைவு. ( அமுல்படுத்தப்பட்டு விட்டதா???).
மாநகரில் பயணிக்கும் ஒருவனுக்கு ஒண்ணுக்கு வந்தால் என்ன செய்வான்? அதிக பட்சம் அவனால் 30 நிமிடங்கள் தாக்குப்பிடிக்க முடியுமா? அதற்குள் அவன் ஒண்ணுக்கு போயே அக வேண்டும் என்பது இயற்கையின் விதி. அந்த நிலையில் அவன் சுகாதரமாகச் செல்ல 30 நிமிட தூரத்தில் கழிப்பறை வசதி இருக்க வேண்டும். அதை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டுத்தான்…. ரோட்டில் ஒண்ணுக்குப்போனால் அபராதம் என்ற ஒரு சட்டம் கொண்டுவரப்படவேண்டும்…. முதலில் சட்டப்படி நடக்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்துவிட்ட்டுத்தான் சட்டத்தை மீறுவோரைக் கண்காணிக்க வேண்டும். அதுதான் முறை.

அப்படி இல்லை என்றால் சட்டம் எதற்கும் பயன்படாமல் போய், விதி விலக்கே சட்டமாய் இருக்கும்.

**

தமிழகத்தில் பாலியல் வறட்சி இருப்பது உண்மை. குடி தண்ணீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி எப்படி பாட்டில் நீர் சந்தைப்படுத்தப்படுகிறதோ, அது போல பாலியல் வறட்சியைப் பயன்படுத்தி, பெண்களின் உடல் மற்றும் அது சார்ந்த அசைவுகள் சந்தைப்படுத்தப்படுகிறது. நன்றாகவும் விற்கிறது. உச்சகட்ட போர்னோ மூவ்களை சேலையின் வழியாகவே , எந்த ஆடையையும் அவிழ்க்காமலேயே பாடல் என்ற பெயரில் வைத்துவிடுவார்கள்.

எது நிஜத்தில் இல்லையோ அதை திரையில் விற்க முடிகிறது. பாட்டில் நீரைக் குறை சொல்வதி விட , இயல்பாக கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்க வழி செய்ய வேண்டும்.

எத்தனை பள்ளிகளில் ஆணும் பெண்ணும் அருகருகே அமர அனுமதிக்கிறார்கள்? பேருந்தில் ஒரு பெண் பக்கத்தில் இடமிருந்தாலும் ஆண் உட்கார முடியாது.

***

நீங்கள் வேண்டுமானால் show business -ல் உள்ள பெண்களை நினைத்து வருந்தலாம். ஆனால் உண்மையில் அவர்களில் திறமையானவர்கள் பல இடங்களில் நன்றாகவே இன்னும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். பெரும்பாலனவர்கள் வாழ்க்கையையும் , தொழிலையும் தனியே பார்க்க தெரிந்து வைத்து இருக்கிறார்கள். எனவே இது அவர்கள் விரும்பிச் செய்யும் செயல். ஒரு தொழில். ஒப்பந்தப்படிதான் நடிக்கிறார்கள்.

பாலியல் வறட்சி இருக்கும் காரணத்தினால்தான், சராசரி இரசிகன் தனது கனவுக்கன்னி தூங்கி எழுந்தாலும் Full மேக்கப்பில் இருக்கவே விரும்புகிறான். பாலியல் வறட்சி இல்லாத காரணத்தினேலேயே, ஹாலிவுட்டில் தூங்கி எழும் நாயகி இயற்கையாக கந்தலாகவே காட்டப்படுகிறாள். அவர்கள் பல் விலக்குவதும், எச்சில் துப்புவதும் நேரடியாக காட்டப்படும்.தமிழில் முன்னனி நடிகை யாரும் , காலையில் எழுந்த கோலத்தில், பல்லை மேலும் கீழும் விளக்கி, எச்சி துப்பி நடிக்க முடியாது. அவர்கள் எப்போதும் அழகாகவே காட்டப்படவேண்டிய நிர்ப்பந்தம். ஹாலிவுட்டில் படங்களில் நாயகிகள் குசுவும் விடுவார்கள் திரையில்.

இங்கே அப்படியெல்லாம் நடக்காது , ஏன் என்றால், ஒரு சராசரி மனிதனுக்கு பெண்களின் அருகாமை விலக்கப்பட்டே வருகிறது. அது கிடைக்காதலால் கனவில் திரைக் கன்னிகளுடன் இவன் வாழ முற்படுகிறான். அவர்கள் தேவதைகளாகவே இருக்கவேண்டிய நிர்ப்பந்தம். மேலும், இரசிகனின் பாலியல் வறட்சிக்கு தீணி போட்டேஆக வேண்டிய கட்டாயம். அதிலும் அவள், மணமாகிவிட்டாள் இரசிகன் விலகிவிடுவான்.அந்தக் கொடுமைக்காகவே இவர்கள் செய்த திருமணத்தைக்கூட மறைக்கவேண்டிய அவலம். ஹாலியுட்டில் பத்து கல்யாணம் செய்தாலும் , இரசிகன் அவளின் சொந்த வாழ்க்கையையும், அவளின் திரைக்கவர்சியையும் குழப்பிக் கொள்வது இல்லை.சிம்ரனுக்கு திருமணம் ஆன பின் , நடிப்பு என்ற விசய்த்தில் என்ன குறை வந்துவிட்டது? அவர் தொலைக்காட்சிப்பக்கம் ஒதுங்கி விட்டார்.

சின்னத்திரைகளும் விலக்கல்ல. மடிப்புக்களையாத சேலை அணிந்த பெண்களும் ஆண்களும்தான் எல்லா சீன்களிலும் உள்ளார்கள். Everybody loves Raymond என்ர ஒரு ஆங்கில தொடர் பார்த்திருபீர்களேயானால், அதில் காட்டப்படும் Raymond வீடு ஒரு சராசரி அமெரிக்கனின் வீடாகவே இருக்கும். அவர்கள் அணியும் உடையும் சராசரி அமெரிக்கன் அவன் வீட்டில் எப்படி இருப்பானோ அப்படியே எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் இருக்கும்.

இங்கே அது முடியாது.

பாலியல் வறட்சியும், செல்போனைக் காதில் வைத்தபடி போஸ் கொடுப்பதுதான் உச்சகட்ட தனி நபர் போட்டோ ஸ்டைல் என்ற அளவில் இருக்கும் வரை. இந்த கண்றாவிகள் இருக்கத்தான் செய்யும்.

ஆரோக்கியமான ஆண்-பெண் உறவுகள் போற்றப்பட்டு அங்கீகரிக்கப்படவேண்டும்.

**

நடிகைகளை இப்படி பாலியல் வறட்சி போக்கிகளாக , நம் மன நோய்க்கு மருந்தாக வைத்துள்ளமைக்கு நாம்தான் வெட்கப்படவேண்டும் முதலில்.

**

உங்களின் அறச்சீற்றம் , நடிகைகளைக்குறித்து உள்ளதாகவும், சமூக அவல நிலையைச் சொல்லாமல் விட்டதாகவும் தோன்றியதால்………………

நித்ய குமாரன் முதலில், வெகு தாமதமான பதிலுக்கு ஒரு மாப்பும், விரிவான பகிர்தலுக்கு ஒரு நன்றியும்.

//சமீபத்தில் சில திரைப்படங்களை பார்த்துவிட்டு ஏதேனும் விமர்சனம் எழுதி விடாமா என்று யோசித்துக்கொண்டிருக்கையில், இவை போன்ற படங்களுக்கு நாமும் விளம்பரம் தரவேண்டுமா என்ற கேள்வி தோன்றி என்னை மாற்றிவிட்டது (நண்பர்கள் தப்பித்தார்கள்). யாரடி நீ மோகினி பார்த்தபின், ஏனோ ஓர் அசூயை உணர்வு ஏற்பட்டது. இதுதான் திரைப்படத்திற்கான கட்டமைவா என்று வினா எழும்பியது. சமீப காலமாக, முருகனடிமை அவர்களின் தூண்டலால் ICAF அமைப்பில் உறுப்பினராகி சில உலக திரைப்படங்களை கண்டு வருகிறேன். அவை நம்மை அழைத்துப்போகும் தளங்களை நமது படங்களில் மிக மிக அரிதாகவே பார்க்கிறேன். பேரரசு போன்ற களைகள் அதிகரித்து வருவதும் மிகுந்த வேதனையளிக்கிறது.//

இது நியாயமான கவலையே. சினிமாவை நேசிப்பவர்களுக்கு இந்த எண்ணம் எழுவதை தவிர்க்க இயலாது. உ.தமிழனின் அந்த இரு இடுகைகளும் அது குறித்தான அறிமுகமும் பலருக்கு பெரும் உதவியாய் இருக்கும். அது ஒரு சிறந்த முயற்சி. உலக சினிமா குறித்தான தேடல் நிச்சயம் பாராட்டுவதற்குரியதே. இங்கே பொதுவாய் ஒரு பிரமை இருக்கிறது. உலக சினிமாவைச் சிலாகிப்பவர்கள் தங்களாது அறிவு ஜீவித்தனத்தை பறையறிவிப்பதற்கோ, அல்லது ஒரு பொதுப்புத்தியின் உந்துதலாய், எல்லாரும் ஆங்கில சினிமாவைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதால், நானும் பேசுகிறேன் என்று பேசுகிறார்கள் எனபது போன்ற ஒரு கட்டமைவு இருக்கிறது.

இது போன்ற குற்றச் சாட்டுகளைச் சொல்லி உலக சினிமா பார்வையாளர்களின் விமர்சனங்களை வெகு எளிதில் புறம் தள்ளி விடவும் இது பேருதவியாய் இருக்கிறது. ஆனால் உண்மையில் நம் ஊர் சினிமாக்களில் இது போன்ற சிறந்த படங்கள் அரிதாய்த்தானே வருகின்றன என்ற ஒரு ஆதங்கத்தின் விளைவே, இது என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். சினிமாவைப் பார்த்தெல்லாம் யார் சார் கெட்டுப் போறாங்க? சும்மா நீங்களா ஏதாவது பேசிக்கிட்டிருக்காதீங்க என்று சொல்லி விட்டு போய்க் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் எந்த சூழ் நிலையிலும் சுய பரிசோதனை செய்து கொள்ள தயாராய் இருப்பதே இல்லை. இங்கே “கெட்டுப் போதல்” என்ற வார்த்தைக்கு நூறாவது நாள் படம் பார்த்து விட்டு கொலைகளைச் செய்தல் என்ற புரிதலை மட்டும் ஏற்படுத்திக் கொண்டால் எவ்வளவு பேசினாலும் பிரயோஜனமே இல்லை.

ஆதிக்க சிந்தனைகள், கட்டமைவுகள், புனித பிம்பப் படுத்துதல், மூட நம்பிக்கைகளை முன்னெடுத்துச் செல்லுதல், பெண்களை (நாயகிகள், துணை நடிகைகள்) நுகர்வுப்பொருளாய் கருதுதல், என்று பல்வேறு விதமான தளங்களில் நடக்கும் இந்த அல்பத்தனங்களைக் குறித்த ஒரு புரிதல் நிச்சயம் ஏற்பட வேண்டும்.

உங்களது பாராட்டுகளுக்கு நன்றி.

நன்றி இஷாத், முரளி கண்ணன்.

முரளி கண்ணன், இந்த அவலத்தை போக்க என்ன வழி என்று கேட்டிருக்கிறீர்கள். நியாயமான கேள்வி. ஒரு தவறு அல்லது அவலம் என்று நடப்பதில் இரண்டு கூறுகள் இருக்கின்றன. ஒன்று அதை அவலம் என்று உணராமல் தொடர்ந்து செய்வது. இன்னொன்று அதை உணர்ந்தும் நிகழ்கால சூழல், வணிக சினிமா,ஃபேன்டஸி, தன்னால் இயலா ஒன்றை நாயகனிடம் பொருத்திப் பார்த்து இன்புறும் நடைமுறை யதார்த்தம் என்பது போன்ற காரணங்களின் பின்னால் ஒளிந்துக் கொண்டு, அதை உணர்ந்தே செய்வது என்று இரண்டு கூறுகள் இருக்கின்றன.

இதில் மாறுவது என்பது அவரவர் எடுக்கும் நிலைப்படுகளைப் பொறுத்தே அமைகின்றது. இது இருபக்கமும் புரிந்துணர்வுடன் நடைபெற ஒன்று. நம்முடைய ரசனைகளை நாமும் மாற்ற வேண்டும். இது போன்ற சூழலைக் கட்டமைத்தவர்களில் நமக்கும் பெரிய பங்கு இருக்கிறது என்ற முறையில் சினிமாக்காரர்களும், ரசிகர்களின் ரசனைத்தனத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இல்லாவிடில் சினிமாக்காரர்கள், ரசிகர்கள் என்று இருவருமே சாக்கு சொல்லிக்கொள்ளலாம். “ரசிகர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள்” என்று அவர்களும், “மேற்சொன்ன காரணங்களுடன், அவங்க இப்படித்தான் படம் எடுக்கிறாங்க நாங்க என்ன செய்வது?” என்ற சாக்கையும் சேர்த்துச் சொல்லி நாமும் (ரசிகர்களும்) தப்பித்துக் கொள்ளலாம்.

கல்வெட்டு தாமதத்திற்கு வருந்துகிறேன். வர வர இந்தியன் ரயில்வே மாதிரி ஆயிட்டேன். :)

//நடிகைகள் குறித்த அறச்சீற்றமே உங்களின் கட்டுரையின் முக்கியத் தொணியாக உள்ளது. யமுனாவின் கட்டுரை சில எழுத்துவியாதிகளின் (மன்னிக்க என்னால் இப்படித்தான் சொல்ல முடிகிறது) முரண்களைப் பேசுகிறது.//

ஆமாம் கல்வெட்டு. அதைத்தான் ஒரு முக்கிய பார்வையாக நான் முன் வைத்துள்ளேன். அப்புறம் உங்களின் பல இடங்களில் எழுத்தாளர்கள் மீதான கோபத்தைப் பார்த்திருக்கிறேன். இங்கேயும் இருப்பதால் கேட்கிறேன். உங்களின் கோபம் பொதுவாய் எழுத்தாளர்கள் மீதா? அல்லது யமுனா குறிப்பிட்டிருந்த அந்த திரை விமர்சகர்கள் மீதா? நடிகனைப் போல ஒரு சில எழுத்தாளர்களையும் ஆதர்ச புருஷர்களாய கருதும் பாமரத்தனம் உங்களுக்கு கோபமூட்டியிருக்கிறதோ…

//தமிழகத்தில் பாலியல் வறட்சி இருப்பது உண்மை. குடி தண்ணீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி எப்படி பாட்டில் நீர் சந்தைப்படுத்தப்படுகிறதோ, அது போல பாலியல் வறட்சியைப் பயன்படுத்தி, பெண்களின் உடல் மற்றும் அது சார்ந்த அசைவுகள் சந்தைப்படுத்தப்படுகிறது. நன்றாகவும் விற்கிறது. உச்சகட்ட போர்னோ மூவ்களை சேலையின் வழியாகவே , எந்த ஆடையையும் அவிழ்க்காமலேயே பாடல் என்ற பெயரில் வைத்துவிடுவார்கள்.

எது நிஜத்தில் இல்லையோ அதை திரையில் விற்க முடிகிறது. பாட்டில் நீரைக் குறை சொல்வதி விட , இயல்பாக கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்க வழி செய்ய வேண்டும்.

எத்தனை பள்ளிகளில் ஆணும் பெண்ணும் அருகருகே அமர அனுமதிக்கிறார்கள்? பேருந்தில் ஒரு பெண் பக்கத்தில் இடமிருந்தாலும் ஆண் உட்கார முடியாது.//

சமூகத்தில் நிலவும் பாலியல் வறட்சியே இதற்கு ஒரு முக்கிய காரணம் என்றும் வேறு சில விஷயங்களயும் இதன் தொடர்ச்சியில் குறிப்பிட இருந்தேன். நீங்கள் இதை முன்னமே படம் போட்டு பாகம் வரைந்து விளக்கி விட்டீர்கள். ஆனால் சில இடத்தில் வேறுபடுகிறோம்.

முதலில் அடுத்து பகுதியில் மேற்கோள் காட்டி நான் சொல்லவிருந்ததை சொல்லி விடுகிறேன்.

“பாலுறவு, வன்முறை போன்ற காட்சிகளைப் பார்க்கையில் பார்வையாளர்கள் மனதளவில் வெகுவாய் ஈடுபடுவதாலேயே இத்தகைய காட்சிகளுக்கு கூட்டம் சேருகிறது என்கிறார்கள். ஆனால் வெளிநாடுகளில் மட்டும் எப்படி இது போன்ற தரங்முடைய படங்களை விட மற்ற நல்ல படங்களுக்கு மக்களின் ஆதரவும் வணிக ரீதியிலான வெற்றியும் சாத்தியமாகிறது?”

“நம் சமூகம் மிகுந்த கட்டமைவுகள் கொண்டது. ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் சகஜமாகப் பழகும் உரிமை கூட இங்கு இல்லை.சமூகத்தின் சகல மட்டங்களிலும் செயற்கையாக அமுக்கப்பட்டு விடும் பாலுணர்வுகள், நேரடியாயும், மறைமுகமாயும்,திரைப்படங்களில் வெளிப்படும் போது, பார்வையாளர்களின் உணர்ச்சிகள் அந்த மையத்தில் குவிகின்றன. ஒரு சிலவற்றைத் தவிர பெரும்பாலான தேசங்களில் பாலுணர்வுகள் இவ்வாறு அமுக்கப் படுவதில்லை.

நியாயமான சமூக நாகரீகத்திற்குட்பட்ட பாலுணர்வு வெளிப்பாடுகள் எப்போதும் அங்கே சாத்தியமானவையாகவே இருக்கின்றன.அதனாலேயே திரைப்படங்கள்தான் தனது வடிகால் என்ற நிலை இல்லை.இதனாலேயே வணிக சினிமாவை விட, நல்ல சினிமா போற்றப்பட்டு, அதன் மரபும் உறுதி்ப்பட்டு வந்திருக்கிறது.ஆனால் இங்கு வணிக சினிமாக்கள் மட்டுமே இருக்கிறது. நல்ல சினிமாக்கள் வெற்றி பெறுமா இல்லையா என்ற சந்தேகத்துடனேயெ நாம் இன்னமும் இருந்துக் கொண்டிருக்கிறோம்.”

இது நான் சொல்லவிருந்தது.

//சமீபத்தில் சென்னை மாநகராட்சி ரோட்டில் ஒண்ணுக்குப்போனால் (நாய்களுக்கு அல்ல) அபராதம் என்ற ஒரு சட்டம் கொண்டுவந்ததாக நினைவு. ( அமுல்படுத்தப்பட்டு விட்டதா???).
மாநகரில் பயணிக்கும் ஒருவனுக்கு ஒண்ணுக்கு வந்தால் என்ன செய்வான்? அதிக பட்சம் அவனால் 30 நிமிடங்கள் தாக்குப்பிடிக்க முடியுமா? அதற்குள் அவன் ஒண்ணுக்கு போயே அக வேண்டும் என்பது இயற்கையின் விதி. அந்த நிலையில் அவன் சுகாதரமாகச் செல்ல 30 நிமிட தூரத்தில் கழிப்பறை வசதி இருக்க வேண்டும். அதை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டுத்தான்…. ரோட்டில் ஒண்ணுக்குப்போனால் அபராதம் என்ற ஒரு சட்டம் கொண்டுவரப்படவேண்டும்…. முதலில் சட்டப்படி நடக்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்துவிட்ட்டுத்தான் சட்டத்தை மீறுவோரைக் கண்காணிக்க வேண்டும். அதுதான் முறை.//

கல்வெட்டி பாலியல் ஒடுக்குமுறைக்காக நீங்கள் கொடுத்திருந்த உதாரணம் ஓரளவில் மிகச் சரியே.

பாலியல் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாலேயே ஒரு ஆண் தனது உணர்வுகளை வெளிப்படுத்த பெண்ணின் உடலை ஒரு துய்ப்புக்களமாய் உபயோகித்துக் கொள்கிறான். ஆனால் இங்கே ஒன்றை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். அதற்கு மாற்றாக அவன் உபயோகித்துக் கொள்வது அதே பாலியல் ஒடுக்கத்திற்கும், இன்னபிற ஆதிக்கத்திற்கும் உள்ளான சக பெண் மனுஷிகளை. கழிப்பறை உபயோகிப்பிற்கும், இதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.

அது மட்டுமல்ல நீங்கள் குறிப்பிட்டிருப்பது நடிகைகள் குறித்தான பார்வையை மட்டுமே. அவர்களின் புகழாரமும், சம்பளமும், லைம் லைட் வெளிச்சமும் வேண்டுமானால் நமக்கு “இவ்ளோ கிடைக்குதில்லை. இது கூடவா செய்ய மாட்ட” என்ற மன நிலையை ஏற்படுத்தலாம். ஆனால், இங்கே நடிகைகளைத் தவிர்த்த துணை நடிகைகளுக்கும், குணச்சித்திர நடிகைகளுக்கும், சேர்த்தே இந்த ஒடுக்கு முறைகள் திரை மறைவிலும், திரையிலும் நடந்துக் கொண்டு் இருக்கின்றது.

அது மட்டுமல்ல நான் வெறும் இச்சைப் பொருளாய் உபயோகிகப் படுவதைப் பற்றி மட்டும் கூறிச் செல்ல வில்லை. கலாச்சார அறிவுரைகள், தன்னுடைய தாலி,கற்பு, குறித்தான அறுவறுப்பான புனைவுகள். அடி மட்ட ரசனையைக் கிளறி விடும் வசனப் பிரயோகங்கள் என்ற பல இருக்கின்றன.

இதன் மூலம் பாலியல் ஒடுக்க இயந்திரமான நம் சமூகம் இப்படித்தான் இருக்கும், அல்லது இருக்க வேண்டும் என்று நான் சொல்ல வர வில்லை. இந்த கட்டமைவுகள் இன்னொரு சக மனுஷி மீது ஆதிக்கத்தை மேற்கொள்ள காரணியாயிருக்கும் போது, நாம் அதை எதிர்த்துத்தான் தீர வேண்டியிருக்கின்றது என்பதே.

அதே போல் இன்னும் சிலர் “சினிமா என்பது ஒரு ஃபேன்டஸி. அதைப் பார்த்தெல்லாம் யாரும் கெட்டுப் போவதில்லை. இத்தகைய காட்சிகளை வைப்பதனால் ரசிகன் ஒரு 2 மணி நேரம் சந்தோஷமாய்ப் பார்த்து விட்டு நகர்ந்து விடுவான். தேவையில்லாமல் இது குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம்” என்றும் பல காலமாய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இதே காரணத்தைச் சொல்லி, “உயர் சாதியினைச் சேர்ந்த ஒருவன், கீழ்ச் சாதியில் பிறந்த ஒருவரை, மனிதாபிமானமற்ற முறையில் அவமதிப்பது போல” எவரேனும் படமெடுத்தால் நாம் சும்மா இருப்போமா??? ஒரு காலத்தில் “ஆண்டை” டைப் படங்களும் இருந்திருக்கத்தான் செய்கின்றன. பல்வேறு முனைகளிலிருந்து வெளிப்பட்ட தீவிர விமர்சனங்களிற்குப் பின்பே அவை தடம் அழிந்துப் போய் இப்போது, கே.எஸ்.ரவிக்குமாரின் நிலப்பிரபுத்துவ படங்களாய் மாறி வருகின்றது. அதையும் தொடர்ச்சியான புறக்கணிப்பால் நிறுத்த முடியும்.

இங்கே நான் சொல்ல வருவது “எளியோனை, வலியோன் ஆட்கொள்ளல்” தத்துவத்திற்கு எதிராகவே. அது என்னவோ சாதிய அடுக்கைத் தரம் பிரித்து ரௌத்ரம் கொள்ளத் தெரிந்த நாம் பெண்களுக்கெதிரான ஒடுக்கு முறையில் மட்டும் அமைதியாகவே மௌனம் காக்கிறோம். ஏன் பயனாளர்கள் நாம் என்பதாலா? நமக்கு ஒரு நியாயம், அடுத்தவர்க்கு ஒரு நியாயமா?

(கல்வெட்டு, கடைசியாக நான் சொல்லிய விஷயத்தில் சற்றே குற்றம் சாட்டும் தொனி இருக்கலாம். அது உங்களுக்கு இல்லை. வெளியிட முடியா அளவுக்கு அழகான முறையில் கேட்ட அனானி நண்பருக்கான பதில்)

நந்தா,

//பாலியல் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாலேயே ஒரு ஆண் தனது உணர்வுகளை வெளிப்படுத்த பெண்ணின் உடலை ஒரு துய்ப்புக்களமாய் உபயோகித்துக் கொள்கிறான். ஆனால் இங்கே ஒன்றை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். அதற்கு மாற்றாக அவன் உபயோகித்துக் கொள்வது அதே பாலியல் ஒடுக்கத்திற்கும், இன்னபிற ஆதிக்கத்திற்கும் உள்ளான சக பெண் மனுஷிகளை. கழிப்பறை உபயோகிப்பிற்கும், இதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.//

கழிப்பறை உபயோகம்- எடுத்துக்காட்டு…… எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு முன் , அப்படி நடப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் சொல்லபட்டது.

டென்னிஸ் மைதானத்தை வைத்துக் கொண்டு,நீச்சல் அடிக்க விதி முறைகள் எழுதக்கூடாது. அல்லது, நீச்சல் அடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது என்று சொல்லவே. :-)

**

பாலியல் வறட்சி என்று நான் சொல்வது பல அர்த்த அடுக்குகளைக் கொண்ட சொல். என்னால் அதை விரிவாகச் சொல்ல முடியும். நேரமின்மை காரணமாக ஒரு சொல்லில் சொல்ல நினைத்தேன். இது குறித்து விரிவாக இன்னொருமுறை பேசலாம்.

ஒடுக்கப்பட்ட இயற்கை உணர்வுகள் என்றாவது ஒரு நாள் அதே சமூகத்தின்மீதே திரும்பும்.

திருப்பதியில் ஸ்ரேயாவைக் கட்டிப்பிடிக்க முயன்ற ஒருவனின் செயலுக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

வெள்ளை நிற உடலே அதிக பட்ச இன்பம் என்று கட்டமைக்கப்பட்ட காலத்தில் , அது கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் போது, மேலும் சினிமா திரையில் இப்படி இருந்தவள்தானே என்ற உணர்வும் மேலோங்க உரசிப்பார்க்க முயற்சிக்கிறான் சராசரி மனிதன்.

இது ஆணிடம் மட்டும் இல்லை. ஒடுக்கப்பட்ட பாலியல் உணர்வுகள் பெண்களிடம் இருந்தும் வன்முறையாக வெளிவரும். அவர்கள் அதை வெளிப்படுத்தும் விதம் அல்லது சதவீதம் ஆண்களைவிட ஒப்பீட்டளவில் மாறுபட்டு இருக்கலாம் அவ்வளவே.

சக பெண் மனுசிகளை மனுசிகளாகப் பார்க்க கற்றுக் கொடுக்கப்படவில்லை.

நான் சொல்வதன் மய்யக்கருத்தே அதுதான். ஆரம்பத்தில் இருந்தே பெண்களை வேற்றுக்கிரக ஜீவராசிகள் போல , கிடைப்பதற்கு அரிய, பழகக்கிடைக்காத ஒரு நிலையிலேயே சமூகம் வைத்துள்ளது.

அக்காவாக இருந்தாலும், ஒரு வயதுக்குப்பின் தொட்டுப்பேசக்கூடாது என்ற உடல் அரசியல் கட்டமைக்கப்படுகிறது.

பெண்களை உச்சகட்ட நுகர்வுப்(துய்ப்பு) பொருளாகவே நமது சமூகம் கட்டமைப்பதால், அதை அடைவதே ஆகச் சிறந்த சிறப்பு என்று நினைக்கிறான் ஒருவன்.

எது அவனுக்கு விலக்கப்படுகிறதோ, அதன் மீதே வன்முறையைக் காட்டுகிறான். பெண்கள் ஒடுக்கப்படுவது ஆண்களால் மட்டும் அல்ல. திரைத்துறையாய் இருக்கட்டும் சாதரணக் குடும்பமாக இருக்கட்டும், பெண் சக பெண்ணாலேயே எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறாள், ஒடுக்கப்படுகிறாள்

****

//அது மட்டுமல்ல நீங்கள் குறிப்பிட்டிருப்பது நடிகைகள் குறித்தான பார்வையை மட்டுமே. அவர்களின் புகழாரமும், சம்பளமும், லைம் லைட் வெளிச்சமும் வேண்டுமானால் நமக்கு “இவ்ளோ கிடைக்குதில்லை. இது கூடவா செய்ய மாட்ட” என்ற மன நிலையை ஏற்படுத்தலாம். ஆனால், இங்கே நடிகைகளைத் தவிர்த்த துணை நடிகைகளுக்கும், குணச்சித்திர நடிகைகளுக்கும், சேர்த்தே இந்த ஒடுக்கு முறைகள் திரை மறைவிலும், திரையிலும் நடந்துக் கொண்டு் இருக்கின்றது.//

மறுக்கவில்லை.

ஆனால், அறியாமையால் சீரழிந்து பின்னர் இரண்டும் கெட்டானாக இருப்பவர்கள் சிலரே. பெறும்பான்மையினருக்கு சினிமா உலகின் திரைமறைவு எதிர்பார்ப்புகள் அனைத்தும் தெரிந்தே இருக்கிறது. வேறு வழி இல்லாமல் அல்லது விரும்பியே அல்லது சில லாபங்களுக்காக சில சமரசங்கள் அவர்களுக்குள் நடக்கிறது.

ஒரு ஆணும் பெண்ணும் விரும்பியே செய்யும் உடல் துய்ப்பு குற்றம் அல்ல( திருமண பந்தம்/ சட்ட விதிகளுக்கு உட்பட்டு) .

அங்கே சில விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வியபாரம் நடக்கிறது. வியபார பேரம் நடத்த முடியாதவர்கள் வன்முறையில் இறங்குகிறார்கள்.

அப்படி இருக்கும் இடத்துக்கு ஏன் பெண்கள் வேலை செய்யப்போக வேண்டும்? (நடிகைகளைத் தவிர்த்த துணை நடிகைகள், குணச்சித்திர நடிகைகள்…)என்று கேட்கலாம்.

எல்லாம் அடிப்படை வாழ்க்கைத் தேவைகள்.

ஒரு நாள் வேலை இல்லாவிட்டால் சோறு இல்லை. அன்றைய குழு ஆட்டத்தில் ஆட தனக்கு வாய்ப்பு கிடைக்க , அல்லது முதல் வரிசையில் ஆட, அல்லது ஒரு சீனில் வந்துபோக, அல்லது தனக்குப்பின்னால் உள்ள் ஒரு குடுப்மத்தின் தேவைகளுக்காக….என்று பல காரணங்கள். இப்படி நடக்கும் பேரத்தில் , பெண்ணின் உடல் மூலதனமாக்கப்படுகிறது.

***

//அது மட்டுமல்ல நான் வெறும் இச்சைப் பொருளாய் உபயோகிகப் படுவதைப் பற்றி மட்டும் கூறிச் செல்ல வில்லை. கலாச்சார அறிவுரைகள், தன்னுடைய தாலி,கற்பு, குறித்தான அறுவறுப்பான புனைவுகள். அடி மட்ட ரசனையைக் கிளறி விடும் வசனப் பிரயோகங்கள் என்ற பல இருக்கின்றன. //

சினிமாவை விடுங்கள். வெளியில் இதைப்பேசி வாங்கிக் கட்டிக்கொண்ட குஷ்பூவைப் பாருங்கள். நாம் சில விசயங்களை போற்றிப்பாதுகாத்து அதை வியாபாரப் பொருளாக்கவே விரும்புகிறோம்.

அதற்காக நான், இன்றைய இளைய தலைமுறை ( நான் ஓல்டுங்க) செய்யும் கூத்துக்களுக்கு வக்கலாத்து வாங்கவில்லை.

டேட்டிங் செல்வதற்குமுன், உன் பேற்றோரிடம் உனது நண்பனை/நண்பியை அறிமுகப்படுத்து, நீ எங்கே செல்கிறாய் என்பதையும் சொல்லிச் செல்.. என்று சொல்பவன் நான்.

நல்ல உறவுகள் மறைக்கப்படவேண்டியவை அல்ல.

//இதன் மூலம் பாலியல் ஒடுக்க இயந்திரமான நம் சமூகம் இப்படித்தான் இருக்கும், அல்லது இருக்க வேண்டும் என்று நான் சொல்ல வர வில்லை. இந்த கட்டமைவுகள் இன்னொரு சக மனுஷி மீது ஆதிக்கத்தை மேற்கொள்ள காரணியாயிருக்கும் போது, நாம் அதை எதிர்த்துத்தான் தீர வேண்டியிருக்கின்றது என்பதே.//

நாம் முதலில் எதிர்க்க வேண்டியது சமூகத்தை. அது மாறினால் அதை வைத்து வியாபாரம் செய்யும் சினிமா மாறித்தான் ஆக வேண்டும். சினிமாவும் சமூகத்தின் ஒரு அங்கம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், மாற்றம் வீட்டில் இருந்து துவங்க வேண்டும்.

ஸ்ரேயா ஜட்டியுடன் ஆடுவதை இரசிக்கும் (ரஜினி படம் குடும்பப்படமாம்?? ) வீட்டில் தன் பெண் அரை டவுசர் என்ன முக்கா பேண்ட் போட்டலே தண்டனை தருகிறது. இது தவறு என்றால் அதுவும் தவறுதானே?. அல்லது ஸ்ரேயா யாரோ ஒருவரின் மகள் என்பதால் அவளின் உடலை நாம் இரசிக்கலாம், நம் வீட்டுப் பெண்ணை யாரும் இரசிக்கக்கூடாது என்ற எண்ணமா?

இரட்டை வாழ்க்கை வாழ்கிறோம் நாம் எல்லா மட்டங்களிலும் . நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு. :-( ((((

//அதே போல் இன்னும் சிலர் “சினிமா என்பது ஒரு ஃபேன்டஸி. அதைப் பார்த்தெல்லாம் யாரும் கெட்டுப் போவதில்லை. இத்தகைய காட்சிகளை வைப்பதனால் ரசிகன் ஒரு 2 மணி நேரம் சந்தோஷமாய்ப் பார்த்து விட்டு நகர்ந்து விடுவான். தேவையில்லாமல் இது குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம்” என்றும் பல காலமாய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.//

//இதே காரணத்தைச் சொல்லி, “உயர் சாதியினைச் சேர்ந்த ஒருவன், கீழ்ச் சாதியில் பிறந்த ஒருவரை, மனிதாபிமானமற்ற முறையில் அவமதிப்பது போல” எவரேனும் படமெடுத்தால் நாம் சும்மா இருப்போமா??? ஒரு காலத்தில் “ஆண்டை” டைப் படங்களும் இருந்திருக்கத்தான் செய்கின்றன. பல்வேறு முனைகளிலிருந்து வெளிப்பட்ட தீவிர விமர்சனங்களிற்குப் பின்பே அவை தடம் அழிந்துப் போய் இப்போது, கே.எஸ்.ரவிக்குமாரின் நிலப்பிரபுத்துவ படங்களாய் மாறி வருகின்றது. அதையும் தொடர்ச்சியான புறக்கணிப்பால் நிறுத்த முடியும்.//

சினிமாவோ அல்லது எந்த ஒரு பொதுசன ஊடகமோ ஒரு கருத்தை சமுதாயத்தில் மீது திணிக்கவும், ஏற்கனவே உள்ள கருத்தை கட்டிக்காக்கவும் வல்லமை உள்ளவை.

//இங்கே நான் சொல்ல வருவது “எளியோனை, வலியோன் ஆட்கொள்ளல்” தத்துவத்திற்கு எதிராகவே. அது என்னவோ சாதிய அடுக்கைத் தரம் பிரித்து ரௌத்ரம் கொள்ளத் தெரிந்த நாம் பெண்களுக்கெதிரான ஒடுக்கு முறையில் மட்டும் அமைதியாகவே மௌனம் காக்கிறோம். ஏன் பயனாளர்கள் நாம் என்பதாலா? நமக்கு ஒரு நியாயம், அடுத்தவர்க்கு ஒரு நியாயமா?//

இங்கே உங்களின் நாம் என்பது பெண்களையும் குறிக்கும்/குறிக்கவேண்டும். பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு சக பெண்ணே பெரும் பங்கு வகிக்கிறாள். அது அவளின் அறியாமையால், என்ன செய்கிறோம் என்று தெரியாமல் , சமூகம் தனக்கு கற்றுக் கொடுத்ததை, அடுத்த தலைமுறைக்கும் செய்கிறாள்.

உலகமே உடல் சார்ந்த இன்பங்களை மய்யமாக் கொண்டே இயங்குறது. என்பதைப் புரிந்து கொண்டால், இந்த உடல் அரசியல், பாலியல் வறட்சியின் தாக்கம் என்பதைப் புரியலாம்.

//(கல்வெட்டு, கடைசியாக நான் சொல்லிய விஷயத்தில் சற்றே குற்றம் சாட்டும் தொனி இருக்கலாம். அது உங்களுக்கு இல்லை. வெளியிட முடியா அளவுக்கு அழகான முறையில் கேட்ட அனானி நண்பருக்கான பதில்)//

உரையாடல் (conversation) லில் இதெல்லாம் சகஜம். எனக்கு பிடித்தமாதிரிதான் நீங்கள் சொல்லவேண்டும் என்று நான் நினைத்தாலோ, அல்லது நான் எனது கருத்தை வலிய திணிக்க நினைத்தாலோ அது விவாதம் (Argument) ஆகிவிடும்.

எனவே எனக்கான பதில் கோபமாக வந்தாலும் ஒன்றும் இல்லை. :-) )

***

எழுத்தாளர்கள் பற்றி… :-) ))))))

பிறகு பேசலாம். பதிவின் நோக்கம் மாறிவிட வாய்ப்பு உண்டு

கல்வெட்டு, நாம் இருவர் பேசுவதிலும் சாராம்சம் ஒன்றாய்த்தான் இருக்கிறது. சமூகத்தில் நிலவும் பாலியல் ஒடுக்கு முறையிலிருந்து பெண்களை துய்ப்புப் பொருளாய் உபயோகப்படுத்துவது பற்றி இருவருக்குமே கோபம் இருகிறது.

சமூகம் முதலில் மாற வேண்டும் சினிமா தானாய் மாறி விடும் என்று நீங்கள் சொல்லுவதில் மட்டுமே நாம் மாறுபடுகிறோம். சொல்லப்போனால் எனக்கு இருக்கும் கவலை “ஒட்டு மொத்த சமூகமே மாற வேண்டும்” என்ற தீர்வினை நாம் இந்த பிரச்சினைக்கு மட்டும் தருவதில்லை.

சாதிய அடுக்குகள்,தீண்டாமை,இயற்கைச் சீரழிவு குறித்தான விழிப்புணர்வு, பிளாஸ்டிக் பைகளின் உபயோகம், ஓசோன் பிரச்சினை, மூட நம்பிக்கைகள், சாலை விதிகளை மீறுதல் போன்ற, தவறென்பதையே மறந்த நடைமுறை நிதர்சனமாகி விட்ட, குழுவினராய்ச் சேர்ந்து தொடர்ந்துக் கொண்டிருக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் நாம் இதையே தான் தீர்வாய், சமாதானமாய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் எந்த புள்ளியிலிருந்து தொடங்குவது? மிஞ்சி மிஞ்சிப் போனால் நீங்களோ, நானோ நம் வீட்டிலிருந்து வேண்டுமானால் தொடங்கலாம். ஆனால் நாம் செய்வது என்பது Single Entity என்ற ரீதியிலேயே இருக்கும். ஆனால் இது ஒரு Group entity சமூகத்தில் செயல்படுத்தினால் மட்டுமே இது நடைமுறைச் சாத்தியமாயிருக்கும். இல்லாவிடில் காலத்திற்கும் நாம் இதே வார்த்தைகளைத்தான் பதிலாய்ச் சொல்லிக் கொண்டிருக்க நேரிடும்.

என்னைப் பொறுத்தவரை அப்படிப்பட்ட Group entity சமுதாயத்தில் ஊடகங்கள் மிக முக்கியமானவை. ஏனெனில் இவை தன்மாற்றம் பெருவதோடு மட்டுமல்லாமல், பிரச்சார கருவியாகவும் இருப்பதாலேயே. சொல்லப்போனால் இதுவும் சமூகத்தின் ஓர் அங்கம்தான் எனும் போது வெகு சீக்கிரம் மாற்றத்திற்குட்படுத்த வேண்டிய ஓர் அமைப்பாக இதையும் கருதலாம்.

இது ஒரே சமயத்தில் பலதளங்களிலும் நடைபெற வேண்டிய மாற்ற்றம் என்பதையும் மறுக்க முடியாது.

//எழுத்தாளர்கள் பற்றி… :-) ))))))

பிறகு பேசலாம். பதிவின் நோக்கம் மாறிவிட வாய்ப்பு உண்டு//

அனேகமாய் இதன் அடுத்த தொடர்ச்சி எழுத்தாளர்களைப் பற்றியதாய்த்தான் இருக்கும். ஏன்னா சொல்ல விருந்த பல விஷயங்களை இங்கேயே பேசிக்கொண்டிருக்கிறோ. முடிந்தால் அங்கேயும் வெச்சுக்கலாம் கச்சேரியை. :)

நந்தா,

//கல்வெட்டு, நாம் இருவர் பேசுவதிலும் சாராம்சம் ஒன்றாய்த்தான் இருக்கிறது. சமூகத்தில் நிலவும் பாலியல் ஒடுக்கு முறையிலிருந்து பெண்களை துய்ப்புப் பொருளாய் உபயோகப்படுத்துவது பற்றி இருவருக்குமே கோபம் இருகிறது. //

உண்மைதான்.

நீங்கள் சினிமாவைக் குற்றம் சொல்கிறீர்கள் அல்லது மாற்றம் அங்கிருந்து ஆரம்பிக்கவேண்டும் என்று சொல்கிறீர்கள்.

சினிமாவும் சமூகத்தின் ஒரு அங்கம் என்பதால், நான் ஒட்டு மொத்த சமூகத்தையும் குற்றம் சொல்கிறேன் அல்லது திருந்த வேண்டும் என்று நினைக்கிறேன்.

**

நான் சொன்னபடி ….

எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு முன் , அப்படி நடப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். டென்னிஸ் மைதானத்தை வைத்துக் கொண்டு,நீச்சல் அடிக்க விதி முறைகள் எழுதக்கூடாது. அல்லது, நீச்சல் அடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது

இத்தகைய சூழ்நிலையை உருவாக்குவதில் அரசுக்கு பெரும் பங்கு உள்ளது. அரசு பெரிய அளவில் எதையும் செய்யாவிட்டால், தனிமனித அல்லது சிறிய தொண்டு அமைப்புகள் செய்யும் செயல், குப்பைத் தொட்டிக்குள் இருந்து கொண்டே , அந்த குப்பைத்தொட்டியின் ஒரு மூலையை சுத்தப்படுத்தும் செயலாகவே இருக்கும். நாம் சுத்தபடுத்தும் விகிதத்தைவிட அதிக விகிதத்தில் குப்பை சேர்ந்து கொண்டே இருக்கும்.

**

சினிமா போன்ற ஊடகங்கள் இதை தன்னிச்சையாக செய்யமுடியாது. அவர்களுக்கு இலாபநோக்கம் மட்டுமே உண்டு.

வரிச்சலுகை கொடுத்தபின்னர்தான் தமிழில் பெயர்வைக்க ஆரம்பித்த ஆட்டு மந்தைகள். தானாக ஏதும் செய்யமாட்டார்கள். பா.ம.க இராமதாசு இவர்களை தமிழில் பெயர்வையுங்கள் என்று சொன்னபோது (மிரட்டிய போது) கிரியேட்டிவிட்டி, சுதந்திரம், கலை,கருவாடு,புண்ணாக்கு என்று சொன்ன அதே மனிதர்கள்தான் இன்று காசுச் சலுகைக்காக வலிந்து பெயர் வைக்கிறார்கள்.

இப்போதும் இவர்களை ஆங்கிலத்த்ல் பெயர் வைக்கக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை சட்டமும் இல்லை. ஆனால், அவர்களின் பசியறிந்து பண-உணவு இட்டபின் தாங்களாகவே வரிசையில் நிற்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட சினிமாவை, வளைப்பது மிக எளிது.

ஆனால், வீட்டளவில் மனிதர்கள் கொண்டுள்ள மதிப்பீடுகளை மாற்றுவது மிகக்கடினம். எத்தனை சாமியார்கள் போலிசுக்குப் போனாலும், எத்தனை சாமியார்களை சினிமா துகில் உரித்தாலும், இன்னும் சாமியார்களின் பின்னால் நிற்பது தனிமனிதன்தான். எனவே, பல்முனைத் தாக்குதல் தொடுத்தால் தவிர சமூகம் திருந்தாது.

***

அரசின் பங்கு முக்கியமானது, அதிகாரத்தில் உள்ள அரசும் மக்களும் நினைத்தால் பல விசயங்களைச் சுலபமாகச் செய்யமுடியும். என்று சொல்லி வாய்ப்புக்கொடுத்த அவைத் தலைவர் நந்தா அவர்களுக்கு நன்றி சொல்லி அமர்கிறேன்… உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா… ஜோடா ப்ளீஸ் :-)

//வாய்ப்புக்கொடுத்த அவைத் தலைவர் நந்தா அவர்களுக்கு நன்றி சொல்லி அமர்கிறேன்… உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா… ஜோடா ப்ளீஸ் :-) //

:)

பின்னுட்டத்தை தொடர்ந்து படித்து மண்டைக் காஞ்சவங்களுக்கும் சோடா சொல்லுங்கப்பா… :P

//
வாய்ப்புக்கொடுத்த அவைத் தலைவர் நந்தா அவர்களுக்கு நன்றி சொல்லி அமர்கிறேன்… உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா… ஜோடா ப்ளீஸ்
//

//பின்னுட்டத்தை தொடர்ந்து படித்து மண்டைக் காஞ்சவங்களுக்கும் சோடா சொல்லுங்கப்பா… :P //

ஓஹ்ஹ். டிபிசிடி நீங்களும் படிச்சு மண்டைக் காய்ஞ்ச கூட்டத்துல ஒருத்தரா???

சோடா என்னன்ங்க சோடா. குஷ்பூக்கு நம்ம ஆளுங்க எங்கயோ கோயிலு கட்டினாங்களாம். உங்களுக்கும் அதுக்க்கு பக்கத்துலயே இன்னொரு கோயிலு கட்டிடறேன்.

நந்தா. விமர்சணம் என்ற உடன் எனக்கு ஞாபகம் வரும் சில விடயங்கள்

1. இயற்கை படத்திற்கு பாக்யராஜ் அவர்கள் பாக்யாவில் எழுதியிருந்த விமர்சணம். வார்த்தைகள் சரியாக ஞாபகம் இல்லை. ஆனால் “இப்படி ஒரு படம் எடுக்கவில்லை என்று வருந்துகிறேன்” என்ற பொருளில் எழுதியிருந்தார். நான் அப்பொழுது மதுரையில் இருந்தேன். அதை படித்த உடன் நானும் என் அறைதோழனும் அன்றிரவே உடனடியாக திரையரங்கு சென்று பார்த்தோம் (அடுத்த நாள் அந்த படம் ஓடுமா, தூக்கப்படுமா என்ற சந்தேகம் வேறு :) :) )

2. சிந்து பைரவியில் வரும் ”உரை யில்லா வீணை” ”ஜானகிராமின் உவமை (உபயம் பாலகுமாரன்)” என்ற பொருள் பட சுபா கல்கியில் எழுதிய விமர்சணத்திற்கு அவர்களை அழைத்து பாலச்சந்தர் அவர்கள் “ஏன் நான் ஜானகிராமன் படிக்க கூடாதா” என்று திட்டிய சம்பவம்

ஆனந்த விகடன், குமுதம் தவிர இதர பத்திரிகைகளில் (கல்கி, பாக்யா) வரும் விமர்சணங்கள் பல நேரங்களில் என் ரசனையுடன் இணைகின்றன என்பது என் கருத்து

Leave a comment

(required)

(required)